உலகத்தின் முன்னுள்ள பெரிய சவால்!
- நவீன உலகத்தின் முன்னுள்ள மிகப் பெரிய சவால், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களை சமாதானமாக சேர்ந்து வாழவைப்பதுதான்; ‘மதப் பெரும்பான்மை’ அடிப்படையில் மத்திய கிழக்கிலும் தெற்காசியாவிலும் சில நாடுகள் தோன்றியதும், ‘கிறிஸ்தவர்கள் அல்லாத மக்கள்’ பெரும் எண்ணிக்கையில் ஐரோப்பிய நாடுகளிலும் வட அமெரிக்காவிலும் குடியேறியதும் கசப்புணர்வை ஏற்படுத்தியதுடன் அடிக்கடி மிகப் பெரும் வன்மையான மோதல்களுக்கும் காரணங்களாகிவிட்டன.
- ஆணவமும், தங்களுடைய மதமே உயர்ந்தது என்ற மேலாதிக்க உணர்வும் சேர்ந்துகொண்டு சகிப்புத்தன்மையையும், பரஸ்பர புரிதலையும் வென்றுவிடுகின்றன.
தாமஸ் ஆல்பர்ட் ஹோபார்ட்
- வெவ்வேறு மதங்களுக்கிடையே சரியான புரிதல் அவசியம் என்று அமெரிக்க அறிஞர் தாமஸ் ஆல்பர்ட் ஹோவார்ட் தன்னுடைய புத்தகத்தில் வலியுறுத்தியுள்ளார். யேல் பல்கலைக்கழகம் 2021இல் பிரசுரித்த அந்தப் புத்தகத்தின் தலைப்பு, ‘த ஃபெய்த் ஆஃப் அதர்ஸ்: எ ஹிஸ்டரி ஆஃப் இன்டர்ரிலிஜியஸ் டயலாக்’ (நியூ ஹேவன்: யேல் யூனிவர்சிட்டி பிரஸ், 2021). ஹோவார்டின் புத்தகம் கிறிஸ்தவத்தையே அதிகம் பேசுகிறது, காரணம், நூலாசிரியர் அந்த மதத்தைச் சேர்ந்தவர், அதுதான் அவருக்கு அதிகம் தெரிந்த மதம்.
- உலகிலேயே தங்களுடைய மத நம்பிக்கைதான் உயர்ந்தது என்று கிறிஸ்தவ இறையியலாளர்கள் ஒரு காலத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் இருந்தார்கள். இருபதாவது நூற்றாண்டில்தான் இந்த எண்ணத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. 1960களில் தங்களுடைய ஆன்மிக மேலாதிக்க உணர்வின் உச்சத்தில் இருந்த கத்தோலிக்க திருச்சபை, இதர நம்பிக்கைகளையும் ஏற்கும் நடவடிக்கைகளை மெதுவாகத் தொடங்கியது. “கிறிஸ்தவம் அல்லாத இதர மதங்களின் தார்மிக – ஆன்மிக விழுமியங்களை இந்தத் தேவாலயம் அங்கீகரிக்கிறது – மதிக்கிறது” என்று போப்பாண்டவர், 1964 ஆகஸ்டில் திருச்சபையினருக்கு எழுதிய சுற்றுக்கடிதத்தில் அறிவித்தார்.
- இன்னொரு போப்பாண்டவர் ஒருபடி மேலே சென்றார். “வெவ்வேறு மதங்களுக்கு இடையிலான உரையாடல் சுய நலத்தாலோ, வியூக உத்திகளாலோ ஏற்படுவதல்ல; வழிகாட்டும் நல்ல கொள்கைகளோடு, தேவைக்கேற்ப, கண்ணியமாக மேற்கொள்ளப்படும் செயல்” என்று அறிவித்தார்.
மாமன்னர் அக்பர்
- வெவ்வேறு மதங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் அக்கறை செலுத்திய இரண்டு இந்தியர்களை, ஹோவார்ட் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களில் முதலாமவர் முகலாய மாமன்னர் அக்பர். அக்பரைப் பற்றி எழுதுவதற்கு, மக்கன்லால் ராய்சௌத்ரி எழுதிய ‘தீன் இலாஹி’ (அக்பரின் மதம்) என்ற புத்தகத்தையே பெரிதும் பயன்படுத்தியிருக்கிறார் ஹோபார்ட்.
- அக்பர் அவருடைய சமகாலத்தவரான ஸ்பெயின் நாட்டு மன்னர் இரண்டாவது பிலிப்புக்கு எழுதிய கடிதம் குறித்து அந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பதைப் படிக்க நேர்ந்தது. யூதர்களையும் முஸ்லிம்களையும் வெளியேற்றிய பிறகு கத்தோலிக்க மதத்தின் இறையியல் கொள்கை மீது மட்டுமே அந்நாடு அதிக கவனம் செலுத்தத் தொடங்கியது. “வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களையும் சமமாக நடத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்” என்று இரண்டாவது பிலிப்புக்கு எழுதிய அக்கடிதத்தில் அக்பர் கூறியிருக்கிறார். “இங்கே (இந்தியாவில்) ஒவ்வொருவரும் அவரவர் பிறந்த மதத்தில் முழு நம்பிக்கை கொண்டு, அதைப் பற்றி வீணாக ஆராய்ச்சிசெய்யாமலும் தேவையற்ற கேள்விகளைக் கேட்காமலும் பின்பற்றி வாழ்கிறோம்.
- இறுதியான உண்மை எதுவென்ற கேள்விக்கு விடை காண்பது, மனிதர்களில் அறிவுமிக்க அறிஞர்களுடைய நோக்கமாகும். எனவே, இங்கே நாங்கள், அனைவருக்கும் வசதியான பருவத்தில், அனைத்து மத விவாதக் கூட்டங்களை நடத்தி, ஒவ்வொரு மதத்திலும் சொல்லப்பட்டுள்ள அரிய உபதேசங்களையும் கருத்துகளையும் பிறர் அறிய அழகாக உரை நிகழ்த்தி, அந்தக் கருத்துகளின் உயரிய நோக்கம் எது என்பதை அறிகிறோம்” என்று கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார் அக்பர்.
வீரத் துறவி விவேகானந்தர்
- ஹோவார்ட் அடையாளம் காட்டும் இரண்டாவது இந்தியவர், வீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர், அக்பருக்கு சில நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்தவர். அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893இல் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய உலகப் புகழ்பெற்ற உரையை ஹோவார்ட் மேற்கோள் காட்டியிருக்கிறார்.
- “வெவ்வேறு மதங்கள், நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்களிடையே ஆழ்ந்த ஆன்மிக உணர்வை ஊக்குவிக்கவும் மனிதர்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்கவும் பரஸ்பரம் பிற மதங்களின் உயரிய கருத்துகளைப் புரிந்துகொள்ளவும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது; அதன் மூலம் அமைதியும் சமாதானமும் ஏற்பட்டு உலக நாடுகளை ஒற்றுமைப்படுத்தி அமைதியில் திளைக்க வேண்டும் என்பதே மாநாட்டின் நோக்கம்” என்று விவேகானந்தர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
- சிகாகோவில் விவேகானந்தர் நிகழ்த்திய உரையிலிருந்து மேலும் சில மேற்கோள்களை ஹோவார்ட் எடுத்தாண்டிருக்கிறார். “அனைத்து மதங்களையும் நம்பிக்கைகளையும் உயர்வென்றே ஏற்கும், சகிப்புத்தன்மை மிக்க மதத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை அடைகிறேன்; வேற்று மதத்தவர் என்ற காரணத்துக்காக கொடுமைப்படுத்தி விரட்டப்பட்ட அனைத்து மதத்தவர்களுக்கும் நிம்மதியாக வாழ்வதற்குப் புகலிடம் கொடுத்த நாட்டைச் சேர்ந்தவன் என்பதிலும் பெருமை கொள்கிறேன்; இனவாதம், பிறர் கருத்துகளுக்கு இடம்கொடாமை, மதவெறியால் தோன்றும் தீவிரவாதம் ஆகியவை அழகிய இந்தப் பூமியை ஆக்கிரமித்துவிட்டன; இன்று காலை இந்த மாநாடு தொடங்கியதைக் குறிக்க அடிக்கப்பட்ட மணியோசையானது, இத்தகைய குறுகிய எண்ணங்களுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியாகவே கருதுகிறேன்” என்று பேசியிருக்கிறார் விவேகானந்தர்.
காந்தியை ஆராயவில்லை
- இந்த நூலில் மகாத்மா காந்தியைப் பற்றி போகிற போக்கில் குறிப்பிட்டுள்ள ஹோவார்ட், மத நம்பிக்கை அடிப்படையில் அவருடைய கருத்துகளை ஆராயவில்லை.
- அக்பர், விவேகானந்தரைவிட காந்திஜி தீவிரமான மதப் பன்மைவாதி, ஆழ்ந்த சிந்தனைகளைக் கொண்டவர், புரட்சிகரமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தவரும்கூட. வெவ்வேறு மதத்தவரிடையே உரையாடல்களுக்கு ஏற்பாடுகளைச் செய்தார், சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார். தென்னாப்பிரிக்காவிலும் சரி பிறகு இந்தியாவிலும் சரி அவர் மேற்கொண்ட அகிம்சை வழியிலான சத்யாகிரகப் போராட்டங்களில் அனைத்து மதத்தவரையும் ஈடுபடுத்தினார்.
- அவர் நிறுவிய ஆசிரமங்களில் அனைத்து மதத்தவரும் அருகருகிலும் - தொடர்ந்தும் நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்தனர். இதனால் அவர்களிடையே பரஸ்பர மரியாதையும் புரிதலும் அதிகமானது. காந்திஜி வாழ்ந்த காலத்தில் அவர் பங்கேற்ற கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டங்களில் வெவ்வேறு மதங்களின் புனித நூல்களிலிருந்து முக்கியமான பகுதிகள் படிக்கப்பட்டன, பாடல்கள் பாடப்பட்டன என்பதை மதப் பூசல்களே அன்றாட நிகழ்வுகளாகிவிட்ட நம்முடைய காலத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.
காந்தியின் தனி வழி
- கடவுள் இல்லை என்று பேசி மத நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களைப் புண்படுத்தவில்லை காந்திஜி; மனிதர்களின் அறிவாற்றலுக்கு அப்பாற்பட்ட பெரும் சக்தி இந்த உலகை வழிநடத்துகிறது என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதேசமயம், தன்னுடைய மதம்தான் கடவுளை அடைய உயர்ந்த - தனித்துவமான பாதையைக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கருதவில்லை. ‘கடவுள் ஒருவரே’ என்று தலைப்பிட்டு 1924 செப்டம்பரில் காந்திஜி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
- “இஸ்லாம், கிறிஸ்துவம், ஜோராஸ்டிரிய மதம் ஆகியவை இந்தியாவைவிட்டே விரட்டப்பட வேண்டும் என்று இந்துக்கள் எதிர்பார்ப்பது வெட்டியான கனவாகும்; அது, உலகையே இறுதியாக இஸ்லாம் மட்டுமே ஆளும் என்று இஸ்லாமியர்கள் கற்பனைசெய்வதற்குச் சமமாகும்… சத்தியம் என்பது எந்தப் புனித நூலுக்கும் தனிப்பட்ட உரிமையுள்ள சொத்து இல்லை” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
- இந்த உணர்வில் அவருக்கிருந்த உறுதி காரணமாகத்தான் இந்துக்கள், முஸ்லிம்கள் அல்லது கிறிஸ்தவர்கள் என்று எந்த மதத்தவரும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களைத் தங்கள் மதத்தில் சேர்த்துக்கொள்ளும் மதமாற்ற முயற்சிகள் குறித்து அவர் ஐயப்பட்டார். “தன்னுடைய மத நம்பிக்கை தனக்கு மட்டுமல்ல, உலகுக்கே உண்மையானது என்று கருதுவதால்தான் மற்றவர்களையும் தங்களுடைய மதத்தில் சேர்த்துவிடத் துடிக்கிறார்கள்.
- உண்மை என்னவென்றால், நம்மால் புரிந்துகொள்ளப்படாத லட்சக்கணக்கான வழிகளில் கடவுள் நம்மை அடைந்துவிடுகிறார். மிஷினரிகளின் (மதமாற்ற) செயலில் (இதைப் புரிந்துகொண்ட) பணிவு இல்லை. ஆன்மிகத்தில் தோய்ந்திருந்தாலும் மற்றவர்களுடைய ஆன்மிகத்தைவிட என்னுடையதுதான் உயர்வானது என்ற உணர்வு எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. தங்களுடைய ஆன்மிகம்தான் உயர்வானது என்ற எண்ணமே ஆபத்தானது” என்று குறிப்பிட்டுள்ளார் காந்திஜி.
பிறர் நம்பிக்கைகளுக்கு மரியாதை
- தன்னுடைய மதம் அல்லாத பிற மதங்களின் மீது மரியாதை, பிற மதங்களைச் சேர்ந்தவர்களை நண்பர்களாக்கிக்கொள்வது என்பது மகாத்மாவின் தனிப்பட்ட விருப்பமல்ல, அது அன்றைய அரசியலுக்கு அவசியமான ஒன்று. அனைத்து காங்கிரஸ்காரர்களும் நிச்சயமாகக் கடைப்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையில், ‘ஆக்கப்பூர்வமான செயல்திட்டம்’ என்ற பெயரில் 1941இல் 30 பக்க சிறு புத்தகத்தை வெளியிட்டார் காந்திஜி. தீண்டாமை ஒழிப்பு, கதர் ஊக்குவிப்பு, மகளிர் மேம்பாடு, பொருளாதார சமத்துவத்துக்குப் பாடுபடுவது ஆகியவை அந்தப் பிரசுரத்தில் இடம்பெற்ற தலைப்புகள்.
- அவருடைய ஆக்கப்பூர்வமான செயல்திட்டத்தில் முதலில் இடம்பெறுவது ‘வகுப்பு ஒற்றுமை’. “சமூக ஒற்றுமை ஏற்பட அடிப்படையான முதல் அம்சம் ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் – அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் – தன்னையே இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், ஜோராஸ்டிரியர், யூதர் என்று அனைத்து மதத்தவரின் பிரதிநிதியாகக் கருதிச் செயல்பட வேண்டும். இந்துஸ்தானத்தில் வாழும் கோடிக்கணக்கான இந்தியர்களின் நேரடிப் பிரதிநிதி நான் என்றே ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் கருத வேண்டும். இதைச் செயல்படுத்த ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் தான் பிறந்த மதத்தைத் தவிர இதர மதங்களைச் சேர்ந்தவர்களிடம் நட்புகொண்டு பழக வேண்டும். தன்னுடைய மதத்துக்குத் தரும் அதே மரியாதையை பிற மதங்களுக்கும் தர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காந்தியின் நண்பர்கள்
- காந்திஜி தனக்காக வகுத்துக்கொண்ட சமயக் கொள்கை இதுதான். காந்திஜிக்கு நெருக்கமான நண்பர்கள், சகாக்களில் இந்துக்கள் அல்லாதவர்களின் (சுருக்கப்பட்ட) பட்டியல்: முஸ்லிம்களில் அப்துல் காதர் பவாஜீர், ஏ.எம்.கச்சாலியா, அப்துல் கலாம் ஆசாத், ஜாகீர் உசைன், ஆசஃப் அலி, ரைஹானா தயாப்ஜி; கிறிஸ்தவர்களில் ஜோசையா ஓல்டுஃபீல்ட், ஜோசப் டோக், சி.எஃப்.ஆண்ட்ரூஸ், ஜே.சி.குமரப்பா, முரீல் லெஸ்டர், ராஜ்குமாரி அம்ரித் கௌர்; பார்சிக்களில் தாதாபாய் நௌரோஜி, ஜீவன்ஜி கோர்கூடூ ருஸ்தம்ஜி, குர்ஷீத் நௌரோஜி; யூதர்களில் ஹெர்மான் கல்லன் பாச், சோஞ்சா ஷெலிசின், ஹென்றி போலாக், எல்.டபிள்யு.ரிட்ச்; ஜைனர்களில் பிராண்ஜீவன் மேத்தா, ராய்சந்த்; கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களில் ஜி.ராமச்சந்திர ராவ் (கோரா).
- மிகவும் விரிவான இந்தப் பட்டியலில் ஒரு இடைவெளி இருக்கிறது, பஞ்சாபுடன் அவருக்கு அதிகத் தொடர்பு இல்லாததால் நெருங்கிய நண்பராக சீக்கியர் இருந்ததாகத் தெரியவில்லை. (ராஜ்குமாரி அம்ரித் கௌர், சீக்கியராக இருந்து மதம் மாறிய குடும்பத்தவர்). இது ஒதுக்கிவிடக்கூடிய சிறிய குறைதான். அவருடைய சமகால மேற்கத்தியத் தலைவர்களான வின்ஸ்டன் சர்ச்சில், ரூஸ்வெல்ட், டி கால் ஆகியோருடைய நண்பர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்தான்.
காந்திக்குத் தோல்வியா?
- மதப் பன்மைவாதத்தில் காந்திஜிக்குத் தோல்வியே ஏற்பட்டதுபோல முதலில் தெரியும். காரணம் மத அடிப்படையில் பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய நாடு உருவாவதை அவரால் தடுக்க முடியவில்லை. பிரிவினைக்குப் பிறகு எஞ்சிய இந்தியாவில் அவருடைய அரசியல் வாரிசு ஜவஹர்லால் நேரு, மத பன்மைத்துவத்தைக் கடைப்பிடித்தார், ஆனால் அதுவும் இப்போது மதவாத வன்முறையில் ஏற்பட்ட சாம்பலில் ஆழப் புதைக்கப்பட்டுவிட்டது. மேலாதிக்கம் செய்யும் அளவுக்கு இல்லை என்றாலும் ‘இந்துத்துவா’ வளர்ந்துவருகிறது, ‘இந்து பாகிஸ்தா’னை உருவாக்க முயல்கிறது!
- காந்திஜியின் மதப் பன்மைத்துவத்துக்கு ஏற்பட்ட தோல்வியானது அவருடைய கருத்தை புதுப்பித்து மேலும் வலுவாக இந்தியர்களும் இந்திய நாடும் பின்பற்ற வேண்டும் என்பதையே நமக்கு உணர்த்துகிறது. இஸ்லாமியப் பெரும்பான்மைவாதம் நிலைப்பட்ட பிறகும் பாகிஸ்தானில் அமைதியோ வளர்ச்சியோ ஏற்படவில்லை.
- சிங்களப் பேரினவாதமும் இலங்கையில் மக்களுடைய மகிழ்ச்சியைப் பெருக்கவில்லை. எனவே, அரசியலர்களும் சாமானிய மக்களும் மதம் கடந்த நட்புறவை ஏற்படுத்திக்கொள்வதே குடியரசின் ஆரோக்கியத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கு அவசியமான முதல் படி.
நன்றி: அருஞ்சொல் (22 – 09 – 2024)