TNPSC Thervupettagam
December 29 , 2017 2523 days 24161 0

உலகமயமாதல்

மு.முருகானந்தம்

- - - - - - - - - - - - - - - -

வரையறை

  • “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்று புறநானூற்றில் பாடினார் பூங்குன்றனார்; உலகில் உள்ள அனைத்து மக்களும் நமது உறவினர்கள் என்பதே அதன் பொருளாகும். இந்தக் கட்டுரையும் உறவாடும் உலகத்தைப் பற்றியது தான்!
  • ”ஊர், மாவட்டம், மாநிலம் மற்றும் நாடு என்கிற எல்லைகளைக் கடந்து உலகம் தழுவிய அளவில் கொண்டும் கொடுத்தும் உறவாடி, நெருங்கி வாழ்தலே உலகமயமாதல் எனப்படும்.”
.

உலகமயமாதலின் வரலாறு

  • மனிதன் ஒரு காலத்தில் புவியின் எல்லாக் கண்டத்திலும் வாழத் தொடங்கினான். புவியின் காலநிலைச் சூழலுக்கேற்ப புதிய பரிணாமத்துடன் வாழ்வினை மாற்றிக் கொண்டான். உலகின் ஓரிடத்தில் நிலை கொண்டவன் மற்ற இடத்தவரோடு மெதுவாக உறவாடத் தொடங்கினான்.
  • காடுகள், மலைகள், நதிகள், கண்டங்கள், கடல்கள் எனப் பலவற்றையும் கடந்து கால் பதித்தான். புது நிலத்திற்காகவும் நிலவளத்திற்காகவும் கண்டங்களைத் தேடிக் கடல் கடந்து பயணித்தான். அவ்வாறு கடலோடியதில் ஐரோப்பியர் முன்னிலை பெற்றனர்; கி.பி.1452-ல் அமெரிக்கக் கண்டம் கண்டறியப்பட்டது. புதிதாகக் கண்டறியப்பட்ட அமெரிக்கக் கண்டம் ஆனது ‘புதிய உலகம்‘ (New World) எனப்பட்டது. அதற்கு முன்பு ஆப்ரோ-யூரேசியா (Afro-Eurasia) என்றறியப்படும் ஆப்பிரிக்கா-ஐரோப்பா-ஆசியக் கண்டங்களே உலகமாக கருதப்பட்டது; புதிய உலகின் வரவுக்குப் பின்னர் பழைய உலகமும் (Old World) புதிய உலகமும் இணைந்து முழு உலகமாக மாறிய உடனேயே உலகமயமாதல் ஆரம்பமானது. இந்த உலகமயமாதலை மூன்று தலைமுறைகளாகப் பகுக்கலாம்.

.

மூன்று தலைமுறைகள்

  • உலகமயதாதல்-1.0 என்பது கி.பி.1492-கி.பி.1800 வரையிலான காலகட்டமாகும். இக்காலத்தில் பேரரசுகள் அரசாங்கத்தின் மூலம் வணிகத்தில் ஈடுபட்டன.
  • உலகமயமாதல்0 காலகட்டமானது பன்னாட்டு நிறுவனங்கள் (Multi National Companies) வணிகத்தில் கோலோச்சிய காலமாகும். இக்காலத்தில் தான் கிழக்கிந்தியக் கம்பெனி போன்ற வணிக நிறுவனங்கள் வலுப்பெற்றன; இக்காலத்தின் முதல் பாதியில் சாலை, புகை வண்டி ஆகியவற்றின் பங்களிப்பாலும் இரண்டாம் பாதியில் தகவல் தொடர்புச் சாதனங்கள், தொழில் புரட்சி, கணிப்பொறி, செயற்கைக்கோள் போன்ற சாதனங்களின் வரவாலும் மிக வேகமாக உலகமயமாதல் ஏற்படத் தொடங்கியது.
  • உலகமயமாதலின் மூன்றாவது தலைமுறை என்பது தனிநபரின் பங்களிப்பும் உயர் தொழில்நுட்பமும் நிறைந்த தற்காலமாகும். இது “புதிய உலகமயமாக்கல்“ எனப்படுகின்றது.

.

புதிய உலகமயமாக்கல் (New Globalisation)

  • உலகமயமாதலின் டிஜிட்டல் காலமே புதிய உலகமயமாதலாகும். தொழில்நுட்பத்தின் துணை கொண்டும், பொருளாதார இணைப்புகள் மூலமும் ஏற்பட்ட மாற்றங்களே புதிய உலகமயமாக்கலுக்கான அடிகோல்கள் ஆகும். உலகப் பொருளாதாரம் கணினி, கப்பல், விமானம் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
  • வணிகம் சார்ந்த எல்லாச் செயல்பாடுகளும் கணினிகள், கைப்பேசிகள், இணையதளம் வாயிலாக நடைபெறுகின்றன. மேற்கத்திய நிறுவனங்கள் உலகம் முழுவதும் மூலப்பொருட்களைப் பெற்று தத்தமது நாட்டில் உற்பத்தி செய்த நிலை மாறி தற்போது அவை உலகம் முழுவதும் பரவியது தான் புதிய உலகமயமாக்கலின் முதன்மைக் கூறாகும். புதிய உலகமயமாக்கல் இரண்டு விதமாகப் பரவி வருகின்றது.‘

.

உலகமயமாக்கலின் இருகூறுகள்

  • இன்று உள்ளூர்வாசிகளுக்கு உலக விசயங்களைக் கொண்டு தருவதும் உலகவாசிகளுக்கு உள்ளூர் விசயங்களைக் கொண்டுபோவதும் புதிய உலக மயமாக்கலினால் சாத்தியப்பட்டிருக்கின்றது.
  1. உள்ளூரினை உலகமயப்படுத்துதல் (Glocalisation of local- Glocalisation)
  2. உலகினை உள்ளூர்மயப்படுத்துதல் (Localise the Global)
  • சான்றாக ‘Why this Kolaiveri’ என்ற பாடல் யூடியூபில் பதிவேற்றப்பட்டவுடன் பலமொழிகளுக்குப் பரவியது; அதே போன்று ‘Gagnam Style’ என்ற கொரிய பாடல் நம்மூரில் பிரபலப்பட்டது.
  • வணிகரீதியாக உருவான உலகமயமாதலானது இன்று பல்வேறு தளங்களில் விரவி வருகின்றது.
  1. பொருளிய உலகமயம்
  2. பண்பாட்டு உலகமயம்
  3. அரசியல் உலகமயம்

.

1. பொருளிய உலகமயமாதல்

  • பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகளான “நிலவளம், முதலீடு, தொழிலாளர் மற்றும் தொழில் முனைவு” ஆகியன உலகளாவிய அளவில் பரவுவதே பொருளிய உலகமயமாதலாகும்.
  • அந்நிய நேரடி முதலீடுகள், இரு தரப்பு வணிக ஒப்பந்தங்கள், கட்டுப்பாடற்ற வணிகம் (free trade) ஆகியவை இதைச் சாத்தியமாக்கியுள்ளன.
  • பொருளிய உலகமயமாதலின் ஆகச் சிறந்த சான்று தான் ஐரோப்பிய ஒன்றியமாகும் (European Union). படிப்படியான ஒருங்கிணைப்பால் எல்லை தாண்டிய வணிகம், எல்லை கடந்த தொழிலாளர் போக்குவரவு, ஒரே நாணயம் (யூரோ €) ஆகியன சாத்தியமானது. இத்தகைய பொருளியல் பிணைப்பு மற்ற தளங்களிலும் பிணைப்பை உண்டாக்கியது.

.

2. பண்பாட்டுப் பரவல்

  • உலகமயமாதலில் முதலில் பரவிய பண்பாட்டுக்கூறு “சமயமாகும்“. இசுலாம், புத்தம், சமணம், கன்பூசியம், தாவோயிசம், கிறித்துவம் ஆகியவை உலகம் முழுவதும் வெகுவாகப் பரவின. மொழி, உணவு முறைகள், இசை, கட்டிட முறை, ஆடை, அணிகலன், நாகரிகம் ஆகியன உலகமயமாதலால் ஏற்பட்டவையாகும்.

  • நம் மாநிலத் தலைநகரில் உள்ள பல்வேறு தொன்மை வாய்ந்த கட்டிடங்கள், சான்றாக- சென்னை சென்ட்ரல், ரிப்பன் மாளிகை, உயர்நீதிமன்றம் போன்றவை இந்தோ-சார்சனிக் முறையிலான கட்டிடங்களாகும். அதே போன்று நமது இந்தியக் கட்டிட பாணியிலான பல்வேறு கோயில்கள் உலகளவில் பரவி வருகின்றன.

  • ஒலிம்பிக், பிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் என்றெல்லாம் உலகம் வேகமாக ஒருமைப்பட்டு வருகின்றது.

.

3. அரசியல் ரீதியாக உலகமயம்

  • தனி நாட்டரசுகளின் ஆதிக்கம் குறைந்து உலகளாவிய பன்னாட்டு அமைப்புகள் அரசியல் ஆதிக்கம் உடையவையாக உருவாகி வருகின்றன.
  • ஐரோப்பிய ஒன்றியம், உலக வர்த்தக நிறுவனம், பன்னாட்டு நீதிமன்றம் மற்றும் ஐ.நா. போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உலகளவில் பல முக்கிய முடிவெடுக்கும் திறனுடையவையாக உருவாகியுள்ளன.
  • சார்க் (SAARC), பிம்ஸ்டெக் (BIMSTEC), ஜி8, ஜி20, ஜி77, பிரிக்ஸ் (BRICS) போன்ற பன்னாட்டு அரசியல் மேடைகள் நாட்டின் பாராளுமன்றங்களைப் போல பல விஷயங்களை விவாதித்து முடிவெடுக்கும் களமாகியுள்ளன. இந்த உலகமயமாதலின் நன்மைகள் தீமைகள் யாவை?

நன்மைகள்

  • உலகமயமாதலின் பாதிப்புகள் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபட்டமையாக இருக்கின்றன. எனினும் உலகளவில் வளமான வாழ்வுக்கும் வளப் பரவலுக்கும் உலகமயம் வழி கோலுகிறது.
  1. பொருளாதாரப் பிணைப்பினால், வளங்கள் சரியான விதத்தில் பயன்படுத்தப்பட்டு “வளங்களின் பயனுறுதிறன்“ (resource efficiency) அதிகரிக்கின்றது.
  2. வளரும் நாடுகளுக்கு “முதலீடும் நவீன தொழில்நுட்பமும்“ வளர்ந்த நாடுகளிடமிருந்து கிடைக்கின்றது.
  3. மலிவான பொருள்கள் உலகம் முழுவதும் பரவிடவும் ஆரோக்கியமான பொருளாதாரப் போட்டிக்கும் இது வழிகோலுகின்றது.
  4. வளரும் நாடுகள், ஏழ்மை நாடுகளினுடைய மலிவான தொழிலாளர்களை உபயோகித்து உற்பத்தியைப் பெருக்கிட பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சி செய்து வென்று வருகின்றன. இது வேலைவாய்ப்பைப் பெருக்கிப் பொருளிய சமநிலைக்கும் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் வழி வகுக்கிறது.
  5. உலகளாவிய கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஆகிய அனைத்தும் எல்லோரையும் சென்றடைகின்றது. இசுரேலின் நீர் மேலாண்மைத் தொழில்நுட்பம் இந்தியாவுக்கும் பயன்படுகின்றது.

தீமைகள்

  1. வளர்ந்த பொருளாதார நாடுகள், பொருளாதார ரீதியில் ஏழ்மையான நாடுகளை அடிமைப்படுத்துவதாகக் கருதப்படுகின்றது.
  2. வளர்ந்த நாடுகளின் தானியங்குத் தொழில்நுட்பப் பரவலால் வளரும் நாடுகளில் வேலையிழப்பு ஏற்படுகிறது.
  3. பன்னாட்டு நிறுவனங்களின் பேராதிக்கம் குடிசைத் தொழில், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை நசிவடையச் செய்கின்றது.
  4. இயந்திரமயமான விவசாயத்தின் விளைச்சலை அமெரிக்கா போன்ற நாடுகள் சிறு விவசாயிகள் நிறைந்த இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட வாய்ப்புண்டு; உலக வர்த்தக நிறுவனத்தில் “விவசாய மானியம்“ பற்றிய விவாதம் இன்னும் முடிவடையாமல் உள்ளது;
  5. பண்பாடு, மொழி, பழக்கவழக்க ரீதியில் ஒரு இனத்தின் தனித்த அடையாளங்கள் அழிவுக்குள்ளாகின்றது.
  6. வளர்ந்த நாடுகளின் கழிவுகள் பிற நாடுகளில் கொட்டப்படுவதாகவும், வலிய நாடுகள் வலுகுறைந்த நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதாகவும் கருதப்படுகின்றது.
  7. ஒரு நாட்டின் பொருளாதார, அரசியல், சூழலியல் பிரச்சினைகள் எல்லை கடந்து பரவிட வாய்ப்புண்டாகியுள்ளது. சான்று : உலகமயமாகும் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS).
.

இந்தியாவும் உலகமயமும்

  • கிறித்துவ ஊழித் தொடக்கத்தில் (கி.பி.1) இந்தியாவானது உலகின் வளமான நாடாகவும் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 33 சதவீதத்தினை பெற்றிருந்த நாடாகவும் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்தியாவில் உற்பத்தியான பொருட்கள் உலகெங்கும் விற்கப்பட்டன. பின்னர் அந்நியப் படையெடுப்புகளும் ஆங்கிலக் காலனியமும் இந்தியாவின் போக்கினை மாற்றியது. காலனியக் காலகட்டத்தில் இந்தியாவின் வளம் சுரண்டப்பட்டது.
  • சுதந்திரத்திற்குப் பின்னர் நமது நாட்டின் நிலைமையைக் கருதி உலகச் சந்தையிலிருந்து தனித்திருக்க வேண்டியதாயிற்று. 1991வரை நமது பொருளாதாரம் உலகிலிருந்து தனிமைப்பட்டுக் இருந்தது. பின்னர் படிப்படியாக இந்தியா உலகுடன் நெருங்கியது; வணிக ரீதியாக, உலக வர்த்தக நிறுவனம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பல நிறுவனங்களில் பங்குதாரரானது.
  • உலகளவில் வெளிநாடு வாழ் இந்தியரின் எண்ணிக்கை 3 கோடியாகும். உலகில்7% வணிகம் இந்தியாவினுடையதாகும். இந்தியாவின் அடையாளம் உலகின் எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது. இந்தியாவிலும் பன்னாட்டு தாக்கங்களைக் காணலாம்.
  • இந்தியாவில் மலிவு விலையில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் அதிகளவு நிரம்பியுள்ளதால், உலக நிறுவனங்கள் இங்கே கால் பதித்தன. சேவைத்துறை, கணினித்துறை, வெளிப்பணி ஒப்படைப்பு போன்ற பணி வாய்ப்புகள் இந்தியாவிற்கு அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்றன.
  • மிட்டல், ரிலையன்ஸ், டாடா, ஹிண்டால்கோ, விப்ரோ, அதானி, ஆதித்யா பிர்லா போன்ற இந்திய நிறுவனங்கள் உலகளவில் கால் பதித்துள்ளன. ஹாலிவுட் படங்கள் நம் நாட்டிலும் பாலிவுட் படங்கள் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. “மதர் இண்டியா“ என்ற திரைப்படம் ஆப்பிரிக்காவிலும் ரஜினிகாந்த் ஜப்பானிலும் புகழடைய வழி வகுத்தது உலகமயமாதலே ஆகும். இவை தவிர பின்வரும் விளைவுகளுக்கும் உலகமயதாதலே காரணமாகும்.

 

  1. அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
  2. நுகர்வோருக்கு பலவகைப் பொருட்களும், அவற்றினை தேர்வு தேர்வு செய்வதற்கான அதிகளவு வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.
  3. நுகர்வு வருமானம் அதிகரித்துள்ளது.
  4. வேளாண்மையின் பொருளாதாரப் பங்கு வெகுவாகக் குறைந்துள்ளது. விவசாயிகள் விதைகளுக்காகப் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்துள்ள நிலைமை தற்போது உண்டாகியுள்ளது.
  5. பறவைக் காய்ச்சல், எபோலா, பன்றிக் காய்ச்சல் போன்ற பல வகை நோய்கள் பரவுகின்றன. மருத்துவச் செலவும் அதிகரித்துவிட்டது.
  6. கல்வி வாய்ப்புகள் பெருகியுள்ளன; குறிப்பிட்ட சில பாடங்களில் சிறப்புத்திறனுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன; அதே சமயம் பொருளாதார வசதியைப் பொறுத்தக் கல்வி வாய்ப்புகள் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கியுள்ளது.
  7. உலகமயமாதல் நகரமயமாதலைத் தூண்டியுள்ளது;
  8. இந்தியாவின் கூட்டுக்குடும்ப முறை உடைந்து மேற்கத்தியக் கலாச்சாரம் படிந்த, தனிக்குடும்ப முறை பெருகி வருகின்றது. இதனால் முதியோர்களின் வாழ்வு சிரமத்துக்குள்ளாகத் தொடங்கியுள்ளது.
  9. பிட்சா, பர்கர், சீன உணவுகள் போன்ற துரித உணவுகள் தற்காலத்தில் பட்டிதொட்டியெங்கும் ஊடுருவி வருகின்றது; நமது பாரம்பரிய உணவு முறையினை நாம் தொடர்ந்து மறந்து வருகின்றோம்.
  10. நமது நடனம், இசை, பாடல் உலக அரங்குகளில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது; அதே சமயம் நாட்டுப்புறக் கலைகள் நசிந்து போய் உள்ளன.
.

உடைகிறதா உலகமயம்?

  • உலகமயத்தினால் ஒருமைப்பட்டு ஒருங்கிணைந்தமைக்கு ‘ஐரோப்பிய ஒன்றியம்’ மிகச் சிறந்த சான்று ஆகும். போக்குவரத்து, தொழிலாளர், பரவல், எல்லை, வணிகம், நாணயம், அரசியல் ஒற்றுமை, பாதுகாப்பு என்று பல்வேறு விதங்களில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றாக இணைந்துள்ளன. இந்த நிலைமையானது இன்று மாறத் தொடங்கியுள்ளது. பிரெக்சிட், கிரெக்சிட், அகதிகள் சிக்கல், எல்லைகளை மூடுதல் என்று மெதுவாக விரிசல் தொடங்கியுள்ளது.
  • உலகளவில் அமெரிக்காவின் புதிய அரசியல் வேகமானது “அமெரிக்காவுக்கு முதன்மை“ என்பதை முன்னெடுத்துள்ளது; ‘பசிபிக் பிராந்தியக் கூட்டாண்மை‘ (TTP)-யிலிருந்தும், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்கா விலகியுள்ளது முக்கியத்துவமான ஒன்றாகும். உலக வர்த்தக நிறுவனத்தில் (WTO) உணவுப் பேச்சுவார்த்தைகள் தேக்கம், ஐ.நா. குறித்து பெருகிவரும் அதிருப்திகள், உலகவங்கிக்கு (WB) மாற்றாக உண்டான புதிய வளர்ச்சி வங்கி (NDB), போன்றவை உலகமயம் குறித்த மறுசிந்தனையைத் தூண்டுகின்றது.

  • மேற்கண்ட வரைகோட்டுப் படமானது இந்தியாவின் 2016-2017 பொருளாதார ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையானது உலகமயமாதலின் நான்கு நிலைகளைப் பற்றிக் குறிப்பிட்டது.
  1. உலகமயமாதல் (Globalisation)
  2. உலகமயம் உடைதல் / (De Globalisation)
  3. மறு உலகமயமாதல் (Re Globalisation)
  4. மீ உயர் உலகமயமாதல் (Hyper Globalisation)
  • இந்த நான்கு நிலைகளில் இந்தியாவின் ஏற்றுமதி எப்படி இருந்தது என இந்தப்படம் விளக்குகிறது. 2015ற்குப் பிறகு நாம் எந்தப் பாதையில் பயணிக்கிறோம் எனப் புரியாத வினாவினை தொடுத்துள்ளது.
  • சரி! ஆகட்டும்; உலகம் என பொருள் தரும் பிற தமிழ் சொற்கள் என்ன தெரியுமா? எத்தனை தெரியுமா?
  • “உலகம், குவலயம், குவவு, ஞாலம், பார், பொழில், புடவி, பூழில், பொறை, நீரகம், கூ, கோ, கிடக்கை, மண்ணுலகு, மண்ணகம், இருநிலம், வையம், மேதினி, அகிலம், அவனி, தரணி, காசினி, புவி, பூவுலகு, உலகு“!
  • உடல் எடை ஓரளவே கூட வேண்டும். எல்லையைத் தாண்டினால் அது உடல் பருமனெனும் நோயாகும். அதேபோல உலகமும் ஓரளவு தான் உலகமயமாக முடியும். இன்று நாம் அந்த எல்லையைத் தொட்டுவிட்டோமா என்று தெரியவில்லை ஆனால் பொறுத்திருந்து பார்ப்போம்.
.

- - - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்