TNPSC Thervupettagam

உலகமயம் தீர்வல்ல!

April 1 , 2021 1393 days 609 0
  • சூயஸ் கால்வாயில் தரைதட்டிய "எவர்கிவன்' சரக்குக் கப்பல் மீட்கப்பட்டது இப்போது வரலாறாகியிருக்கிறது.
  • இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டிய ஸ்மித் சால்வேஜ் என்கிற டச் நிறு வனத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
  • கப்பலில் இருந்து சரக்குப் பெட்டகங்களை அகற்றாமல் 30,000 கியூபிக் மீட்டர் மண்ணையும், சகதியையும் கப்பலின் அடியில் இருந்து அகற்றி, தரைதட்டிய கப்பலை நகர்த்தியது மிகப் பெரிய சாகசம் அல்லாமல் வேறென்ன?
  • சர்வதேச வர்த்தகத்துக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்த சூயஸ் கால்வாயின் 150-ஆவது ஆண்டு விழா 2019-இல் கொண்டாடப்பட்டது.
  • மத்திய தரைக்கடலையும், இந்து மகா சமுத்திரத்தையும் இணைக்கும் குறுகிய பகுதியில் மிகப் பெரிய கால்வாய் உருவாக்கப்பட்டு, அதன் வழியாக கப்பல்கள் கடந்து செல்ல வழிகோலியது மனித வரலாற்றில் மிகப் பெரிய திருப்பமாக அமைந்தது.
  • ஐரோப்பியர்களின் காலனி ஆக்கிரமிப்புகளுக்கும், இரண்டு உலகப் போர்களிலும் படைகளை நகர்த்துவதற்கு உதவிய பெருமையும் சூயஸ் கால்வாய்க்கு உண்டு.
  • 1956-இல் எகிப்து அதிபராக இருந்த நாசர், சூயஸ் கால்வாயை சொந்தமாக்கிக் கொண்டபோது மேற்கத்திய வல்லரசு நாடுகள் கடுமையாக எதிர்த்தன.
  • அதை எதிர்கொண்டு எகிப்தையொட்டியுள்ள சூயஸ் கால்வாயை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால், கப்பல்கள் கடந்து செல்வதற்கான கட்டணமாக இப்போது ஆண்டுதோறும் சுமார் 700 கோடி டாலர் அந்த நாட்டுக்குக் கிடைக்கிறது.

எவர்கிவன்

  • மார்ச் 23-ஆம் தேதி சீனாவிலுள்ள ஷாங்காயிலிருந்து நெதர்லாந்திலுள்ள ரோட்டர்டாமுக்குச் சென்றுகொண்டிருந்த "எவர்கிவன்' சரக்குக் கப்பல், சூயஸ் கால்வாயில் நுழைந்தது.
  • 400 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்ட "எவர்கிவன்' சரக்குக் கப்பலில் 20,000 சரக்குப் பெட்டகங்கள் இருந்தன.
  • தெற்குப் பகுதி வழியாக நுழைந்து ஆறு கி.மீ.தான் சென்றிருக்கும் அந்தக் கப்பல். சூயஸ் கால்வாயின் மிகக் குறுகிய, ஒரு கப்பல் மட்டுமே செல்லக்கூடிய பாதையில் "எவர்கிவன்' சரக்குக் கப்பல் நுழைந்தபோது அடித்த பாலைவனச் சுழற்காற்று கப்பலை ஒருபுறமாகத் திருப்பியது.
  • அதன்விளைவாக, இரு கரைகளையும் தொட்டபடி "எவர்கிவன்' மணலில் சிக்கிக்கொண்டுவிட்டது.
  • 195 கி.மீ. நீளமுள்ள சூயஸ் கால்வாய் வழியாக சிறிதும் பெரிதுமாக நிறைய கப்பல்கள் தினசரி கடந்து போவது வழக்கம்.
  • ஐரோப்பா, அமெரிக்கா போன்ற கண்டங்களை ஆசிய கண்டத்துடன் இணைக்கும் ஒரே குறுக்கு வழி சூயஸ் கால்வாய் மட்டுமே.
  • அதனால், கடல் வழி வர்த்தகத்தில் ஈடுபட்ட சரக்குக் கப்பல்களுக்கு அந்த கால்வாய்தான் ஜீவநாடி.
  • சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 12%-ம், தினசரி சுமார் 1,000 கோடி டாலர் விலை மதிப்புள்ள சரக்குகளும் சூயஸ் கால்வாய் வழியாக இருபுறமும் கடந்து செல்கின்றன. அதனால்தான் "எவர்கிவன்' சரக்குக் கப்பல் சூயஸ் கால்வாயை அடைத்து நின்றபோது சர்வதேச வர்த்தகம் ஸ்தம்பிக்க நேரிட்டது.
  • "எவர்கிவன்' சரக்குக் கப்பலை அகற்றுவதில் ஒரு வாரத்துக்கு மேல் நூற்றுக்கணக்கானோர் முழுமூச்சாக பணியில் இறங்கினார்கள்.
  • மண்ணில் சிக்கிய 2,20,000 டன் எடையுள்ள சரக்குக் கப்பலை நகர்த்துவது சாதாரணமாக இருக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை பெளர்ணமி நிலவில் கடல் அலை அதிகரித்தபோது மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு அது வரப்பிரசாதமாக அமைந்தது.
  • அந்த சரக்குக் கப்பல் சற்று அசைந்து கொடுத்தபோது மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களின் உற்சாகம் பல மடங்கு அதிகரிக்க, மணல் மேட்டிலிருந்து அகன்று கப்பல் தண்ணீரில் மிதக்கத் தொடங்கியது.
  • அந்தக் கப்பலை அங்கிருந்து மெதுவாக நகர்த்தி சூயஸ் கால்வாயின் அகலமான பகுதியான கிரேட் பிட்டர் லேக்கிற்கு கொண்டு சென்றனர்.
  • குறுகிய பகுதியிலிருந்து அந்தக் கப்பல் நகர்ந்தபோது மீண்டும் கப்பல் போக்குவரத்து சூயஸ் கால்வாயில் தொடர்ந்தது. ஒட்டுமொத்த உலகமும் நிம்மதி பெருமூச்சு விட்டது.
  • சூயஸ் கால்வாய் அடைபட்டதால், அந்தக் கால்வாயின் இருபுறமும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் கடந்துபோக முடியாமல் காத்துக் கிடந்தன.
  • வேறுவழியில்லாமல் பல கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி பயணிக்க முற்பட்டதால் ஏற்பட்ட இழப்பு ஏராளம். எகிப்துக்கு ஏற்பட்ட கட்டண இழப்பு மட்டுமே 95 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.
  • சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட கப்பல் போக்குவரத்து நெரிசலால் சர்வதேச வர்த்தகத்துக்கு நாளொன்றுக்கு ஒன்பது பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
  • சூயஸ், பனாமா கால்வாய்கள், டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே முதலிய பெரும் போக்குவரத்துத் திட்டங்கள் சர்வதேச வர்த்தகத்தின் போக்கையே மாற்றியமைத்தன.
  • சரக்குப் பெட்டகங்கள் இன்னொரு வரப்பிரசாதம். பிரம்மாண்டமான கப்பல்களும் உயரமான சரக்குப் பெட்டகங்களும் உருவானபோது அதற்கேற்றாற்போல கடல்வழிப் பயணத்தில் முக்கியமான கால்வாய்களின் அகலமும், ஆழமும் அதிகரிக்கவில்லை. அப்படியே அதிகரித்தாலும் அதைவிடப் பெரிய கப்பல்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு நிரந்தரமான தீர்வை சர்வதேச வர்த்தகர்கள் காண வேண்டும்.
  • இறக்குமதிகளை நம்பி ஏற்றுமதிகள்; தற்சார்புக்கு மாற்றாக உலகமயம்; நாளும் அதிகரித்து வரும் நுகர்வுக் கலாசாரம் - இவையெல்லாம் சர்வதேச வர்த்தகத்தை இன்றியமையாததாக மாற்றியிருக்கின்றன.
  • சிறிய கப்பல்கள் பெரிய கப்பல்களாக மாறிவிட்டன. ஒரு "எவர்கிவன்' சரக்குக் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டதன் விளைவு, சர்வதேச வர்த்தகம் ஒருவாரத்துக்கு மேலாக ஸ்தம்பித்தது. இது ஒரு எச்சரிக்கை மட்டுமே!

நன்றி: தினமணி  (01 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்