TNPSC Thervupettagam

உலகம் உயிர்ப்புடன் இருக்க...

January 3 , 2020 1836 days 948 0
  • சுமார் 75 சதவீத தண்ணீரால் பூமி சூழப்பட்டுள்ளது. தண்ணீர் இருப்பதால் மட்டுமே பூமியில் உயிரினங்கள் உள்ளன. மேலும், தண்ணீர் பரவியிருக்கும் விதமானது ஒரு குறிப்பிட்ட விதத்தில் சமமாக இல்லை. பூமியில் உள்ள மொத்த தண்ணீரின் அளவானது 1,400 கோடி கனமீட்டராகும். 

தண்ணீர்

  • பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கூடாமலும், குறையாமலும் அதே அளவிலேயே தண்ணீர் உள்ளது. அதாவது, தண்ணீரை உண்டாக்கவோ, அழிக்கவோ முடியாது என்பதுதான் நிறைகோட்பாடு.
  • நீரியல் சுழற்சியில் மேகம், தரைமட்ட நீர், நிலத்தடி நீர், கழிவு நீர்,  வாயு மண்டலத்தில் நீராவி போன்ற வெவ்வேறு நிலைகளில் இருக்கும். பூமியின் மீதுள்ள தண்ணீரில் 97 சதவீதம் கடல் நீர். துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகளாக 2.3 சதவீதம் உள்ளது. நமது பயன்பாடுகளுக்கு, கைக்கு எட்டிய அளவில் உள்ளவை 0.6% மட்டுமே.
  • அதாவது, உலகில் உள்ள மொத்த தண்ணீரின் அளவு 1 லிட்டர் எனக் கொண்டால் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய நீர் 60 மி.லி.தான். சுமார் 900 மி.மீ அளவு ஓர் ஆண்டுக்கு மழை பொழியும் இடத்தில் 1 ச.மீ. அளவு பரப்பில் 7,200 லிட்டர் அளவு மழை நீரைச் சேகரிக்கலாம்.
    இந்தியாவில் ஆண்டுதோறும் 4 லட்சம் கோடி பில்லியன் க.மீ. அளவு மழை பெய்கிறது. நமது ஆண்டுத் தேவை 1,05,000 கோடி  க.மீ. ஆண்டுதோறும் 1,30,000 கோடி க.மீ. அளவு மழை நீர் கடலுக்குச் செல்கிறது. தேவைக்கு அதிகமாக மழை பெய்தும் சரியான மேலாண்மை இல்லாததால், தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது.
  • உடலின் மொத்த எடையில் 70 சதவீதம் தண்ணீராகும். அதாவது, 50 கிலோ எடை கொண்ட ஒருவரின் உடலில் 35 கிலோகிராம் தண்ணீர் இருக்கும். நாம் நடப்பதற்கு உகந்த தகவமைப்பைத் தருகிறது; காற்றை ஈரப்பதமாக்கி சுவாசிக்க உதவுகிறது; உடல் வெப்ப நிலையை சீராக வைக்கிறது. முக்கிய உறுப்புகளை அதிர்வுகளிலிருந்து பாதுகாக்கிறது. கருவில் உள்ள குழந்தையை அதிர்வுகளிலிருந்து காக்கிறது. உணவை சக்தியாக மாற்றுகிறது. கால்சியம், இரும்பு போன்ற சத்துகளை உடலில் சேர்க்கிறது.  

பணிகள்

  • உடலின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்த ஓட்டம் நன்றாக இருக்க உதவுகிறது.
  • மேற்சொன்ன பணிகள் தவிர, தண்ணீர் மருந்தாகப் பயன்படுகிறது. தண்ணீரைக் கொண்டு நோய்களைக் குணப்படுத்தும் முறைக்கு "ஹைட்ரோதெரப்பி' என்று பெயர்.
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர்  தண்ணீர் குடித்து, பிறகு ஒரு மணி நேரத்துக்கு எந்த உணவும் சாப்பிடாமல் இருந்தால் மலச்சிக்கல், வயிற்றில் அமிலத் தன்மை பிரச்னை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் முதலானவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இந்தப் பயன்பாட்டுக்கு நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்த சுத்தமான நீரை உபயோகிக்க வேண்டும்.

தண்ணீர்த் தேவை

  • பொதுவாக ஒருவர் தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தண்ணீர்த் தேவை என்பது உடலிலிருந்து வியர்வையாக, சிறுநீராக,  சுவாசத்தின்போது வெளியேறும் நீரின் அளவை மீண்டும் சமன்படுத்துவது ஆகும். அதாவது, உடலில் ஏற்படும் நீர் இழப்பை சமன்  செய்யும் அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் உடல் அளவில் எந்தவிதமான இடர்ப்பாடுகள் இல்லாமல் வாழ முடியும்.
  • தாகம் எடுக்கும் நிலையில், உடலில் உள்ள தண்ணீர் 1 சதவீதம் குறைந்து விட்டது என்று பொருள். உடலிலிருந்து தண்ணீர் இழப்பு 10 சதவீதத்தை நெருங்கினால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சராசரி வெப்ப நிலையில் வாழும் ஒருவர், ஒரு நாளைக்குக் குறைந்த அளவு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்ப தேசத்தில் 70 கிலோகிராம் எடையுள்ள ஒருவருக்கு 4 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படலாம்.
    உண்ணும் உணவு வகையைப் பொருத்தும் தண்ணீரின் தேவை வேறுபடும். அதிக கலோரி உள்ள உணவைச் சாப்பிட்டால் தண்ணீரின் தேவை அதிகரிக்கும். 
  • தற்போது புட்டிகளில் அடைக்கப்பட்டு தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அடைக்கப்பட்ட தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாகவும், நன்றாக மூடப்பட்டும் எந்தவிதமான சுவையில்லாமலும் இருக்கக் கூடியவை.
  • புட்டி நீர் பல வகைகளில் உள்ளன. அவற்றில் முதல் வகை குடிநீர். புட்டிகளில் அடைக்கப்பட்ட தர நிர்ணயத்துக்கு உட்பட்ட குடிநீரின் மறுபெயர் கனிம நீர். கனிம நீர் என்பது, மொத்த கரை உப்புகளின் அளவு 250.மி.கி./லி.-க்கு குறையாமல், நிரந்தரமான,  சரியான விகிதத்தில் கனிமப் பொருள்கள் இயற்கையிலேயே அமையப் பெற்ற நீர், எந்தவிதமான சுத்திகரிப்பும் செய்யப்படாதவை.
  • அடுத்து சுத்திகரிக்கப்பட்ட நீர். அறிவியல் முறைப்படி அதிகப்படியாக உள்ள உப்புகளைப் பிரித்து எடுத்து குடிநீருக்கு உரிய தரத்திற்குக் கொண்டுவரப்பட்டவை. காய்ச்சி வடித்தல், அயனி நீக்கம், எதிர் சவ்வூடு பரவுதல் போன்ற தொழில்நுட்பங்களைக் கையாண்டு தயாரிக்கப்பட்டவை.
  • ஸ்பார்கலிங் நீர் - இந்த வகையில் தண்ணீரில் உள்ள கரியமில வாயுவின் அளவு, சுத்திகரிப்பதற்கு முன்னும் பின்னும் ஒரே அளவில் இருக்குமாறு சமன் செய்து தயாரிக்கப்படுபவை.
    ஊற்றுநீர் - நிலப்பரப்பிலிருந்து நிலத்திற்குள் சென்று மீண்டும் நிலப்பரப்பிற்கு வெளியாகும் தண்ணீர்.

தண்ணீரின் தரம்

  • இவ்வாறு பல்வேறு பணிகளைச் செய்து உயிரினங்களைக் காப்பாற்றும்  தண்ணீரின் தரத்தைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். தரமான தண்ணீரைத் தேர்ந்து எடுத்து குடிப்பது நோய் வருமுன் காத்தலாகும். மனிதனுக்கு ஏற்படும் நோய்களில் 80 சதவீதம் தண்ணீருடன் தொடர்புடையவை.
  • நீரின் தரம் என்பது, அதில்  படர்ந்திருக்கும் பொருள்கள் கரைந்து உள்ள உப்புகள், நுண்கிருமிகளைக் குறிக்கும். இதுவரை நீரில் சுமார் 2,000 வகையான உப்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக, நீரில் சராசரியாக சுமார் 20 உப்புகளுக்கும் குறையாமல் இருக்கும்.
  • குடிநீரில் உள்ள உப்புகள்,  நுண்கிருமிகள் நோயை உண்டாக்கக் கூடியவை. இதனால்தான் குடிப்பதற்கான தண்ணீரின் தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, குடிநீர் விஷயத்தில் எப்போதும் அக்கறையுடன் செயல்படுவது அவசியம்.

நன்றி: தினமணி (03-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்