TNPSC Thervupettagam

உலகம் எதிர்கொள்ளும் இரு பேராபத்துகள்

July 27 , 2023 536 days 326 0
  • பண்டோராவின் பெட்டி என்ற தொன்மக் கதையில் வரும் கதையை இப்போதெல்லாம் அடிக்கடி எண்ணிப் பார்க்கிறேன்; ‘பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தெரியும் - ஆனால் எதிர் பார்த்திருக்கவே முடியாத தீமைகளை ஏற்படுத்திவிடும்’ என்று ‘பண்டோரா பெட்டி’ என்ற வார்த்தைக்கு மெரியம்-வெப்ஸ்டர் அகராதி பொருள் கூறுகிறது. முழுமையாக நிறைவடைந்த அறிவார்ந்த மனித இனமாகக் கருதப்படும் நாம் இதுவரை செய்திராத செயல்களைச் செய்யத் தொடங்கியிருக்கிறோம்.
  • நான் குறிப்பிடும் அந்த இரண்டு பெட்டிகளில் ஒன்று ‘செயற்கை நுண்ணறிவு’ என்பதாகும். அதைச் ‘சாட்ஜிபிடி’, ‘பார்ட்’, ‘ஆல்பாஃபோல்ட்’ என்ற செயலிகளில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். நம்மிடமே இருக்கும் அபார மூளையின் ஆற்றலை ஒத்த அல்லது அதைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவிட்டோம்.
  • இன்னொரு தீங்கான பெட்டி, ‘காலநிலை மாற்றம்’. இப்போது உலகின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் இதைப் பற்றி மேற்கொண்டு விளக்க வேண்டிய அவசியம் இல்லாமல், வரலாறு காணாத வறட்சி அல்லது ஒரு பருவத்தில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாள்களிலேயே கொட்டித்தீர்க்கும் ஊழிக்காலப் பேரவலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
  • கோடை வெப்பம், சுட்டெரிக்கும் வெயில், அனல்காற்று என்பதையெல்லாம் தாண்டி கொடும் வெயிலுக்கு பலியாகிக்கொண்டிருக்கிறோம். பருவநிலை என்பது இதுவரை சூரியனை உலகு சுற்றிவரும் கதியையும் காலத்தையும் மட்டுமே பொருத்ததாக இருந்தது. காடுகள் அழிப்பு, கரியுமில வாயு வெளியேற்றும், நச்சுவாயுக்கள் பெருக்கம், மலைகளை வெட்டி வீழ்த்துவது போன்ற மடமைகளால் அதித குளிர், அதீத கோடைக்கு வழிசெய்துவிட்டோம்.
  • இரண்டு தீமைகளுக்கும் ஒரே சமயத்தில் வழிசெய்துவிட்ட நாம், இவற்றால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து தப்பிக்க எந்தக் கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம் அல்லது எந்த நெறிமுறைகளைப் பின்பற்றப் போகிறோம் என்பதே என் முன்னுள்ள கேள்வி!

செயற்கை நுண்ணறிவு

  • எந்தவொரு சுதந்திர சமூகத்துக்கும் அடிப்படையான விழுமியங்களான ‘உண்மை’ – ‘நம்பிக்கை’ என்ற இரண்டையும் தகர்த்துப் பொடிப்பொடியாக்க செயற்கை நுண்ணறிவை சமூக வலைதளங்கள் எப்படிப் பயன்படுத்தப்போகின்றன என்பது தெரியாவிட்டாலும், இதை நாம் சந்தித்தேயாக வேண்டும். செயற்கை நுண்ணறிவை போதிய அக்கறை இல்லாமல் அணுகுவோமானால், சமூக வலைதளங்கள் தோன்றியபோது மார்க் ஜுக்கர்பெர்க் வெகு அலட்சியமாக முன்மொழிந்த, “விரைந்து முன்னேறுங்கள் – எல்லாவற்றையும் தாக்கித் தகருங்கள்” என்பதை அங்கீகரித்தவர்களாவோம்; எவருமே கற்பனைகூட செய்து பார்த்திராத வகையில் நாம் அனைத்தையும் வேகமாக நொறுக்கப் போகிறோம், மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம், மிக ஆழமாக அவற்றைக் கொண்டுசெல்லப் போகிறோம்.

சீட்மேன் கவலை

  • “சமூக வலைதளங்கள் நம் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டபோது அவை என்ன செய்யப்போகின்றன என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்கத் தவறிவிட்டோம், கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையில் அவை இரண்டறக் கலந்த பிறகு ஏற்பட்ட கற்பனைக் கெட்டாத விளைவுகளைச் சரிசெய்யத் தவறியும் விட்டோம்” என்று எல்ஆர்என் நிறுவனத்தை (எச்ஓடபிள்யு சமூக நிறுவனம்) நிறுவியவரும் தலைவருமான டோவ் சீட்மேன் என்னிடம் கூறினார். “சமூக வலைதளங்களால் நல்லவை மட்டுமே நடக்கும் என்ற தவறான எதிர்பார்ப்பால் நிறைய நேரத்தையும் நம்முடைய பாதையையும் இழந்துவிட்டோம், மக்களை இணைத்ததுடன் அவர்களுக்குக் குரலையும் தந்துவிட்டோம்; இதே தவறுகளைச் செயற்கை நுண்ணறிவு விஷயத்திலும் நாம் செய்துவிடக் கூடாது” என்றார்.
  • “எனவே, உடனடியாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கு தார்மிகப் பொறுப்புகள் இருக்கும்படியாகவும் அவை ஒழுங்காற்று விதிகளுக்கு உட்பட்டவையாகவும் இருக்கும்படியாகவும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். மனிதத்தைக் காக்கவும் மேம்படுத்தவுமான செயல்களுக்கு மட்டுமே இந்தச் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட வேண்டும்: நம்முடைய ஆக்கப்பூர்வமான திறனும் ஆர்வமும் உச்சத்தில் இருக்கும்போது எதிர்கால நன்மைக்கான நம்பிக்கை, அறநெறிகள், இரக்க சுபாவம், உறுதியான செயல்கள், பிறரோடு இணைந்து சமூகத்துக்காக உழைக்கும் போக்கு ஆகியவற்றுக்காக இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்” என்றார் சீட்மேன். (என் மனைவி நிறுவியுள்ள பிளானட் வேர்ல்ட் அருங்காட்சியக வாரிய உறுப்பினராகவும் இருக்கிறார் சீட்மேன்).
  • அதிக அதிகாரத்துடன் அதிக பொறுப்பும் வருகிறது என்ற முதுமொழிக்கு இது மிகவும் பொருத்தமான காலம். இன்னொரு தலைமுறை தொழில்நுட்பவியலாளர்களும் முன்னவர்களுடன் சேர்ந்துகொண்டு, “இது புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் மேடைதான், இங்கே அறம் சார்ந்த நோக்கங்களுக்கோ வழிமுறைகளுக்கோ முக்கியத்துவம் கிடையாது என்று கூற நாம் அனுமதிக்கக் கூடாது; இந்த செயற்கை நுண்ணறிவு அதிவேகமாகவும் பல துறைகளிலும் வேகமாக வளருகின்றன, மிகவும் சக்திவாய்ந்தவையாக உருவெடுத்து வருகின்றன, மனிதர்களுக்கு பல்வேறு வகைகளில் செயலதிகாரத்தைத் தருகின்றன, மனிதர்கள் கலந்து செயல்பட வழிவகுக்கின்றன.”
  • இந்தக் காரணங்களுக்காகவே கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் – சமூக அணித் தலைவர் ஜேம்ஸ் மாணியிகாவை சந்தித்தபோது, “செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் எப்படியெல்லாம் வளரும், எந்த வகையில் எல்லாம் பிரச்சினைகளை ஏற்படுத்தும்?” என்று கேட்டேன்.
  • “நாம் துணிவோடும் அதேசமயம் பொறுப்போடும் செயல்பட வேண்டும்” என்றார். “ஏன் துணிவுடன் இருக்க வேண்டும் என்றால் பல்வேறு துறைகளில் அன்றாட வாழ்க்கையில் மக்களுக்குப் பல்வேறு விதங்களில் செயற்கை நுண்ணறிவு பெரிய அளவில் உதவப்போகிறது; மருத்துவ சுகாதாரத் துறையில் புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கவும் சிகிச்சை முறைகளை வடிவமைக்கவும் உதவப்போகிறது. இது நோய்களைத் தீர்ப்பதுடன் பொருளாதார வளத்துக்கும் வழிகாட்டப்போகிறது.
  • “புதிய மருந்துகள், சிகிச்சை முறைகள் குறித்து உலகின் எந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கும் அவரவர் மொழியிலேயே தகவல்களைத் தரப்போகிறது, அவர்கள் விரும்பும் அல்லது அவரவர்களுக்கு எளிதான வழிகளில் தகவல் தரப்போகிறது வார்த்தைகளாகவும் படங்களாகவும் குரல் ஒலியாகவும், குறியீடாகவும் அவை கிடைக்கவிருக்கின்றன. அவற்றை மக்கள் பயன்படுத்தும் நவீன ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், வானொலி அல்லது புத்தகங்கள் கொண்டுசெல்லப் போகின்றன. மிகப் பெரிய செல்வாக்குள்ள மனிதர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் கிடைத்த மருத்துவ ஆலோசனைகள் பாமரர்களுக்கும் எளிதாகவும் செலவின்றியும் கிடைக்கப்போகின்றன.
  • அதேசமயம் நாம் இந்தத் தொழில்நுட்பங்களை அளிக்கும்போதும் கையாளும்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். முதலாவதாக, இந்தக் கருவிகள் அனைத்துமே மனித இனத்தின் நன்மைக்கான செயல்களுக்கு இசைந்ததாக மட்டுமே இருக்க வேண்டும். இரண்டாவதாக, தவறான கைகளுக்கு இவை கிடைத்துவிட்டால் எதிர்பார்க்கவே முடியாத அளவுக்கு தீமைகளையும் செய்துவிடும். இப்போதெல்லாம் நாம் தகவல் திரிபு, போலிச் செய்திகள், செய்திகள் இடைமறிப்பு பற்றியெல்லாம் அதிகம் கேள்விப்படுகிறோம். (எந்தத் தொழில்நுட்பத்தையும் தீயவர்கள்தான் முதலில் கைப்பற்றிவிடுகிறார்கள்).
  • இறுதியாக, “அறிவியலைவிட பொறியியல் சில படிகள் முன்னே இருக்கிறது; சாட்ஜிபிடி, பார்ட் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு சார் செயலிகளையும் அவற்றுக்கான கட்டளை மொழிகளையும் உருவாக்கும் பொறியியல் வல்லுநர்களுக்குக்கூட அவற்றின் முழு வேலைத்திறன் தெரிவதில்லை என்பதே உண்மை. அசாதாரணமான திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்கும் பொறியியல் அறிவு நுட்பர்களிடம் இருக்கிறது. கணக்குகளைப் போட, அபூர்வமான மொழியைப் புரியவைக்க, சில வகை நகைச்சுவைத் துணுக்குகளுக்குக்கூட விளக்கம் தர அவர்களுடைய நுட்பம் உதவுகிறது. அதன் பிறகு அந்த அமைப்பே அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல அருஞ்செயல்களை அனாவசியமாகச் செய்துவிடுகிறது. நாம் உருவாக்கிய இந்தச் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தால் இன்னும் என்னவெல்லாம் நன்மைகளையும் தீமைகளையும் செய்ய முடியும் என்பதுகூட உருவாக்கியவர்களுக்கே தெரிவதில்லை” என்கிறார் மாணியிகா.
  • எனவே, இதை ஒழுங்குபடுத்துவது அவசியம். அதைக் கவனமாகவும் நிரல் அமைத்தும் செயல்படுத்த வேண்டும். ஒரே மாதிரியான கட்டுப்பாடு எல்லா நுண்ணறிவுக்கும் பொருந்திவிடாது. செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் அமெரிக்காவை சீனா தோற்கடித்துவிடக் கூடாது என்று நினைத்தால், அந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியையும் பயன்பாட்டையும் அதிவிரைவில் செய்யவே தோன்றும். இந்தச் செயற்கை நுண்ணறிவு உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஜனநாயகப்பூர்வமாக நினைத்தால் அதை அனைவரும் அறியும்படி செய்ய வேண்டும். அப்படி அறியத் தரும் குறியீடுகளை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு எப்படி, எதற்குப் பயன்படுத்தும்? சமூக வலைதளங்கள் இப்போது பயனாளிகளிடையே பாகுபாட்டை ஏற்படுத்துகிறது, தனிநபர் உரிமைகளை (அந்தரங்கம்) மீறுகிறது, சமூகத்தைப் பிளக்கும் இதர செயல்களையும் செய்கிறது. அதையே நாளை செயற்கை நுண்ணறிவும் செய்யாமலிருக்க ஒழுங்காற்று அமைப்பு அவசியம்.
  • செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய உற்பத்தித்திறன் சார்ந்த லாபங்களால் பயன் அடைய வேண்டும் என்று விரும்பினால் சட்டத் துறையில் நீதிமார்களுக்குத் துணையாகச் செயல்படும் உதவியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிதி ஆலோசகர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மனப்பாடக் கலையைக் கற்றுத்தரும் பணியாளர்கள் ஆகியோருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு மாற்று வழிகளையும் கண்டுபிடித்தாக வேண்டும், ஏனென்றால் செயற்கை நுண்ணறிவு இவர்களை இன்றே வேலையிழக்கச் செய்துவிடும். இதே தொழில்நுட்பம் நாளை வழக்கறிஞர்களையும் கணினி நிரல்களுக்கான குறியீடுகளைத் தயாரிக்கும் கோடர்களையும்கூட வீட்டுக்கு அனுப்பிவிடும். இப்படியே போனால் அதிபுத்திசாலியான இந்தச் செயற்கை நுண்ணறிவு தன்னுடைய இலக்கை தானே நிர்ணயித்துக்கொள்ளும் – அதனால் மனிதர்களுக்கு எப்படிப்பட்ட இன்னல்கள் வந்தாலும் கவலைப்படாது – என்பதால் அதை உடனே கட்டுப்படுத்தியாக வேண்டும்.
  • இங்கே இறுதியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஆபத்து உண்மையில் நடக்கக்கூடியதே; செயற்கை நுண்ணறிவு அமைப்பு முறையைக் கொண்டுவந்த வடிவமைப்பாளர்களில் முன்னோடியான ஜியாஃப்ரே ஹின்டன், கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அணியிலிருந்து விலகுவதாக கடந்த திங்கள்கிழமை அறிவித்தார். “செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதில் கூகுள் நிறுவனம் பொறுப்புடன் நடந்துகொள்ளும் என்று எதிர்பார்த்தேன், இதில் உள்ள ஆபத்துகள் குறித்துப் பேசி எச்சரிக்க சுதந்திரம் வேண்டும் என்பதால் வேலையிலிருந்து விலகுகிறேன்” என்று விலகலுக்கான காரணத்தைக் கூறியிருக்கிறார். “கெட்டவர்கள் இதைக் கெட்ட நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது என்பதைக் காண சகிக்கவில்லை” என்று ‘டைம்’ நிறுவனத்தின் ‘கேட் மெட்ஸ்’ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ஹின்டன் தெரிவித்திருக்கிறார்.

இவற்றையெல்லாம் சேர்த்துப் பாருங்கள்:

  • செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தும் நாம், ஒரு சமூகம் என்ற அளவில் நல்லதும் – கெட்டதுமான பரிமாற்றங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும். அரசின் கட்டுப்பாடுகள் மட்டும் நம்மைக் காப்பாற்றிவிடாது. கடவுளுக்கு நிகரான படைப்பு அதிகாரத்தை மனிதர்கள் கைப்பற்றும் நிலையில், மாற்றங்களும் படுவேகமாகவே நிகழும்; ஆனால் மிகப் பழமையானதும், மெதுவானதுமான அனைத்துமே இப்போது முக்கியத்துவம் பெறுகின்றன – அவை தேவாலயத்தின் ஞாயிற்றுக்கிழமை ஆன்மிக வகுப்பில் நாம் கற்ற அறநெறிகள், அல்லது நமக்கு தார்மிக உணர்வுகளை ஊட்டிய ஊற்றுகள், இதுவரை நாம் அறிந்திராதவற்றையும்விடப் பெரியவை போன்றவைதான் நம்முடைய உதவிக்கு வர வேண்டும்.
  • செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் துறைகளை நாம் விரித்துக்கொண்டே போவதானால், பழைய பொன் விதிகளையும் நாம் ஆழ்ந்து பின்பற்றியாக வேண்டும். ‘பிறர் உனக்கு செய்யக் கூடாது என்று நினைக்கும் எந்தத் தீங்கையும் பிறருக்கு நீ செய்யாதே’ என்பது அப்படிப்பட்ட பொன்னான வாசகம். கடவுளுக்கு நிகரான செயற்கை படைப்பதிகாரம் நம்மிடம் வந்துவிட்டதால் நம்மால் மற்றவர்களை விரைவாகவும் எளிதாகவும் ஆழமாகவும் அழித்துவிட முடியும்.

பருவநிலை மாற்றம்

  • காலநிலை மாற்றம் என்று அழைக்கப்படும் பருவநிலை மாற்ற விவகாரத்திலும் அதேதான் நிலைமை; நாசாவின் இணையதளம் கூறுகிறது: கடந்த எட்டு லட்சம் ஆண்டுகளில் பல்வேறு பருவநிலை மாற்றங்களுக்குப் பிறகு பனியுகம் மட்டும் எட்டு முறை வந்திருக்கிறது. கடைசி பனியுகம் 11,700 ஆண்டுகளுக்கு முன்னால் வந்தது. இப்போதைய பருவநிலைக் காலத்தை ‘ஹோலோசீன்’ (முழுக்க முழுக்க சமீபத்தியது) என்று அழைக்கிறார்கள். இது நிலையான பருவநிலைகளைக் கொண்டது. அதனால் வேளாண்மை பெருகியது, மனித சமூகங்கள் எண்ணிக்கையில் உயர்ந்தன, அவற்றின் விளைவாக நாம் காணும் மனித நாகரிகம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
  • “பெரும்பாலான பருவநிலை மாறுதல்கள் புவியின் சுழற்சி அச்சில் ஏற்பட்ட சிறு மாறுதல்களால்தான் ஏற்பட்டுள்ளன, நம்முடைய புவிக்கோள் சூரியனிடமிருந்து பெரும் எரியாற்றலுக்கும் அதுதான் காரணம் என்கிறது.

இவற்றுக்கெல்லாம் விடை கொடுங்கள்

  • இப்போது சூழலியலாளர்களும் புவியியல் நிபுணர்களும் தீவிர விவாதத்தில் இறங்கியிருக்கிறார்கள், ஹோலோசீனிலிருந்து ஆன்த்ரோபோசீன் சகாப்தத்துக்கு வந்துவிட்டோமா என்பதுதான் விவாதத்தின் மையம். நவமனிதக் காலத்தில் மனிதர்களின் செயல்களால் ஏராளமான தாவர வகைகளும் பிராணிகளும் மறைந்துவிட்டன, பெருங்கடல்கள் நகரங்களாலும் மாபெரும் கப்பல்களாலும் எண்ணெய்க் கழிவுகளாலும் அசுத்தமடைந்து விட்டன, சுற்றுச்சூழலில் காற்றில் மாசு பெருகிவிட்டது காற்று, நிலம், நீர், கடல், மலை என்று அனைத்துமே மாசுகளால் கெட்டு நிலையான அழிவுகளுக்கு வழிசெய்துவிட்டன என்று ‘ஸ்மித்சோனிய’ பத்திரிகைக் கட்டுரை சுட்டுகிறது.
  • இந்த இடத்தில்தான் செயற்கை நுண்ணறிவு நமக்குக் கை கொடுக்கக்கூடும். உலகாயதமான அறிவியலில் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு அது உதவக்கூடும், பேட்டரிகளில் அடர்த்தியை எளிதாக கூட்டும் உத்தியைத் தரக்கூடும், ஆற்றல் உற்பத்தியில் பிணைப்பாற்றல் மூலம் அணுசக்தியைப் பயன்படுத்த வழிகாட்டக்கூடும், பருவநிலையில் ஏற்படும் மாறுதல்களால் ஏற்படும் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியாது என்றாலும் அவற்றுடன் வாழவும் தவிர்க்கவும் நமக்கு வழிகாட்ட முடியும்.
  • பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற செயற்கை நுண்ணறிவால் முடியும் என்றால் அதைச் செய்யட்டும். பொருத்தமான ஒழுங்காற்று விதிகள் மூலம் தூய்மையான எரிசக்தியைப் பெறும் வழி கிடைக்கட்டும். இயற்கை வளங்களை பாதுகாக்கும் அறநெறியை அனைவரிடமும் நாம் கொண்டுசெல்ல வேண்டும். தூய்மையான காற்று, தூய்மையான நீர் இல்லாமல் வாழ முடியாது. இப்போது எங்களுடைய கார் பெட்ரோல் அல்லது டீசலால் ஓடவில்லை, மின்சார பேட்டரியில் ஓடுகிறது, எனவே மழைக்காடுகள் ஊடாக செல்வதை நிறுத்தமாட்டோம் என்று மக்கள் நினைத்தால் என்ன செய்ய முடியும்?
  • கடைசியாக ஒன்று: இரண்டு பூதங்களை அடைத்திருந்த ஜாடிகளைத் திறந்துவிட்டோம். பைபிள் கதையில் வருவதைப் போல, மோசேவுக்கு செங்கடல் பிளந்து வழிவிடுவதைப் போலச் செய்ய கடவுளுக்கு நிகரான படைப்பாற்றல் கிடைத்துவிட்டது என்று இறுமாந்து, பத்துக் கட்டளைகளை நிறைவேற்ற முடியாமல் வழி அடைக்கப்பட்டுவிட்டால், நம்முடைய நிலை என்ன?

நன்றி: அருஞ்சொல் (27  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்