TNPSC Thervupettagam

உலகளாவிய நம்பிக்கையைப் புதுப்பிக்குமா ஒலிம்பிக்?

July 23 , 2021 1105 days 473 0
  • உலகம் ஆவலாக எதிர்நோக்கும் ஒலிம்பிக் போட்டிகள், ஓராண்டு தாமதமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகின்றன.
  • 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்/வீராங்கனைகள் 33 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்க இருக்கின்றனர்.
  • கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முடக்கப்பட்டிருக்கும் உலக மக்களுக்கு அடுத்த 17 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் பெரும் ஆசுவாசமாக அமையும்.
  • மக்கள் அதிகம் கூடும் இடங்கள் நோய்த்தொற்றைப் பரவலாக்கிவரும் சவாலான இந்தக் காலத்தில், இந்தப் போட்டியை ஜப்பான் வெற்றிகரமாக நடத்திமுடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • உலகில் நிலவிவரும் பல்வேறு ஒடுக்குமுறைகளைக் களைவதும் ஒலிம்பிக் போட்டிகளின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று.
  • அந்த வகையில், 1900 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக 22 பெண்கள் அனுமதிக்கப் பட்டனர்.
  • 120 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் பெண்களின் பங்கேற்பு ஆண்களின் எண்ணிக்கைக்கு அருகில் வந்துள்ளது.
  • 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக அகதிகள் ஒலிம்பிக் அணி சார்பாக 10 பேர் பங்கேற்றார்கள்.
  • இந்த முறை 29 பேர் பங்கேற்கிறார்கள். இப்படி அனைவரையும் உள்ளடக்கும் வகையிலும் நாடுகளுக்கிடையே அமைதியையும் இணக்கத்தையும் வளர்க்கும் வகையிலும் ஒலிம்பிக் போட்டி வளர்ந்துவருகிறது.
  • ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதை உயரிய பெருமையாகவும் அவற்றில் பதக்கம் வெல்வதைக் கனவாகவும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கொண்டுள்ளனர்.
  • இதுவரை இல்லாத வகையில், 18 விளையாட்டுப் பிரிவுகளில் 120 இந்திய வீரர், வீராங்கனைகள் இந்த முறை பங்கேற்கிறார்கள்.
  • முதன்முறையாக வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்கும் சி.ஏ.பவானிதேவியும், முதன்முறையாக மகளிருக்கான பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்கும் நேத்ரா குமணனும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
  • உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வினேஷ் போகத் (மல்யுத்தம்), தீபிகா குமாரி (வில்வித்தை), அமித் பங்கால் (குத்துச்சண்டை), இளவேனில் வாலறிவன்-யஷாஸ்வினி தேஸ்வால்-அபிஷேக் வர்மா (துப்பாக்கி சுடுதல்) ஆகியோர் இந்தியக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
  • சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), சானியா மிர்சா (டென்னிஸ்) உள்ளிட்ட ஒலிம்பிக் அனுபவஸ்தர்களும் இந்த முறை பங்கேற்கிறார்கள்.
  • கடந்த முறைகளில் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவும் (பேட்மிண்டன்), மேரி கோமும் (குத்துச்சண்டை) இந்த முறையும் போட்டியிடுகிறார்கள்.
  • 2012-ல் 6 பதக்கங்களை வென்றதே, ஒரே முறையில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கை சாதனை.
  • அந்தச் சாதனை இந்த முறை முறியடிக்கப்படுமா என்பதே 130 கோடி மக்களின் எதிர்பார்ப்பு.

நன்றி: இந்து தமிழ் திசை (23 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்