TNPSC Thervupettagam

உலகள்ளூரியத்துக்கான அறைகூவல்

August 16 , 2022 723 days 357 0
  • ஆங்கிலத்தில் ‘குளோக்கல்’ (Glocal) என்று ஒரு சொல் உண்டு; ‘குளோபல்+லோக்கல்’ (Global+Local) என்ற இரு சொற்களின் சேர்க்கை.  அமெரிக்காவில் அரை நூற்றாண்டுக்கு முன் பேசப்படலான ‘உலகு நோக்கிய சிந்தனை, உள்ளூர் மையச் செயல்பாடு’ (Think Globally, Act locally) எனும் சிந்தனையைத் தன்னுடைய வணிக உத்திக்கேற்ப பயன்படுத்த இப்படியான ஒற்றைச் சொல்லாக்கியவர் சோனி நிறுவனர் அகியோ மரிட்டா. எனக்கு அந்தச் சொல்லின் மீது மதிப்பு உண்டு. அதன் முந்தைய வரலாற்றை ஒதுக்கிவிட்டு, ஒரு பத்திரிகையாசிரியனான நான் என்னுடைய இதழியல் பண்பை வரையறுக்க - அது உள்ளூர் பார்வையிலிருந்து உலகைப் பார்க்கும், உலகப் பார்வையிலிருந்து உள்ளூரைப் பார்க்கும் என்ற அர்த்தத்தில் - இந்தச் சொல்லைப் பயன்படுத்துவேன். தமிழில் ‘உலகள்ளூர்’ என்று அதை மொழிபெயர்க்கலாம். இந்தச் சிந்தனையை ‘உலகள்ளூரியம்’ என்று குறிப்பிடலாம்.
  • ஏன் அப்படி ஒரு சொல்லை நம்முடைய சொந்த மொழியில் உருவாக்க முடியவில்லை? இதை இந்தியாவின் எந்த மொழியைச் சேர்ந்தவரும் கேட்டுக்கொள்ளலாம்.
  • உலகளாவிய அமெரிக்கப் பத்திரிகைகளான ‘நியுயார்க் டைம்ஸ்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’ போன்றவை ஏன் உள்ளூரோடு ஒட்டிய பெயர்களைக் கொண்டிருக்கின்றன? மும்பையிலிருந்தும், சென்னையிலிருந்தும், டெல்லியிருந்தும் தொடங்கப்பட்ட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, ‘தி இந்து’, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ போன்ற இந்தியாவின் பெரும் பத்திரிகைகள் ஏன் நாடு தழுவிய பெயர்களைக் கொண்டிருக்கின்றன? இப்படி ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டால், ‘குளோக்கல்’ என்ற சொல்லை இந்திய மொழி ஒன்றிலிருந்து ஏன் உருவாக்க முடியவில்லை என்பதற்கான பதிலை அடைந்துவிடலாம். நம்முடைய சிந்தனை மரபிலேயே அது இல்லை.
  • எதை விதைக்கிறோமோ, அதையே அறுக்கிறோம்!¬
  • ஒரு நூற்றாண்டுக்கு முன் காந்தி இந்த இடத்தில் கை வைத்தார். “கல்விதான் சுயராஜ்யத்தின் திறவுகோல்” என்ற அவர், சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் விரும்பும் எந்த ஒரு சமூகமும் முதலில் தன்னுடைய சிந்தனையைச் சுதந்திரமாக்கிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைச் சுட்டினார். “உலகத்தில் எந்த நாட்டில் மக்கள் சுதந்திரம் பெற்றிருந்தாலும், அதற்கு முன் அவர்கள் தங்களை அதற்குத் தயார்படுத்திக்கொள்வதற்குக் குறிப்பிட்ட காலத்தைச் செலவிடுகிறார்கள். முதலில் அவர்கள் சுதந்திரமாகச் சிந்திக்கக் கற்றுக்கொள்கிறார்கள்... நமது மக்கள் சுயராஜ்ய கோஷத்தை எழுப்பினாலும், நம்மிடையே சுதந்திரச் சிந்தனைக்கான அறிகுறிகளும் தென்படவில்லை; அப்படியான தேட்டத்தை வெளிப்படுத்தும் முயற்சிகளும் தென்படவில்லை!”
  • எந்த ஒரு விஷயத்திலும் காட்டாறுபோலத் தன்னுடைய சிந்தனைகளைப் பரவவிடும் காந்தியின் கல்விக் கருத்துகளையும் அப்படியே முழுமையாக ஏற்பதற்கு இல்லை. பள்ளிகளில் மாணவர்களை மதம்சார் நூல்களை வாசிக்கச்செய்ய வேண்டும் என்பது முதலாக தேசிய மொழியாக இந்தியைக் கட்டாயம் போதிக்க வேண்டும் என்பது வரையிலாக நான் காந்தியிடம் முரண்படும் விஷயங்கள் இங்கேயும் நிறைய உண்டு. ஆனால், கல்விக்கான பிரதான இலக்குகளை வரையறுத்ததில் காந்தியை அடித்துக்கொள்ள இன்னொருவர் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
  • எந்த வகையான கல்வியின் முக்கியமான நோக்கமும், மாணவர்களிடம் நல்லொழுக்கத்தை உருவாக்குவதுதான் என்றார் காந்தி. “சுத்தமாக இருக்கும்படி சொல்லிக்கொடுப்பதே குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் தரும் முதல் பாடமாக இருக்க வேண்டும்” என்றவர் அடிப்படையான நல்ல பண்புகளோடு ஒரு குடிநபராகக் குழந்தைகளைத் தயார்செய்வதையே ஆரம்பக் கல்வியின் முதல் நிலை என்கிறார். இந்த ஒழுக்கத்தின் மையமாக அவரால் குறிப்பிடப்படுவது, தர்ம சிந்தை - நீதியுணர்வு. அடுத்தது எழுத்தறிவு. வார்த்தைகளை உச்சரிக்கும் எழுதும் பயிற்சி, கூட்டல் கழித்தல் கணக்கு. அடுத்தது தன்னைச் சுற்றியுள்ள உலகம்.
  • ஆம். உள்ளூரைப் பற்றிய அறிவு - உள்ளூரின் நீர்நிலைகள், குன்றுகள், கட்டிடங்கள், திசை... இவையெல்லாம் அடிப்படையாகச் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும். இப்படிதான் காந்தியின் பாடம் விரிகிறது. பாடப்புத்தகங்கள் எவ்வளவு குறைவோ அவ்வளவு நல்லது; சொல்லப்போனால் மாணவர்களைவிட  ஆசிரியர்களுக்கேயானவை பாடப்புத்தகங்கள் என்ற முடிவுக்கு வந்திருந்தார் காந்தி. அவையும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவையாக இருப்பதை வெறுத்தார். “ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்தனி  சரித்திரமும், பூகோளமும் இருக்கின்றன; அப்படியே  தனியான சரித்திர - பூகோளப் புத்தகங்கள்  இருப்பதே  முறையானது. அவையும் பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் தக்க மாறும்!”
  • மாணவர்களின் சிறந்த அம்சங்களை வெளிக்கொணருவதுதான் உண்மையான கல்வி என்கிற காந்தி, குஜராத்தில் 1924இல் நடந்த தேசிய கல்வி மாநாட்டில் கல்வியின் இரு முக்கியமான அம்சங்களை வரையறுத்தார். “ராட்டையும் தீண்டாமை ஒழிப்பும்தான் அவை!”
  • இரண்டுமே குறியீடுகள். இரண்டாவது, நம் சமூகத்தின் மிகப் பெரிய கேடான பாகுபாட்டைக் குறி வைக்கிறது. முதலாவது, சுதேசியத்தைக் குறிக்கிறது. 1927இல் ‘யங் இந்தியா’வில் காந்தி எழுதிய ஒரு கட்டுரை கல்வியின் இலக்கை மேலும் கூர்மைப்படுத்துகிறது. “அது பொருளாதாரமோ விஞ்ஞானமோ எதுவாயினும் ராட்டைக்கு ஆக்கம் அளிக்க வேண்டும். நமது நடவடிக்கைகளின் சூரியன் ராட்டைதான்!”
  • மிக ஆதாரமான சமூகப் பிரச்சினை சார்ந்த நடைமுறைப் பார்வையும் இதில் இருந்தது. 1928இல் ஒரு பத்திரிகைச் செய்தியைக் குறிப்பிட்டு காந்தி இப்படிக் கேட்டார். “இந்தியா முழுமையிலும் இந்த வருடம் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை சுமார் 56,000 இருக்கும். இவர்களில் 50% பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்றால்கூட, இவ்விஷயமாக இயற்கையான ஒரு கேள்வி எழுகிறது. இந்த மாணவர்களுக்காக 28,000 உத்தியோகங்கள் காலியாக இருக்கின்றனவா? இல்லையென்றால், இவர்கள் தம்முடைய வாழ்க்கைக்கு என்ன செய்யப்போகிறார்கள்?”
  • அன்றைய இந்தியச் சமூகத்தின் 85% பேர் விவசாயத்தில் இருந்தனர்; 10% பேர் ஏனைய மரபார்ந்த தொழில்களில் இருந்தனர். வெறும் 5% பேரே மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் என்று படிப்பு மூலமான உத்தியோகங்களில் இருந்தனர். 95% சமூகத்தின் செயல்பாடுகளைக் கல்வி நிலையங்கள் கருத்தில் கொள்ளவில்லை. உள்ளூர் அறிவு அழிவதையும் அது பொருட்படுத்தவில்லை.
  • பிரிட்டிஷாரின் நவீன கல்விமுறைதான் இந்தியாவை ஜனநாயகம் நோக்கி உந்தியது; ஈவிரக்கமற்ற பாகுபாடுகள் நிறைந்த இந்தச் சமூகத்தைச் சமூகநீதி நோக்கி நகர்த்தியது என்றாலும், கல்வியை மையப்படுத்தும் மோசமான பாவத்தை அதுவே ஆரம்பித்துவைத்தது. ஆள்வோர் மேலிருந்து கீழே திணிக்கும் அதிகாரமயமாக்கலைச் சிதறடிப்பதை விடுதலைக்கான முதன்மைப் பணிகளில் ஒன்றாகக் காந்தி கருதினார். இத்தகு சிந்தனைகளின் தொடர்ச்சியாகவே தேசிய கல்வி இயக்கத்தை அவர் முன்னெடுத்தார். ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் முதல் உயர்கல்விக்கான வித்யாபீடங்கள் வரை உருவாக்கப்பட்டன. “சுயராஜ்ஜியம் பெறுவதற்காகவே தேசிய கல்வி நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன... உண்மையான கல்வியானது ஒரு மாணவருக்குச் சமூக, பொருளாதார, ஆன்மிக சுதந்திரத்தைத் தர வேண்டும். முழுமையான தன்னிறைவைத் தர வேண்டும்!”
  • தேசிய கல்வி இயக்கம் உண்மையில் உள்ளூரின் அதிகாரத்தைத்தான் மையப்படுத்தியது. ஒரு பாடத்திட்டத்தையே வடிவமைக்கும் அதிகாரத்தை ஆசிரியருக்கு அளிக்கப் பேசியது. அந்தந்த ஊர், சமூகம், மாணவர்களுக்கேற்ப கல்வியைச் சிந்திக்கும் தன்னாட்சியைப் பள்ளிக்கூடங்களுக்கு அளிக்கப் பேசியது. எல்லா நிலைகளிலும் சுயாதீனமாகச் செயல்படும் சுதந்திரச் சிந்தனையை மாணவர்களுக்கு அளிக்கப் பேசியது.
  • கடலோடி குடும்பத்திலிருந்து வரும் ஒரு மாணவருக்குக் கடற்பொறியியல் கல்லூரியும் அதன் பாடத்திட்டமும் முக்கியத்துவம் -முன்னுரிமையை அளிக்கவில்லை என்றால், இங்கே மரபார்ந்த அறிவுக்கான அர்த்தம் என்ன? சுற்றுச்சூழல் விழிப்புணர்வைப் படிக்கும் மன்னார்குடியின் ஒரு குழந்தை அந்த நகரின் மையத்தில் அபாயகரமாக வளர்ந்துவரும் குப்பைக்கிடங்கைப் படிக்காமல், இமயமலையின் குன்றுகள் கரைவதை மட்டும் படித்து ஒரு சமூகம் அடையப்போகும் பயன் என்ன?
  • அன்றைக்குக் காட்டிலும் இன்றைக்கு இதையெல்லாம் மேலும் தீவிரமாகக் கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இன்றைய அரசு மேலும் மேலும் கல்வியை மையப்படுத்தி, இருக்கும் கொஞ்சநஞ்ச அதிகாரங்களையும் உள்ளூரிடமிருந்து பறித்து, தேசியமயமாக்க முற்படும் நிலையில், அதிகாரத்தைப் பரவலாக்கும் கூட்டாட்சிப் பாதையில் மேலும் மேலும் உள்ளூருக்கான உரிமைகளை உரக்கப் பேச வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
  • இது உள்ளூரியம் அல்ல; இது உலகள்ளூரியம். அதுவே முழுமையான சுயராஜ்ஜியமும்கூட!

நன்றி: அருஞ்சொல் (16 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்