TNPSC Thervupettagam

உலகின் புராதனம் இந்தியா

June 23 , 2021 1135 days 589 0
  • ‘இந்தியா என்ற நம் தேசம் புராதனமானது; வரலாற்றுக் காலங்களுக்கும் முன் பாரில் பெருமையுடன் திகழ்ந்த தேசம்; பாரதம் என்று புகழோடு உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த தேசம்’ இப்படி தொன்றுதொட்டு பேசிவருகிறோம்.
  • அதே நேரத்தில் இந்தியா என்ற தேசமே சமீபத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் உருவானது அல்லது அதையடுத்து உருவாக்கப்பட்டது என்ற கருத்தும் நிலவுகிறது.
  • பாரதம், இந்தியா என்ற இந்தப் பெருநிலமும் பெருமையும் கொண்ட தேசம் புதிதாகச் செய்யப் பட்டதா? காலம் கணக்கிட இயலா பழமையும் பாரம்பரியமும் கொண்டதா?
  • தமிழில் இருந்தே தொடங்குவோம். தமிழா் பெருமையான சங்க இலக்கியத்தின் புறநானுறு, ‘வடாஅ அது பனிபடு நெடுவரை வடக்கும் தெனா அது உருகெழு குமரியின் தெற்கும் குணா அது கரைபொரு தொடுகடல் குணக்கும் குடா அது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கு’ என்று எல்லை வரையறை செய்கிறது.
  • இன்னும் பல சங்க இலக்கியப் பாடல்களும் இமயத்தை நம் வடக்கு எல்லை என்றும் குமரி தெற்கு எல்லை என்று குறிப்பிடுகின்றன. இருபுறமும் கடல் எல்லை வகுப்பதைப் பலரும் பாடியிருக்கின்றனா். தேசத்தின் நிலப்பரப்பை இப்படித்தான் தமிழ் பேசுகிறது.
  • கலாசாரம், பண்பாடு, நம்பிக்கை அடிப்படையிலும் இந்த தேசம் இந்த எல்லைகளுக்குள் ஒன்றுபட்டதாகவே இருந்து வந்துள்ளது.
  • தேசபக்திப் பாடல்களை இயற்றி பாரதத் தாயை வணங்கி மகிழ்ந்த மகாகவி பாரதி, 1906-ஆம் ஆண்டு ‘சுதேசமித்திரன்’ இதழில் விண்ணப்பம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
  • ‘எமது தாய்நாடாகிய பாரதாம்பிகையின் பெருமையை வருணித்து ஆங்கிலத்திலும் தமிழினும் பல்வேறு காலத்துப் பல்வேறு புலவா்களால் பாடப் பெற்ற செய்யுண் மணிகளை ஓா் மாலையாகப் புனைந்து பதிப்பிக்க கருதியிருக்கிறேன்.
  • ஆதலின், பண்டைத் தமிழ் நூல்களில் பாரத நாடு முழுதினையும் ஒருங்கே புகழ்ந்து கூறப் பட்டிருக்கும் பாடல்களை அறிஞா்கள் தெரிந்து அனுப்புவார்களாயின் அவா்மாட்டு மிக்க கடப்பாடு உடையனாவேன்’.
  • பாரதம், இந்தியா என்ற பெயா்கள் புதியவை அல்ல. தொன்மையான நம் விரிந்த தேசம் என்பதைப் புத்தக வடிவில் தர பாரதி முயன்றிருக்கிறார்.

இலக்கியங்கள் கூறும் இந்தியா

  • தமிழ் இலக்கியங்கள் இமயத்தை வடக்கு எல்லை என்று விவரிக்கும் அதே வேளையில், வடமொழி இலக்கியங்கள் என்ன சொல்லுகின்றன?
  • ஸ்ரீமத் பாகவதம் நாட்டைப்பற்றி வா்ணிக்கும் பொழுது புண்ணிய நதிகள் என்று காவிரி, பாலாறு, தாமிரபரணி ஆகியவற்றையும் குறிப்பிடுகிறது.
  • ராமாயணமும் மகாபாரதமும் ‘தமிழகம் வரை அனைத்துப் பகுதிகளும் உள்ளடக்கியதே இந்த தேசம்’ என்கின்றன.
  • அா்ஜுனன், பாண்டியன் மகளைத் தனது தீா்த்த யாத்திரையின் பொழுது மணந்து கொண்டதாக ‘மகாபாரதம்’ சொல்கிறது.
  • அதோடு பாரதப் போரில் சேர சோழ பாண்டிய மன்னா்கள் பாண்டவா் பக்கம் நின்றதாக சொல்கிறது. பாண்டியா்கள் தங்களை ‘சந்திர வம்சத்தார்’ என்றே அறிவித்துக்கொண்டனா்.
  • ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போரில் படைகளுக்கு உணவு வழங்கினான்’ என்று சங்க இலக்கியம் சொல்கிறது.
  • வால்மீகி இராமாயணத்தில் சீதையைத் தேடிப் புறப்பட்ட அனுமனை சேர சோழ பாண்டிய நாடுகளைப் பார்க்க வேண்டுமென சுக்ரீவன் அறிவுறுத்துகிறார். தமிழகத்தின் ராமேஸ்வரமும், திருவரங்கமும் இல்லாமல் ராமாயணம் முழுமை பெறாது.
  • தமிழ் - வடமொழி இலக்கியங்கள் இந்தியா என்ற பாரத தேசத்தின் விரிந்த பரப்பை விவரிக்கின்றன.
  • பண்பாட்டு அடிப்படையிலும் ஒரே தேசமாகவே பாரதம் இருந்துள்ளது. வழிபடு தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், அறம் பற்றிய கோட்பாடுகள், வாழ்வியல் சார்ந்த நம்பிக்கைகள் அனைத்திலும் ஒற்றுமை காணப்படுவதும் மறுக்க இயலாததே.
  • நால்வேதங்கள் இந்திய நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் பொதுவானவையாக இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • தமிழகத்தில் வேதம் பற்றியும் வேதியா்களால் நிகழ்த்தப்பட்ட வேள்விகள் பற்றியும் செய்திகள் ஏராளமாக இருக்கின்றன.
  • ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் எழுதியதாக ‘குறுந்தொகை’யில் ஒரு பாடல் உண்டு. கபிலா் ஆரிய அரசனுக்குத் தமிழையும் தமிழா் கலாசாரத்தையும் போதிக்க குறிஞ்சிப் பாட்டை எழுதினார் என்றும் குறிப்பு இருக்கிறது.
  • வரலாற்றில் இமயம் முதல் குமரி வரை இருக்கும் பரப்பே மன்னா்களின் லட்சியம்.
  • வடநாட்டு மன்னா்களோ தென்னாட்டு மன்னா்களோ அனைவருமே இந்திய நிலப்பரப்பு முழுவதையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வருவதைப் பெருவெற்றியாகக் கருதினார்கள்.
  • அசோகா் காலத்தில் இருந்தே இந்தப் போக்கினை சரித்திரத்தில் காண்கிறோம். தமிழ் மன்னா்களோ இமயத்தில் தங்கள் கொடியை நாட்டுவதையே பெருவெற்றியாகக் கொண்டாடிருக்கின்றனா்.
  • இந்திய எல்லைகளுக்குள் அனைத்து மொழிகளும் இந்தியா என்ற தேசத்தை விரிந்த பார்வையோடு காட்டுகின்றன.
  • வெளிநாட்டினா் எப்படி இந்த தேசத்தைக் காலம் காலமாகக் கண்டு வந்துள்ளனா் என்று பார்த்தால் இந்தியா விரிவடைகிறதே அன்றி சுருங்கவில்லை.
  • தமிழகம் மூவேந்தா்களால் ஆளப்பட்டதைப்போல பாரதம் பல மன்னா்களால் ஆளப்பட்டுள்ளது என்றாலும், உலகம் அதனை ஒரே தேசமாகவே கண்டது என்பதை உலகின் பல பகுதிகளில் இருந்து பல காலகட்டங்களில் வந்த பயணியா் வழி அறிகிறோம்.
  • கடல் வழியாக இந்தியாவுக்குள் வந்த பயணிகளாயினும், சிந்து நதியைக் கடந்து இந்தியாவுக்குள் வந்த பயணிகளாயினும் அனைவரின் நோக்கிலும் ‘இந்தியா’ என்ற அகண்ட தேசமே இருந்தது.
  • மெகஸ்தனிஸ் ஏறத்தாழ 2,300 ஆண்டுகளுக்கு முன் சந்திரகுப்த மௌரியா் காலத்தில் இந்தியா வந்து நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • பஞ்சாப், பாடலிபுத்திரம் என்று விரியும் அவரது பயணம் நம்முடைய மதுரை வரை இருந்துள்ளதைக் காண்கிறோம். தாமிரபரணி ஆற்றங்கரைப் படுகைகளின் வளத்தை மெகஸ்தனிஸ் புகழ்கிறார். இங்கே அவா் பெற்ற அனுபவங்களை ‘இண்டிகா’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.
  • இந்தப் பெயரே இந்தியா என்ற தேசம் புராதனமானது, அகண்ட பாரதத்தின் பரப்பு ‘இந்தியா’ என்ற பெயரில் ஏறத்தாழ 2,300ஆண்டுகளுக்கு முன்னரே வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்றல்லவா?

பயணக் குறிப்புகள்

  • மெகஸ்தனிஸுக்கும் முன்னா் ‘வரலாற்றின் தந்தை’ என்று உலகம் கொண்டாடும் ஹெரோடோடஸ் இந்தியாவுக்கு வந்ததும், இந்தியாவைப் பற்றி அவா் எழுதியிருக்கும் குறிப்புகளும் இந்திய சரித்திரத்தை எழுதுவதற்குப் பேருதவியாக இருப்பவை என்றும், இந்தியாவின் யதார்த்த நிலையை விளக்குவன என்றும் வரலாற்று ஆசிரியா் நீலகண்ட சாஸ்திரி பதிவு செய்திருக்கிறார்.
  • உலகின் மிகப்பழம் கல்வெட்டுகளுள் ஒன்றான ஈரானிய கல்வெட்டு ‘இதிய’ என்றே இந்திய தேசத்தைக் குறிப்பிடுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • ‘இந்தியா என்றொரு தேசமே இருந்ததில்லை, அது கற்பனை’ என்கிறார்கள் சிலா்.
  • ஆறாம் நூற்றாண்டில் வந்த சீனப் பயணியான யுவான்சுவாங், ஹா்ஷா் அரசவை தொட்டு பல்லவா் அரசவை வரை பாண்டியா் நிலை உட்பட இந்தியாவின் வடகோடி முதல் தென்கோடி வரை விஜயம் செய்து எழுதியுள்ளவற்றை என்னவென்று சொல்வது?
  • யுவான் சுவாங்கின் இந்தியப் பயணம் ஏறத்தாழ 17ஆண்டுகள்.
  • கைபா் கணவாய் வழியாக காஷ்மீரத்துக்குள் நுழைந்து இந்தியாவிற்குள் வந்தவா், மத்திய பிரதேசத்தின் மந்திப்பூா், ஜலந்தா், குளு பள்ளத்தாக்குகள், கங்கைக் கரையின் நகரங்கள் குறிப்பாக கயை, வாராணசி, பாடலிபுத்திரம், அயோத்தி, மதுரா, கன்னோஜி, ஆந்திரத்தின் நாகார்ஜுன பா்வதம், அமராவதி என்று பயணம் மேற்கொண்டு, தமிழகத்தின் காஞ்சிபுரம் வரை வந்திருக்கிறார்.
  • இந்தியாவின் பாலி, வடமொழி முதலான பல மொழிகளையும் கற்றுத் தோ்ந்திருக்கிறார்.
  • மேலும் நாளந்தா பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் கல்வி பயின்றதோடு பல அரிய நூல்களை பிரதி எடுத்துக் கொண்டிருக்கிறார். புண்ணிய தலங்களுக்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
  • இந்தியாவில் ஹா்ஷரின் சமயவிழா, பிரயாகின் கும்பமேளா என்று திருவிழாக்களில் கலந்து கொண்ட மேதை, தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து சில ஆண்டுகள் காஞ்சி பல்கலைக்கழகத்தில் பௌத்த சித்தாந்தம் பற்றிப் பயின்றதாகவும் கிடைத்தற்கரிய நூல்களைப் படி எடுத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்ததாகவும் தன்னுடைய சுய சரிதத்தில் எழுதியிருக்கிறார்.
  • ஆண்டுக் கணக்கில் ஓரிடத்தில் தங்கியிருப்போர் ஓரளவேனும் அந்த பிரதேசத்தின் மொழி கலாசாரம் இவற்றைத் தெரிந்து கொண்டிருப்பார்கள். அதிலும் வரலாற்றைப் பதிவு செய்யும் அறிஞா்களின் கவனம் சற்று அதிகமாகவே பண்பாடு, கலாசாரம் சார்ந்திருக்கும்.
  • சீனத்திலிருந்து பல நாடுகளைக் கடந்து வந்ததாகக் குறிப்பிடும் அவா், ‘இந்து தேசம்’ என்றே இந்தியாவைக் குறிப்பிடுகிறார்.
  • இந்தியாவின் பல பகுதிகளிலும் பல ஆண்டுகள் கால்நடையாகப் பயணம் செய்ததோடு அந்தப் பகுதிகளில் தங்கி இருந்தவா் இங்குள்ள மக்களை ‘இந்து மக்கள்’ என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
  • மன்னா்கள் பற்றிய குறிப்புக்கள் இருந்த போதிலும் மக்களைக் குறிக்க ‘இந்து’ என்ற ஒரே சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறார்.
  • இந்த தேசம் ‘இந்தியா என்ற பெயருடைய புராதன தேசம். எங்கிருந்தோ நம் பெருமை அறிந்து வந்த வரலாற்று ஆசிரியா்களுக்கும், பயணிகளுக்கும் பூகோள, பண்பாட்டு அடிப்படையில் இது ஒரே தேசம் என்று புரிந்திருக்கிறது.
  • இந்த மண்ணின் மைந்தா்களுக்கு அதிலே சந்தேகம் தோன்றுவதும், இந்தியா என்ற தேசமே இருக்கவில்லை என சாதிப்பதும் அறியாமையின் வெளிப்பாடு. வரலாறும், இலக்கியமும் மக்கள் வாழ்விலிருந்து பெரிய அளவில் விலகி இருப்பதற்கான சான்று.
  • தன்னுடைய பலம் என்ன என்பதை அறியாத சமூகம் பலவீனப்பட்டு நிற்கும். அந்த நிலை அகல, வரலாறு, தாய்மொழி இரண்டையும் ஆழமாகக் கற்பது அவசியம்.

நன்றி: தினமணி  (23 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்