TNPSC Thervupettagam

உலகிலேயே அதிக மக்கள் தொகை: என்ன திட்டத்தில் இருக்கிறது இந்தியா

May 31 , 2021 1336 days 535 0
  • சீனாவின் ஆறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியானது. இந்தக் கணக்கெடுப்பில் சீனாவுக்கு நிறைய செய்திகள் இருந்தன. கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால் அதில் இந்தியாவுக்கும் செய்திகள் உண்டு.
  • இந்தக் கணக்கெடுப்பின்படி சீனாவின் மக்கள்தொகை 141 கோடியைத் தாண்டிவிட்டது. உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நாடான சீனாவை விரைவில் இந்தியா விஞ்சிவிடும் என்றார்கள். இது 2030-ல் நடக்கும் என்று மக்கள்தொகைக் கணக்காளர்கள் மதிப்பிட்டார்கள்.
  • பின்னர், கோட்டைச் சற்று முன்னால் தள்ளி வைத்து 2027-ல் முந்திவிடும் என்றார்கள். இப்போது 2025-லேயே இந்தியா உலகின் அதிக மக்கள் வசிக்கும் நாடாகிவிடும் என்றிருக்கிறார்கள்!
  • இதற்கு முக்கியக் காரணம் சீனாவின் பிறப்பு விகிதம் குறைந்துவருவதுதான். கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் மக்கள்தொகை வெறும் 7.2 கோடி மட்டுமே அதிகரித்திருக்கிறது.
  • 1970-ல்ஆயிரம் பேருக்கு 34 குழந்தைப் பிறப்புகள் என்றிருந்த விகிதம், 1995-ல் ஆயிரம் பேருக்கு 17 குழந்தைகள் என்று சரிபாதியாகக் குறைந்தது.
  • இப்போது 11.3 என்று மேலும் சரிந்து, உலகின் குறைந்த பிறப்பு விகிதமுள்ள நாடுகளின் பட்டியலில் சீனா சேர்ந்துவிட்டது.
  • இந்தியாவின் விகிதம் 1970-ல் ஆயிரம் பேருக்கு 41 குழந்தைப் பிறப்புகள் என்பதாக இருந்து, 1995-ல் 28 என்றாகி, தற்போது 18.2 ஆகக் குறைந்திருக்கிறது.

ஒற்றைக் குழந்தைத் திட்டம்

  • பொதுவாக, நம்மில் பலரிடமும் ஒரு கருத்து உண்டு: இந்தியாவின் எல்லா முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திவிட்டால் இந்தியா முன்னேறிவிடும்.
  • சீனத் தலைவர்களும் அப்படி நினைத்தார்கள். அதன்படி, சீனாவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் எழுபதுகளில் தொடங்கியது. 1979-ல்தான் உலகெங்கிலும் முன்னுதாரணமில்லாத ‘ஒற்றைக் குழந்தைத் திட்டம்’ அமல்படுத்தப்பட்டது.
  • அரசு நிர்ணயித்திருக்கிற இலக்கை அடைவதற்காகக் களப்பணியாளர்கள், அரசின் ஆசிர்வாதத்தோடு கடுமையாகச் செயல்பட்டனர். பல ஊராட்சி அலுவலகங்களில் மகளிரின் மாதவிடாய் கண்காணிக்கப்பட்டது.
  • கிராமப்புறங்களிலும் சிறுபான்மை இனத்தவரிடமும் இரண்டாம் குழந்தை அனுமதிக்கப்பட்ட போதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
  • இந்த ஒற்றைக் குழந்தைத் திட்டத்தால் சீனாவில் முதியோரின் விகிதம் அதிகரித்திருக்கிறது. சீனாவின் மக்கள்தொகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2010-ல் 13.3%-ஆக இருந்தார்கள்.
  • இப்போது அவர்களின் விகிதம் 18.7%. இதே காலகட்டத்தில் உழைக்கும் வயதினரின் (16 முதல் 59 வரை) விகிதம் 70.2%-லிருந்து 63.4%-ஆகக் குறைந்திருக்கிறது. இப்போதும் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை 89.4 கோடியாக இருக்கிறது.
  • இது கணிசமான எண்ணிக்கைதான் எனினும் உழைக்கும் கரங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. இது, உலகின் தொழிற்சாலை என்கிற பெயரோடு விளங்கும் சீனாவுக்கு நல்லதல்ல.

சீனாவில் நாமிருவர் நமக்கிருவர்

  • ஒருபுறம், மருத்துவ வசதிகளின் பெருக்கத்தால் மக்களின் ஆயுள் அதிகரிக்கிறது. மறுபுறம், குடும்பக் கட்டுப்பாட்டால் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை குறைகிறது. இதைச் சீன அரசு இருபது ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்துகொண்டது.
  • ஆனாலும், ஒற்றைக் குழந்தைத் திட்டத்தை 2016-ல்தான் தளர்த்தியது. எல்லோரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று சட்டம் இயற்றியது. ஆனால், எதிர்பார்த்த பலனைச் சட்டம் நல்கவில்லை.
  • செலவினங்கள் கூடிவிட்டன. தேவைகள் பெருகிவிட்டன. நகர்ப்புறப் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளின் மீது எதிர்பார்ப்புகள் மிகுந்துவிட்டன; அவர்களுக்குத் தமது வேலை, தொழிலைக் குறித்த அபிலாஷைகள் அதிகமாகிவிட்டன.
  • மேலும், பல ஆண்டுகளாக அவர்கள் மனங்களில் ஒற்றைக் குழந்தை எனும் சித்தாந்தம் எழுதப்பட்டு விட்டது. ஆகவே, பலரும் இரண்டாவது குழந்தையை நாடவில்லை. 2016-ல் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1.8 கோடியாக இருந்தது.
  • 2020-ல் இது கூடவில்லை; மாறாக 1.2 கோடியாகக் குறைந்தது. புதிய சட்டத்தால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியவில்லை. இப்போது சில வல்லுநர்கள் எல்லாக் குடும்பக் கட்டுப்பாடுகளையும் அரசு தளர்த்த வேண்டும் என்று பேசிவருகிறார்கள்.

இந்தியாவின் நிலை

  • சீனாவின் நிலையை இந்தியாவோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நமக்குப் பயன் தரும். சீனாவை ஒட்டியே இந்தியாவிலும் உழைக்கும் வயதினரின் விகிதம் 65%-ஆக இருக்கிறது.
  • ஆனால், சீனாவைப் போல் அது குறைந்துகொண்டல்ல; மாறாகக் கூடிவருகிறது. ஆனால், இந்த மனிதவளத்தை சீனாவைப் போல் நம்மால் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என்பதுதான் துயரம்.
  • முதலாவதாக, இந்தியாவில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. அப்படி வேலையில் இருப்பவர்களிலும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் அமைப்பு சாராதவர்கள்.
  • ஒப்பந்தக் கூலிகளாகவும் உதிரித் தொழிலாளிகளாகவும் தங்களது உழைப்பை விழலுக்கு இறைப்பவர்கள். எந்தப் பணிப் பாதுகாப்பும் இல்லாதவர்கள். கரோனாவின் இரண்டாவது அலை அதை நமக்கு இரண்டாவது முறையாக உணர்த்துகிறது.
  • இரண்டாவதாக, கல்வி. இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 77% பேர். சீனாவில் இது 96.4%. கடந்த பத்தாண்டுகளில் சீனாவில் பட்டதாரிகளின் எண்ணிக்கை 73% அதிகரித்திருக்கிறது.
  • ஒரு லட்சம் பேருக்கு 8,930 பட்டதாரிகள் என்பது 15,467-ஆகக் கூடியிருக்கிறது.1997-ல் சீனப் பட்டதாரிகளின் எண்ணிக்கை 35 லட்சம்; இப்போது 21.8 கோடி. அடுத்ததாக, இந்த கரோனாக் காலம் நமது பொதுச் சுகாதாரக் கட்டமைப்பின் பலவீனத்தைப் பறைசாற்றுகிறது.
  • மேலும், இந்தியர்களின் தற்போதைய சராசரி ஆயுட்காலம் 69. ஒரு சராசரி சீனர், ஒரு சராசரி இந்தியரைக் காட்டிலும் 8 ஆண்டுகள் அதிகம் வாழ்கிறார்.
  • சீனாவின் மக்கள்தொகை 2025-க்குப் பிறகு குறையத் தொடங்கும். அப்போது சீனா உலகின் அதிக மக்கள்தொகை உள்ள நாடு என்கிற தனது கிரீடத்தை இந்தியாவுக்குச் சூட்டிவிடும். அப்போது இந்தியாவில் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்த மனிதவளத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • அதற்கேற்ப நம்முடைய திட்டங்களைக் கூர்மைப்படுத்த வேண்டும். கல்வியையும் பொதுச் சுகாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அப்போது நல்ல தொழில் சமூகம் உருவாகும். அப்போது நம் மனிதவளத்தின் மதிப்பும் உயரும்.

நன்றி: தினமணி  (31 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்