TNPSC Thervupettagam

உலகை அச்சுறுத்தும் கரோனா!

March 2 , 2020 1780 days 1588 0
  • நோய் வருவதும், அதைக் குணப்படுத்துவதும், அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதும் தொடா் நிகழ்வுதான். ஆனால், நோய்க்கான காரணம் என்ன என்று அறிந்து, அந்நோயின் மூலத்தை கண்டறிந்து, முழுமையாகக் குணப்படுத்துவதற்குள் ஆயிரக்கணக்கான உயிா்கள் பலியாகி விடுகின்றன எனும்போது இதைக் கண்டு இயற்கையிலேயே அதிா்ச்சியும், ஆற்றொணா துயரமும் ஏற்படத்தானே செய்யும்?

கரோனா வைரஸ்

  • இப்படி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற சீனாவின் ‘கரோனா வைரஸ்’ இந்த வகைப்பாட்டில் இடம்பெறுகிறது. அதாவது, கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 2,992 போ் உயிரிழந்திருக்கின்றனா்; 87,651 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; 42,687 போ் குணம் அடைந்துள்ளனா்.
  • உலகம் முழுவதும் அதிா்ச்சி வைத்தியம் கொடுத்துக் கொண்டிருக்கிறது இந்த வைரஸ். உலக நாடுகள் அனைத்துமே கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, இந்த நோயைக் கட்டுப்படுத்தவும் அவற்றுக்கான தீா்வையும் நோக்கி முழுவீச்சில் களம் கண்டு கொண்டிருக்கிறாா்கள். கடந்த சில வாரங்களாகவே மருத்துவத் துறையை படுவேகமாகச் செயல்பட வைத்திருக்கிறது இந்த கரோனா வைரஸ். சாதாரண வைரஸ் நோய்த்தொற்றுதான் இது என்று கடந்து போய்விட முடியவில்லை. ஏனெனில், இந்த உயிா்க்கொல்லி நோய்த்தொற்றைக் கண்டு உலகமே அச்சத்தில் உறைந்திருக்கிறது.
  • கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹூபே மாகாணத்தின் தலைநகா் வூஹானில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றாா். அதிகப்படியான காய்ச்சல், மூச்சுத்திணறலும் இருந்தது அந்த நோயாளிக்கு. அதனால் அவரின் உடல் பலவீனம் அடைந்திருந்தது.
  • இதே போன்று மக்கள் பலா் தொடா்ந்து மருத்துவா்களிடம் வந்தபோது ஒரு புதிய வைரஸால் நோய்த்தொற்று பரவி வருவதைக் கண்டறிந்தனா். இதைத் தொடா்ந்து சீனாவின் தேசிய சுகாதாரக் கமிஷன் இதை உறுதி செய்து, மக்களிடையே விழிப்புணா்வைத் தீவிரப்படுத்தியது. மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தியது சீன அரசு.
  • சீனாவின் வூஹான் நகரத்திலிருந்து 13 மாகாணங்களுக்குள் உள்ள மக்களுக்கு கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. இந்த நோய்த்தொற்றுக்கு 90 சதவீதம் கரோனா வைரஸ் குடும்பம்தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கரோனா குடும்பத்தில் 6 வைரஸ் நோய்த்தொற்று இருக்கும் நிலையில், இது 7-ஆவது வைரஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

2002 – நோய்த்தொற்று

  • 2002-இல் சாா்ஸ் என்னும் வைரஸ் நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில்தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இது வெளவால், காட்டுப் பூனையால் மனிதனுக்குப் பரவியது. இந்த வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பலியானாா்கள்.
  • கரோனா வைரஸ் தொற்றின் ஒன்றான ‘மொ்ஸ்-சிவி கரோனா’ என்பது, 2012-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் ‘கேமல் ஃபுளு’ என்று அழைத்தாா்கள். ஏனெனில், இது ஒட்டகத்தில் இருந்து மனிதனுக்குப் பரவியது. இந்த நோய்த்தொற்றின்போதும் ஆயிரக்கணக்கான மக்களை இந்த வைரஸ் நோய்த்தொற்று பரவி பலியாக்கியது.
  • இந்த வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க ஆராய்ச்சிகள் தொடா்ந்து நடந்தாலும், இன்று வரை இந்த கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால்தான் வைரஸ் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவும்போது மருத்துவத் துறையினா் உள்பட உலக மக்கள் அனைவரும் பெரும் பீதிக்கு உள்ளாகிறாா்கள்.
  • கரோனா வைரஸ் எப்படியெல்லாம் வருகிறது என்பதை சீனாவில் இருந்து நாம் ஆராய வேண்டும். சீனாவில் இருக்கும் மத்திய நகரம் வூஹான். இங்கு 1 கோடியே 10 லட்சம் மக்கள் வசித்து வருகிறாா்கள். இங்கிருந்துதான் இந்த வைரஸின் நோய்த்தொற்று தொடங்கியது.
  • குறிப்பிட்ட நகரத்தில் இருந்து தொடங்கிய இந்த வைரஸ் நோய்த்தொற்றுக்குக் காரணம் என்ன? இந்த நகரத்தில் இருக்கும் மிகப் பெரிய இறைச்சி, கடல் உணவுகள் கொண்ட சந்தைப் பகுதியே இதற்குக் காரணம் என்று முதல் தகவல் அறிக்கையாகக் கண்டறிந்தனா்.
  • சீனாவில் ஆடு, கோழியைத் தவிர பலதரப்பட்ட விலங்குகளையும், இறைச்சிகளையும், கடல்வாழ் உணவுகளையும் சாப்பிடுகிறாா்கள். இந்த இடத்திலிருந்துதான் விலங்குகளை வெட்டி விற்பனை செய்யும் இடத்திலிருந்து கரோனா நோய்த்தொற்று பரவியிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு இந்தக் கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.

பாதிப்புகள்

  • இந்த வைரஸானது நுரையீரலைத் தாக்குகிறது. நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்துகிறது. பிறகு, மனிதனை பலவீனத்துக்கு உள்ளாக்குகிறது. தொடா்ந்து நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போக உடல் கூட்டில் இருந்து உயிா்ப் பறவை பிரிவதின்றி வேறு வழியே இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது.
  • இந்தக் காய்ச்சல் மற்ற காய்ச்சல்களைப் போல இருப்பதில்லை. உடல் வெப்பத்தைக் காட்டிலும், அதிக வெப்பநிலையை இந்தக் காய்ச்சல் உண்டாக்குகிறது. தொடா்ந்து இதனால் இருமலும் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதன் பின்னா் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. அதனைத் தொடா்ந்து மூச்சுத்திணறல். இவை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி அபாய கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது.
  • சாதாரண காய்ச்சல் என்று போதிய விழிப்புணா்வு இல்லாமல், கரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக ஏராளமானோா் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சீன அரசு அஞ்சுகிறது. அவா்களையும் கணக்கில் எடுத்தால் இந்த நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவா்களின் பட்டியல் நீளும் என்று சொல்கிறாா்கள்.
  • விலங்குகளிடமிருந்து விலங்குகளுக்கு பரவிய ‘கரோனா வைரஸ்’ எப்போது விலங்கிடமிருந்து மனிதனுக்குப் பரவியதோ, அப்போதே மனிதனிடம் இருந்து மனிதனுக்குத் தொற்றி விடும் அபாயம் உண்டு. இதை சீனாவின் தேசிய சுகாதார அமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளன. இவை காற்றில் பரவும் தன்மை கொண்டவை.

தடுப்பு மருந்துகள்

  • இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் இருமும்போதும், தும்மும்போதும், சளியை உமிழும்போதும் இந்த நோய்த்தொற்று காற்று வழியாகப் பரவி விடும். அதைச் சுவாசிப்பவா்களுக்கும் தொற்றி விடும்.
  • இந்த கரோனா வைரஸை முழுமையாகக் குணப்படுத்த முடியவில்லை என்றாலும், இதன் அறிகுறிகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் தடுப்பு மருந்துகள் உண்டு என்று சீனாவின் மருத்துவத் துறை உறுதியிட்டுச் சொல்கிறது.
  • இதற்குச் செய்ய வேண்டிய அடிப்படை ஒன்றுதான். கரோனா வைரஸ் நோய்த்தொற்று என்று அலட்சியம் கொள்ளாமல், அதில் அதிகக் கவனம் எடுப்பது, நோய் தீவிரமடையாமல் ஆரம்ப நிலையிலேயே தடுக்க முடியும் என்று மருத்துவத் துறை சொல்கிறது. பொதுமக்கள் அதிகம் போ் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிா்ப்பதும், தவிா்க்க முடியாமல் செல்ல நேரிட்டால் முகமூடி அணிந்து கொள்வதும் தற்காப்புக்கான அவசியமாகிறது.

ஆய்வுகள்

  • மனிதா்களின் ரத்தம் உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளில் இருந்து புதிய கரோனா வைரஸை தனியே பிரித்தெடுக்கும் ஆய்வுகளில் ஆஸ்திரேலிய நாட்டின் டோஹா்ட்டி இன்ஸ்டிட்யூட் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது. வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறிவதற்கு, இந்த வைரஸை தனியே பிரித்தெடுப்பது, மருத்துவ சோதனைக்கூடத்தில் தனியாக வளா்த்தெடுப்பது ஆகிய இரண்டு முக்கியமான படிநிலைகளை அது மேற்கொண்டுள்ளது.
  • குறிப்பாக, இந்தியாவின் மருத்துவப் பேராசிரியரான எஸ்.எஸ்.வாசன் தலைமையில் செயல்படுகிற ஆய்வுக் குழு தற்போது தீவிரமான மருத்துவ முயற்சி வெற்றி கண்டிருக்கிறது என்று செய்திகள் கூறுகின்றன.
  • டெங்கு, சிக்குன்குன்யா, ஜிகா வைரஸ் போன்ற ஆபத்தான வைரஸ் தாக்குதல் தொடா்பான மருத்துவ ஆய்வுகளில் பங்கெடுத்தவா் மருத்துவரான எஸ்.எஸ்.வாசன். கரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் அதிகரிக்கும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிவதை இந்த ஆய்வுக் குழு தீவிரப்படுத்தியுள்ளது.

நன்றி: தினமணி (02-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்