TNPSC Thervupettagam

உளவுத் தகவலும் உதாசீனப் போக்கும்

July 21 , 2022 749 days 429 0
  • இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நியூயார்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை, கடத்தப்பட்ட விமானங்களைக் கொண்டு தகர்த்த சம்பவம், உலக வரலாற்றில் அதுவரை நிகழாத மிகக் கொடூரமான தீவிரவாத தாக்குதல் என்றும், சமூக பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்த முடியாத செயலாக மாறிவருகிறது என்றும் உலக நாடுகளிடையே அச்ச உணர்வு வெளிப்பட்டது.
  • 3,000 பேர் உயிரிழக்கவும், 25,000 பேர் கொடுங்காயங்களுடன் உயிர் பிழைக்கவும் காரணமான இத்தீவிரவாத செயல்களை அமெரிக்க வல்லரசால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? இந்த கொடுஞ்செயல்களை நிகழ்த்த தீவிரவாதிகள் வகுத்த சதித்திட்டத்தை அமெரிக்க உளவுத்துறை முன்கூட்டியே உளவறியத் தவறிவிட்டதா? இது போன்ற கேள்விகளுக்கான பதில் உலக நாடுகளுக்கு அரியதொரு பாடமாக விளங்குகிறது.
  • இரட்டை கோபுரங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியதற்கான காரணங்கள் குறித்து கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி..., புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.. ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் இடையே உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் போதிய புரிதல் இல்லாததே இச்சம்பவம் நிகழ்வதற்கான பிரதான காரணம் என்பது தெரியவந்துள்ளது.
  • அமெரிக்க விமானங்களை தீவிரவாதிகள் கடத்தி இரட்டை கோபுரங்கள், "பென்டகன்' என்றழைக்கப்படும் அமெரிக்காவின் ராணுவத் தலைமையகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் ஏற்கெனவே தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, சி..., எஃப்.பி.. கண்காணிப்பில் இருந்து வந்தவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • சேகரித்த உளவுத் தகவல்களை முறையாகப் பரிசீலனை செய்து, உரிய நேரத்தில் துரித நடவடிக்கை மேற்கொள்ளத் தவறியதன் விளைவாக, தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்டு, பொதுமக்கள் பலர் உயிரிழக்கக் காரணமான சம்பவங்கள் இந்தியாவிலும் நிகழ்ந்துள்ளன. இத்தகைய சம்பவங்களில் ஒன்று கோவை நகரில் 1998-ஆம் ஆண்டில் நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவம் ஆகும்.
  • கோவை தொடர்குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவு தலைவர் கோவை நகர காவல்துறைக்கு தீவிரவாதிகளின் செயல்திட்டம் தொடர்பான ஒரு முக்கிய உளவுத் தகவலைத் தெரியப்படுத்தினார். கோவை நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள ஒரு குறிப்பிட்ட கட்டடத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்துள்ளனர் என்பதுதான் அந்த உளவுத் தகவல்.
  • ஆனால், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் காவல்துறையினர் அந்த உளவுத் தகவல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் உதாசீனப்படுத்தியதன் விளைவால், சில நாட்களிலே தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும், பொருளாதார பேரிழப்பையும் கோவை நகரம் சந்திக்க நேரிட்டது.
  • சமூகப் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் தீவிரவாதிகள், சமூக விரோதிகளின் செயல் திட்டங்கள் தொடர்பான ரகசியத் தகவல்கள் சில நேரங்களில் நேரடியாகக் களப்பணியாற்றும் அதிகாரிகளுக்கு வருவதுண்டு. அத்தகைய தகவல் ஒன்றின் மீது அதிகாரிகள் துரிதமாக செயல்படாததன் விளைவாக விபரீத சம்பவம் ஒன்று 1984-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது.
  • இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அமைப்பு ஒன்றைச் சேர்ந்த சிலர், சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொழும்பு செல்லும் "ஏர் லங்கா' விமானத்தில் பயணிகளின் சாமான்களுடன் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை உள்ளடக்கிய பெட்டியை ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தனர்.
  • எதிர்பாராத விதத்தில், அந்த வெடிகுண்டை உள்ளடக்கிய பெட்டி லண்டன் செல்லும் விமானத்தில் ஏற்ற வேண்டிய பயணிகளின் சாமான்களுடன் சென்றுவிட்டது. அந்த வெடிகுண்டை உள்ளடக்கிய பெட்டிக்குரிய பயணி வராததால், அதை லண்டன் செல்லும் விமானத்தில் ஏற்றவில்லை.
  • இதற்கிடையில், கொழும்பு செல்லும் விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுவிட்டது.
  • இந்த சூழலில், விமான நிலைய வளாகத்தினுள் கேட்பாரற்றுக் கிடந்த அந்த வெடிகுண்டு பெட்டி, சில மணித்துளிகளில் வெடித்துவிடும் என்பதை உணர்ந்த அந்த தீவிரவாதிகளில் ஒருவர் தொலைபேசி மூலம் விமான நிலைய அதிகாரிக்குத் தகவல் கொடுத்தார்.
  • அந்த தகவலின் முக்கியத்துவத்தை விமான நிலைய அதிகாரிகள் உணராமல் காலம் கடத்தியதால், அந்த வெடிகுண்டு விமான நிலைய வளாகத்தினுள் வெடித்தது. பயணிகள், காவலர்கள் உட்பட 33 பேர் உயிரிழக்கக் காரணமான இந்த கொடூர சம்பவம், விமான நிலைய அதிகாரி, தனக்குக் கிடைத்த ரகசியத் தகவலை உதாசீனப்படுத்தியதன் விளைவால் ஏற்பட்டது.
  • உரிய நேரத்தில் திரட்டப்பட்ட உளவுத் தகவல்களால் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்திய சம்பவங்கள் பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை. ஆனால், சமூகப் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும்போதெல்லாம், உளவுத்துறையின் தோல்விதான் காரணம் என குற்றம் சுமத்தப்படுகிறது. வெற்றி தோல்விகளைக் கடந்து சமூகப் பாதுகாப்பை உறுதிபடுத்துவதிலும், வருங்கால சமுதாயம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான பாதை அமைப்பதிலும் உளவுத் தகவல்களின் பங்களிப்பு மிகுதியாகும்.
  • இரண்டாம் உலகப் போரின் போது, 1945-ஆம் ஆண்டில் அமெரிக்க ராணுவம் சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை ஜப்பான் மீது வீசி, லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த கொடுஞ்செயலும் ஒரு வகையான தீவிரவாதச் செயலாகும். இந்த பேரிழப்பை எதிர்கொண்ட ஜப்பான், தற்போது அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடாக உலக அரங்கில் உயர்ந்து நிற்கின்றது.
  • தீவிரவாதத்தைக் காட்டிலும் கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் போதைப் பழக்கம் இந்தியாவில் தற்போது மிக வேகமாகப் பரவிவருகிறது. "ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், பொது அமைதியையும் சீர்குலைக்க, தீவிரவாத செயல்களைக் கட்டவிழ்த்துவிட வேண்டிய அவசியமில்லை. இளைய தலைமுறையினரை போதைப் பழக்கத்தை நோக்கி பயணிக்க வைத்தாலே போதும்' என்ற கருத்தை உணர வேண்டிய தருணம் இது.
  • தமிழ்நாட்டில், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் வலுவிழந்துவிட்டன. நாட்டின் எதிர்கால சிற்பிகளாகத் திகழ வேண்டிய மாணவ, மாணவியர் பலர் பள்ளிப் பருவத்திலே மது அருந்துகின்றனர். மது விற்பனையில் கிடைக்கும் வருமானத்தின் மீது அதிக நாட்டம் கொண்ட அரசு, சமுதாயத்தில் மது விளைவிக்கும் தீய விளைவுகளை எளிதில் கடந்து சென்று விடுகிறது.
  • தமிழ்நாட்டில் மது ஏற்படுத்திவரும் மனிதவள பின்னடைவு தவிர்க்க முடியாததாக இருந்து வருகின்ற நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருள்களின் விற்பனையும், பயன்பாடும் இளைஞர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் விற்பனையாகும் போதைப் பொருள் பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் இருந்து சாலை, ரயில் மூலமாகக் கடத்தப்படுகின்றன.
  • மது விற்பனையைப் போன்று, போதைப் பொருள் விற்பனையில் மாநில அரசுக்கு வருமானம் எதுவும் கிடைப்பதில்லை. அப்படியிருக்க, அரசு நிர்வாகத்தால் போதைப் பொருள் விற்பனையை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை?
  • சில மாதங்களுக்கு முன்பு போதைப் பொருள்களைப் பதுக்கி வைத்தல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்கள் தொடர்பாக மாநிலம் தழுவிய நடவடிக்கையை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டு, பெருமளவில் போதைப் பொருள்களை கைப்பற்றியது.
  • ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்றவாளிகளின் சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. போதைப் பொருள்களின் விளைவுகளை உணர்த்த விழிப்புணர்வு பேரணிகளையும் காவல்துறை நடத்தியது. இருப்பினும், போதைப் பொருள் விற்பனை தொடர்வதைக் காணமுடிகிறது.
  • வழக்குப் பதிவு செய்வதால் மட்டும் போதைப் பொருள் விற்பனையைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. காவல்துறையினரும், உளவுத்துறையினரும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களிடம் உள்ள உறவை முற்றிலும் துண்டித்து, தங்கள் கடமையைச் செய்ய முற்பட்டால், போதைப் பொருள் விற்பனை, மாநிலம் முழுவதும் விரைவிலேயே தடைபட்டுவிடும்.
  • மாநில அரசின் கண்களாகவும், காதுகளாகவும் விளங்குபவர்கள் எஸ்.பி.சி..டி. மற்றும் மாவட்ட தனிப்பிரிவைச் சார்ந்த உளவுத்துறையினர். இவர்கள் மாநிலம் முழுவதும் நடைபெறும் சமூக விரோத செயல்களையும், பொது அமைதியை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் உடனுக்குடன் உளவறிந்து, தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பை உடையவர்கள்.
  • ஆனால், நேர்மையுடன் பணியாற்ற வேண்டிய உளவுத்துறையில், தகுதியற்ற பலர் காலப் போக்கில் பணியமர்த்தப்பட்டனர். உளவுத்துறையின் திறன் தடம்புரண்டதால், சட்டம் -ஒழுங்கை பராமரிக்க முடியாமல் காவல்துறை தடுமாறிய சில சம்பவங்கள் கடந்த காலத்தில் நிகழ்ந்துள்ளன.
  • இன்றைய சூழலில், சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உளவறிதலின் தரம் உயர்த்துவதும், உளவுத் தகவலை உதாசீனப்படுத்தாமல், சட்டம் - ஒழுங்கு காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொள்வதும் அவசியமானது ஆகும்.

                                                                                                                                                                                                                                                            நன்றி: தினமணி (21 – 07– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்