உள் ஒதுக்கீடு: உரிமையை உறுதிசெய்யும் தீர்ப்பு
- பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டிலிருந்து மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பட்டியல் சாதிகளுக்குள் இடஒதுக்கீட்டின் மூலம் பலனடையாத சாதியினரைக் கண்டறிந்து, அவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மாநில அரசுகளின் முயற்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
- 2006இல் பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டில் சரிபாதி இடங்களில் வால்மீகி, மஜ்ஹபி சாதியினருக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டத்தை பஞ்சாப் அரசு இயற்றியது. 2009இல் தமிழ்நாட்டில் பட்டியல் சாதிகளுக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்றியது.
- முன்னதாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பட்டியல் சாதிகளை நான்கு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் குறிப்பிட்ட சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கும் வகையில் அம்மாநில அரசு 1999இல் சட்டம் இயற்றியிருந்தது. இதற்கு எதிராக ஈ.வி.சின்னையா என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், 2004இல் உச்ச நீதிமன்றம் ஆந்திர அரசின் சட்டத்தை ரத்து செய்திருந்தது.
- அரசமைப்புச் சட்டக்கூறு 341இன்படி பட்டியல் சாதிகள் பட்டியலில் மாற்றங்களை மேற்கொள்ளும் உரிமை குடியரசுத் தலைவருக்கே உள்ளது என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு, பஞ்சாப் சட்டங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தன.
- உள்ஒதுக்கீடு விவகாரம் ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வின் விசாரணைக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அமர்வில் ஒருவரைத் தவிர, மற்ற அனைத்து நீதிபதிகளும் பட்டியல் சாதிகளை வகைப்படுத்தி அதன் அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மாநில அரசுகளின் உரிமையை உறுதிசெய்துள்ளனர்.
- இத்தகைய வகைப்படுத்தலைப் பட்டியல் சாதிகளின் பட்டியலில் மாற்றம் செய்வதாகக் கருத முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர். அதேநேரம், குறிப்பிட்ட பட்டியல் சாதி பின்தங்கிய நிலையில் இருப்பதையும் கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் பெறாமல் இருப்பதையும் உறுதிசெய்வதற்கான தரவுகளின் அடிப்படையில் மட்டுமே அதற்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் மத்திய அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கும் சிராக் பாஸ்வான், ராம்தாஸ் அடாவலே போன்ற அரசியல் தலைவர்கள் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக ராம்தாஸ் அடாவலே கூறியிருக்கிறார். உள்ஒதுக்கீடு வழங்குவது பட்டியல் சாதிகளுக்கு இடையிலான ஒற்றுமையைப் பாதிக்கும் என்று சிலர் கருதுகின்றனர்.
- இடஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்புகளைப் பெற்றுப் பொருளாதாரரீதியாக முன்னேறிவிட்டவர்களின் அடுத்த தலைமுறையினரை விலக்கிவைக்கும் ‘கிரீமி லேயர்’ கொள்கையைப் பட்டியல் சாதிகளுக்கான இடஒதுக்கீட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்த நான்கு நீதிபதிகள் கூறியுள்ளனர். இது அரசை நிர்ப்பந்திக்கும் உத்தரவு அல்ல என்றாலும், பொதுத் தளத்தில் விவாதப் பொருள் ஆகியுள்ளது.
- பட்டியல் சாதிகளுக்கான இடஒதுக்கீடு ஏழைகளையும், முதல் தலைமுறையாகக் கல்வி கற்போரையும் சென்றடைவதை உறுதிசெய்வது அவசியம்தான். ஆனால், அதற்காகப் பட்டியல் சாதியினரில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களை முற்றிலும் விலக்கிவைப்பது பட்டியல் சாதியினரின் பிரதிநிதித்துவத்தை மேலும் குறைத்துவிடும் என்று அரசியல் தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் தெரிவிக்கும் அச்சத்தைப் புறக்கணித்துவிட முடியாது. இடஒதுக்கீட்டின் முதன்மை நோக்கம் அனைத்துச் சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதுதான் என்பதை மறந்துவிடலாகாது.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 08 – 2024)