TNPSC Thervupettagam

உள்ஒதுக்கீட்டை அம்பேத்கர் எதிர்த்தாரா?

August 13 , 2024 107 days 126 0

உள்ஒதுக்கீட்டை அம்பேத்கர் எதிர்த்தாரா?

  • கல்வி, அரசு வேலைவாய்ப்பில் பட்டியல் சாதியினருக்கு அப்பட்​டியலிலேயே உள்ஒதுக்கீடு (முன்னுரிமை) வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என்று ஆகஸ்ட் 1 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெரும்​பான்மை மக்களால் வரவேற்​கப்​பட்​டாலும் தமிழக / இந்திய அளவில் சில தலித் இயக்கங்கள் அத்தீர்ப்பை விமர்​சித்து வருகின்றன. இந்த விமர்சனம் நியாயமானதா?

பின்னணி என்ன

  • இந்நாட்டின் பெரும்​பான்மை மக்களுக்காக உருவாக்​கப்பட்ட இடஒதுக்கீடு என்றழைக்​கப்​படும் பிரதிநிதித்துவ உரிமை, ஒரு நூற்றாண்டாக நடைமுறையில் இருந்​தாலும் அது மக்களைப் பிரிப்பதை நோக்க​மாகக் கொண்டிருக்க​வில்லை. பன்னெடுங்​காலமாகப் பிறப்பின் அடிப்​படையில் நிர்ண​யிக்​கப்​படும் சாதியால்தான் சமூகப் பிரிவினையும் ஏற்றத்​தாழ்வு​களும் உருவாக்​கப்​பட்டன.
  • அதன் விளைவாகக் கல்வி​யிலும் அரசு வேலைவாய்ப்​பிலும் வாய்ப்புகள் மறுக்​கப்​படும் மக்களுக்குச் சமமான வாய்ப்பு​களையும் பிரதிநிதித்துவ உரிமையையும் வழங்குவதன் மூலம் மக்களிடையே - ஒற்றுமையையும் ஒருமைப்​பாட்​டையும் - வளர்த்​தெடுப்பதே இக்கோட்பாட்டின் நோக்கம்.
  • அம்பேத்கர் பத்திரிகை தொடங்​கு​வதற்கு உதவிய கோல்காபூர் மன்னர் சாகு மகாராஜ் 26.07.1902இல் தம்முடைய சமஸ்தானத்​தில், அனைத்து வர்ணத்​தினரையும் படிக்க வைக்க முயன்​றார். எனினும், அவர்கள் உயர் கல்வி பெற்ற பிறகு வேலைவாய்ப்​புக்கான போதிய சூழல்கள் உருவாக்​கப்​பட​வில்லை.
  • எனவே, பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினருக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பை வழங்கு​வதற்காக மன்னருடைய சமஸ்தானத்தில் அனைத்துப் பதவி​களும் காலியானதாக அறிவிக்​கப்​பட்டு, அப்பத​விகள் 50% பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினரால் நிரப்​பப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டதுதான் முதல் இடஒதுக்​கீட்டு ஆணை.
  • முற்படுத்​தப்பட்ட பார்சி, ஷென்லி, பிரபு, பார்ப்பனர் அல்லாத அனைவரும் பிற்படுத்​தப்​பட்​ட​வர்களாக கோல்காபூர் அரசிதழ் மூலம் அறிவிக்​கப்​பட்​டனர். எனவே, இடஒதுக்கீடு பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று அன்றிலிருந்து இன்றுவரை சொல்லப்​படும் குற்றச்​சாட்​டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. தவிர, அருந்​ததி​யர்கள் ஏற்கெனவே அவர்களுக்கு உரிமை​யுள்ள பட்டியலில் முன்னுரிமையைப் பங்கிடக் கோருவது, ஒற்றுமையை வலுப்​படுத்தவே உதவும்.
  • திமுக அரசால் அறிமுகப்​படுத்​தப்பட்ட உள்ஒதுக்​கீட்​டால், ஓரிரு ஆண்டிலேயே அருந்​ததியர் முன்னேற்​றத்தில் குறிப்​பிடத்தக்க மாற்றங்​களைக் காண முடிகிறது. இந்நிலையில் உள்ஒதுக்​கீட்டால் முரண்கள் உருவாகும் என்று சொல்பவர்கள், பட்டியல் உருவாக்​கப்​பட்​டதிலிருந்து - இன்று உள்ஒதுக்கீடு வழங்கப்​படும்வரை - அதன் உள்ளார்ந்த பிரிவினராக இருக்கும் அருந்​ததி​யினருக்குக் கல்வி​யிலும் அரசு வேலைவாய்ப்​பிலும் போதிய பிரதிநிதித்​துவம் பெற, ஏன் வேறு எந்தத் திட்டங்​களையும் முன்வைக்க​வில்லை என்பதற்கும் விடை காண வேண்டிய தேவை இருக்​கிறது.

ஒருமித்த குழுவைப் பிரிக்​கலாமா?

  • அனைத்துப் பட்டியல் சாதியினருக்கும் தீண்டா​மையும் பாகுபாடும் பொதுவாக இருந்​தாலும் (homogeneous), அதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகள் சமூகம், கல்வி, அரசியல், பொருளாதார நிலைகளில் வெவ்வேறாக (heterogeneous) வெளிப்​படு​கின்றன. அம்பேத்கர் துல்லிய​மாகக் கணித்​தபடி, சாதிய சமூக அமைப்பு படிநிலைப்​படுத்​தப்பட்ட ஏற்றத்​தாழ்வு​களோடு ஏறுவரிசையில் மதிப்​பையும் இறங்கு​வரிசையில் அவமதிப்​பையும் கொண்டிருக்​கிறது.
  • ஊருக்கு வெளியே தள்ளப்​பட்​டுள்ள தலித் குடியிருப்பு​களிலும் ஒதுக்​குப்​புறமாக வாழ நிர்ப்​பந்​திக்​கப்​பட்​டுள்ள மக்களுக்கான நிவாரணமான உள்ஒதுக்கீடு என்றழைக்​கப்​படும் முன்னுரிமைத் திட்டம் (Preferential reservation) அவர்களை எவ்வாறு சக பட்டியல் சாதியினரிடமிருந்து பிரிக்​கும்?
  • தமிழ்​நாட்டில் பட்டியலில் உள்ள 76 சாதியினரும் 2011 மக்கள்​தொகைக் கணக்கெடுப்​பின்படி, 1,44,38,445 ஆக உள்ளனர். இதில் பெரும்​பான்மைப் பிரிவினர் பறையர் (91,73,139), தேவேந்​திரர் (24,65,096) அருந்​ததியர் (21,50,285) ஆகிய முப்பிரிவு​களில் அடங்குவர். இந்நிலை​யில், அருந்​ததி​யர்​களுக்குக் கடந்த 15 ஆண்டுகளாக வழங்கப்​பட்​டு​வரும் உள்ஒதுக்​கீட்டால் எத்தகைய பிரிவினையும் ஏற்பட்​டதற்கான தரவுகள் இல்லை.
  • உள்ஒதுக்கீடு கொடுக்​கப்​படு​வதால் மாநில அல்லது தேசிய அளவிலான எஸ்.சி. பட்டியலில் தலித் மக்களின் எண்ணிக்கை பலம் குறைந்​து​விடும் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. ஏனெனில், இந்த ஏற்பாட்டால் பட்டியல் எண்ணிக்கை அதிகரிக்கவோ, குறையவோ வாய்ப்​பில்லை. மாறாக, சமூக நீதிக் கோட்பாடு கடைக்​கோடியில் வாய்ப்புகள் மறுக்​கப்​பட்​டிருக்கும் எளியவரையும் தீண்டு​வதற்கே வழிவகுக்​கும்.

கிரீமிலேயரை விட ஆபத்தானதா?

  • புதிய மக்கள்​தொகைக் கணக்குக்கு ஏற்பப் பட்டியல் சாதியினரின் இடஒதுக்கீடு உயர்த்​தப்பட வேண்டும்; பல ஆண்டுகளாக நிரப்​பப்படாத பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்​பப்பட வேண்டும் என்ற கோரிக்​கைகள், அருந்​ததி​யர்​களுக்கான உள்ஒதுக்​கீட்டை எதிர்ப்​ப​தற்கான காரணங்களாக ஒருபோதும் இருக்க முடியாது.
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் வழக்குக்குத் தொடர்​பில்லாத ‘எஸ்.சி. எஸ்.டி. கிரீமிலேயர்’ பற்றிய கருத்தைக் கொள்கை முடிவாக மத்திய அரசு ஏற்காது என அதிகாரபூர்வமாக அறிவிக்​கப்​பட்​டுள்ளது வரவேற்​கத்​தக்கது. ஆனால், கிரீமிலேயரைவிட உள்ஒதுக்கீடு ஆபத்தானது என்று சொல்வதற்கோ உள்ஒதுக்​கீடும் கிரீமிலேயர்தான் என்று வாதிடு​வதற்கோ எந்த முகாந்​திரமும் இல்லை.
  • ஏற்கெனவே, இடஒதுக்​கீட்டால் பயனடைந்த ஐஏஎஸ்/ ஐபிஎஸ் போன்ற பயனாளி​களின் குழந்தை​களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்றுதான் பிற்படுத்​தப்​பட்​டோருக்கான வழக்கில் சொல்லப்​பட்டது. ஆனால், உள்ஒதுக்​கீட்டின் மூலம் - இதுவரை பட்டியல் மக்களுக்கான இடஒதுக்​கீட்டைப் போதிய அளவு அனுபவிக்காத பிரிவினர் 3% முன்னுரிமையைப் பெறுவது, எஞ்சி​யிருக்கும் 15%ஐப் பெறும் பிரிவினரைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்கிற வாதம் அபத்த​மானதாகிறது.

அம்பேத்​கரின் நிலைப்பாடு என்ன?

  • அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் இடஒதுக்கீடு அறிமுக​மாகி, 20 ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், உள்ஒதுக்​கீட்​டுக்கான தேவை எழுந்​திருக்க வாய்ப்​பில்லை. இருப்​பினும், பட்டியல் பிரிவினரிடையே சம பங்கு உறுதிப்​படுத்​தப்பட வேண்டும் என்ற நோக்கத்​தில், அம்பேத்​கரால் உருவாக்​கப்பட்ட பண்பாட்டு அமைப்பான ‘பகிஷ்கிரிட் ஹிதகாரிணி சபா’ தீண்டத்தகாத அனைத்துப் பிரிவினருடைய மேம்பாட்​டுக்​காகவே உருவாக்​கப்​பட்டது.
  • தவிர, மகாராஷ்டிர அரசின் நலத்திட்​டங்கள் எல்லாம் ‘மகர்’ பிரிவினரால் அபகரிக்​கப்​படு​வ​தாகக் குற்றச்​சாட்​டுகள் எழுந்த​போது, ‘சமார்’ சமூகத்தைச் சேர்ந்த புகழ்​பெற்ற கிரிக்கெட் வீரரான பி.பாலுவை மும்பை மாநகராட்​சிக்குத் தாம் நியமித்​ததாக, 20.07.1927 அன்று பூனாவில் உள்ள மாங்வாடாவில் ஆற்றிய உரையில் அம்பேத்கர் தெரிவித்​துள்​ளார். இதன் உச்சமாக, ‘மாங்க்’ சாதி மக்களிடம் ரத்த உறவை ஏற்படுத்​திக்​கொள்​ளவும் தயாராக இருப்​ப​தாகவும் அம்பேத்கர் அறிவித்​தார்.
  • அதுமட்​டுமல்ல, 02.06.1936இல் தாதரில் நடைபெற்ற மாநாட்​டில் ‘மகர்’, ‘மாங்க்’ என்ற பட்டியல் சாதியினரிடையே எவ்வித வேறுபாடும் இல்லை என்று தெரிவித்த அம்பேத்கர், பம்பாய் மாகாணத்தில் ‘மகர்​’களுக்கு ஒதுக்​கப்​படும் 15 இடங்களில் ‘மாங்க்​’கு​களுக்கு உரிய உள்ஒதுக்​கீட்டைக் கண்டிப்பாக வழங்கத் தயார் என்று அறிவித்தார் (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3); பக். 148). எனவே, உள்ஒதுக்​கீட்டால் அருந்​ததியர் பயன்பெறுகின்றனர் என்று சொல்லப்​பட்​டாலும் - உண்மை​யில், அவர்கள் அனைவரும் பட்டியல் பிரிவினரே என்பதைப் புரிந்து​கொண்டால் - முரண்​பாடுகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
  • இதைத்தான் அம்பேத்கர் ஒரு நாடாளுமன்ற விவாதத்​தின்போது அற்புதமாக விளக்​கு​கிறார்: ‘நாம் விரும்​புவது நேர்மையான (சம) பங்கைத்தானே (Equity) தவிர, சமத்து​வத்தை அல்ல. சமத்துவம் சம பங்காக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சம பங்கை உறுதிப்​படுத்த வேண்டும் எனில், பல வகைப்பட்ட மக்களும் - சமமற்ற முறையில் - நடத்தப்பட வேண்டும்.
  • ஒரு குடும்​பத்தில் பலர் இருந்​தா​லும், அவர்களில் ஒருவர் நோயுற்று இருந்தால் அவர் குணமடைவதற்கும் ஆரோக்​கிய​மாகத் திகழ்​வதற்கும் அவருக்கு மட்டுமே சத்தான உணவைத் தரும் குடும்பத் தலைவியை மற்ற உறுப்​பினர்​களும் குறை சொல்வதில்லை.
  • எனவே, பலமுள்​ளவர்​களையும் பலவீனமானவர்​களையும் செல்வந்​தர்​களையும் ஏழைகளையும் படித்​தவர்​களையும் படிக்​காதவர்​களையும் ஒரே மாதிரியாக நடத்த முற்பட்​டால், அங்கு நியாயம் கிடைக்​காது. நாம் நேர்​மையாக இருக்கவே விரும்​பு​கிறோம்’ (அம்​பேத்கர்​ ஆங்கில நூல் தொகுப்பு: 2; பக். 230).
  • அம்​பேத்கர்​ அறி​வுறுத்​தி​யதுபோல, உள்​ஒதுக்​கீட்டைத் தா​யுள்​ளத்​தின் பரிவோடும் நேர்​மையோடும் சக பட்​டியல் சாதி​யினர் அணுக வேண்டும் என்றே அருந்​ததி​யர்​கள்​ விழைகின்றனர்​.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்