உள்ஒதுக்கீட்டை அம்பேத்கர் எதிர்த்தாரா?
- கல்வி, அரசு வேலைவாய்ப்பில் பட்டியல் சாதியினருக்கு அப்பட்டியலிலேயே உள்ஒதுக்கீடு (முன்னுரிமை) வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என்று ஆகஸ்ட் 1 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெரும்பான்மை மக்களால் வரவேற்கப்பட்டாலும் தமிழக / இந்திய அளவில் சில தலித் இயக்கங்கள் அத்தீர்ப்பை விமர்சித்து வருகின்றன. இந்த விமர்சனம் நியாயமானதா?
பின்னணி என்ன?
- இந்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்காக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு என்றழைக்கப்படும் பிரதிநிதித்துவ உரிமை, ஒரு நூற்றாண்டாக நடைமுறையில் இருந்தாலும் அது மக்களைப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பன்னெடுங்காலமாகப் பிறப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் சாதியால்தான் சமூகப் பிரிவினையும் ஏற்றத்தாழ்வுகளும் உருவாக்கப்பட்டன.
- அதன் விளைவாகக் கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் வாய்ப்புகள் மறுக்கப்படும் மக்களுக்குச் சமமான வாய்ப்புகளையும் பிரதிநிதித்துவ உரிமையையும் வழங்குவதன் மூலம் மக்களிடையே - ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் - வளர்த்தெடுப்பதே இக்கோட்பாட்டின் நோக்கம்.
- அம்பேத்கர் பத்திரிகை தொடங்குவதற்கு உதவிய கோல்காபூர் மன்னர் சாகு மகாராஜ் 26.07.1902இல் தம்முடைய சமஸ்தானத்தில், அனைத்து வர்ணத்தினரையும் படிக்க வைக்க முயன்றார். எனினும், அவர்கள் உயர் கல்வி பெற்ற பிறகு வேலைவாய்ப்புக்கான போதிய சூழல்கள் உருவாக்கப்படவில்லை.
- எனவே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பை வழங்குவதற்காக மன்னருடைய சமஸ்தானத்தில் அனைத்துப் பதவிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, அப்பதவிகள் 50% பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டதுதான் முதல் இடஒதுக்கீட்டு ஆணை.
- முற்படுத்தப்பட்ட பார்சி, ஷென்லி, பிரபு, பார்ப்பனர் அல்லாத அனைவரும் பிற்படுத்தப்பட்டவர்களாக கோல்காபூர் அரசிதழ் மூலம் அறிவிக்கப்பட்டனர். எனவே, இடஒதுக்கீடு பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று அன்றிலிருந்து இன்றுவரை சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. தவிர, அருந்ததியர்கள் ஏற்கெனவே அவர்களுக்கு உரிமையுள்ள பட்டியலில் முன்னுரிமையைப் பங்கிடக் கோருவது, ஒற்றுமையை வலுப்படுத்தவே உதவும்.
- திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ஒதுக்கீட்டால், ஓரிரு ஆண்டிலேயே அருந்ததியர் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண முடிகிறது. இந்நிலையில் உள்ஒதுக்கீட்டால் முரண்கள் உருவாகும் என்று சொல்பவர்கள், பட்டியல் உருவாக்கப்பட்டதிலிருந்து - இன்று உள்ஒதுக்கீடு வழங்கப்படும்வரை - அதன் உள்ளார்ந்த பிரிவினராக இருக்கும் அருந்ததியினருக்குக் கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் போதிய பிரதிநிதித்துவம் பெற, ஏன் வேறு எந்தத் திட்டங்களையும் முன்வைக்கவில்லை என்பதற்கும் விடை காண வேண்டிய தேவை இருக்கிறது.
ஒருமித்த குழுவைப் பிரிக்கலாமா?
- அனைத்துப் பட்டியல் சாதியினருக்கும் தீண்டாமையும் பாகுபாடும் பொதுவாக இருந்தாலும் (homogeneous), அதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகள் சமூகம், கல்வி, அரசியல், பொருளாதார நிலைகளில் வெவ்வேறாக (heterogeneous) வெளிப்படுகின்றன. அம்பேத்கர் துல்லியமாகக் கணித்தபடி, சாதிய சமூக அமைப்பு படிநிலைப்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளோடு ஏறுவரிசையில் மதிப்பையும் இறங்குவரிசையில் அவமதிப்பையும் கொண்டிருக்கிறது.
- ஊருக்கு வெளியே தள்ளப்பட்டுள்ள தலித் குடியிருப்புகளிலும் ஒதுக்குப்புறமாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணமான உள்ஒதுக்கீடு என்றழைக்கப்படும் முன்னுரிமைத் திட்டம் (Preferential reservation) அவர்களை எவ்வாறு சக பட்டியல் சாதியினரிடமிருந்து பிரிக்கும்?
- தமிழ்நாட்டில் பட்டியலில் உள்ள 76 சாதியினரும் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 1,44,38,445 ஆக உள்ளனர். இதில் பெரும்பான்மைப் பிரிவினர் பறையர் (91,73,139), தேவேந்திரர் (24,65,096) அருந்ததியர் (21,50,285) ஆகிய முப்பிரிவுகளில் அடங்குவர். இந்நிலையில், அருந்ததியர்களுக்குக் கடந்த 15 ஆண்டுகளாக வழங்கப்பட்டுவரும் உள்ஒதுக்கீட்டால் எத்தகைய பிரிவினையும் ஏற்பட்டதற்கான தரவுகள் இல்லை.
- உள்ஒதுக்கீடு கொடுக்கப்படுவதால் மாநில அல்லது தேசிய அளவிலான எஸ்.சி. பட்டியலில் தலித் மக்களின் எண்ணிக்கை பலம் குறைந்துவிடும் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. ஏனெனில், இந்த ஏற்பாட்டால் பட்டியல் எண்ணிக்கை அதிகரிக்கவோ, குறையவோ வாய்ப்பில்லை. மாறாக, சமூக நீதிக் கோட்பாடு கடைக்கோடியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கும் எளியவரையும் தீண்டுவதற்கே வழிவகுக்கும்.
கிரீமிலேயரை விட ஆபத்தானதா?
- புதிய மக்கள்தொகைக் கணக்குக்கு ஏற்பப் பட்டியல் சாதியினரின் இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்; பல ஆண்டுகளாக நிரப்பப்படாத பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள், அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கான காரணங்களாக ஒருபோதும் இருக்க முடியாது.
- உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் வழக்குக்குத் தொடர்பில்லாத ‘எஸ்.சி. எஸ்.டி. கிரீமிலேயர்’ பற்றிய கருத்தைக் கொள்கை முடிவாக மத்திய அரசு ஏற்காது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், கிரீமிலேயரைவிட உள்ஒதுக்கீடு ஆபத்தானது என்று சொல்வதற்கோ உள்ஒதுக்கீடும் கிரீமிலேயர்தான் என்று வாதிடுவதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை.
- ஏற்கெனவே, இடஒதுக்கீட்டால் பயனடைந்த ஐஏஎஸ்/ ஐபிஎஸ் போன்ற பயனாளிகளின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்றுதான் பிற்படுத்தப்பட்டோருக்கான வழக்கில் சொல்லப்பட்டது. ஆனால், உள்ஒதுக்கீட்டின் மூலம் - இதுவரை பட்டியல் மக்களுக்கான இடஒதுக்கீட்டைப் போதிய அளவு அனுபவிக்காத பிரிவினர் 3% முன்னுரிமையைப் பெறுவது, எஞ்சியிருக்கும் 15%ஐப் பெறும் பிரிவினரைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்கிற வாதம் அபத்தமானதாகிறது.
அம்பேத்கரின் நிலைப்பாடு என்ன?
- அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் இடஒதுக்கீடு அறிமுகமாகி, 20 ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், உள்ஒதுக்கீட்டுக்கான தேவை எழுந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், பட்டியல் பிரிவினரிடையே சம பங்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட பண்பாட்டு அமைப்பான ‘பகிஷ்கிரிட் ஹிதகாரிணி சபா’ தீண்டத்தகாத அனைத்துப் பிரிவினருடைய மேம்பாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது.
- தவிர, மகாராஷ்டிர அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் ‘மகர்’ பிரிவினரால் அபகரிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, ‘சமார்’ சமூகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான பி.பாலுவை மும்பை மாநகராட்சிக்குத் தாம் நியமித்ததாக, 20.07.1927 அன்று பூனாவில் உள்ள மாங்வாடாவில் ஆற்றிய உரையில் அம்பேத்கர் தெரிவித்துள்ளார். இதன் உச்சமாக, ‘மாங்க்’ சாதி மக்களிடம் ரத்த உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் அம்பேத்கர் அறிவித்தார்.
- அதுமட்டுமல்ல, 02.06.1936இல் தாதரில் நடைபெற்ற மாநாட்டில் ‘மகர்’, ‘மாங்க்’ என்ற பட்டியல் சாதியினரிடையே எவ்வித வேறுபாடும் இல்லை என்று தெரிவித்த அம்பேத்கர், பம்பாய் மாகாணத்தில் ‘மகர்’களுக்கு ஒதுக்கப்படும் 15 இடங்களில் ‘மாங்க்’குகளுக்கு உரிய உள்ஒதுக்கீட்டைக் கண்டிப்பாக வழங்கத் தயார் என்று அறிவித்தார் (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3); பக். 148). எனவே, உள்ஒதுக்கீட்டால் அருந்ததியர் பயன்பெறுகின்றனர் என்று சொல்லப்பட்டாலும் - உண்மையில், அவர்கள் அனைவரும் பட்டியல் பிரிவினரே என்பதைப் புரிந்துகொண்டால் - முரண்பாடுகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
- இதைத்தான் அம்பேத்கர் ஒரு நாடாளுமன்ற விவாதத்தின்போது அற்புதமாக விளக்குகிறார்: ‘நாம் விரும்புவது நேர்மையான (சம) பங்கைத்தானே (Equity) தவிர, சமத்துவத்தை அல்ல. சமத்துவம் சம பங்காக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சம பங்கை உறுதிப்படுத்த வேண்டும் எனில், பல வகைப்பட்ட மக்களும் - சமமற்ற முறையில் - நடத்தப்பட வேண்டும்.
- ஒரு குடும்பத்தில் பலர் இருந்தாலும், அவர்களில் ஒருவர் நோயுற்று இருந்தால் அவர் குணமடைவதற்கும் ஆரோக்கியமாகத் திகழ்வதற்கும் அவருக்கு மட்டுமே சத்தான உணவைத் தரும் குடும்பத் தலைவியை மற்ற உறுப்பினர்களும் குறை சொல்வதில்லை.
- எனவே, பலமுள்ளவர்களையும் பலவீனமானவர்களையும் செல்வந்தர்களையும் ஏழைகளையும் படித்தவர்களையும் படிக்காதவர்களையும் ஒரே மாதிரியாக நடத்த முற்பட்டால், அங்கு நியாயம் கிடைக்காது. நாம் நேர்மையாக இருக்கவே விரும்புகிறோம்’ (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 2; பக். 230).
- அம்பேத்கர் அறிவுறுத்தியதுபோல, உள்ஒதுக்கீட்டைத் தாயுள்ளத்தின் பரிவோடும் நேர்மையோடும் சக பட்டியல் சாதியினர் அணுக வேண்டும் என்றே அருந்ததியர்கள் விழைகின்றனர்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 08 – 2024)