- கடந்த 2022-23 நிதியாண்டில் இந்தியா இறக்குமதி செய்த பொருட்கள் மதிப்பு, ரூ.59.5லட்சம் கோடி.இறக்குமதி தொகையில் 6-வது இடத்தில் இருப்பதுஎலக்ட்ரானிக் பொருட்கள். செல்போன்கள், மடிகணினிகள், பல்வேறு வாகனங்கள், இயந்திரங்களுக்குத் தேவைப்படும், செமிகண்டக்டர்கள், எலக்ட்ரானிக் சிப்-கள் போன்றவை 2021-22 ல், ரூ.83 ஆயிரம் கோடிக்கு இறக்குமதியானது. அதில் சீனாவிலிருந்து வந்தவை 60%. இவை தவிர, கார்கள். இயந்திரங்கள் மற்றும் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களின் பல்வேறு உதிரி பாகங்கள் என பல பொருட்களும் விலை மலிவு என சீனா, தைவான் போன்ற நாடுகளில் இருந்து தொடர்ந்து இறக்குமதியாகிக் கொண்டிருக்கின்றன.
- பலவிதங்களில் இந்தியாவுக்கு நெருக்கடி தரும் சீனாவில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்வது,தகவல்கள் திருட்டு உள்பட பலவேறு வகைகளில் ஆபத்தானது. ராணுவ தளவாட இறக்குமதியிலும் நாம் ரஷ்யாவை அதிகம் நம்பியிருக்கும் நிலை இருந்தது. 2019-20-ல் இறக்குமதி செய்த வெளிநாட்டு தளவாடங்களின் மதிப்பு, ரூ.40 ஆயிரம் கோடி. இந்நிலையில், இறக்குமதியை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு அவற்றின் உற்பத்தியை உள்நாட்டில் அதிகரிக்க வேண்டும். இதனால் அந்நியச் செலாவணி மிச்சமாவதுடன், பிறநாடுகளை சாராமல் இருக்கவும் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கவும் முடியும்.
- மேலும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். உற்பத்திக் கூடங்களை உருவாக்க, மூலப்பொருட்கள், கட்டுமானங்கள், போக்குவரத்து போன்றவை தேவைப்படும். அதனால் அந்த வியாபாரங்களும் நாட்டில் பெருகும். ஊழியர்களின் சம்பளமும் இந்தியாவிலேயே செலவாகி மொத்தத்தில் ஒன்றால் மற்றொன்று என, ‘மல்டிபிளேயர் எபெக்ட்’ மூலம் நாட்டின் பொருளாதாரம் வளம் பெறும். அந்த நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதுதான் ‘இந்தியாவில் உற்பத்தி’ எனும் பொருள் கொண்ட ‘மேக் இன் இண்டியா’ திட்டம். இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டிலேயே உற்பத்தி என்பது சுலபமல்ல.
- தொழிற்சாலைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். புதியன தொடங்கப்பட வேண்டும். அதற்கு தனியார் முதலீடு இல்லாமல் முடியாது. தனியார்களை அரசு ஈர்க்க வேண்டும். இந்திய உற்பத்தியாளர்கள் தவிர, பிரபல பிராண்டட் பொருட்களை வெளிநாடுகளில் தயாரித்துக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய வைக்க வேண்டும். சீனா, தைவான், கொரியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யும் பெரும் நிறுவனங்களை ஈர்க்க, வியாபாரம் தொடங்குவதற்கு ஏதுவான சூழ்நிலை வேண்டும். அதில் உற்பத்தி கூடத்திற்கான இடம், அனுமதி, மின்சாரம், வரிகள் மற்றும் உற்பத்தி தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்கள் ஆகியவை அடங்கும்.
- அதற்காக மத்திய அரசு சில மாற்றங்களை செய்திருக்கிறது. அதனால் ‘ஈஸ் ஆப் டூயிங் பிசினெஸ்’ தரவரிசையில், 2010-ல் 130-வது இடத்தில் இருந்த இந்தியா தொடர்ந்து முன்னேறி,2019-ல் 63-வது இடத்துக்கு வந்திருக்கிறது. மேலும் இந்தியாவில் உற்பத்தி என்பதை ஊக்கப்படுத்தும் வகையில்,உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் தொகை(பி.எல்.ஐ.)திட்டத்தை மத்திய அரசு கடந்த2020 -ல் கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி, உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து, உற்பத்தியைப் பெருக்க வேண்டும். முந்தைய ஆண்டின் (பேஸ் இயர்) உற்பத்தியைக் காட்டிலும் கூடுதலாக செய்யப்படும் உற்பத்திக்கு, துறைகளைப் பொருத்து வேறுபட்ட சதவீதங்களில், 5 ஆண்டுகளுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கும்.
- ஏப்ரல் 1, 2020-ம் ஆண்டு செல்போன் உற்பத்திக்கு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, தற்போது, உணவு, சோலார், ஆட்டொமொபைல், பார்மா, டிரோன், ஜவுளி உள்ளிட்ட 14 துறை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த டெல், பாக்ஸ்கான், எச்.பி., ரைஸ்சிங் ஸ்டார்ஸ், இந்தியா சேல்ஸ் உள்ளிட்ட 40 நிறுவனங்களில் 27 நிறுவனங்களுக்கு அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சுமார் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மொத்தம் ரூ.1.97 லட்சம் கோடி ஊக்கத்தொகை கொடுப்பதற்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், இதுவரை வழங்கப்பட்டுள்ள தொகை மிகவும் குறைவு.. காரணம், ஊக்கத் தொகையை பெறும் அளவுக்கு உற்பத்தி அதிகரிக்கவில்லை.
- ‘பலருக்கும் இதன் விவரம் தெரியவில்லை’; ‘கோவிட் 19 தொடர்பான தடங்கல்கள்’, ‘அதிகமான தகவல்கள் கேட்கிறார்கள்’; ‘பெரிய நிறுவனங்களுக்குத்தான் இது பொருந்தும்’; ‘ஊக்கத்தொகையின் அளவு குறைவு’ என்பது போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டன. கடந்த நான்கு தசமங்களாக உலகின் உற்பத்தி சாலையாக கோலோச்சி கொண்டிருந்தது சீனா. உலகில் உற்பத்தியான பொருட்களில் 30 சதவீதத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்த சீனா, கோவிட் 19 காலகட்டத்தில் உற்பத்தியை நிறுத்தியது. அதனால் பல்வேறு நாடுகளிலும் உற்பத்தி தடை நிலை வந்தது.அது, பல பெரிய நிறுவனங்களுக்கு அவற்றின் சீனா மீதிருக்கும் சார்புநிலையை உணர்த்தியது. அதனால் உற்பத்தி கூடங்களை வேறு நாடுகளுக்கு மாற்ற பல பெரிய நிறுவனங்கள் முடிவு செய்தன. வியட்நாம், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு சில பெரிய நிறுவனங்கள் நகர்ந்துவிட்டன.
- ஆப்பிள் ஐபோன் 14, மெர்சிடிஸ் பென்ஸ் EQS எலக்ட்ரிக் லக்சரி செட்டான் ஆகிய தொழிற்சாலைகள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்திருக்கின்றன. போயிங் நிறுவனமும் வர முடிவு செய்திருக்கிறது. ஆனாலும் உள்நாட்டு உற்பத்தியில் பெரிய எழுச்சி இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் 28,636 புதிய வேலைகளை உருவாக்கி இருப்பதாகவும், ஸ்மார்ட் செல்போன்கள் ஏற்றுமதி 139% அதிகரித்திருப்பதாகவும் எலக்ட்ரானிக்ஸ் தகவல் தொழில்நுட்பத்துறை துறை புள்ளிவிவரம் கூறுகிறது. பிஎல்ஐ மூலம் 2020 முதல் 2023 தொடக்கம் வரை 3 லட்சம் புதிய வேலைகள் உருவாகியிருப்பதாக நிதி ஆயோக் புள்ளி விவரம் கூறுகிறது.
- இவை போதாது என்கிற நிலையில் மத்திய அரசு, ஊக்கத்தொகை திட்டத்தில் சில மாற்றங்கள் செய்து, பிஎல்ஐ 2.0 அறிவித்திருக்கிறது. இதில் ஊக்கத்தொகை சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல அயல்நாட்டு பெரிய நிறுவனங்கள் இப்போது ஆர்வம் காட்டுகிறார்கள் என்று எலக்ட்ரானிக்ஸ் தகவல்தொழில்நுட்பத் துறை செயலாளர் சொல்கிறார். ஓரிரண்டு ஆண்டுகளில் முடியக்கூடிய வேலை அல்ல இது. பல ஆண்டுகளுக்கு நீடித்திருக்க வேண்டிய திட்டம். அதேபோல ‘இன்சென்டிவ்’ என்ற பெயரில் பலன் இல்லாமல் அரசு பணத்தை அள்ளி விடமுடியாது.
- வேலைவாய்ப்பை பெருக்குகிறோம் என்ற பெயரில், பெரிய நிறுவனங்களுக்கு பெரும் தொகையை மானியமாக கொடுக்காமல் ‘முன்பு செய்த அளவைவிட கூடுதலாக உற்பத்தி செய்யுங்கள். அதற்கு ஊக்கத்தொகை கொடுக்கிறோம்’ என்பது சரியான அணுகுமுறைதான். விதைகள் தூவப்பட்டிருக்கின்றன. அவை முளைத்து எழ இன்னும் சில மாதங்கள் ஏன், ஆண்டுகள் கூட ஆகலாம். ஊக்கத்தொகை திட்டம் என்பது சரி. அதேநேரம் திட்டத்தில் தேவைப்படும் மாற்றங்களை அவ்வப்போது செய்ய வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 11 – 2023)