- உள்ளாட்சி! உள்ளூர் மக்களின் சுயாட்சி. தமிழ் மண்ணின் பாரம்பரியப் பண்பாட்டுப் பெருமைகளில் இதுவும் ஒன்று.
- நகரங்களையும் ஊர்கள்தோறும் செயல்பட்டுவந்த மன்றங்களையும் சங்கப் பாடல்கள் பலவும் காட்சிப்படுத்துகின்றன. இவை சங்க காலத்து ஊர்கள், நகரங்களின் இருப்பையும் அங்கு நிலவிய உள்ளூராட்சியையும் புலப்படுத்துகின்றன.
- பல்லவர்-பாண்டியர்-சோழர் பேரரசுகளின் ஆட்சிக் காலத்தில் ஏற்கெனவே செயல்பட்டுவந்த ஊர்களும் மன்றங்களும் தொடர்ந்து செயல்பட்டுவந்ததுடன், புதிதாக மேலும் பல ஊர்களும் நகரங்களும் உருவாக்கம் பெற்றிருக்கின்றன.
- அனைத்து ஊர்களிலும் உள்ளூர் மக்களைக் கொண்ட ‘அவை’ செயல்பட்டது. ஊர்களில் செயல்பட்ட அவை ‘ஊரவை’ எனவும், நகரங்களில் செயல்பட்ட அவை ‘நகரவை’ எனவும், அந்தணர் குடியிருப்புக்களான சதுர்வேதிமங்கலம், தனியூர் போன்றவற்றில் செயல்பட்ட அவை, ‘சபை’ எனவும் அழைக்கப்பட்டன.
- ஊர்களும் நகரங்களும் தன்னாட்சி உரிமையுடன் உள்ளூரில் செயல்பட்ட அதே நேரத்தில், அவை அரசுகளின் அடிப்படை நிர்வாக அமைப்புகளாகவும் விளங்கியுள்ளன. உள்ளூர் நிர்வாகத்தில் அரசு தலையிடுவதில்லை.
- நூற்றுக்கணக்கான ஊர்களில் காணப்படும் கல்வெட்டுகள் ‘அவை’களின் செயல்பாடுகளை விவரிக்கின்றன.
- உள்ளூர் நிர்வாகம், நில நிர்வாகம், பாசன வசதிகள் பராமரிப்பு, கோயில் நிவந்தங்களுக்கான அறக்கட்டளைகளைப் பெற்று அவற்றை நிறைவேற்றுதல், நீதி பரிபாலனம், அரசுக்கு வரி வசூலித்துக் கொடுத்தல் உள்ளிட்ட பணிகளை அவை செய்து வந்துள்ளன.
உள்ளூராட்சிகள்
- ஊர் அவைகளுக்கான உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்த விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், மங்கலம் மற்றும் தனியூர் சபைகளுக்கான உறுப்பினர் தேர்வு விவரங்களைப் பதிவிட்டுள்ள கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
- பாண்டிய மன்னன் மாறன் சடையன் காலத்தில், மானூர் என்னும் ஊரில் பொறிக்கப்பட்ட (கி.பி. 800) கல்வெட்டு, சபை உறுப்பினர்களுக்கான தகுதிகள், சபை நடவடிக்கைகளின்போது உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள், கட்டுப்பாடுகள் மீறப்படும்போது விதிக்கப்படும் தண்டம் ஆகிய விவரங்களையும், முதலாம் பராந்தக சோழன் காலத்தில் (கி.பி. 919) உத்திரமேரூரில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, சபை உறுப்பினர் தேர்வுக்குரிய தகுதிகளையும் தேர்தல் முறைகளையும் விவரிக்கின்றன.
- இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சீரும் சிறப்புமாகச் செயல்பட்டுவந்த உள்ளாட்சி முறை விஜயநகர அரசுக் காலத்தில் சோதனைகளைச் சந்தித்து, இறுதியில் மறைந்தொழிந்து போனது.
- உள்ளூர் நிர்வாகம் அரசு அலுவலர்களால் நிர்வகிக்கப்படும் முறை தோன்றியது. சுல்தான்கள், மராட்டியர், முகமதியர் காலத்திலும் இதே நிலை நீடித்தது. முகமதியர் காலத்தில் ‘பஞ்சாயத்து’ என்ற நடைமுறை செயல்பட்டிருக்கிறது. ஆனால், அது மக்களாட்சி அல்ல.
- ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே (1687) அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை கோட்டை மற்றும் குடியிருப்புப் பகுதிகளை உள்ளடக்கி ஒரு உள்ளூர் நிர்வாகத்தை ஏற்படுத்தியிருந்தனர். இந்திய மக்கள் ஆட்சி அதிகாரம் பெறுவதை ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை என்றாலும், மக்களுக்குக் கல்வி, சாலை, வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என விரும்பினர்.
- அவர்களிடம் போதிய நிதிவசதி இல்லாததால், பொதுமக்களிடமிருந்தே நிதியைத் திரட்டி, அதிலிருந்து அவ்வசதிகளைச் செய்துதரும் ஏற்பாடுகளைச் செய்யலாயினர்.
- இந்தச் செயல்பாடுகளே பின்னாளில் மக்கள் பங்களிப்புடன் கூடிய உள்ளூராட்சிகள் உருவாக்கம் பெறுவதற்கு முதல் காரணியாக அமைந்தது.
மூன்றடுக்கு மன்றங்கள்
- 1865-ல் பிறப்பிக்கப்பட்ட நகர மேம்பாட்டுச் சட்டம், மக்கள் விரும்பும் பகுதிகளில் வரிகள் வசூலித்து, அதன் மூலம் தெருக்கள், சாலைகள், கழிவுநீர், தெருவிளக்கு, பொதுச் சுகாதாரம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித்தரும் வகையில் நகராட்சிகளை உருவாக்குவதற்கு வழி வகுத்தது.
- 1866-ல் வாலாஜாப்பேட்டை (ராணிப்பேட்டை மாவட்டம்) நகராட்சி உதயமானது. தமிழ்நாட்டில் முதன்முதலாக அமைந்த நகராட்சி இதுதான்.
- மாவட்டங்களில் கல்வி, சாலை வளர்ச்சியை முன்னெடுக்க விரும்பிய அரசு, விவசாயிகள் செலுத்தும் நிலவரியின் மீது ஒரு குறிப்பிட்ட சதவீதம் மேல்வரியாக (செஸ்) வசூலிக்கவும், அந்தத் தொகையை அந்தந்த மாவட்டங்களிலேயே வைத்து பள்ளி, சாலை வசதிகள் ஏற்படுத்தவும், 1863, 1866 ஆண்டுகளில் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டது. இவ்வாறு வசூலிக்கப்படும் தொகையை நிர்வகிக்க 1871-ல் உள்ளூர் நிதிச் சட்டம் (Local Fund Act) வெளியிடப்பட்டது.
- இதன்படி மாவட்டங்களில் உள்ளாட்சி நிதிக் கழகங்கள் (Local Fund Boards) அமைந்தன.
- இதன்மூலம், உள்ளூர் மக்களின் தேவைக்குரிய பணிகளை மேற்கொள்வதற்கென அவர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியைக் கையாள சட்டப்படியான நிறுவனங்கள் உருப்பெற்றன.
- உள்ளூர் நிதிகள் மீதான செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த ரிப்பன் பிரபு, உள்ளூர் நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும் அதிகாரங்கள் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் 1882-ல் அரசுக்குப் பரிந்துரை அளித்தார்.
- 1884-ல் உள்ளாட்சி மன்றங்களுக்கான சட்டம் (Madras Local Boards Act) அறிக்கையிடப்பட்டது. அதன் அடிப்படையில், மாவட்டம், தாலுகா, கிராமங்கள் அளவில் மூன்றடுக்கு மன்றங்கள் உருவாயின.
உள்ளூராட்சி நிறுவனங்கள்
- இந்திய உள்ளூர் நிதிச் செயல்பாடுகளை ஆய்வுசெய்ய இங்கிலாந்து அரசால் அமைக்கப்பட்ட ஆணையம் (Royal Commision) 1915-ல் தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது.
- இவ்வறிக்கையின் முக்கியப் பரிந்துரைகளில் ஒன்று, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளாட்சி மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.
- 1918-ல் சமர்ப்பிக்கப்பட்ட மாண்டேகு-செம்ஸ்போர்ட் அறிக்கையில், உள்ளூர் நிர்வாகத்தில் உள்ளூர் மக்களை அதிக அளவில் பங்குபெறச் செய்வதுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவில் நிர்வாக, நிதி அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது.
- பரிந்துரைகளை ஏற்ற அரசு, 1919-ல் நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை, பெருநகரங்களில் மாநகராட்சியும் (Corporation), சிறிய நகரங்களில் நகராட்சியும் (Municipality) அமைக்கப்படவும், ஊரகங்களைப் பொறுத்தவரை, மாவட்ட, தாலுகா, கிராம அளவில் உள்ளாட்சி மன்றங்கள் ஏற்படுத்தப்படவும், அம்மன்றங்களில் உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களும் உறுப்பினர்களும் செயல்படவும் வழிவகைசெய்து சட்டங்கள் இயற்றப்பட்டன.
- அதன் தொடர்ச்சியாக 1919-ல் சென்னை மாநகராட்சிச் சட்டம் இயற்றப்பட்டது. 1920-ல், உள்ளாட்சி மன்றங்கள் சட்டம் (Madras Local Boars Act) வெளியிடப்பட்டது.
- இச்சட்டம் மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும், மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி மன்றங்கள் ஏற்பட வழிவகுத்தது. அதே ஆண்டில் சென்னை மாவட்ட நகராட்சிகள் சட்டம் (Madras District Municipalities Act) வெளியிடப்பட்டது.
- இது தகுதி உள்ள பெரிய ஊர்களில் நகராட்சிமன்றம் அமைக்கப்பட வழிவகை செய்தது. இதன்படி, தமிழகம் முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிர்வகிக்கும் உள்ளாட்சி மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
- இவ்வாறு, ஒரு காலகட்டத்தில் முற்றிலுமாக மறைந்துபோன உள்ளூராட்சி நிறுவனங்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், அன்றைய சூழல்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட புதிய பரிமாணத்தில் மீண்டும் உருப்பெற்று நிலைபெற்றன.
நன்றி: தி இந்து (04 – 02 – 2022)