TNPSC Thervupettagam

உள்ளாட்சிப் பதவிகள் ஏலம்: மக்களாட்சியின் அடிப்படையைச் சீர்குலைக்கும் முயற்சி

September 24 , 2021 1043 days 467 0
  • ஒன்பது மாவட்டங்களில் ஊரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலில், சில ஊர்களில் ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகள் ஏலமிடப் பட்டதாக வெளிவந்திருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கக் கூடியதாய் இருக்கின்றன.
  • இத்தகைய வழக்கம் நடைமுறையில் உள்ள ஊர்களைக் கண்டறிந்து, அதற்கு முடிவு கட்டுமாறு மாவட்ட ஆட்சியர்களை மாநிலத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
  • அனைத்துக் கட்சிகளுமே இத்தகைய ஏல நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன என்றபோதும் கட்சிகளின் செல்வாக்கையும் தாண்டி ஊர் மக்கள் ஒன்றாய்க் கூடி இப்படி ஏலங்களை நடத்துவது அதற்கான காரணங்களை விவாதிக்க வேண்டிய தேவையையும் உணர்த்துகிறது.
  • முதலில், உள்ளாட்சித் தேர்தலில் செலவழிக்கப்படும் லட்சக்கணக்கான ரூபாயை ஏலத்தின் மூலமாக மிச்சப்படுத்தி அந்தப் பெருந்தொகையைக் கொண்டு ஊர் நலனுக்குச் செலவிடலாம் என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.
  • உள்ளாட்சித் தேர்தல்களில் ஒவ்வொரு வேட்பாளரும் செலவிடும் தொகை தேர்தல்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
  • ஊரக அளவிலான தேர்தல்களில் இவ்வளவு பணம் இறைக்கப்படுவது வெற்றிக்கான மதிப்புநிலை என்பதைத் தாண்டி, அடுத்துவரும் ஆண்டுகளில் அவருக்குக் கிடைக்கும் ஆதாயங்களுக்கான முதலீடாகவே பார்க்கப்படுகிறது என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும்.
  • இரண்டாவதாக, ஊரக அளவில் வேரோடிப்போயிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தக்க வைத்துக் கொள்ளும் மரபான மனமும் அதற்கு ஆதரவாக உள்ளது.
  • வெவ்வேறு சமூகங்கள் கூடி வாழும் ஊர்களில் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருப்பவர்கள் தங்களுக்குள்ளேயே தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
  • மூன்றாவதாக, ஏற்கெனவே உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகப் பதவிகளில் இருந்தவர்கள் அந்தப் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
  • இவற்றில் ஏலத்துக்கான காரணம் எதுவாக இருந்தபோதும், அது இந்திய மக்களாட்சியை வேர்முனை வரைக்கும் கொண்டுசெல்ல விரும்பும் இந்திய அரசமைப்புக்குச் செய்யும் துரோகம்.
  • ஊரகப் பகுதிகளில் போட்டியின்றித் தேர்வுசெய்யப்படுவது மதிப்புக்குரியது என்ற பொதுவான எண்ணத்தில் தவறில்லை. ஆனால், அவ்வாறு போட்டியின்றித் தேர்வாவதன் பின்னணியில், பதவிகளை ஏலத்துக்கு விடும் முறையானது நிச்சயமாக இருக்கக் கூடாது.
  • கல்வியறிவும் உள்ளாட்சித் தேர்தல்களின் முக்கியத்துவம் குறித்த அரசியல் விழிப்புணர்வும் அதிகரித்துவரும் காலம் இது. எனவே, இன்றைய நிலையில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போட்டியின்றித் தேர்வாவது என்பது மிகவும் அரிதாகத்தான் இருக்க முடியும்.
  • உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு காலக் கெடு முடிந்துவிட்டது. எங்கெங்கு போட்டியின்றி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரோ அங்கெல்லாம் பதவி ஏலம் விடப் பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளும் வகையில், தீவிர விசாரணைகள் நடத்தப் பட வேண்டும்.
  • ஏலம் விடப்பட்டது உறுதியாகும்பட்சத்தில், தேர்தலை நிறுத்துவதும் மறுதேர்தல் நடத்துவதுமே சரியான முடிவாக இருக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்