TNPSC Thervupettagam

உள்ளாட்சியை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

November 12 , 2024 72 days 122 0

உள்ளாட்சியை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

  • உள்ளாட்சியின் மகத்துவத்தை இங்கு பலர் இன்னும் முழுமையாக உணர்ந்துகொள்ள வில்லை. புதிய உள்ளாட்சியை அரசமைப்புச் சட்டத்தின் 9 ஆவது கூறாகச் சேர்த்ததும், ஒரு விவாத ஜனநாயகத்தை உருவாக்கிட உலகிலேயே இவ்வளவு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதும் இந்தியாவின் சாதனைகள். உள்ளாட்சி அமைப்பில் பட்டியல் சாதி மக்களுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும், பெண்களுக்கும் இடஒதுக்கீடு கொடுத்ததும் ஒரு மகத்தான சீர்திருத்தம்.
  • இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட உள்ளாட்சி அரசாங்கத்தை மாநில அரசுகள் எப்படி உருவாக்கிச் செயல்பட வைத்துள்ளன? இது தொடர்பாக அகில இந்திய அளவில் ஆய்வு நடத்தியது இரண்டே ஆய்வு நிறுவனங்கள்தான். முதலாவது - உலக வங்கி ஆய்வுக் குழு; அடுத்தது - டெல்லியில் உள்ள பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் (NCEAR).
  • இந்த நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்தது உலக வங்கியும், கனடா நாட்டு ஐ.டி.ஆர்.சி. என்கிற நிதி நிறுவனமும்தான். இந்த ஆய்வுகளைச் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதார நிபுணர்கள். அமெரிக்காவில் உள்ள பிரௌன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் அப்படிப்பட்ட ஆய்வுகளை, உலக வங்கி திரட்டிய புள்ளிவிவரங்களை வைத்து ஆய்வுசெய்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கைகள்தான் மத்திய அரசாங்க முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அறிக்கைகள் என்ன சொல்கின்றன?

  • என்.சி.இ.ஏ.ஆர். நடத்திய ஆய்வு அறிக்கையை மதிப்பீடு செய்தவர் பேராசிரியர் ஜெம்ஸ் மேனோர். இவர் உள்ளாட்சி பற்றிய ஆய்வில் மிகச் சிறந்த அறிஞர். இந்த அறிக்கை 2014இல் சமர்ப்பிக்கப்பட்டு, 2015இல் அது புத்தகமாக வெளிவந்தது. இந்த அறிக்கை பயன்படுத்திய புள்ளிவிவரங்கள், அவற்றை ஆய்வுசெய்த முறைமை அவ்வளவும் புதுமையானது மட்டுமல்ல, அரசாங்கங்கள் முடிவெடுக்கத் தேவையான ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டது எனச் சுட்டிக்காட்டினார் ஜேம்ஸ் மேனோர். இந்த அறிக்கையில், ஆறு சுற்றுப் புள்ளிவிவரங்கள் 1999லிருந்து 2006 வரை சேகரிக்கப்பட்டு ஆய்வுசெய்யப்பட்டுள்ளன.
  • இது 17 மாநிலங்களில் 241 கிராமப் பஞ்சாயத்துக்களில் 8,659 குடும்பங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வு. அதே குடும்பங்களில் புதிய உள்ளாட்சிகள் வருவதற்குமுன் எடுத்த குடும்பப் புள்ளிவிவரங்களையும் கிராமப் புள்ளிவிவரங்களையும் ஒப்பிட்டு ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில், உள்ளாட்சி சார்ந்து முடிவெடுக்கும் அமைப்புகள் இந்த அறிக்கை தரும் கருத்துக்களை உள்வாங்கி முடிவெடுத்தால் உள்ளாட்சி வலுப்படும், மக்களாட்சி வலுப்படும், மக்களுக்கு நன்மை கிடைக்கும் என ஜெம்ஸ் மேனோர் கோடிட்டுக்காட்டியுள்ளார்.
  • இதற்குப் பிறகு கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகம், பிஹார், உத்தரப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் நடத்தப்பட்ட சீரிய ஆய்வுகளையெல்லாம் திரட்டி, உலக வங்கி ஓர் அறிக்கையை இந்த ஆண்டு வெளியிட்டது. இந்த அறிக்கைகளில் மிக முக்கியமானது, இந்தப் பஞ்சாயத்துக்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதைக் களஆய்வு செய்து தெரிவித்திருப்பதுதான். குடும்பங்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படைப் பணிகளை, மக்கள் பிரதிநிதிகளாகப் பஞ்சாயத்துத் தலைவர்கள் செயல்படுத்தியிருப்பதை இந்த அறிக்கையில் ஆய்வாளர்கள் வெளிக்கொண்டுவந்துள்ளனர்.

சிறப்பம்சங்கள்:

  • எங்கெல்லாம் கிராமசபை தொடர்ந்து முறையாக நடைபெற்றுள்ளதோ, அங்கெல்லாம் மக்களின் தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன என்பதை 5,180 குடும்பங்களின் புள்ளிவிவரங்களிலிருந்து ஆய்வுசெய்து ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். கிராமசபையில் அறிவார்ந்த விவாதங்கள் எங்கெல்லாம் நடைபெற்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் கிராமசபையில் அறிவார்ந்த குடிமக்களாக அவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள் என்பதையும் இந்த அறிக்கை விவரிக்கிறது.
  • தமிழகத்தில்கூட 100 கிராமசபைகளில் நடைபெற்ற விவாதங்களை ஆய்வுசெய்தபோது, பெண்கள் அதிகம் கலந்துகொண்டபோதும், அவர்கள் பங்கேற்றுப் பேசுவது குறைவுதான் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில், எங்கெல்லாம் பெண்கள் தலைவர்களாக இருந்து கிராமசபையை நடத்துகிறார்களோ அங்கெல்லாம் பெண்கள் அதிகம் பங்கேற்றுப் பேசுகிறார்கள்; பெண்களுடைய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன; தீர்வுகளும் எட்டப்படுகின்றன என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • அடுத்து 200 கிராமங்களில் நடத்தப்பட்ட பரிசோதனை ஆய்வில் எங்கெல்லாம் குடிமக்கள் தயாரிப்புக்கான பயிற்சி நடைபெற்றிருக்கிறதோ, அங்கெல்லாம் விவாதத்தின் தரம் கிராமசபைகளில் உயர்ந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்.
  • அதேநேரத்தில், எங்கெல்லாம் சாதியக் கட்டமைப்பு இறுக்கமாக இருக்கிறதோ அங்கெல்லாம் சாதாரண மனிதர்களின் பங்கேற்பைக் கிராமசபையில் பார்க்க இயலவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது இந்த அறிக்கை. இந்த ஆண்டு நடத்தப்பட்ட (2024) ஆய்வில் பஞ்சாயத்துக்கள் மக்களைக் குடிமக்களாக உருவாக்கி, கிராம மேம்பாட்டுச் செயல்பாடுகளில் அவர்களைப் பங்கேற்கவைத்தது படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
  • இந்த ஆய்வில் மற்றொரு முக்கியமான கருத்து தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது - பஞ்சாயத்து தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளால் பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டதைவிடவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செயல்பட்டபோது மக்கள் நலன் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.
  • இவ்வளவு வாய்ப்புகள் இருக்கும் உள்ளாட்சிகள் எங்கே சிக்கலுக்கு உள்ளாகின்றன என்பதை மத்திய அரசில் இணைச் செயலராகப் பணியாற்றிய ரகுநந்தன், தனது புத்தகத்தில் படம்பிடித்துக் காட்டுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தலைவர்களை வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கும் அலையவிட்டுவிட்டார்கள். அவர்கள் அதிக நேரம் நிர்வாகச் சிக்கலில் கட்டுண்டு இருக்கிறார்கள். அதேபோல் எந்தெந்தத் துறைகளில் திட்டநிதி இருக்கிறதோ அதைப் பெறுவதற்கு அதிகாரிகளைச் சந்திக்க அலைகிறார்கள் என்பதை ரகுநந்தன் சுட்டுகிறார்.
  • இந்தச் சூழலை மாற்றியமைப்பதற்கு மாநில அரசுகளுக்குப் பல ஆலோசனைகளை இத்தகைய ஆய்வாளர்கள் வழங்கி இருக்கிறார்கள். பஞ்சாயத்துக்கள் மூலமாகப் பெரும்பகுதி மக்கள் குறிப்பாக ஏழைகள், பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கு மேம்பாட்டுப் பணிகளை அதிகாரிகளைவிட, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் செய்யமுடியும் என்பது ஆய்வின் மூலமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • அதேபோல் கிராமசபையை நடத்தும் தலைவரின் அறிவாற்றல் புரிதல் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளதோ, அதேபோல் விழிப்புணர்வு பெற்ற கிராமசபை உறுப்பினர்கள் பங்கேற்கும்போது கிராமசபையில் ஒரு பங்கேற்பு ஜனநாயகமும், விவாத ஜனநாயகமும் விரிவடைவதும் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
  • அதிகாரப் பரவல் மக்களை அதிகாரப்படுத்துகிறது, அதிகாரம் பெற்ற மக்கள் தங்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான பணிகளை உள்ளாட்சியின் மூலம் பெற்றுக்கொள்கின்றனர் என்பதுதான் இந்த அறிக்கைகளின் சாரம். ஆனால் அதிகாரப் பரவல், மக்களை அதிகாரப்படுத்துதல், மக்களின் மேம்பாடு ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பில் சிக்கல்கள் இருக்கின்றன; அவை களையப்பட வேண்டும். இன்றுள்ள பெரும்பான்மையான அடிப்படைத் தேவைகளை மக்களுக்குப் பூர்த்திசெய்யும் சக்தி படைத்ததாக உள்ளாட்சி இருப்பதால், அதற்கு மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பலர் பரிந்துரை செய்துள்ளனர்.

என்ன செய்ய வேண்டும்?

  • தற்போதைய அதிகாரப் பரவலை ஆய்வுசெய்து எங்கு தடங்கல்கள், சிக்கல்கள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து அவற்றை நீக்க வேண்டும். உள்ளாட்சிகளுக்குச் சுயநிதி பெருக்கும் அதிகாரத்தை விரிவுபடுத்தி, சுயநிதி வருவாய் பெருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கிராமசபை உறுப்பினர்களுக்குக் கிராமசபையின் வலு பற்றி விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். அதைக் குடிமக்கள் தயாரிப்பு என்கிற நிலையில், மக்கள் எப்படி குடிமக்களாகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.
  • கிராமங்களில் குடும்பங்கள், பஞ்சாயத்து, வளங்கள் பற்றிய புள்ளிவிவரம் அறிவியல்பூர்வமாகச் சேகரிக்கப்பட வேண்டும். அதைத் திட்டமிடுதலுக்குப் பயன்படுத்த வேண்டும். அடுத்து பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு ஆளுகைத்திறன், நிர்வாகத்திறன், தலைமைப் பண்புகள் வளர்க்கும் ஒரு பயிற்சித் திட்டத்தைத் தரமான பயிற்சி நிறுவனத்தின் மூலம் கொடுக்க வேண்டும். சமூக வளத்தைப் பஞ்சாயத்துக்குப் பயன்படுத்தும் முறை, குறிப்பாகச் சுய உதவிக் குழுக்களைப் பயன்படுத்துவது, மக்களை ஒருங்கிணைத்துப் பங்கேற்க வைப்பது போன்றவை கற்றுத்தரப்பட வேண்டும்.
  • இந்தியாவில் கிராமப்புறப் பஞ்சாயத்தில் கிடைத்த அனுபவங்களை வைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளையும் வலுப்படுத்த வேண்டும். இன்று நகர்ப்புற உள்ளாட்சிகள் அதிகாரிகள் கையில்தான் இருக்கின்றன. அதைச் சீரமைக்க வேண்டும் என்ற விரிவான பரிந்துரைகளை இந்த அறிக்கைகள் தந்துள்ளன. இதைத்தான் மாநில அரசுகள் செய்திட வேண்டும் எனப் பொதுக் கருத்தாளர்களும் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் வலியுறுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்