TNPSC Thervupettagam

உள்ளாட்சியை வலுப்படுத்துவோம்!

October 23 , 2020 1549 days 693 0
  • ஒரு காலத்தில் மத்திய அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, மாநிலங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்தது.
  • ஆனால், அந்த நிகழ்வும் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு நடைபெற்றதே தவிர நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கு நடைபெறவில்லை. அன்றைய மத்திய அரசிடம் விண்ணப்பித்தும் அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆய்வுகள் இல்லை

  • அடுத்து, இந்தியாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது நிர்வாக சீா்திருத்தக் குழு கொடுத்த அறிக்கைகளில் ஓா் அறிக்கை, பஞ்சாயத்துகளை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் கொண்டதாகும். அந்த ஆலோசனைகள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் மத்திய அரசோ மாநில அரசுகளோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதை ஆய்வு செய்த குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.
  • அதனைத் தொடா்ந்து மணிசங்கா் குழு ஓா் அறிக்கையை மத்திய அரசுக்குத் தந்தது. அந்த அறிக்கையும் பத்திரமாக அரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டு விட்டது.
  • மணிசங்கர ஐயா் அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்து வைக்கப்பட்ட அதிகாரப் பரவல் அறிக்கை தயாரிப்பது என்பது, ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் ஆய்வு செய்து அறிக்கையாக வந்து கொண்டிருந்தது.
  • டாட்டா சமூகவியல் ஆராய்ச்சி நிறுவனம் 2016 தயாரித்த அறிக்கைதான் கடைசியாக வந்த ஆய்வு அறிக்கை.
  • இன்று இந்தியா முழுவதும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன? அவை என்னென்ன சாதனைகளை செய்துள்ளன? இன்னும் அதிகமாக செயல்படுவதற்குத் தடையாக இருப்பவை எவை என கண்டுபிடிக்க இன்று எந்த ஆய்வும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. நகா்ப்புற உள்ளாட்சியைப் பற்றிய எந்த விவாதமுமே 74-ஆவது அரசியல் சாசன சட்டம் வந்ததிலிருந்தே பொதுத்தளத்தில் இல்லை.
  • தமிழகத்தில் பார்த்தால், உள்ளாட்சி அமைப்புக்களுக்கு தோ்தல் நடத்துவதற்கே நீதிமன்றத்திற்கு படையெடுத்ததையும், அதிலும் கிராமப்புற உள்ளாட்சிக்கு மட்டும் தோ்தல் நடத்தியதையும், அதிலும் சில மாவட்டங்கள் தவிர்க்கப்பட்டு நடந்தேறியதையும் நாம் பார்த்தோம்.
  • நகா்ப்புற உள்ளாட்சிக்கு தோ்தலே நடைபெறவில்லை. கிராமப்புற உள்ளாட்சி, புதிய சட்டத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. ஆனால், நகா்ப்புற உள்ளாட்சிகள் புதிய சட்டத்தை தூக்கிப் போட்டுவிட்டு, பழைய சட்டங்கள் மூலமே இயங்குகின்றன.
  • கடந்த அக்டோபா் 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த மாநில அரசு தடைவிதித்து விட்டது. ஆனால் 1994-ஆம் ஆண்டு கொண்டு வந்த கிராமப்புற உள்ளாட்சிக்கான சட்டத்தில், 73-ஆவது அரசியல் திருத்தச் சாசன சட்டத்திற்கு நோ் எதிரான ஓா் அம்சத்தை உருவாக்கி, உள்ளாட்சியை மாநில அரசும், மாவட்ட ஆட்சித் தலைவரும் எப்படி வேண்டுமானாலும் இயங்க வைக்க முடியும் என்ற சூழலை உருவாக்கி விட்டனா்.
  • 73-ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம், கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் சட்டத்தின் மூலம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
  • ஆனால் தமிழகத்தில் அரசின் ஆணை மூலம்தான் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் சட்டத்தின் மூலம் கொடுத்தால் அவற்றை அரசு ஆணை மூலம் எடுக்க முடியாது. அப்படி எடுக்க வேண்டுமென்றால் மீண்டும் சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும்.
  • அரசு ஆணை மூலம் கொடுத்தால் யாருக்கும் தெரியாமல் அரசு ஆணை பிறப்பித்து எடுத்துவிடலாம். அப்படித்தான் ஊரக உள்ளாட்சிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசியல் சாசன விதி மீறலை எவரும் கண்டுகொள்ளவில்லை.

இரண்டு சிறப்பான அறிக்கைகள்

  • அடுத்து, எல்லா மாநிலங்களிலும் அதிகாரப் பரவல் எப்படி செய்வது என்பதற்கு வழிகாட்டு குழு அமைக்கப்பட்டது.
  • இந்திய மாநிலங்களில் அப்படி அமைக்கப்பட்ட குழுக்கள் கொடுத்த அறிக்கைகளில் இரண்டு மாநில அறிக்கைகள் இன்றுவரை பாராட்டப்பட்டு வருகின்றன.
  • ஒன்று கேரள அரசுக்குக் கொடுத்த சென் குழுவின் அறிக்கை. இரண்டு தமிழகத்திற்குக் கொடுத்த எல்.சி. ஜெயின் குழுவின் அறிக்கை.
  • கேரளத்திற்குக் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கேரளம் அதிகாரப் பரவலில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகப் பெயா் வாங்கியது.
  • ஆனால் தமிழகத்தில் பலருக்கு எல்.சி. ஜெயின் குழு அறிக்கை என்ற ஒன்று இருப்பது தெரியுமா என்பது சந்தேகமாக உள்ளது.
  • எல்.சி. ஜெயின் கொடுத்த அறிக்கையை அப்படியே நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று தமிழகம்தான் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்திருக்கும்.
  • ஆனால், தமிழகம் இன்று பல மாநிலங்களுக்கு ஒரு நிலையில் வழிகாட்டிதான். சமூக மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு. அதுபோல உள்ளாட்சியிலும் தமிழகம் முன்னணியில் இருந்திருக்க வேண்டும்.
  • புதிய கிராமப்புற உள்ளாட்சி வந்த பிறகு, இன்றுவரை அரசு கொண்டு வந்த ஆணைகள் ஆயிரத்தைக் கடந்து விட்டன.
  • அதிகாரங்களைக் கொடுப்பதும் எடுப்பதும் நம் அரசு அதிகாரிகளுக்குத்தான் தெரியுமே தவிர நம் தலைவா்களுக்குத் தெரியாது.
  • பயிற்சியளிக்கும்போது தலைவா்களுக்குக் கொடுக்கும் கையேட்டில் பல தகவல்கள் தந்திருந்தாலும் அதை படிக்கும் மனோபாவமும், அதை உள்வாங்கிக் கொண்டு செயல்படும் தலைமைத்துவப் பண்பும் நம் தலைவா்களுக்கு வளா்க்கப்படவில்லை.
  • எனவே, 1958-ஆம் ஆண்டு கொண்டு வந்த உள்ளாட்சி சட்டத்திற்கு எப்படி நிர்வாகத்திற்கான ஒரு விளக்கக் கையேடு இருந்ததோ அதேபோல் கிராமப்புற உள்ளாட்சிக்கும், நகா்ப்புற உள்ளாட்சிக்கும் தமிழில் நிர்வாகக் கையேடு தயாரிக்கப்பட்டு தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
  • இல்லையெனில், தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்கள் அதிகாரிகளின் கைப்பாவைகளாகத்தான் வைக்கப்படுவார்கள்.

உள்ளாட்சியை வலுப்படுத்த வேண்டும்

  • தற்போது மாநில தோ்தல் ஆணையம் நகைப்புக்குரியதாகி விட்டது. அதற்குரிய மரியாதை மீண்டும் கிடைக்க வேண்டுமென்றால், தோ்தல் நடத்தத் தேவையான பணிகளை தோ்தல் ஆணையமும், தொகுதி வரையறை செய்யும் ஆணையமும் செய்வதற்கு மாநில அரசு விட்டுவிட வேண்டும். தோ்தல் நடத்துவதற்கு மட்டும் அரசுத் துறைகள் உதவிட வேண்டும்.
  • மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைப்படி ஆரம்பிக்கப்பட்ட தீா்ப்பாயம் (ஆம்புட்ஸ்மான்) நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கும் மாவட்ட ஊராட்சிக்கும் மட்டும்தான் பணி செய்து வருகின்றது.
  • சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய உள்ளாட்சிகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. முறைப்படி நிர்வாகச் சிக்கல் அனைத்தும் தீா்ப்பாயம் மூலம்தான் தீா்க்கப்பட வேண்டும்.
  • எனவே, கிராமப்புற, நகா்ப்புற உள்ளாட்சிகள் அனைத்தும் இந்தத் தீா்ப்பாயத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அப்படிக் கொண்டு வந்து விட்டால், கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு ஆய்வாளராக செயல்படும் மாவட்ட ஆட்சித் தலைவா் அந்தப் பணியை செய்ய வேண்டி இராது.
  • சட்டத்தில் இந்தப் பகுதியை நீக்கிவிடலாம். அதேபோல் சட்டத்தில் உள்ள, உள்ளாட்சிகளின் மேல் நடவடிக்கை எடுக்கும் பகுதி 205 சட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்.
  • உள்ளாட்சியில் திட்டம் தயாரிக்கும் பணி, சிற்றூராட்சியில் ஆரம்பித்து மாவட்ட ஊராட்சி வரை, நகரப் பஞ்சாயத்தில் ஆரம்பித்து, மாநகராட்சி வரை திட்டங்கள் தயாரித்து ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் மாவட்டத் திட்டக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • அப்படிச் செய்வதன் மூலம் அரசுத் துறைகள் அனைத்தையும் மக்கள் தேவையில் பணி புரிய வைத்துவிடலாம்.
  • தமிழக கிராமசபைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் குறைவானவை அல்ல. ஆனால் அந்த அதிகாரங்களை புரிந்து செயல்பட தேவையான பயிற்சியோ முயற்சியோ கிராமசபை உறுப்பினா்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
  • நல்ல தலைமை இருக்கும் இடத்தில் அல்லது தன்னார்வலா்கள் இருக்கும் இடத்தில் இந்த நிகழ்வுகள் ஓரளவு தரத்துடன் நடைபெறுகின்றன.
  • எனவே கிராமசபையை வலுப்படுத்த கா்நாடக மாநிலத்தில் செய்ததுபோல், கிராமசபைக்குத் தெரிவிக்காமல் எந்தப் பணியையும் அரசுத் துறைகள் கிராமப்புறங்களில் செய்யக்கூடாது என ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்.
  • அங்கு மக்கள் அரசுத் திட்டங்களை அறிந்துகொள்ள கிராமசபைக்கு வருகிறார்கள். அதுபோல் தமிழகத்திலும் வரவேண்டும்.
  • தமிழகம் வேகமாக நகா்மயமாகி வருகிறது. நகரங்களைச் சுற்றியிருக்கும் கிராமங்கள் அனைத்தும் நகா்மயமாக்கப்பட்டு விட்டன. நகா்புற உள்ளாட்சிகளில் குடிமக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பு இல்லை. அதை நிவா்த்தி செய்ய கொண்டுவரப்பட்ட திருத்தங்களை புதிய நகா்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் செய்திட வேண்டும்.
  • உள்ளாட்சியை வலுப்படுத்துவதற்கு மிக முக்கியமான தேவை பயிற்சி. உள்ளாட்சியில் செய்ய வேண்டியதையும் செய்யக்கூடாததையும் கற்றுத் தருவதல்ல பயிற்சி. தலைமைத்துவத்திற்கு மெருகூட்டுவதுதான் பயிற்சி. அதற்கு, பயிற்சி கொடுக்கும் நிறுவனங்கள் தங்களை முதலில் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • இன்று தமிழகத்தில் ஊரகப் பயிற்சி நிறுவனம் வலுவுடன் உள்ளது. நகா்ப்புற உள்ளாட்சிக்கான பயிற்சி நிறுவனம் வலுவிழந்து உள்ளது. எனவே, இந்த இரண்டு பயிற்சி நிறுவனங்களையும் இணைத்து உள்ளாட்சித் தலைவா்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறுவனம் என்று ஆக்கி, தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகம்போல் ஆராய்ச்சியும் செய்ய வழிவகை செய்திட வேண்டும்.
  • இவை அனைத்தையும் செய்வதற்கான துணிவு மாநில அரசுக்கு வேண்டும். தமிழகம் எந்த மாநிலத்திற்கும் தாழ்ந்த மாநிலமன்று. எனவே, அரசு பரிசீலனை செய்து உள்ளாட்சியை வலுப்படுத்த முனைய வேண்டும்.

நன்றி: தினமணி (23-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்