- ஹரியாணா அரசு சமீபத்தில் ஒரு சட்டத்தை இயற்றியது, அதன்படி நிறுவனங்கள் ஆட்களை வேலைக்கு எடுக்கும்போது பிற மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்.
- இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிப்பதற்கான மையம் (சி.எம்.ஐ.ஈ.) அளித்த தரவுகள்படி வேலைவாய்ப்பின்மை விகிதம் இந்தியாவிலேயே ஹரியாணா மாநிலத்தில்தான் அதிகம்.
- ஹரியாணாவில் மலைக்க வைக்கும் அளவில் 80% பெண்கள் வேலைவாய்ப்பில்லாமல் திண்டாடுகிறார்கள். அங்கே உள்ள பட்டதாரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் வேலை இல்லாமல்தான் இருக்கிறார்கள். ஹரியாணாவில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாகக் காணப்படுகிறது.
பல காரணிகள்
- ஹரியாணாவில் உள்ள 1.80 கோடி வாக்காளர்களில் 1.10 கோடி பேருக்கு நிரந்தர வேலை இல்லை.
- இதுபோன்று பெருமளவிலானோர் வேலையில்லாமல் இருக்கும்போது சமூகத்தில் புரட்சிகளும் அரசியல்ரீதியிலான கிளர்ச்சிகளும் தவிர்க்கவியலாத வகையில் ஏற்படும் என்பதை உலக வரலாறு நம்மை எச்சரிக்கிறது.
- ஆகவே, இருக்கும் ஒருசில வேலைகளையும் உள்ளூர் ஆட்களுக்கே ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஹரியாணா அரசு ஒதுக்கியிருப்பது முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடியது.
- இந்தப் பிரச்சினை ஹரியாணாவுக்கு மட்டுமே உரித்தானதல்ல. அதைப் போன்றே, ஜார்க்கண்ட்வாசிகளுக்கு வேலைகளில் முன்னுரிமை தரும் சட்டமொன்றுக்கு ஜார்க்கண்ட் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
- தமிழ்நாட்டில் திமுகவும் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை தரப்போவதாகத் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது.
- வேலையில்லாமல் இருக்கும் தங்கள் மக்களின் நலனைக் காப்பதற்காகப் பெரும்பாலான மாநிலங்கள் பூர்விகவியம் என்ற சாகசத்தில் இறங்கியிருக்கின்றன.
- எதிர்பார்த்தபடியே இது பொருளியர்களாலும் அரசியல் விமர்சகர்களாலும் விமர்சிக்கப் பட்டிருக்கிறது.
- தாராளப் பொருளாதாரம் என்ற அவர்களின் தாராள சித்தாந்தத்துக்கே எதிராக இருப்பதால், இந்த நடவடிக்கையை அவர்கள் எதிர்க்கிறார்கள்.
- ‘நிறைய வேலைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டுமேயொழிய, இருக்கும் வேலைகளைச் சிலருக்கு மட்டும் ஒதுக்குவதில் கவனம் செலுத்தக் கூடாது’ என்பது வழக்கமாகச் சொல்லப்படுவது.
- ஆனால், அது தவறு. புதிய வேலைகளை உருவாக்குவது முற்றிலும் மாநில அரசுகளின் கையில் இல்லை. இதில் பல்வேறு காரணிகளின் சிக்கலான ஊடாட்டம் அடங்கியிருக்கிறது.
- வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது பெரிய பொருளாதாரச் செயல்பாட்டின் விளைவாகும்.
- இந்தியாவின் மாநிலமொன்றின் முதல்வர்களுக்குப் பொருளாதாரத்தின் மீது குறிப்பிட்ட அளவுக்குத்தான் கட்டுப்பாடு இருக்கிறது.
- அவர்களால் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புதிய முதலீடுகளையும் தொழில்களையும் ஈர்ப்பதில் ஒரு வரன்முறை இருக்கிறது.
முக்கியக் காரணிகள்
- அதிலும் ஜி.எஸ்.டி.யின் அறிமுகத்துக்குப் பிறகு, இந்தியாவிலுள்ள மாநில அரசுகள் தங்கள் பொருளாதாரச் சுதந்திரத்தை இழந்துவிட்டன; தொழில்களுக்கு வரிச் சலுகை அளிப்பதற்கான அதிகாரங்களும் அவற்றுக்குக் கிடையாது.
- தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான நில வசதிகளும் அடிப்படைக் கட்டுமானங்களும் மாநில அரசுகளிடம் இருந்தாலும் தொழில்முறைப் பணியாளர்கள் உடனே கிடைப்பதிலோ தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் விதத்தில் வரிச் சலுகைகள் வழங்குவதிலோ மாநிலங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
- அமெரிக்காவில் மாநிலங்கள் தங்கள் பிரதேசத்தில் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக வரிச் சலுகைகளையும் இடங்களையும் அளித்து, தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.
- இந்தியாவிலும் இதுபோன்ற போட்டி நடைபெறுவதால் பணக்கார மாநிலங்கள் மேலும் பணக்கார மாநிலங்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன. இதனால் வறிய மாநிலங்கள் மேலும் வறிய மாநிலங்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன.
- இந்தப் பிரச்சினையை நான் ‘3-3-3’ விளைவு என்று முன்பு ஒரு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இந்தியாவின் மூன்று பெரும் பணக்கார மாநிலங்கள் (மஹாராஷ்டிரம், தமிழ்நாடு, கர்நாடகம்) மூன்று வறிய மாநிலங்களைவிட (பிஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம்) தனிநபர் வருமானத்தில் மும்மடங்கு செல்வ வளம் கொண்டதாக இருக்கின்றன.
- இந்த வேறுபாடு 1970-ல் 1.4 மடங்கு அதிகமாக இருந்தது. இந்தியாவின் பணக்கார மாநிலங்களுக்கும் வறிய மாநிலங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறதே தவிர, குறைவதாக இல்லை. இதற்கு நவீனப் பொருளாதார வளர்ச்சியின் தாக்கம்தான் காரணம்.
துணை தேசியம்
- பொருளாதாரத்தில் சமமான ஆடுகளம் இல்லாமலும் பொருளாதாரச் சுதந்திரம் இல்லாமலும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் வேலைகளை உருவாக்குவதும் வளர்ந்துவரும் மாநிலங்களைப் பொறுத்தவரை மிகவும் கடினமாகும்.
- இச்சூழலில், 5 ஆண்டுகள் ஆள்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் கோடிக்கணக்கான வாக்காளர் களைச் சின்ன விஷயங்களைக் கொண்டு திருப்திப்படுத்த முயன்று, பெரிய விஷயங்களைக் கோட்டைவிட்டுவிடுகின்றன.
- ஆக, பல்வேறு மாநிலங்களின் பொருளாதார ஆடுகளங்கள் சமமாக்கப்பட்டு, மாநிலங்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் வழங்கப்படும்போதுதான் வேலைகள் நிறைய உருவாக்கப்பட்டு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
நன்றி: இந்து தமிழ் திசை (18 - 03 - 2021)