- கரோனா இரண்டாவது அலையால் கிராமப்புறங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் கூடவே விவசாயம் மற்றும் அதுசார்ந்த தொழில் நடவடிக்கைகளும் நெருக்கடிகளுக்கு ஆளாகி புதியதொரு பொருளியல் சவாலை ஏற்படுத்தியுள்ளன.
- கடந்த ஆண்டில் பெருந்தொற்று முதலாவது அலையின்போது கிராமப்புறங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படாததோடு வேளாண் உற்பத்திச் சங்கிலியில் ஏற்பட்ட சிறிய அளவிலான தடைகளும் உடனடியாகச் சரிசெய்யப்பட்டுவிட்டன.
- ஆனால், தற்போதைய இரண்டாவது அலையால் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அவ்வாறு உடனடியாகச் சரிசெய்யப்பட முடியாத நிலையில் உள்ளன.
- பெரும்பாலான மாநிலங்களில் நகரங்களுடன் ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் மருத்துவக் கட்டமைப்புகள் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பது, பெருந்தொற்றை எதிர் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளன.
- கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் மாநிலங்களில் இயல்பாகவே வேளாண் விளைபொருள் சந்தைகளும் தேக்க நிலைக்கு ஆளாகி விடுகின்றன.
- வடமாநிலங்களில் தொழிற்சாலை வேலைகளுக்காக மட்டுமின்றி, விவசாய வேலைகளுக்காகவும் மாநிலங்களுக்கிடையில் மிகப் பெரிய எண்ணிக்கையில் புலம்பெயர்வது வழக்கம்.
- ஆனால், இரண்டாவது அலையின் காரணமாக இந்த ஆண்டு அதுவும் கேள்விக்குள்ளாகியுள்ளது. நடப்பு ஆண்டிலும் பருவமழை போதுமான அளவில் பெய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆனால், விவசாயத் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பாத சூழலில் வழக்கமான வேளாண் உற்பத்தி எட்டப்படுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.
- கடந்த ஆண்டே பழங்கள், பூக்கள் போன்றவற்றின் வெளிநாட்டு ஏற்றுமதி வாய்ப்புகள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகின. அறுவடைப் பருவத்தில் அவற்றை வெளிநாடுகளுக்கும் அனுப்ப முடியாமல், உள்ளூர்ச் சந்தைகளிலும் விற்க முடியாமல் விவசாயிகள் தவிக்கும் நிலை நேர்ந்தது.
- இந்த ஆண்டு வேளாண் உற்பத்தி வீழ்ச்சியைச் சந்திக்கும்பட்சத்தில் உள்ளூர்ச் சந்தை வாய்ப்புகளும்கூட சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். தவிர, கடந்த ஆண்டைப் போல சந்தையின் தேவை இந்த ஆண்டிலும் இருக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.
- எனவே, மாநில அரசுகள் மண்டல அளவிலும் மாவட்ட அளவிலும் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை இப்போதே முன்னெடுக்க வேண்டும் என்று வேளாண் பொருளியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
- உணவுப் பொருட்கள், தொழிற்சாலைகளுக்கான கச்சாப் பொருட்கள் என இரண்டையுமே அந்தந்த மண்டலங்களுக்குள் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் ஆலோசனை.
- மாநில அரசின் வேளாண்மைத் துறை, கூட்டுறவுச் சங்கங்கள், அரசு சாரா அமைப்புகள், பெருநிறுவனங்களின் ஆதரவுத் திட்டங்கள் என அனைத்தையும் ஒருங்கிணைத்துக் குறுகிய காலத்தில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் அவசியம்.
- தமிழகத்தைப் பொறுத்தவரையில் காய்கறி, பழ வகைகளுக்கு ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் உழவர்ச் சந்தை அமைப்புகளைப் பலப்படுத்தினாலே போதுமானது. கூடவே, உணவு அல்லாத வேளாண் விளைபொருட்களுக்கான உள்ளூர்ச் சந்தை வாய்ப்பைகளையும் விரிவுபடுத்துவதற்கான உடனடித் திட்டங்கள் தேவை.
நன்றி: இந்து தமிழ் திசை (31 - 05 – 2021)