TNPSC Thervupettagam

உள்ளூர்மொழிக் கல்வி வரவேற்புக்குரிய முன்னெடுப்பு

October 21 , 2022 658 days 351 0
  • உள்ளூர் மொழிவழிக் கல்வி எனும் பாதையில் இந்திய அரசு அடியெடுத்து வைத்திருப்பது வரவேற்புக்குரிய முன்னெடுப்பு. இந்தியாவில் நூற்றாண்டு பழமையான கனவு இது. மாநிலங்களின் அபிலாஷையாக நீடித்துவந்த இதை இன்றைய மோடி அரசு செயல்படுத்த களம் இறங்கியிருப்பது நல்ல விஷயம்.
  • மத்திய பிரதேசத்தில், இந்தியில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்விக்கான பாடப்புத்தகங்களை வெளியிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இது ஒரு வரலாற்றுத் தருணம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அடுத்து தமிழ் உள்ளிட்ட எல்லா மாநில மொழிகளிலும் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எல்லா மாநில அரசுகளுடனும் கலந்தாலோசித்து, கல்வி மொழி சார்ந்து இந்திய அரசு தீர்க்கமான ஒரு முடிவை எடுக்குமானால், அப்படி ஒரு வரலாற்றுத் தருணமாகவே இது அமையும்.
  • உள்ளூர் மொழிவழிக் கல்வியானது சிறந்த கல்விமுறை என்று கூறப்படுவதற்கான முக்கியமான காரணங்களில் முதன்மையானது அதன் ஜனநாயகத்தன்மை. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1,383 மொழிகள் இந்தியாவில் தாய்மொழிகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்படி மக்களால் தெரிவிக்கப்பட்ட மொழிகள் பின்னர் அதோடு ஒட்டிய மொழிகளோடு சேர்க்கப்பட்டு 121 மொழிகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, இந்தி எனும் மொழிக்குள் மட்டும் 65 மொழிகள் அடங்கியிருக்கின்றன.
  • இந்திய அரசு ‘உள்ளூர் மொழிவழிக் கல்வி’ என்று பேசும்போது இவ்வளவு மொழிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும், அரசமைப்புச் சட்ட அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையே நாம் ‘உள்ளூர் மொழி’ என்ற வரையறைக்குள் பேசுகிறோம் என்பதையும், அந்த மொழிகளிலேயே இனிதான் எல்லாப் படிப்புகளையும் படிப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கப்போகிறோம் என்பதையும் உணர்ந்தால், மொழி சுயாட்சி, மொழிப் பன்மைத்துவத்தில் இந்தியா எவ்வளவு பின்தங்கி இருக்கிறது என்பதையும், இதன் பின்னுள்ள ஏற்றத்தாழ்வின் கொடூரத்தையும் உணரலாம்.
  • எந்த ஒரு சுதந்திரச் சமூகமும் அதன் மொழிச் சுதந்திரத்தையே முதன்மையான சுதந்திரமாகக் கொள்ளும். அதிலேயே தன் முதன்மைக் கவனத்தையும் செலுத்தும். இந்தியாவோ பள்ளிக்கல்வி, சில பட்டப்படிப்புகள் நீங்கலாக ஏனைய எல்லாப் படிப்புகளையும் ஆங்கிலத்திலேயே வைத்திருக்கிறது. அதாவது, ஆங்கிலத்தைக் கடந்தால்தான் ஒரு மாணவர் உயர்கல்வியைப் பெற முடியும்.
  • இந்தியாவுக்கு ஆங்கிலம் நவீன கல்வியையும், நவீன வாழ்க்கையையும் அறிமுகப்படுத்தியது. உலகின் அறிவு வாசலை இந்தியாவுக்குத் திறந்துவிட்டது. உலகோடு இந்தியர்கள் இணைவதற்கு ஒரு மகத்தான கருவியாக அமைந்தது. அதேசமயம், இந்தியாவின் உள்ளூர்மொழிகளை அறிவுத்தளத்தில் மொத்தமாகப் பின்னுக்குத் தள்ளியது. விளைவாக, ஆங்கிலம் சாத்தியப்பட்டவர்கள் சிறகுகளோடு பறந்தார்கள்.
  • ஆங்கிலம் சாத்தியப்படாதவர்கள் அந்த ஒரு காரணத்தாலேயே நொறுக்கப்பட்டார்கள். உள்ளூர் மொழிகளைக் கற்பிப்பதற்கே சரியான கட்டமைப்பு இல்லாத இந்தியாவில் நல்ல ஆங்கிலம் கற்பதற்கான வாய்ப்புகள் சில கோடி பேருக்குக் கிடைத்தது என்றால், பலபத்து கோடி பேர் ஆங்கிலத்தால் நல்ல கல்வி, வேலை வாய்ப்புகளிலிருந்து தள்ளப்பட்டார்கள்.
  • திட்டவட்டமாக இந்தியாவில் ஆங்கிலம் ஒரு பெரும் வர்க்கப் பிளவை உண்டாக்கியது. வழக்கம்போல, சமூக – பொருளாதாரரீதியாகப் பின்தள்ளப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களே இந்தப் பிளவிலும் மேலும் பாதிக்கப்பட்டார்கள். ஒருவர் ஆங்கிலம் பேசுவதாலேயே அறிவாளியாகக் கருதப்படுவதும், ஆங்கிலம் பேசாததாலேயே விஷயம் தெரியாதவராகப் பார்க்கப்படுவதும் இந்தியப் பொதுப்புத்தியில் உறைந்தது.
  • சமூகங்கள் ஜனநாயகப்படும்போது மேலும் மேலும் உள்ளூர்மயமாக வேண்டியதன் அவசியத்தை காந்தி உணர்ந்திருந்தார். “பிரிட்டனில் வேல்ஸ் ஒரு சின்ன பகுதி. வேல்ஸில் இருப்பவர்கள் இடையே வேல்ஷ் மொழிவழிக் கல்வியைக் கொண்டுசெல்வதற்குப் பெரும் முயற்சிகள் அங்கே நடக்கின்றன. இங்கே நிலைமை என்ன?” என்று 1908இல் தன்னுடைய ‘இந்து சுயராஜ்யம்’ நூலில் கேட்டார் காந்தி.
  • இந்திய மாநிலங்களிலும் பல முன்னோடிகள் தம்முடைய மக்களுக்குத் தத்தமது மொழியில் கல்வியைக் கொடுக்கும் கனவைக் கொண்டிருந்தனர். அவர்களில் ஆங்கிலத்தை முற்றிலும் புறக்கணித்துவிடும் வாய்ப்பு இந்தியாவுக்கு இல்லை என்பதை உணர்ந்த அண்ணா போன்ற தொலைநோக்கர்கள் ஆங்கிலத்தோடு இணைத்து உள்ளூர் மொழிகளைக் கொண்டுசெல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினர். பல மொழிச் சமூகமான இந்தியாவுக்கு இயல்பான இணைப்பு மொழியாக ஆங்கிலம் உருவெடுத்திருந்தது. 
  • சுதந்திரத்துக்குப் பிறகு, மொழிக்கொள்கை நோக்கி கவனம் செலுத்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் ஆங்கிலத்தின் இடத்தில் இந்தியை நிலைநிறுத்த கவனம் செலுத்தினார்களே தவிர, ஆங்கிலத்துக்கு இணையாக உள்ளூர் மொழிகளை நிலைநிறுத்த கவனம் செலுத்தவில்லை.
  • உள்ளபடி இந்தி வளர்ச்சியின் பெயரால் பல நூறு கோடிகள் இறைக்கப்பட்டிருந்தாலும்கூட, அறிவுத் துறையில் ஏனைய உள்ளூர் மொழிகள் இடையில் முன்னே நிற்கும் அளவுக்குக்கூட இந்தியையும் அவர்கள் வளர்க்கவில்லை. இன்று உள்ளூர் மொழிகளில் தமிழோ, மலையாளமோ, வங்கமோ அறிவுத் துறையில் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் அளவுக்குக்கூட ‘நாட்டின் அலுவல் மொழி’ வளர்ந்திருக்கவில்லை.
  • இந்திய அரசால் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவ நூல்களின் கணிசமான பகுதி ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படுவதற்குப் பதிலாக ஒலிபெயர்க்கப்பட்டிருப்பதாக வந்திருக்கும் விமர்சனங்கள் இந்தி கலைச்சொற்களின் இந்தப் போதாமையைத்தான் சுட்டுகின்றன. ஆயினும், உயர்கல்விக்குத் தகுதியற்ற மொழி இல்லை இந்தி. ஏராளமான பத்திரிகைகள், நூல்கள், அகராதிகள், மொழியியல் நிறுவனங்கள் என்று வளமான கட்டமைப்பைக் கொண்டிருக்கும் உள்ளூர் மொழிகளில் ஒன்று அது. அரசு தொடர்ந்து கவனம் செலுத்தினால், நிச்சயம் எல்லாப் படிப்புகளையும் இந்தியிலும் ஏனைய உள்ளூர் மொழிகளிலும் கொண்டுவர முடியும்.
  • அதற்கு முன் ஐந்து விஷயங்களை இந்திய அரசு செய்ய வேண்டும்.
  • 1. இன்று இந்திய அரசு முனைவதுபோல, பல நாடுகளின் அரசுகள் பன்னெடுஙளாகாலமாக வளர்த்தெடுத்திருக்கும் மொழி ஆங்கிலம் என்பதை அது உணர வேண்டும். இன்று ஒவ்வொரு துறையிலும் ஆங்கிலம் பெற்றிருக்கும் வளர்ச்சியை நம்முடைய எந்த மொழியும் பெற பன்னெடுங்காலம் ஆகும். அப்படியான வளர்ச்சியையும்கூட ஆங்கிலத்துடனான ஊடாட்டத்தின் வழியாகவே நம்முடைய மொழிகளுக்குக் கொண்டுவர முடியும். ஆகையால், ‘உள்ளூர் மொழிகள் வழியாகப் படிப்படியாக ஆங்கிலத்தை நீக்குதல்’ எனும் தன்னுடைய பார்வையை ‘ஆங்கிலத்தோடு சேர்த்து படிப்படியாக உள்ளூர் மொழிகளை வளர்த்தெடுத்தல்’ என்று இந்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • 2. உள்ளூர் மொழிகள் என்பவை இங்கே மாநில மொழிகள். எனவே மாநில அரசுகளுடன் கலந்துதான் இதில் எந்த முடிவையும் இந்திய அரசு எடுக்க  வேண்டும். இதற்கென்று ஒரு தனி கூட்டமைப்பை நிதியதிகாரத்துடன் உருவாக்க வேண்டும். மாநிலங்கள் தங்கள் மொழிகளை வளர்த்தெடுப்பதற்கு எல்லா மொழிகளுக்கும் சமமான நிதி ஒதுக்கீட்டையும், அடிப்படைக் கட்டமைப்புகளையும் இந்த அமைப்பின் வழி இந்திய அரசு வழங்க வேண்டும்.
  • 3. மாநில அரசுகள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் உள்ளூர் மொழியும், ஆங்கிலமும் பயிற்றுமொழியாக இருக்கும் சரி; ஒன்றிய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களின் நிலை என்ன? அவற்றிலும் இதே முறைமையைக் கொண்டுவர வேண்டும். இப்படிப் படித்து முடித்து ஒன்றிய அரசுசார் பணிகளுக்காகவோ, உயர்கல்வி வாய்ப்புகளுக்காகவோ விண்ணப்பிக்கும் மாணவர்கள் எந்த மொழியில் தேர்வுகளை எழுதுவார்கள்? ஏனென்றால், இந்தி வழியே மருத்துவம் படித்துப் பட்டம் பெறும் ஒருவர் அடுத்து, ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புக்கு இந்தி வழியே தேர்வு எழுதலாம்; மலையாளம் வழியே மருத்துவம் படித்துப் பட்டம் பெறும் ஒருவர் அதே வேலைவாய்ப்புக்கு இந்தி அல்லது ஆங்கிலத்தின் வழியாக மட்டுமே தேர்வு எழுத முடியும் எனும் நிலை இனியும் நீடிப்பதற்கு ஒரு காரணமும் இல்லை. ஆகையால், ஒன்றிய அரசு சார்ந்த எந்த ஒரு தேர்வையும் இனி எல்லா உள்ளூர் மொழிகளிலும் எழுதும் நடைமுறையைக் கொண்டுவர வேண்டும்.      
  • 4. இந்தியில் மருத்துவப் புத்தகங்களைக் கொண்டுவர 232 நாட்களைப் புத்தக உருவாக்கக் குழு எடுத்துக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். கல்வியையும், மொழிபெயர்ப்புப் பணியையும் எவ்வளவு துச்சமாக அரசுத் தரப்பு கருதியிருக்கிறது என்பதற்கான உதாரணம் இது. ஒரு மொழியில் முதல் முறையாக மருத்துவம் போன்ற துறைகளுக்கான உயர்கல்வி நூல்களைக் கொண்டுவருதல் என்பது மிக மிகச் சவாலான பணி. விரிவான விவாதங்களோடு நூல்களை உருவாக்கத்தக்க அளவுக்கு கல்வியாளர்களுக்கு உரிய அவகாசம் அளிக்கப்பட வேண்டும். அரசின் அவசரத்துக்காக ஆசிரியர்களும் மாணவர்களும் பலியாக்கப்பட்டுவிடக் கூடாது. ஆகையால், இது நீண்ட பயணம் என்பதை அரசு உணர்ந்து அதற்கேற்ப செயலாற்ற வேண்டும்.
  • 5. இப்படியெல்லாம் உள்ளூர் மொழிவழிப் படித்துவிட்டு ஒன்றிய அரசின் உயர் பணிக்கு வரும் ஒரு தெலுங்குகாரரும் இந்திக்காரரும் எந்த மொழியில் உரையாடிக்கொள்வார்கள் அல்லது ஏனைய மாநில அரசுகளின் அதிகாரிகளோடு தொடர்புகொள்வார்கள்? அந்த இடத்தில் இந்தியாவின் இணைப்புமொழியாக ஆங்கிலம்தான் இருக்க முடியும் என்ற நிதர்சனத்தின் அடிப்படையில் நாட்டின் கல்விக் கொள்கை அமைக்கப்பட வேண்டும்.  
  • ஆத்மார்த்தமாக ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் ஒன்றுகூடி சிந்தித்து செயலாற்றினால், இது மாபெரும் சமூகச் சீர்திருத்தங்களில் ஒன்றாக விளையும். இந்திய அரசின் முன்னெடுப்பு அதை நோக்கி அமையட்டும்!

நன்றி: அருஞ்சொல் (21 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்