TNPSC Thervupettagam

உள்ளூர்மொழியில் உயர்கல்வி ஏன் முக்கியம்

November 7 , 2022 642 days 343 0
  • சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டான 2022, அக்டோபர் 16ஆம் நாள் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட நாள்களில் ஒன்றாக இருக்கும். ஆம், இந்தியக் கல்விமுறையின் மறுமலர்ச்சி இந்த நாளில் ஆரம்பித்திருக்கிறது. மருத்துவக் கல்விக்கான முதல் நூலை இந்தி மொழியில் மத்திய பிரதேச அரசு தயாரித்து வெளியிட்டது முக்கியமான ஒரு நிகழ்வு; இந்திய மொழிகளில் கல்வி புகட்டல் எனும் பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு முதல் அத்தியாயம் இதன் மூலம் எழுதப்பட்டிருக்கிறது.
  • இந்தியக் கலாச்சாரத்தின் வளமையையும் மொழிப் பன்மைத்துவத்துவத்தையும் ரவீந்திரநாத் தாகூர் கூறிய வார்த்தைகள் இவை. “இந்தியக் கலாச்சாரம் என்பது முழுதாகப் பூத்த தாமரை மலரைப் போன்றது; அதன் ஒவ்வொரு இதழ்களும் இந்தியாவின் ஒவ்வொரு மாநில மொழிகள்; எந்த இதழைப் பிய்த்தாலும் மலரின் அழகும் முழுமையும் கெட்டுவிடும். மாநில மொழிகள் அவரவர் பகுதிகளில் ராணிகளாகவும், இந்தி அதன் மையத்திலும் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்!”

எது இந்தியத்தன்மை?

  • இந்தியாவின் தெற்கிலிருந்து வடக்கிலும், கிழக்கிலிருந்து மேற்கிலும் பேசப்படும் அனைத்து இந்திய மொழிகளின் உட்பொருளும் அனைத்தையும் உள்ளடக்கியவை என்று பரதேந்து ஹரிச்சந்திரா, ‘நிஜ பாஷா’ என்ற விளக்கத்தில் குறிப்பிடுகிறார் (இவர் கவிஞர், நாடகாசிரியர், நாவலாசிரியர்). இந்திய மொழிகள் - கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றால் ஒன்றோடு ஒன்று ஆழமாகப் பிணைக்கப்பட்டவை; அவற்றின் சாரமே இந்தியா, இந்தியத்தன்மை என்பது ஆகும். மொழிதான் ஒரு தனிமனிதனை அவனுடைய நாடு, கலாச்சாரம் ஆகியவற்றுடன் பிணைக்கிறது.
  • இந்தப் பின்னணியில்தான், இந்தி என்பது எந்தவோர் இந்திய மொழிக்கும் எதிராக முரண்படுவது இல்லை என்பதை எந்தவித மனச்சாய்வுமின்றிப் புரிந்துகொள்ள வேண்டும். பிற இந்திய மொழிகளுக்கு எதிரானது இந்தி என்பது போன்ற தவறான கண்ணோட்டம் மக்கள் இடையே பரப்பப்படுகிறது. இதில் சிறிதளவும் உண்மையே இல்லை. தேச மொழியான இந்திக்கு இந்தியாவின் எந்த ஒரு மொழியுடனும் உள்ளார்ந்த பகைமை என்றுமே இருந்ததில்லை. அனைத்து இந்திய மொழிகளுக்கும் இந்தி தோழமையானது!
  • இந்தியும் சரி, பிற இந்திய மொழிகளும் சரி; இன்னமும் நெகிழ்வாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. மொழிகளுக்குள் உள்ள வேறுபாட்டைக் குறைக்கவும், பிற மொழிகளுக்கும் இடம் தரவும், நமக்குள் சொல் வளங்களைப் பெருக்கிக்கொள்ளவும் இந்த நெகிழ்ச்சி அவசியம் என்று கருதுகிறேன். இதன் மூலம் கலாச்சார – மொழித் தோழமை, சீரான வளர்ச்சி பெற்று மேம்பாடு அடையக்கூடும்.
  • ஆங்கிலத்தில் சரளமாகப் பேச, எழுதத் தெரிந்தவர்கள் தங்களைவிட உயர்வானவர்கள் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. ஒரு மனிதனின் அறிவுக்கூர்மைக்கும், அறிவுத்திறனுக்கும் மொழிப் புலமை மட்டுமே எந்தவிதத்திலும் காரணமாக இருக்க முடியாது. தன்னுடைய எண்ணங்களைத் தெரிவிக்கவும் வெளிப்படுத்தவும் மொழி ஒரு கருவியாக மட்டுமே இருக்க முடியும்.

தாய்மொழியில் உயர்கல்வி

  • அவரவர் தாய்மொழியில் கற்கும்போது அறிவு சுடர்விட்டுப் பிரகாசிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். தாய்மொழியைத் தவிர பிற மொழியில் கல்வி கற்றுத்தரும்போது குழந்தையின் அறிவு வளர்ச்சி ஒரு வரம்புக்கு உட்பட்டதாகவே இருக்கும். பயிற்றுமொழி வேறாக இருந்தாலும், ஒருவருடைய சிந்தனை அவருடைய தாய்மொழியிலேயேதான் அமையும். எனவே, குழந்தையின் கல்வி வளர்ச்சிக்கும் பயிற்றுமொழிக்கும் ஆழ்ந்த தொடர்பு இருக்கிறது என்றே கருதுகிறேன்.
  • இந்திய மொழிகளிலேயே உயர்கல்வி படிப்பது சாத்தியமில்லாத காரணத்தால், நம் நாட்டின் அறிவு வளத்தில் வெறும் 5% அளவுக்கே நம்மால் ஆராய்ச்சி, அறிவியல், மொழி-இலக்கியம், வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயன்படுத்த முடிந்திருக்கிறது. எனவே, தாய்மொழியிலேயே உயர்கல்வியும் அறிவியல் – தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளுக்கான கல்வியும் பெறும்போதுதான் அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு காணும் நமது லட்சியம் நிறைவேறும்.
  • இதனால்தான் உலகம் முழுவதிலுமே கல்வியாளர்கள் தாய்மொழிவழிக் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அப்படிப்பட்ட கல்வி மூலமே அறிவார்ந்த சிந்தனை பெருகும், ஆராய்ச்சி – பகுப்பாய்வு திறமைகள் வளரும்.
  • அவரவர் தாய்மொழியிலேயே அறிவியல் – தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கற்றுத்தந்தாலே கல்வியை அனைவரிடத்திலும் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும் என்று தேசத் தந்தை காந்தியும் வலியுறுத்திவந்தார். “வேதியியல், பொறியியல் மற்றும் பிற துறைகளில் மிகப் பெரிய பட்டாளமாக இந்திய மாணவர்களை நாம் கொண்டிருக்க வேண்டும். அவர்கள்தான் இந்திய நாட்டுக்கு உண்மையான சேவகர்களாக இருப்பார்கள். இந்த நிபுணர்கள் அனைவரும் அன்னிய மொழியில் அல்ல - அவரவர் தாய்மொழியிலேயே பேசுவார்கள்; அவர்கள் பெறும் அறிவானது அவர்களுக்கு மட்டுமல்ல – சமுதாயத்துக்கே உரியதாகிவிடும்” என்று காந்தி குறிப்பிட்டார்.
  • காந்தியின் சிந்தனைகளை அடியொற்றியே மோடி தலைமையிலான அரசும் புதிய கல்விக் கொள்கை மூலம் அவரவர் தாய்மொழியிலேயே உயர்கல்வி அளிக்க நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆரம்பக் கல்வி முதல் தொழில்நுட்பக் கல்வி வரை, பொறியியல், சட்டம், மருத்துவம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் தாய்மொழிவழிக் கல்விக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த லட்சியத்தில் அரசு உறுதியாக இருக்கிறது. இதில் மத்திய பிரதேசம், மருத்துவக் கல்வியை இந்தி மொழியில் அளிக்கும் முதல் நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

தாய்மொழிக்கு முக்கியத்துவம் ஏன்?

  • பிரதமர் மோடியின் தொலைநோக்கு லட்சியமான தன்னிறைவு என்பதை நோக்கி நாடு நடைபோடுகிறது. தொழில், வணிகம், சேவைத் துறைகளில் மட்டும் நாம் தன்னிறைவு அடைந்தால் போதாது. மொழி வளத்திலும் தன்னிறைவு பெற வேண்டும். புதிய கல்விக் கொள்கை மூலம் இந்திய மொழிகள் அனைத்துக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது.
  • பொறியியல் கல்வியை தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி, வங்காளி, அசாமி, இந்தி ஆகிய எட்டு இந்திய மொழிகளில் கற்றுத்தர முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக புத்தகங்கள் இந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். நீட் மற்றும் யுஜிசி தேர்வுகள் இப்போது 12 மாநில மொழிகளில் நடத்தப்படுகின்றன. இவை அனைத்துமே இந்திய மொழிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகும்.
  • தாதாபாய் நௌரோஜி 19வது நூற்றாண்டில் இந்தியாவின் அரிய கனிம வளங்கள் உள்பட அனைத்தும் வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டதை ‘செல்வ வளத்தின் பெயர்ச்சி’ என்றார். 21வது நூற்றாண்டில் ‘அறிவு வளத்தின் பெயர்ச்சி’யை நாம் அதிகம் பார்த்தோம். இந்தியாவின் அரிய வளங்களைக் கொள்ளையடித்த அதே சக்திகளே இப்போது தங்கள் நாட்டு மொழியில் உயர்கல்வி படிக்க வாருங்கள் என்று இந்திய மாணவர்களை வரவேற்று அரிய மூளை வளங்களையும் சுரண்டுகின்றன.
  • இந்திய இளைஞர்கள் தாய்மொழியிலேயே கற்கத் தொடங்கினால் படித்தவர்கள் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகுவதுடன், அனைவரும் தாய்நாட்டிலேயே தங்கி நாட்டை வளப்படுத்துவதும் நடக்கும். தாய்மொழியிலேயே உயர்கல்வியைப் பெற முடிந்தால் இந்திய மாணவர்கள் அன்னிய மொழிகளுக்கும் கலாச்சாரங்களுக்கும் அடிமையாவதும் தவிர்க்கப்படும். அவரவர் தாய்மொழியிலேயே படித்து சிந்தித்து, கேள்விகள் கேட்டு தங்களுடைய அறிவுத்திறனை பல மடங்கு அதிகரித்துக்கொள்வார்கள்.

நன்றி: அருஞ்சொல் (07– 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்