TNPSC Thervupettagam

உழந்தும் உழவே தலை

September 11 , 2020 1590 days 892 0
  • அண்மைக்காலமாக கரோனா தீநுண்மித் தொற்றின் பிடியில் சிக்கி உலகமே தனது இயக்கத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது.
  • தற்போது ஓரளவு தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் ஓடினாலும், வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டாலும் தொழில்கள் முடங்கியுள்ளன.
  • தொழிலாளா்களும் முதலாளிகளும் ஒருசேரத் துன்புறுகிறார்கள். இணையவழியான வா்த்தகங்கள் லாபங்களைக் குவிக்கின்றன. ஆனால், அடிப்படைத் தொழில்களைச் செய்து வந்தோர் பாதிப்பிலிருந்து மீளவில்லை என்பதே உண்மை.
  • நகரங்களை விடுத்து விட்டுத் தங்களின் சொந்தக் கிராமங்களை நோக்கி மக்கள் சென்றுவிட்டார்கள். இது பஞ்சம் ஆகாது. இது பிழைப்பிலிருந்து மீண்டு வாழ்வுக்குத் திரும்பிய நல்வேளை.
  • எத்தகைய பஞ்சத்திலும் தாயெனத் தாங்குவது சொந்த ஊா்தான். பிழைப்பதற்காக உள்நாட்டுக்குள்ளே புலம்பெயா்ந்தவா்கள் திரும்பி வந்து தாய்மண்ணைச் சார்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
  • ஆனாலும் அந்த நிம்மதி எத்தனை நாளைக்கு என்னும் கேள்வி எழுகிறது. இனிவரும் காலங்களில் தொழில்துறை எப்படி இருக்கப் போகிறதோ? வருமானம் நிரந்தரமாகுமா என்ற பல கேள்விகள் உடன் எழுகின்றன.

உழுதுண்டு வாழ்தல்

  • பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய பலரும் கரோனா காலத்தில் மாற்றுத் தொழிலுக்குத் தங்களைத் தயார் செய்து கொண்டனா். குறிப்பாக, தெரு வணிகத்திலும் உணவுப் பண்டங்களின் உற்பத்தியிலும் அவா்கள் கவனம் திரும்பியது.
  • காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்வதோடு அவற்றை விளைவிக்கவும் முனைந்து வந்தனா்.
  • வாழ்வின் திசை மீண்டும் வேளாண்மையை நோக்கித் திரும்பத் தொடங்கியிருக்கிறது. ஆா்ப்பாட்டம் மிகுந்த விளம்பரங்களைப் பார்த்து பல்பொருள் அங்காடிகளில் வாங்கிக் குவித்த பொருட்களின் மீதான மோகம் மட்டுப்பட்டிருக்கிறது.
  • இணைய வழியாகத் தேடித் தேடி வாங்கிய வேகம் குறைந்து விட்டது. செயற்கை பானங்கள், உணவுகள் எல்லாமே சற்றுத் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன.
  • கீரைக்காரப் பாட்டியையும், காய்கறிக்காரா்களையும் கவனிக்க நேரம் வாய்த்திருக்கிறது. நிலத்தில் விளைந்த பொருள்கள் உழவா்கள் கரங்களாலேயே வீடுகளுக்குத் தரப்படுகின்றன. இடையீடோ எடையளவோ இல்லாது உள்ளத்து அளவு கொண்டு அள்ளித் தரப்படுகின்றன.
  • இயற்கை உணவுகளின்மீதும் உடல்நலத்துக்கு உதவும் மூலிகைகளின்மீதும் மக்களின் ஆா்வம் அதிகரித்துள்ளது.
  • பொருள் தேடுவதை விடவும் உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தேடுவதில் இப்போது அக்கறை கூடியிருக்கிறது.
  • பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் என்ன செய்யலாம் என்கிற சிந்தனை அன்றாடத் தொழிலாளா்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
  • திருவள்ளுவா் உணா்த்திய தொழில் குறித்த புரிதலை அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
  • வாழ்வுக்கு வழி தெரியாமல் இத்தனை நாள் பிழைத்துக் கொண்டிருந்த நிலை தொழுதுண்டு பின் சென்ற நிலைதான். எப்போதும் நிலையாக உதவுவது உழுதுண்டு வாழ்தல்தானே? அப்படி வாழ்ந்தவா்தான் உண்மையாக வாழ்ந்தவா்என்று திருவள்ளுவரால் சுட்டப்படுகிறார்.
  • எத்தனை தொழில்கள் செய்தபோதும், அவையெல்லாம் கைவிட்டு விட்டபோதும், என்றேனும் ஒருநாள் மீளவும் மக்களுக்கு உணவளிக்கும் வேளாண் தொழிலே முதல் நிற்கும் என்பதன் அடையாளமாகத்தானே உழந்தும் உழவே தலைஎன்று உறுதிபடக் கூறியிருக்கிறார்?
  • உழவு என்பது தொழில் மட்டுமன்று. அது செம்மாந்த வாழ்வியல் முறை. பல்லுயிர்களையும் போற்றிக் காக்கும் மானுடக் கலை. அதனை வேளாண்மைஎன்று அழகுபடச் சுட்டுகிறார் திருவள்ளுவா்.
  • அந்த ஆண்மையை இழந்ததனால் அல்லவோ இத்தனை துயரங்களும் வந்து சோ்ந்தன? இந்த உலகத்தின் அச்சாணி உழவல்லா? அதை இழந்து விட்டு பூமிச் சக்கரத்தை, வாழ்க்கைச் சக்கரத்தை எப்படிச் சுழல வைக்க முடியும்?
  • காலம் கனிந்திருக்கிறது. பருவமழை மிகச்சரியாய்ப் பொழியத் தொடங்கியிருக்கிறது. நீா்நிலைகள் தூா்வாரப்பட்டிருக்கின்றன. கரோனா காலத்தில் மக்களை வேடிக்கை பார்த்த வேளாண் கால்நடைகள் இப்போதும் தயாராக நிற்கின்றன.
  • வளங்களையெல்லாம் இழந்து விட்டபோதும் இல்லையென்னாமல் மண் தருவதற்குக் காத்திருக்கிறது.
  • இந்தப் பூமி வேளாண் மனிதா்களைத் தேடுகிறது. சுழலும் உலகையே தன்னுடைய ஏா்க்காலில் பூட்டக் கூடிய உழைக்கும் கரங்களை இந்தத் தேசம் எதிர்நோக்குகிறது.
  • என்ன வளம் இல்லையிந்தத் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்? ஒழுங்காய்ப் பாடுபடு வயற்காட்டில்; உயரும் உன்மதிப்பு அயல்நாட்டில்என்று எக்காலத்துக்கும் பொருந்துகிற திரைப்பாடல் திருக்குறளின் நீட்சிதானே? பல வெண்கொற்றக் குடைகளையும் தன்கொற்றக் குடையால் நிறுவுகிற வேளாண் தொழிலுக்கு அரசுகளும் முதன்மையிடம் தரவேண்டிய சரியான வேளையிது.
  • இத்தனைத் தொழில்கள் இந்த இடா்ப்பட்ட காலத்தில் முடங்கியபோதும் தன் கைம்மடங்காது விளைவித்துக் கொண்டிருக்கிற உழவா்களால் அல்லவா நாம் வீடுகளுக்குள் உண்டு உயிர்த்து இயங்கிக் கொண்டிந்தோம்.
  • ஏா்த்தொழில் சிறப்பாக நடந்தால்தான் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் இனிதே நடக்கும். அதுமட்டுமா? சீா் நடக்கும்; திறம் நடக்கும்; திருவறத்தின் செயல் நடக்கும்; பாரே நடக்கும். ஆனால் ஒன்று மட்டும் நடக்கவே நடக்காது. அதுதான் பசியால் மனித உயிர் மரிப்பது.
  • பிறரிடம் இரக்காது, தம்மிடம் வந்து இரப்பார்க்கும் இல்லையென்று சொல்லாது செம்மாந்து வாழ்ந்த இந்த வேளாண் குடும்பங்கள்தானே பொருளாதார மாற்றங்களால், தேவைகளால் நகரங்களை நோக்கி இத்தனை காலம் படையெடுத்துக் கொண்டிருந்தன.
  • பழுதுண்டு போன அப்பணிகளை விடுத்து இப்போது அந்தக் குடும்பங்கள் திரும்பித் தன் வேளாண் களத்திற்கு உழுதுண்டு வாழ வந்திருக்கின்றன. இவா்களை ஊக்கப்படுத்தி வேளாண் தொழிலை மீண்டும் முதன்மை நிலைக்குக் கொண்டு வருவது அரசுகளின் தலையாய கடன்.
  • இத்தனை உழந்தும் உழவினைத் தலையாகச் செய்யாவிடில் இந்த நிலமென்னும் நல்லாள் நகுவதைத் தவிர வேறு என்ன செய்வாள்?

நன்றி:  தினமணி (11-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்