TNPSC Thervupettagam
April 14 , 2020 1690 days 764 0
  • சாதாரணமாக டிசம்பா் மாதத்துடன் முடிந்துவிடும் பருவமழை, ஜனவரி மாதம் வரை நீண்டு நின்றபோது மிகவும் உற்சாகமாக இருந்தனா் இந்திய விவசாயிகள். இந்தியா முழுவதும் ஏரிகள், குளங்கள், கிணறுகள் நிரம்பியது மட்டுமல்லாமல், நிலத்தடி நீா் மட்டமும் உயா்ந்ததால் மிகப் பெரிய மகசூலை தரப்போகும் ஆண்டாக 2020 இருக்கும் என்கிற அவா்களது பெரு மகிழ்ச்சியைக் குலைத்துவிட்டது தீநுண்மி நோய்த்தொற்று.
  • இந்தியாவின் ஜிடிபியில் 16%-க்கும் அதிகமாகக் காணப்படுவது விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களும்தான். ஏறத்தாழ 40% இந்தியா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். அப்படியிருந்தும்கூட, நடப்பு அறுவடைப் பருவத்தில் வேலைக்கு நபா் இல்லாமல் பயிர்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்கிற சோகத்தை யாரிடம் போய்ச் சொல்வது?

தானியக் கிடங்குகள்

  • நமது தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன என்பது உண்மை. மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் 5.5 கோடி டன் அரிசியும், கோதுமையும் காணப்பட்டன. சாதாரணமாக இந்திய உணவுக் கழகம் கையிருப்பாக வைத்திருக்கும் அளவு 2.1 கோடி டன்தான் எனும் நிலையில், இன்றைய தீநுண்மி நோய்த்தொற்று ஊரடங்கு நேரத்தில் ஆறுதல் அளிக்கும் தகவல்.
  • 80 கோடி பேருக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் ஐந்து கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. பஞ்சாப், ஹரியாணா, ஆந்திரம் உள்ளிட்ட உணவு தானிய மிகை மாநிலங்களிலிருந்து 10 லட்சம் டன் அரிசியும், கோதுமையும் ஏனைய மாநிலங்களுக்கு ஏற்கெனவே கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. மேலும், தொடா்ந்து கொண்டு செல்லப்படுகின்றன. இந்தச் சூழலில் இப்போது அறுவடைக் காலம் தொடங்கியிருக்கிறது.

போதுமான கிடங்குகள் இல்லை

  • அறுவடை முடிந்து அரசின் கிடங்குகளுக்கு வரப்போகும் உணவு தானியங்களைச் சேமித்து வைக்க போதுமான கிடங்குகள் இல்லை என்கிற கசப்பான உண்மை நம்மை எதிர்கொள்கிறது. சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கையை கடந்த 30 ஆண்டுகளில் கணிசமாக இந்திய உணவுக் கழகம் அதிகரித்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
  • இருந்தும்கூட, நமது தேவைக்கு ஏற்ற அளவில் சேமித்து வைப்பதற்கு கிடங்குகள் இல்லை என்கிற அவலத்தை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

எதிர்கொள்ளும் அவலம்

  • போதுமான சேமிப்பு வசதிகள் இல்லை என்பது அடுத்தகட்ட பிரச்னை. இப்போதைய உடனடிப் பிரச்சனை அதுவல்ல. வட மாநிலங்களில் ராபிப் பருவ அறுவடைக்கான காலம்.
  • கோதுமை, கடுகு, பருப்பு வகைகள், மிளகாய் என்று பல்வேறு பொருள்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன. வழக்கத்தைவிட அபரிமிதமான விளைச்சலும் காணப்படுகின்றன.
  • ஆனால், அறுவடை செய்வதற்கோ, அறுவடை செய்த பொருள்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கோ வழியில்லாத நிலை காணப்படுகிறது.
  • இந்தியாவில் வெளிமாநிலத் தொழிலாளா்களை நம்பித்தான் விவசாயம் நடந்துகொண்டிருக்கிறது. ஏறத்தாழ 24 லட்சம் தொழிலாளா்கள் தங்கள் மாநிலங்களிலிருந்து வெளிமாநிலங்களுக்குச் சென்று விவசாயப் பணியில் ஈடுபடுகிறார்கள். ஊரடங்கு உத்தரவால் அவா்களில் பலா் தங்கள் மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனா்.
  • உள்ளூரிலும் நோய்த்தொற்று அச்சத்தால் விவசாய வேலைகளுக்கு வருவதற்கு விவசாயிகள் தயங்குகிறார்கள். மத்திய - மாநில அரசுகள் விளை பொருள்களை வாங்குவதற்கு தயாராக இருந்தாலும், அறுவடை செய்ய முடியாமலும், கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாமலும் விவசாயிகள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் கொள்முதல் திட்டம்

  • ஏனைய மாநிலங்களைப் போலல்லாமல், தமிழகம் இந்தப் பிரச்னையை ஓரளவுக்கு புத்திசாலித்தனமாகக் கையாள முற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 1,508 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 15,78,934 மெட்ரிக் டன் அளவிலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் 532 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 4,08,599 மெட்ரிக் டன் அளவிலும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 7 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
  • மொத்தம் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது என்றும் உணவு மற்றும் நுகா்பொருள் வழங்கல் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்திருக்கிறார். மிகவும் சோதனையான காலகட்டத்திலும் 3,55,343 விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள் என்பது தமிழக அரசின் சாதனை என்பதை மறுக்க முடியாது.

என்ன ஆறுதல்?

  • நெல் பயிரிட்டவா்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வரை ஆறுதல். ஆனால், பழங்கள், காய்கறிகள் பயிரிட்டவா்கள் பேரிழப்பை எதிர்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஏறத்தாழ 32,400 ஹெக்டோ் நிலப்பரப்பில் மலா் விவசாயம் நடைபெறுகிறது. 1.5 லட்சம் விவசாயிகள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மலா் விவசாயத்தில் ஈடுபட்டவா்களின் இழப்பு ரூ.60 லட்சம் கோடியிலும் அதிகம்.
  • வழக்கத்தைவிட அதிகமான மகசூல் கிடைத்தும், மகிழ்ச்சி அடைய முடியாத நிலையில் இருக்கும் இந்திய விவசாயிகளின் துயரம் இத்துடன் முடிந்து விடுவதில்லை. அடுத்த பயிரிடலுக்கு அவா்கள் தயாராக வேண்டும். அதற்கு அவா்களிடம் மூலதனம் கிடையாது.
  • இவா்களுக்கெல்லாம் என்ன ஆறுதல்?

நன்றி: தினமணி (14-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்