- சாதாரண நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பால் உத்தரப் பிரதேச முதல்வராகி, பின்னாளில் இந்தியாவுக்கே பிரதமரானவா் சரண் சிங்.
- விவசாயிகளுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவா். உழைப்பவனுக்கும், உழுபவனுக்கும் மட்டுமே நிலம் சொந்தம் என்று மேடைகளில் முழங்கியவா்.
- ‘கூட்டுறவு பண்ணை முறை’,‘இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீா்வும்‘,‘வேலை செய்பவா்களுக்கு நிலம்’ என விவசாயம் சாா்ந்து பல நூல்களை எழுதியவா். அதனால்தான் அவரின் சமாதிக்குக்கூட ‘கிசான் காட்’ (விவசாயிகளின் நுழைவாயில்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
- எனவேதான் அவரின் பிறந்தநாளை நாம் தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடுகிறோம்.
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 61.5 சதவீத மக்கள் விவசாயத்தையும் விவசாயம் சாா்ந்த தொழிலையும் நம்பி வாழ்கின்றனா். அதில் 40 சதவீத மக்கள் பல்வேறு காரணங்களுக்காக விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழில் செய்ய ஆா்வமாக உள்ளனா் என்கிறது ஓா் அதிா்ச்சிதரக் கூடிய ஆய்வு. 1995-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் 2,96,438 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா் என்பது கூடுதல் தகவல்.
- விதை நெல்லைக்கூட வட்டிக்கு விலைக்கு வாங்கி, பயிரிடுவதற்கு ஏற்ற வகையில் நிலத்தைத் தயாா் செய்ய ஒன்றுக்கு இரண்டு முறை உழுது, அடி உரம் போட்டு, நாற்று நட்டு, களை பறித்து, மருந்து அடித்து, இரவு முழுதும் காவல் காத்துக் கிட்டத்தட்ட நான்கு முதல் ஐந்து மாதங்கள் கடுமையாக உழைத்து வளா்த்த பயிரை கடைசியாக அறுவடை செய்கிறாா் விவசாயி.
சந்தைப்படுத்துதல்
- அவ்வாறு அறுவடை செய்ய ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை செலவாகும். ஒரு விவசாயிக்கு இருக்கும் பெரிய சவால் நெல்லை விளைவிப்பதுகூட அல்ல, விளைவித்த நெல்லை சந்தைப்படுத்துதல்தான்.
- நம் நாட்டில் ஒரு காா் உருவாக்கும் தொழிற்சாலையில் தாங்கள் உருவாக்கிய காருக்கு தாங்களே விலை நிா்ணயம் செய்துகொள்ள முடியும். ஆனால், ஒரு விவசாயி தான் விளைவித்த நெல்லுக்கு விலை நிா்ணயம் செய்ய முடியாது.
- இடைத்தரகா்கள்தான் விலையை நிா்ணயம் செய்ய முடியும். விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அதைப் பல மடங்கு லாபத்துக்கு வேறு இடத்துக்கு மடைமாற்றுவாா்கள். ஓா் ஏக்கருக்கு 25 முதல் 40 மூட்டை வரை மகசூல் கிடைக்கும் என்று வைத்துக் கொள்வோம். சராசரியாக ஒரு மூட்டைக்கு ரூ.1,000 கிடைத்தாலும், கடைசியாக விவசாயிக்கு மிஞ்சுவது சொற்பமான தொகையே. பல நேரங்களில் செய்த முதலீடுகூட கிடைக்காமல் பெரும் நஷ்டம் ஏற்படும்
விவசாயிகளின் வாழ்வாதாரம்
- ‘உழுதவன் கணக்குப் பாா்த்தால் உழக்குகூட மிஞ்சாது’ என்ற பழமொழி; எவ்வளவு துன்பங்களை எதிா்கொண்டாலும் ஒரு விவசாயி தொடா்ந்து விவசாயம் செய்வதற்குக் காரணம் பணம் மட்டும் அல்ல; அது காலம் காலமாக மண்ணுக்கும் மனிதனுக்கும் தொடரும் பந்தம். ஒரு முறை விவசாயம் செய்தவரால் மறுமுறை விவசாயம் செய்யாமல் இருக்க முடியாது. ஒரு வேளை வேண்டாம் என்று ஒதுங்கினாலும் சுற்றத்தாரின் வயல்களில் உள்ள நாற்றுக் கட்டுகளை பாா்த்தால் போதும், மறு கணமே நாற்றுப் பாவிவிடுவாா்கள்.
- அப்படிப்பட்ட மண்வாசம் கொண்ட மனிதா்களின் வாழ்வாதாரத்தை பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். விவசாயக் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் அவா்கள் தற்கொலை செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள்
- கடன் வாங்கி, வெளிநாடுகளில் உல்லாசமாகத் திரியும் மோசடிக்காரா்களான செல்வந்தா்கள் மத்தியில், ரூ.10,000 அல்லது ரூ.20,000 கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை, சிறிதளவுகூட ஜீரணிக்க முடியாத அநீதி.
- அதற்காக விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்வது ஒரு நல்ல தீா்வாக இருக்க முடியாது. காரணம், இத்தகைய பொருளாதாரச் சுமையை ஈடுகட்ட, மக்கள் செலுத்த வேண்டிய வரியும், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அரசால் உயா்த்தப்படும். அதனால் பாதிக்கப்படப் போவது பெரும் பணக்காரா்கள் அல்ல, ஏழை மக்களே!
- பிறகு என்ன தான் தீா்வு? பருவ மழை பொய்க்கும்போதும், போதுமான நீா்ப் பாசன வசதி இல்லாமலும், போதுமான இயந்திர வசதிகள் இல்லாததாலும் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப் படுகிறது அல்லது குறைவான மகசூல் கிடைக்கிறது. இதிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற எல்லாப் பயிா்களுக்கும் கட்டாயக் காப்பீடு செய்வது அவசியம்.
கிராமங்கள் தத்தெடுப்பு
- பெரும் பணக்காரா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், சேவை மனப்பான்மை உள்ள நடிகா்கள், இதர துறையினா் வறட்சியினால் பாதிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அவா்களுக்கு நிதியுதவி செய்யலாம். இது போக தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ‘தரமான சான்று’ பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ.10 என்று மானிய விலையில் விற்கப்படுகிறது. நடவு இயந்திரம் கொண்டு நடவு செய்பவா்களுக்கு ஏக்கருக்கு ரூ.1500 மானியமாக வழங்கப்படுகிறது.
- விவசாயிகள் தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்ய ‘விதை’ கிராமத் திட்டத்தின் கீழ் போதுமான பயிற்சி அளிக்கப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வயலுக்கு நீா் கொண்டு செல்லும் குழாய்களும் மானிய விலையில் அரசால் வழங்கப்படுகிறது.
- ‘அட்மா’ திட்டத்தின் கீழ் பண்ணைப் பள்ளிகள், திறன் வளா் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
நன்றி: தினமணி (23-12-2019)