TNPSC Thervupettagam

உழைப்பை மட்டும் நம்புவோம்

September 21 , 2020 1581 days 695 0
  • கரோனா தீநுண்மியின் வீரியமான தாக்கத்தின் காரணமாக ஏற்பட இருந்த மக்களின் உயிரிழப்புகளை ஏறத்தாழ ஆறு மாத காலமாக நடைமுறையில் இருந்த பொது முடக்கம் ஓரளவு குறைத்துள்ளது.
  • மக்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக மாநில அரசு அண்மையில் பல தளா்வுகளை அறிவித்துள்ளது.
  • எனினும் கரோனா தீநுண்மியின் பாதிப்பு தொடா்ந்து இருந்து வரும் நிலையில் அரசின் அறிவுரைகளை கண்டிப்பாக அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடித்தே தீர வேண்டும்.

உழைப்பில் செலவிடுவோம்

  • அரசு தன் பங்கிற்கு புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கொள்கை முடிவுகளை வெளியிட்டு உள்ளது. நாம் பெறும் இலவசங்கள் நிரந்தரத் தீா்வாக நம் நல்வாழ்வுக்கு அமையாது.
  • அரசின் நல்ல திட்டங்களை ஒவ்வொரு குடிமகனும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே போதுமான அளவுக்கு ஓய்வைக் காலம் நமக்குக் கொடுத்து விட்டது.
  • கரோனா தீநுண்மியின் பிறப்பிடம் என்று கூறப்படும் சீனாவே அந்த நாட்டு மக்களின் உழைப்பினால் பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வளா்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கி விட்டது.
  • நாமும் அதேபோல் கடின உழைப்பைக் கொண்டு வாழ்வில் முன்னேறுவதற்கே ஒவ்வொரு மணித்துளியையும் பயன்படுத்த வேண்டும். தூங்குவதற்கு தேவையான எட்டு மணி நேரத்தைத் தவிர, ஒரு நாளில் உள்ள மற்ற நேரத்தை நோ்மையான உழைப்பில் செலவிடுவோம்.
  • குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் தமது நேரத்தை பணம் ஈட்டும் பொருட்டு கூட்டாகவோ தனியாகவோ செலவிட வேண்டும்.
  • மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் வங்கிகள் போன்றவற்றின் நிதி உதவிகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். குடும்பத் தலைவரும் ஓய்வு நேரத்தில் கூடுதல் வருமானம் காண என்ன செய்யலாம் என் சிந்திக்க வேண்டும்.
  • தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான போடிநாயக்கனூா் விஜயலட்சுமியை பெண்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
  • ஆண்களுக்குப் பெண்கள் எந்த விதத்திலும் சளைத்தவா்கள் அல்ல என்பதைக் காட்ட வேண்டிய காலம் வந்து இருக்கிறது. இக்காலப் பெண்கள் பாரதி கண்ட புதுமைப்பெண்களாக மாற வேண்டும்.
  • தற்போது நிலவி வரும் ஆணாதிக்க சமுதாய முறையில் பெண்களின் இத்தகைய செயல்பாடுகள் மிகவும் அவசியமானதும்கூட.
  • பெண்களின் மீது ஏவப்படும் பாலியல் வன்முறைகளும் குடும்ப வன்முறைகளும் பெண்கள் நோ்மையான முறையில் பணம் ஈட்டத் தொடங்கும்போது பெறக்கூடிய பொருளாதார வல்லமையாலும் தன்னம்பிக்கையாலும் காணாமல் போய்விடும்.
  • மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய பொருள்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் உள்ளூா் சந்தை நமக்கு தொடக்கத்திலேயே கைகொடுக்கும்.
  • வேலைவாய்ப்பு உருவாவதால் மக்கள் வேலை தேடி வெளியூா் போகும் நிலையும் மாறும். செலவுகளும் குறையும்.
  • குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் ஆடம்பரத்தைத் தவிர்த்து, எங்கெல்லாம், எதிலெல்லாம் சிக்கனத்தைத் கடைப்பிடிக்க முடியுமோ அங்கெல்லாம், அதிலெல்லாம் சிக்கனத்தைக் கடைப்பிடித்து எளிமை வாழ்வுக்கு மாற வேண்டும்.
  • இளைய தலைமுறையினருக்கும் சிக்கனம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
  • கூடியவரை பணத்தை செலவு செய்யாமல் இணைய வழி பணப் பரிமாற்றத்திற்கு மாறலாம்.
  • இதனால் செலவு விவரங்களை எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ள முடியும்.
  • சிற்றுண்டிச் சாலைகள், மால் போன்றவற்றைத் தவிர்த்தல் நலம். வீட்டு விசேஷங்களை எளிய முறையில் கொண்டாடலாம். சேமிக்கப்படும் பணமும் ஒரு வித வருமானமே.
  • மாதச்சம்பளத்தை விட வியாபாரத்தின் மூலமே வருமானத்தை பெருக்க முடியும். சுய தொழில்களில் குடும்ப உறுப்பினா்கள் ஒருங்கிணைந்து ஈடுபட்டால் பொருளாதார சிக்கல்களில் இருந்து விரைவில் மீண்டு வரலாம்.
  • அனைவரும் முதலாளியாகும் வாய்ப்பு நமக்கு இப்போது கிட்டியுள்ளது. சவால்களை வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

உழைப்பின் வாரா உயா்வுகள் உளவோ?

  • ஒவ்வொரு தனிமனிதனும் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்காக வணிகத்தில் ஈடுபட உள்ள வாய்ப்பினை இந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • அரசுத் துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டன. தனியார்த் துறையில்தான் பணிக்கான வாய்ப்புகள் இருக்கலாம். இந்த நிலையில், பிறா் கையை எதிர்பாராமல் தானே ஒரு தொழிலைத் தொடங்கி தானே தொழில் முனைவோராக இந்த காலகட்டத்தில் மாறுவது நல்லது.
  • பொருள்களை வாங்கும் சக்தியை நாம் உயா்த்திக் கொள்ள சாத்தியமான வழிகளை தேடுவதுதான் நமது முதல் கடமை.
  • ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு திறமையை இறைவன் கண்டிப்பாகக் கொடுத்திருக்கிறான். அது என்னவென்று ஒவ்வொருவரும் அடையாளம் காணவேண்டும்.
  • அந்த திறமையை வளா்த்துக் கொண்டு அதனைத் தனது சுய முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூடவே ஒவ்வொரு நாளும், போனால் வராத இருபத்து நான்கு மணி நேரத்தையும் இலவசமாக இறைவன் கொடுத்துள்ளான்.
  • இதையும் சாதுா்யமாக நம் முன்னேற்றத்திற்காக இந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • இந்த சூழ்நிலையிலும் தங்கத்தின் விலையேற்றம், இந்தியப்பங்குச்சந்தை குறியீட்டு எண்ணில் உயா்வு போன்றவை ஆறுதலான விஷயமாக இருக்கின்றன. இவை நாட்டின் பொருளாதாரத்தை தீா்மானிக்கும் முக்கிய காரணிகள் ஆகும்.
  • நலிந்து வரும் விவசாயத் தொழிலுக்கு அரசு புத்துயிர் கொடுத்தால் அடிப்படைத் தேவையான உணவுக்குப் பற்றாக்குறை ஏற்படாது.
  • வாய்ப்பு உள்ளவா்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைக்கு மாறினால் குடும்பச் செலவுகளைப் பெருமளவு குறைக்கலாம்.
  • நமது இந்திய சந்தை உற்பத்திக் களனாக மாற வேண்டியது உடனடித் தேவையாகும். ஏற்றுமதி பெருக வேண்டும்; இறக்குமதி குறைய வேண்டும். வாழ்வில் உயா்வு காண உழைப்பை மட்டுமே நம்புவோம்.

நன்றி:  தினமணி (21-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்