TNPSC Thervupettagam

ஊக்கம் அது கைப்பொருள்!

August 10 , 2024 155 days 138 0
  • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
  • முன்னதாக, ஒலிம்பிக் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்திய வினேஷ், இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் சாரா ஆன் ஹில்டேபி ரான்டை வீழ்த்தி தங்கம் வெல்ல வாய்ப்பு இருந்தது. காரணம், இந்தப் போட்டியில் இதற்கு முந்தைய சுற்றுகளில் அவர் விளையாடிய விதம் ஆகும்.
  • 50 கிலோ எடைப் பிரிவின் முதல் சுற்றில், 4 முறை உலக சாம்பியனும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான ஜப்பானின் யுய் சுசாகியை வினேஷ் எதிர்கொண்டார். இதற்கு முன்னர், சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து 82 வெற்றிகளை ஈட்டியிருந்த சுசாகி, டோக்கியோ ஒலிம்பிக்கில் எந்த ஆட்டத்திலும் எதிராளிக்கு ஒரு புள்ளியைக்கூட விட்டுக்கொடுக்கவில்லை. வென்றால் தங்கம் தான் என்று கூறும் வகையில் சர்வதேசப் போட்டிகளில் 13 தங்கப் பதக்கங்கள் வென்றவர். அத்தகைய வீராங்கனையை வினேஷ் வென்றது ஒலிம்பிக் போட்டிகளில் மிகப் பெரிய வரலாற்றுச் சாதனையாக கருதப்படுகிறது.
  • ஆனால், என்ன ஒரு துரதிருஷ்டம்! ஜப்பான் வீராங்கனைக்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் சுற்றின்போது அவரது எடை 49.90 கிலோவாக இருந்துள்ளது. ஆனால், அரை இறுதிச் சுற்றில் கியூபாவின் கஸ்மேனை வீழ்த்திய பிறகு அவரது எடை 52.7 கிலோவாக அதிகரித்து இருந்தது.
  • அவரது உடல் எடையை 50 கிலோவுக்குள் கொண்டு வர அந்த இரவில் என்னவெல்லாமோ செய்து பார்த்தனர். இரவு உணவு அருந்த வில்லை. தண்ணீரும் கிடையாது. இரவு முழுவதும் கடுமையான உடற்பயிற்சி. செயற்கையாக குமட்டல் வரவைத்து வாந்தி எடுத்தும் கூட புதன்கிழமை காலையில் எடை பார்த்தபோது 50.1 கிலோ இருந்துள்ளது. வெறும் 100 கிராம் கூடுதலாக இருந்ததால் இறுதிச் சுற்றில் பங்கேற்க முடியாது என சர்வதேச மல்யுத்த சம்மேளனம் அறிவித்த போது வினேஷ் உறைந்து போனார். மாலையில்தான் போட்டி என்ற நிலையில், தனக்கு மேலும் அவகாசம் அளிக்குமாறு அவர் மன்றாடினார். ஆனால், விதிகளைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள் மறுத்தபோது நொறுங்கிப்போனார். தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான மத்தியஸ்த நீதிமன்றத்தில் வினேஷ் முறையிட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது என்பது புதிதொன்றுமல்ல. 1904-ஆம் ஆண்டில் இருந்தே கடந்த 120 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கானோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் ஊக்க மருந்து எடுத்துக் கொண்ட காரணத்துக்காகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற நிலையில் எடை அதிகம் என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் வீரர் அல்லது வீராங்கனை இவர்.
  • உடல் எடை காரணமாக வினேஷ் வெளியேற்றப்படுவதும் இது முதன்முறையல்ல. இதற்கு முன்பு பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நக ரில் 2016-இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். அதற்கான தகுதிப் போட்டி மங்கோலியாவில் நடைபெற்றபோது 400 கிராம் கூடுதலாக இருந்ததால் எச்சரித்து, வெளியேற்றப்பட்டார். பின்னர் துருக்கியில் நடைபெற்ற தகுதிப் போட்டியில் பங்கேற்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
  • உடல் எடை அதிகரிப்பு என்பது அவர் அறியாததல்ல. 48 கிலோ முதல் 53 கிலோ வரை பல பிரிவுகளில் அவர் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். உலகக் கோப்பை உள்பட மற்ற அனைத்து சர்வதேசப் போட்டிகளிலும் 2 கிலோ வரை விதிவிலக்கு அளிக்கின்றனர். ஆனால், ஒலிம்பிக் போட்டியில் எடை தொடர்பான விதிமுறை மிக கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • வினேஷ் போகாட் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன், அவருக்கு எதிரான சதி என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து களை உலவ விட்டுள்ளனர். மல்யுத்த வீராங்கனைகளை இந்திய மல் யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் பாலியல் ரீதியாகப் பல ஆண்டுகள் துன்புறுத்தினார் என குற்றஞ்சாட்டி மல்யுத்த வீரர்கள் புது தில்லியின் வீதிகளில் கடந்த ஆண்டு நடத்திய போராட்டத்தின்போது வினேஷ் போகாட் முன்னணியில் இருந்தார்.
  • இந்தப் போராட்டத்தையும் தகுதி நீக்கத்தையும் முடிச்சுப்போட்டனர். அரசியல் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. முழு நாடும் வினேஷுக்குப் பின்னால் இருக்க வேண்டிய தருணத்தில், நமக்குள் சண்டையிட்டால் உலகம் எள்ளி நகையாடும் என்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், மத்தியில் ஆளுங்கட்சியை மடக்கத் தகுந்த தருணம் என்று எண்ணி, நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதம் நடத்தக்கோரி அமளியில் ஈடுபட்டவர்களை என்னவென்று சொல்வது!
  • தகுதி நீக்கம் செய்யப்பட்ட விரக்தியில் மல்யுத்த களத்தில் இருந்து விடைபெறுவதாக வினேஷ் அறிவித்திருக்கிறார். அவரது வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. கடந்த காலத்தில் பல நேரங்களில் காயங்களில் இருந்து மீண்டு வந்து சாதித்திருக்கிறார். காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஒரு தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் 2 வெண்கலம் என 15 பதக்கங்கள் வென்றிருக்கிறார். 3 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றபோதும் ஒலிம்பிக் பதக்கம் என்பது அவருக்கு கனவாகவே இருந்துவருகிறது.
  • இந்தச் சோதனையிலிருந்து மீண்டு, தனது ஓய்வு முடிவை மாற்றிகொண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 2028-ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண் டும் என்பதே ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பாகும்!

நன்றி: தினமணி (10 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்