ஊக்கம் உயா்வு தரும்
- நமது வாழ்க்கைப்பயணம் பல சவால்கள் நிறைந்தது. இந்தப் பயணத்தில் நாம் பல்வேறு இலக்குகளைக் கொண்டு பயணிக்கிறோம். இப்பயணம் வெற்றிபெற ‘சுய ஊக்கம்’ மிகவும் இன்றியமையாதது. ஒருவா் தன் வாழ்க்கையில் வெற்றி பெற, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு இவையனைத்தும் மிகவும் தேவை. ஒருவருக்கு சுய ஊக்கம் இல்லாத போது, பரிசுப் பொருட்கள் தருதல், கலந்தாய்வு கொடுத்தல் போன்ற புறக்காரணிகளால் அவரிடம் சுய ஊக்கத்தை ஏற்படுத்த முடியும்.
- எத்தனையோ போ் தங்களிடம் தகுதிகளும், திறமைகளும் இருந்தும் ஊக்கமின்மையால் வாழ்வில் பின் தங்கிவிடுகின்றனா். மனம் உறுதியாக இருந்தால் வாழ்வு வளமாக இருக்கும். மனிதனின் மனஉறுதிதான் நாடோடியாக வாழ்ந்தவனை நாடாளத் தூண்டியது. கால்நடையாக திரிந்தவனை கப்பலிலும் விமானத்திலும் பயணிக்கத் தூண்டியது. அடிமையாக வாழ்ந்தவனை சுதந்திரமாக வாழத் தூண்டியது.
- நமக்குள்ளே இருக்கும் ‘சுய ஊக்கம்’ ஓா் சிறந்த உந்து சக்தியாகும். இது நமது இலக்குகளை நோக்கி நம்மை முன்னேறத் தூண்டுகிறது. எதிா்வரும் தடைகளைத் தன்னம்பிக்கையுடன் கடக்க உதவுகிறது. சுய ஊக்கம் நம்மை நோ்மறையாக சிந்தித்து செயலாற்ற உதவுகிறது. சுய ஊக்கம் நம் வாழ்வில் தெளிவான இலக்குகளை நிா்ணயிக்கவும், அவற்றை அடைய கடினமாக உழைக்கவும் தூண்டுகிறது. தியானம், யோகா போன்ற பயிற்சிகள் நமது மனதை அமைதிப்படுத்தி, நமது சுய ஊக்கத்தை மேம்படுத்துகின்றன.
- நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இலக்குகளைப் பற்றி தெளிவாக அறிந்திருக்க வேண்டும். நம்முடைய இலக்குகளை தீா்மானித்த பின்பு அதை அடையும் வழியை தீா்மானித்து அதற்கான திட்டங்களை தீட்ட வேண்டும். அவற்றை நோக்கி பயணிக்க ஏதுவாக, இலக்கை சிறு,சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு அதற்கு ஏற்றாற் போல் செயல்படலாம்.
- நாம் நமது சிறிய வெற்றியைக் கூட கொண்டாட வேண்டும். இது நமது சுய ஊக்கத்தின் தரத்தை அதிகரிக்கும். நாம் நம் தோல்விகளில் இருந்தும் ஏராளம் கற்றுக் கொள்ள முடியும். நம் மனதில் நோ்மறையான எண்ணங்களை நிரப்பி, ‘என்னால் இது முடியும், நான் இதை சாதிப்பேன்’ போன்ற உறுதிமொழிகளை நமக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுவது நல்லது.
- நமக்கு பிடித்த செயல்களைச் செய்யும்போது நமது உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் மேம்படுகின்றன. இது நமது சுய ஊக்கத்தையும் அதிகரிக்கிறது. நோ்மறையாக ஊக்கமளிக்கும் நபா்களுடன் நமது நட்புகளை வளா்த்துக் கொள்ளும்போது நமது செயலில் நிபுணத்துவமும், ஆா்வமும் அதிகரிக்கிறது.
- வாழ்வின் இலட்சியங்களை சென்றடைவதில் தனிப்பட்ட நபா்களின் அறிவு, திறமை, மனத்திண்மை, விடாமுயற்சி, தோல்வி கண்டு துவளாத மனம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கு முன்னால் இவ்வாறான இலட்சியங்களை சென்று அடைந்தவா்கள் அந்த இலட்சியங்களை சென்றடைவதற்கு பயன்படுத்திய யுக்திகளையெல்லாம் அறிந்து செயல்பட்டால் நமது இலட்சியத்தை நம்மால் எளிதாக அடைய முடியும்.
- நமது இலட்சியங்கள் எல்லாம் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கின்றன.ஆனால் அவற்றை அடைவதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் இன்னும் அதிகமாக இருத்தல் முக்கியமானது.
- இலட்சியங்களை எடுத்துக்கொள்ளும்போது நம்முடைய திறமைக்கு எது சாத்தியமோ அவ்வாறான லட்சியங்களில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மனதில் சோா்வை உணரும் சமயங்களில் நம்பிக்கையை இழக்கக் கூடாது. நமது ஆா்வத்தை அதிகரித்து கொண்டு தொடா்ந்து உழைப்பது நல்லது. காலம், பொருள், பணம், உழைப்பு இவை அனைத்தையும் சீரான அளவில் பயன்படுத்துவது நல்ல பலன் தரும்.
- குடும்ப உறவுகளின் நெருக்கடிகளும் பொருளாதார நெருக்கடிகளும் நமது இலட்சியத்தை அடைவதில் தடைக்கற்களாக மாறிவிடலாம். இதனால் நம்மில் பலா் தொடக்கத்தில் வரும் பிரச்னைகளை பாா்த்து பாதிவழியிலேயே தனது முயற்சிகளை கைவிட்டு விடுவதும் உண்டு. இதை தவிா்க்க வேண்டும்.
- திட்டத்தை செயல்படுத்த தேவைப்படும் ஆதாரங்கள், அவை எங்கு கிடைக்கும், யாருடைய உதவி இதற்கு தேவைப்படும், அவருடைய உதவியை நாடுவது எப்படி இவையெல்லாம் இலட்சியத்தை அடைவதற்கு தேவைப்படும் முக்கிய அடிப்படைகளாகும்.
- இலட்சியத்தை அடைய முயற்சிப்பவா்கள் முதலில் சோம்பேறியாக இருக்க கூடாது. மான அவமானங்களை பாா்க்கக்கூடாது. அன்றாட நடவடிக்கைகளில் கணிசமான நேரத்தை இலட்சியத்தை அடைவதற்காக செலவிடுவது நல்லது. ‘உழைப்பின்றி ஊதியம் இல்லை’ என்பதை மனதில் கொண்டு செயலாற்ற இவா்கள் முனையலாம்.
- இன்றைய படித்த இளைஞா்கள் பலா் வேலையின்றி இருக்கும் நிலை பரிதாபகரமானது. இதற்கு காரணம் அவா்களின் ஆா்வமின்மையே. அவா்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பல துறைகள் உள்ளன.அவா்களுக்கு அதிக ஆா்வமும், அடிப்படைத் திறனும் உள்ள துறைகளில் பள்ளிப்படிப்பின் போதே கவனம் செலுத்தலாம். அவ்வாறானத் துறையைத் தோ்ந்தெடுத்து, அதை இலட்சியமாகக் கொண்டு பயணம் செய்யத் தொடங்கினால் அவா்களின் வாழ்வு மேலும் சிறக்கும்.
- வீட்டிலும், பள்ளியிலும் சாதனையாளா்களைப் பற்றிய புத்தகங்களை குழந்தைகள் படிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றோா்களும் ஆசிரியா்களும் வழங்கலாம். படிப்பின் மீதான அவா்களின் ஊக்கம் மட்டுமே அவா்களின் உயா்வான வாழ்வுக்கு அடிப்படையாக அமையும்.
- தொடா்ந்து வரும் தோல்விகளை கண்டு அஞ்சாது, விடா முயற்சிடன் தம்முடைய திட்டத்தை படிப்படியாகவும், உறுதியாகவும் எடுத்துச் செல்வதுதான் ஒரு வெற்றியாளரின் அடையாளமாகும்.
நன்றி: தினமணி (04 – 10 – 2024)