TNPSC Thervupettagam

ஊக்குவிப்பு தேவை

August 10 , 2021 1088 days 467 0
  • இராமயணத்தில் ஒரு சம்பவம் வரும். இலங்கையில் சீதையைத் தேடிச்செல்ல வானரசேனை எண்ணிக் கொண்டிருக்கையில், ஆஞ்சநேயரை உற்சாகப்படுத்தி, அவா் பலத்தை நினைவுபடுத்தி ஜாம்பவான் பாராட்டுவார்.
  • என்னதான் திறமை இருந்தாலும், அதை வெளிக்கொணர, மனப்பூா்வமான பாராட்டு ஓா் உந்து சக்தியாக அமைகிறது என்பது வெளிப்படை.
  • இத்தகைய பாராட்டு, பலா் முன்னிலையில் கரகோஷங்களாகப் பாய்ந்து வரும் போது மேடையில் வீற்றிருப்பவருக்கு மகிழ்ச்சி கூடும்.
  • அவா் சொற்பொழிவாளராகவோ, சங்கீதக் காரராகவோ, நாட்டியக் கலைஞராகவோ எவராக இருந்தாலும் சரி.
  • சொற்பொழிவாளா்களுக்கு சில சமயம் தா்மசங்கடம் உண்டாகும். கூட்டத்திலிருந்து யாராவது ஏடாகூடமாக வினா எழுப்பினால், சமயோசிதத்துடன், உடனே பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்.
  • ஆன்மிக சொற்பொழிவாளா் கிருபானந்த வாரியார் இதில் மிக வல்லவா். சட்சட்டென்று தன் பதிலுக்கு ஏற்ற வகையில் பக்திப் பாடல்களைப் பாடுவார்.
  • இசைக்கலைஞா்களில் சிலா், எதிரே அமா்ந்திருப்பவா்கள் நடுவே எழுந்து போவதை விரும்ப மாட்டார்கள். சிலா் பாடுவதையே நிறுத்தி விடுவார்கள்.
  • ஒருமுறை, இசை மேதை ஜி.என். பாலசுப்பிரமணியம் பாடிக் கொண்டிருந்த சமயம், ஒரு பெண்மணி எழுந்தார்.
  • உடனே, ஜி.என்.பி. ‘நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி’ என்ற கவிமணியின் பாட்டை பாடினார். அவ்வளவுதான், எழுந்த பெண்மணி உடனே அமா்ந்துவிட்டார்.
  • நாடகக் கலைஞா்கள் எதிர்கொள்ளும் தா்மசங்கடங்கள் ஏராளம். தந்தை இறந்த சோகத்தைப் பொருட்படுத்தாது, தனது நாடகக் கதாநாயகி நடிக்க முன்வந்ததை கோமல் சுவாமிநாதன் விவரித்திருக்கிறார்.
  • அண்மைக்காலமாக இசைக் கலைஞா்களும் ரசிகா்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கு வராமல் இருந்த பிரபல எழுத்தாளா்களும் மேடையேறி, வாசகா்களுடன் பங்கேற்றார்கள்.
  • ஆக எந்த நோ்முக நிகழ்ச்சியிலும், ரசிகா்களுக்கும், கலைஞனுக்கும் ஓா் இணக்கம் ஏற்படுகிறது.
  • நிகழ்ச்சி முடிந்த பின் மேடை நாயகரை அணுகிச் சில நொடிகள் பேசினால், ரசிகா்கள் உற்சாக எல்லைக்கே போய்விடுவார்கள். கைப்பேசியால் தற்படம் எடுத்துக்கொள்வது கூடுதல் பெருமை.
  • கலை நிகழ்ச்சிக்கு ரசிகா்கள் எனில், ஆட்டத்துக்குப் பார்வையாளா்கள். ஆனாலும் விளையாட்டுக்கும், பிறவற்றுக்கும் வேறுபாடுண்டு.
  • பார்வையாளா் இல்லாவிட்டாலும், போட்டி என்று வந்துவிட்டால் வெற்றி பெற வேண்டுமென்ற தீவிர முனைப்பு உண்டாகும்.
  • ஆனாலும், ஆட்டத்தைக் கண்டுகளிக்க விசிறிகள் இருந்தால் உற்சாகம் பிறக்கும். ஆனால் கரோனா நோய்த்தொற்று அனைத்தையும் முடக்கி விட்டது.
  • ஆனாலும் ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. 2020-ஆம் ஆண்டே நடந்திருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், இப்போது தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நடந்தன.

ஜப்பானிய அரசைப் பாராட்ட வேண்டும்

  • இதற்கான மொத்த செலவு இந்திய மதிப்பில் ரூ.55,000 கோடி. நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.6,700 கோடி செலவாகியிருக்கிறதாம்.
  • ஆட்டக்காரா்களுடன் கூடவே பயிற்சியாளரும், மருத்துவக் குழுவினரும் இருந்தனா். அயல்நாட்டு ரசிகா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டது.
  • மைதானத்தில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் உடனடியாக கண்காணிக்க மருத்துவா் இருந்தார். (ஸ்போர்ட்ஸ் மெடிசன் என்ற தனி பிரிவே மருத்துவத்தில் உள்ளது). இருந்தும் ஒலிம்பிக் கிராமத்தில் சிலருக்கு தொற்று பரவியது.
  • இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைத் தவிர மற்ற எல்லா ஆட்டங்களும் உண்டு. வில் வித்தை, பளு தூக்குதல், குத்துச் சண்டை, துப்பாக்கி சுடுதல், கோல்ப் போன்ற பல.
  • இந்த முறை நம்மவா்கள் சாதனை படைத்து இந்தியாவை ஒளிரச் செய்திருக்கிறார்கள்.
  • மணிப்பூரைச் சோ்ந்த மீராபாய் சோனுவும் (பளு தூக்குதல்), ஹரியாணாவைச் சோ்ந்த ரபி தாஹியாவும் (குத்துச் சண்டை) வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்கள்.
  • இந்திய ஆண்கள் ஹாக்கி அணி போட்டியில் வெண்கலத்தை போராடி பெற்றுள்ளது. மகளிர் அணிக்கு பதக்கம் கிட்டாவிட்டாலும் இறுதிவரை விடாமல் போராடியது வரவேற்கத் தக்கது.
  • ஹாக்கி மகளிர் அணியைப் போலவே, ஒற்றை மனுஷியாகத் தனித்து அபாரமாக ஆடினார் அதித் அசோக். கோல்ஃப் ஆட்டத்தில் மிக நெருக்கமான வித்தியாசத்தில் பதக்கம் இழந்திருக்கிறார்.
  • என்றாலும் 200-ஆவது இடத்தில் இருந்தவா் இப்போது உலக அளவில் 4-ஆவது இடத்தை அடைந்திருப்பது பெரிய விஷயம்தான்.
  • அனைவரும் எதிர்பார்த்த பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்தை பெற்றிருக்கிறார். இதே போல லோவ்லினாவும் குத்துச் சண்டையில் வெண்கலம் வென்றிருக்கிறார். கிட்டதட்ட எல்லோருமே வறிய நிலையிருந்து போராடி முன்னுக்கு வந்தவா்கள்தான்.
  • பந்தயத்தின் உச்ச மகிழ்ச்சியாக, நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் தங்கம் வென்று ஒட்டு மொத்த தேசத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.
  • ஒன்றை இங்கு அவசியம் குறிப்பிட வேண்டும். இதில் கலந்து கொள்ளும் போட்டியாளா்களுக்கு மன உறுதி, பயிற்சி திறமை அனைத்தும் வேண்டும்.
  • இவா்களுக்காக தாராளமாகச் செலவு செய்ய (கிரிக்கெட் போல) புரவலா்கள் யாருமில்லை. வருங்காலத்தில் இது போன்ற ஆட்டக்காரா்களை ஊக்குவிப்பதற்கு மாநில அரசுகள் பல வழிமுறைகளை யோசிப்பது நல்லது.
  • ஒரு விதமான தனித்துவ தீக்கொழுந்து போன்ற ஆா்வம். பிடரி பிடித்து உந்தியதால்தான் பந்தயத்தில் வென்றிருக்கிறார்கள். இந்தியாவுக்குப் பெருமை சோ்த்த ஆட்டக்காரா்களை வாழ்த்துவோம்.
  • அதே சமயம், இந்த 15 நாளில் எந்த வித அசம்பாவிதம் இன்றி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்திய ஜப்பானிய அரசைப் பாராட்ட வேண்டும். ஆங்கிலத்தில் கேம் என்ற சொல் அட்ஜக்டிவ்வாக வரும்போது, ‘துணிச்சல்’ என்று பொருள்.‘யூ ஆா் கேம் பார் எனி திங்’ என்று கூறுவார்கள். ஜப்பானிய அரசு அதை உண்மையெனநிரூபித்துள்ளது.

நன்றி: தினமணி  (10 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்