- ஊடகங்களுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவுகள், கருத்துரிமைக்கு மட்டுமின்றி தகவல்களைப் பெறுவதற்கான குடிமக்களின் உரிமைக்கும் தீங்கான பின்விளைவுகளை உண்டாக்கக் கூடும் என்று அடிக்கடி பேசப்பட்டுவருகிறது.
- வெவ்வேறு நீதிமன்றங்களால் அளிக்கப்பட்ட உத்தரவுகள், குறிப்பிட்ட சில வழக்குகளைப் பற்றிய செய்திகளை அல்லது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது என்று ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதைப் பற்றி மக்களின் கவனம் திரும்பியுள்ளது.
- இது, முன்கூட்டியே செய்திகளைக் கட்டுப்படுத்துவது, ஊடகங்களின் சுதந்திரம் மற்றும் நேர்மையான ஒரு விசாரணையை எதிர்கொள்வதற்கான மக்களின் உரிமை ஆகியவை தொடர்பிலும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
- முன்னாள் அட்வகேட் ஜெனரல் மற்றும் சிலருக்கு எதிராகக் காவல் துறையால் அளிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிடக் கூடாது, சமூக ஊடகங்களிலும்கூட செய்திகள் வெளிவரக் கூடாது என்று ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது வழக்கத்துக்கு மாறானது என்பதோடு, அது சட்டப்படி செல்லுபடியாகும் தன்மை கொண்ட உத்தரவுதானா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
- இத்தகைய வழக்கு ‘புனையப்பட்ட ஒன்று’ என்று மனுதாரரால், குற்றஞ்சாட்டப்பட்டாலொழிய அவ்வாறு முன்கூட்டியே தணிக்கை செய்வதை நியாயப்படுத்துவதற்கு எதுவுமில்லை.
- கடந்த ஆட்சிக் காலத்தில் அட்வகேட் ஜெனரலாகப் பதவி வகித்த ஒருவர் அரசியல் பழிவாங்கும் நோக்கில் தற்போதைய ஆட்சியாளர்களால் தம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகச் சொல்லும்போது, ஊடகங்கள் அதைச் செய்தியாக்குவதும் பொதுமக்கள் அதை விவாதிப்பதும் இயல்பானது.
- செய்திகளிலிருந்து மறைந்திருப்பதன் காரணமாக அந்த மனுதாரர் என்ன பயனடையப்போகிறார் என்பது தொடர்பில் எந்தத் தெளிவும் இல்லை.
- மேலும், அந்தக் குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை என்னும்பட்சத்தில் அது தொடர்பில் சட்டரீதியாகக் கருத்து தெரிவிப்பதற்கும் இந்த உத்தரவு தடை விதிக்கிறது.
- வெளியீடுகளுக்கு எதிரான தடையுத்தரவு என்பது அவதூறாகக் கூடிய ஒன்றைத் தவிர்ப்பதற்காகவோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்க விவகாரத்துக்குள் மற்றவர்களின் தலையீட்டைத் தடுப்பதற்காகவோ அல்லது நேர்மையான முறையில் நீதிமன்ற வழக்கு விசாரணை அல்லது காவல் துறை விசாரணை நடப்பதை உறுதிப்படுத்துவதற்காகவோ அளிக்கப்படலாம்.
- ‘சஹாரா எதிர் செபி’ (2012) வழக்கில், நேர்மையான நீதி விசாரணையையும் பத்திரிகைச் சுதந்திரத்தையும் பாதிக்காத வகையில் அத்தகைய தடையுத்தரவுகளை வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- எனினும், நீதி நிர்வாகம் அல்லது நேர்மையான விசாரணையை முன்னிட்டு ‘முன்முடிவுகளுக்கு உறுதியாக வாய்ப்புள்ள வழக்குகளில் மட்டுமே’ வெளியீடுகளைத் தடுத்துவைக்கும் அத்தகைய இடைக்கால உத்தரவு இடப்பட வேண்டும் என்று கூறியது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
- பொதுவாக, செய்தி வெளியீடுகளுக்கு எதிரான தொடர் தடையுத்தரவுகளை நீதிமன்றங்கள் தவிர்ப்பதே சரியானது. அத்தகைய உத்தரவுகள், தகவல்களைப் பெறுவதற்கான உரிமைகளுக்குத் தீங்கிழைப்பதாகவும் அடிக்கடி அமைந்துவிடுகின்றன.
நன்றி: தி இந்து (18-09-2020)