TNPSC Thervupettagam

ஊடகச் சுதந்திரம்: உண்மைக்கு முகங்கொடுத்தாக வேண்டும்

April 1 , 2023 485 days 263 0
  • காஷ்மீரில் ஊடகச் சுதந்திரத்தின் நிலை குறித்து ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழில் சமீபத்தில் வெளியான கட்டுரை இந்தியாவில் சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
  • இந்தியா பற்றியும், ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி குறித்தும் சில வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்ந்து பொய்களைப் பரப்புகின்றன’ என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றம்சாட்டியிருக்கிறார். அவரது பேச்சு, இந்தியாவில் ஊடகங்களின் நிலை குறித்த கவனத்தை மீண்டும் எழுப்பியிருக்கிறது.
  • 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஊடகம் அண்மையில் வெளியிட்ட ஆவணப்படம், இந்தியாவில் தடை செய்யப்பட்டது சர்வதேச அளவில் சர்ச்சையானது. ‘மேற்கத்திய ஊடகங்கள் இந்தியாவுக்கு எதிராகச் சதிசெய்கின்றன’ என பாஜக அரசுக்கு ஆதரவானவர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பும் எழுந்தது. இப்போது அந்தப் பட்டியலில் ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ சேர்க்கப்பட்டிருக்கிறது.
  • உலக அளவில், பத்திரிகையாளர்கள் கொல்லப்படும் சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டனையின்றித் தப்பிவிடுவது தொடர்பாக ஆண்டுதோறும் வெளியிடப்படும் பட்டியலில் (Global Impunity Index), 2022ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்தியா 11ஆவது இடத்தில் இருக்கிறது.
  • ஜனநாயகமே இல்லாத நாடு என விமர்சிக்கப்படும் பாகிஸ்தான் 10ஆவது இடத்தில் இருக்கிறது. அதேபோல், ஊடகச் சுதந்திரத்தின் நிலை குறித்து ‘எல்லையற்ற ஊடகவியலாளர்கள்’ (Reporters without border) அமைப்பு வெளியிடும் பட்டியலிலும் இந்தியாவின் நிலை கவலைக்குரியதாகவே இருக்கிறது.
  • 180 நாடுகள் பட்டியலிடப்படும் அந்த அறிக்கையில், 2022ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவின் இடம் 150; 2020, 2021ஆம் ஆண்டுகளில் 142ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. போருக்கு எதிரான குரல்களை முடக்குகின்ற ரஷ்யா இப்பட்டியலில் 155ஆவது இடத்தில்தான் இருக்கிறது. ஊடகங்கள் மீதான அடக்குமுறைகள் நம்பகமான செய்திகள் வெளியாவதைக் குறைத்துவிடும்; அரசுக்கு ஆதரவான செய்திகளே அதிகம் வெளியாகும்.
  • இதன் மூலம் ஜனநாயகத்தின் இயங்குமுறையில் நேரடிப் பாதிப்புகள் நிகழும். மேலும் இப்படியான விமர்சனங்கள் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைப்பதை நோக்கமாகக் கொண்டவை என முன்முடிவு எடுத்துவிட்டால், ஆக்கபூர்வமாக எந்த மாற்றமும் நிகழாது. இதுபோன்ற சுட்டிக்காட்டல்கள் இந்தியாவை மட்டுமே குறிவைப்பவை அல்ல. கருத்துரிமைக்குப் பெயர் பெற்ற ஐரோப்பிய நாடுகளில் நிகழும் அடக்குமுறைகள் குறித்தும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழத்தான் செய்கின்றன.
  • அதேசமயம், இந்தியாவின் நிலைத்தன்மையையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைக்கும் வகையில், பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் என்கிற பெயரில் திட்டமிட்டுப் பொய்ச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புவோர் விஷயத்திலும் அரசு எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டி இருக்கிறது. உலக அரங்கில் இந்தியா முன்னேறிவரும் நிலையில், எங்கிருந்து எத்தகைய சக்திகள் ‘ஊடகம்’ என்கிற பெயரில் புகுந்து நமது நிம்மதியைக் குலைக்க முயலும் என்பதைச் சொல்ல முடியாது.
  • அந்த விஷயத்தில் அரசு மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஆனால், உண்மையான ஊடகங்களையும் இவர்களையும் போட்டுக் குழப்பிக்கொண்டு ஊடகச் சுதந்திரத்தைப் பறிப்பது இந்தியாவின் பெருமையையே சீர்குலைக்கும் செயலாக மாறிவிடும்.

நன்றி: தி இந்து (02 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்