TNPSC Thervupettagam

ஊடகமும் சுதந்திரமும்

April 17 , 2023 447 days 252 0
  • 'மீடியா ஒன்' தொலைக்காட்சிச் சேனலில் உரிமம் புதுப்பிக்கப்படாதது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவராலும் வரவேற்கப்படும். ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களும், ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் குறித்த விவாதங்களும் ஜனநாயகத்தின் அஸ்திவாரம் என்பதை இதுபோன்ற தீர்ப்புகளின் வழியே, நமது ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டியிருக்கிறது.
  • 2021-இல் சமாதானத்துக்கு நோபல் விருது பெற்ற பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரான மரியா ரெசா, விருது பெற்றபோது கூறிய வார்த்தைகள் மறக்கக்கூடியவை அல்ல. "பிலிப்பின்ஸ் மக்களின் ஒவ்வொரு உரிமையின் அடித்தளமும் ஊடக சுதந்திரம்தான். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்க முடியாது என்றால், அதற்குப் பிறகு வேறு எதுவும் சொல்வதற்கில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களைக் கேள்வி கேட்பது என்பது உண்மையைத் தெரிந்து கொள்ளும் குடிமக்களின் அடிப்படை உரிமை' என்றார் மரியா ரெசா.
  • "எல்லைகள் இல்லாத ஊடகவியலாளர்கள்' (ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்) என்கிற சர்வதேச அமைப்பு, உலக நாடுகளில் கருத்து சுதந்திரம் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்த ஆய்வு அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதன்படி, கடந்த ஆண்டில் மதிப்பீடு செய்த 180 நாடுகளில், ஊடக சுதந்திரக் குறியீட்டில் பிலிப்பின்ஸ் 147-ஆவது இடத்தில் இருக்கிறது. அதில் இந்தியா 150-ஆவது இடத்தில், அதைவிட மூன்று இடங்கள் கீழே இருக்கிறது.
  • உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூன்று விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது. அரசுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்துவதற்காக ஊடகங்களுக்குத் தடை விதிக்க முடியாது என்பது முதலாவது. "தேசிய பாதுகாப்பு' என்கிற பெயரில் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைத் தகுந்த ஆதாரமில்லாமல் தடை செய்ய முடியாது என்பது இரண்டாவது. மூடப்பட்ட உரைகளில் அரசின் கருத்துகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது என்பது, அது குறித்த விவரங்கள் எதிர்த்தரப்புக்கு மறுக்கப்படுவதால், நியாயமான விசாரணையல்ல என்பது மூன்றாவது.
  • "ஜனநாயகக் குடியரசு முறையாக செயல்பட ஊடக சுதந்திரம் என்பது அத்தியாவசியம். ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை அவை வெளிச்சம் போடுகின்றன. உண்மையை வெளிக்கொணர்வதும், தவறுகளை பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவருவதும் ஊடகங்களின் கடமையாகும். ஜனநாயகத்திற்கு சரியான வழிகாட்டுதலை வழங்க ஊடகங்கள்தான் பொதுமக்களை ஊக்குவிக்கின்றன' என்பதுதான் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்திருக்கும் கருத்து.
  • "ஊடகங்களுக்கு நியாயமற்ற விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதிப்பதன் மூலம், தங்களது விருப்பத்துக்கு ஏற்றவாறு மக்களைச் சிந்திக்க வைக்க அரசு முயல்கிறது' என்று தங்களது தீர்ப்பில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.வை. சந்திரசூடும், நீதிபதி ஹிமா கோலியும் அடங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வு கூறுகிறது. அரசின் கொள்கைகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் ஊடகங்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள், அரசமைப்புக்கு விரோதமானதல்ல என்றும் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
  • ஊடக சுதந்திரம் குறித்த விவாதம் சமீபகாலமாக நாடு தழுவிய அளவில் அதிகரித்திருக்கிறது. அரசியல் கட்சிகளின் சார்பு நிலை இல்லாமல் அச்சு ஊடகங்கள் செயல்பட முடியாது என்கிற நிலைமை கடந்த பல ஆண்டுகளாகவே ஏற்பட்டிருக்கிறது. அதிகரித்துவிட்ட "நியூஸ் பிரிண்ட்' (அச்சுக் காகிதம்) விலையால் பாதிக்கப்பட்டிருக்கும் அச்சு ஊடகங்கள், மத்திய - மாநில அரசுகளின் விளம்பரங்களை நம்பித்தான் இயங்க முடியும் என்கிற சூழல் நிலவுகிறது.
  • ஒரு கோப்பைத் தேநீர் ரூ. 15 என்றால், தினசரிகளின் விலை ஒற்றை இலக்கத்தில் தொடரும் நிலைமை. அதிகரித்த விற்பனை, அதிகரித்த இழப்பு என்பதால், ஆளும் கட்சிகளை ஆதரித்து அரசு விளம்பரங்களைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன அச்சு ஊடகங்கள்.
  • காட்சி ஊடகங்கள் பெரும்பாலும், அரசியல் கட்சிகள் நடத்துவதாகவோ, அரசியல்வாதிகள் சார்ந்ததாகவோதான் இருக்கின்றன. கட்சி சார்பான ஊடகங்கள்தான் செயல்பட முடியும் என்கிற நிலையில், ஆளும் கட்சிக்கு எதிரான ஊடகங்களை சுதந்திரமாக செயல்படும் ஊடகங்களாகக் கருதாமல், எதிர்க்கட்சி சார்ந்த ஊடகமாக ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகள் கருதுகின்றன. இதுதான் பிரச்னைக்கு அடிப்படை. அதை நீதிபதிகள் ஏனோ சுட்டிக்காட்டவில்லை.
  • கட்டுப்பாடற்ற சுதந்திரம், அரசியல் சாசனத்தால் வழங்கப்படவில்லை. சமூக அமைதிக்கும், பொது ஒழுங்குக்கும் பாதகம் ஏற்படுத்தும் கருத்துச் சுதந்திரத்திற்குப் பல கட்டுப்பாடுகளை அரசியல் சாசனம் விதிக்கிறது. தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, ஒழுக்கம் உள்ளிட்டவற்றுக்கு எதிரானவையும் நீதிமன்ற அவமதிப்பு, வன்முறையைத் தூண்டுதல் போன்றவையும் அரசியல் சாசனப் பிரிவு 19 (2)-ஆல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் நீதிமன்றத் தீர்ப்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுகிறது.
  • ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்புடனான தொடர்பை சுட்டிக்காட்டி "மீடியா ஒன்' மலையாள தொலைக்காட்சிச் சேனலின் உரிமம் புதுப்பிக்கப்படாததை நிராகரித்து தங்களது 134 பக்கத் தீர்ப்பில் ஊடக சுதந்திரம் குறித்த பல கருத்துகளை நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றன. ஊடக சுதந்திரம் ஜனநாயகத்தின் அஸ்திவாரம் என்பதை மறுப்பதற்கில்லை. இந்திய ஜனநாயகத்தின் போக்கு சரியானதாக இருக்க சார்புநிலை இல்லாத ஊடகங்கள் அவசியம். அது சாத்தியமில்லை எனும்போது ஊடக சுதந்திரமும் சாத்தியமில்லை!

நன்றி: தினமணி (17 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்