ஊடுருவலை ஏற்பதற்கில்லை!
- வங்கதேசத்தில் நிலவும் சூழல் இந்தியாவுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாட்டைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. எனினும், அங்கு இன்னும் இயல்பு நிலை முழுமையாகத் திரும்பாததால் பொதுமக்கள் பலர் அங்கிருந்து வெளியேறி அடைக்கலமாக இந்தியாவுக்கு வருவது தொடர்கிறது.
- இது இரண்டு விதங்களில் இந்தியாவுக்குப் பிரச்னையாகி உள்ளது. சட்டவிரோத ஊடுருவல் ஒரு பக்கம் என்றால், பயங்கரவாதிகளும் நுழைவது பாதுகாப்பு ரீதியாக பிரச்னையை ஏற்படுத்துகிறது.
- ஷேக் ஹசீனா ஆட்சியில் இந்தியாவுக்கு போட்டியாக வங்கதேசத்தில் ஜவுளித் தொழில் வளர்ச்சி கண்டது. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை தொடர்ந்து வங்கதேசத்தில் பல ஜவுளித் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இப்போதைய சூழல் நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது. இதனால் வேலைவாய்ப்புத் தேடி, ஜவுளித் தொழிலில் முன்னணியில் இருக்கும் திருப்பூரை நோக்கி சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் வர வாய்ப்பு உள்ளது என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா எச்சரித்துள்ளார்.
- வங்கதேசத்துடன் 4,096 கி.மீ. எல்லையை இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது. வங்கதேசத்தில் போராட்டம் தொடங்கியபோதே உஷாரான எல்லை பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர். அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் வழியாக நுழைய முயன்ற நூற்றுக்கணக்கானோர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
- எனினும், மிக நீண்ட எல்லை என்பதால் வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வருபவர்களை முழுமையாகத் தடுப்பது என்பது சாத்தியமல்ல. மேற்கு வங்கம், அஸ்ஸாம், திரிபுரா வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வருபவர்கள், இங்குள்ள இடைத்தரகர்கள் மூலம் ஆதார் அட்டையை போலியாகப் பெற்று இந்திய குடிமக்கள் ஆகிவிடுகின்றனர்.
- இந்திய சுதந்திரத்துக்குப் பின்னரும், 1971 வங்கதேச சுதந்திரப் போராட்டத்தின்போதும் வங்கதேசத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக நுழைந்ததன் காரணமாக மக்கள்தொகை விகிதாசாரமே மாற்றம் கண்டதால், அஸ்ஸாம் மாநிலத்தில் 1980-களில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது கவனத்தில் கொள்ளத்தக்கது. 1979 முதல் 1985 வரை நடைபெற்ற போராட்டத்தில் 855 அஸ்ஸாமியர்கள் தங்கள் இன்னுயிரை இழக்க நேரிட்டது.
- சட்டபூர்வமாக குடியேறினால் கண்காணிப்பு இருக்கும். சட்டவிரோதமாக குடியேறி உள்ளூர் மக்களுடன் கலந்துவிட்டால் கண்காணிப்பது கடினம். இது எதிர்காலத்தில் அஸ்ஸாமில் நிகழ்ந்ததுபோன்று பெரும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும்.
- இதுபோன்று வங்கதேசத்தவர்கள் வேலை தேடி சட்டவிரோதமாக வருவது புதிதொன்றுமல்ல. ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சிப்காட்டில் பணிபுரிந்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 9 பேர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலி ஆதார் தவிர பாஸ்போர்ட், விசா போன்ற உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.
- இதேபோன்று திருப்பூரில் கடந்த 2022-இல் 8 பேரும், 2024 மே மாதத்தில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் வங்கதேசத்தவர் 6 பேர் கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இப்போது எல்லை தாண்டி வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால்தான், ஜவுளித் துறையில் வேலைக்கு சேர்ந்தவர்கள் குறித்து சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு அஸ்ஸாம் முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
- 1980-களில் இந்தியாவுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுவினர் வங்கதேசத்தில் இருந்து செயல்பட்டனர். அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த ஷேக் ஹசீனா உதவியதால் இந்தியா அவருக்கு ஆதரவாக இருந்துவந்தது. அதனால்தான் உலகில் எத்தனையோ இஸ்லாமிய நாடுகள் உள்ளபோதும் அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹசீனாவுக்கு இந்தியா கடந்த காலத்தில் அளித்த ஆதரவு காரணமாக அவருக்கு எதிரான போராட்டத்தின்போது, அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு மேலோங்கியது. தலைநகர் டாக்காவில் இந்திய அரசுக்குச் சொந்தமான இந்திரா காந்தி கலாசார மையம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. ஹிந்து கோயில்கள் தகர்க்கப்பட்டன. சிறுபான்மை ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர்.
- ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தின் இடையே, ஷேர்பூர் என்ற இடத்தில் உள்ள சிறையைத் தகர்த்து 500 கைதிகளும், காஸிபூர் என்ற இடத்தில் உள்ள சிறையைத் தகர்த்து 209 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் பலரும் அன்சருல்லாஹ் பங்களா டீம், ஜமாத் உல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். கடந்த 2022-23-ஆம் ஆண்டில் அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இந்த அமைப்புகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- வங்கதேச சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவினால், இந்தியாவின் மேற்கில் பாகிஸ்தான் நிரந்தரமாகத் தொல்லை கொடுத்து வருவதுபோன்று, இவர்கள் இந்தியாவின் கிழக்கில் மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களின் நிரந்தர அமைதியின்மைக்கு காரணமாகி விடுவார்கள். மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து எச்சரித்துள்ளது.
- இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் விழிப்புடன் செயல்படுவது அவசியம். 1971 வங்கதேச விடுதலைப் போரின்போது, பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரின் கடுமையான அணுகுமுறையை நரேந்திர மோடி அரசும் கடைப்பிடிப்பது அவசியம்.
நன்றி: தினமணி (02 – 09 – 2024)