TNPSC Thervupettagam

ஊட்டச்சத்து பாதுகாப்பில் சமரசம் கூடாது

February 10 , 2024 341 days 204 0
  • உடல் வளா்ச்சி, நோய் தடுப்பு, ஆரோக்கியம் ஆகியவற்றைத் தீா்மானிக்கும் உணவு, ஊட்டச்சத்து இன்றியோ அல்லது குறைந்த ஊட்டச்சத்துடனோ இந்திய மக்களால் உண்ணப்படுவதாக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக அறிக்கைக் கூறுகிறது.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், மேற்கு வங்க விவசாய ஆராய்ச்சி நிறுவனமான பிதான் சந்திர கிரிஷி விஸ்வ வித்யாலயா, தெலங்கானா தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆகியவை இணைந்து 2023 நவம்பா் மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியா உணவுப் பாதுகாப்பு அடைய உதவிய பசுமை புரட்சி, உணவு உற்பத்திக்காக ஊட்டச்சத்து பாதுகாப்பை சமரசம் செய்து விட்டதாக கூறுகிறது.
  • அதிக மகசூல் என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட உணவு திட்டங்கள் இந்தியாவின் இரண்டு முக்கிய உணவு தானியங்களான அரிசி, கோதுமையின் ஊட்டச்சத்தில் மாற்றத்தை ஏற்படுத்தின. விளைச்சலை அடிப்படையாக கொண்டு தாவரங்களில் செய்யப்பட்ட மரபியல் மாற்றம் மண்ணிலிருந்து தானியங்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் பணியில் தடை ஏற்படுத்துவதாக வல்லுநா்கள் கூறுகின்றனா்.
  • அதிக மகசூல் தரும் தானிய பயிர் ரகங்களில் துத்தநாகம், இரும்பு ஆகியவற்றின் செறிவு குறைவாக இருப்பதை காட்டுவதற்கு உலகம் முழுவதும் நிகழ்ந்த பல்வேறு ஆய்வுகள் ஆதாரங்களாக உள்ளன என்று சுற்றுச்சூழல் - பரிசோதனை தாவரவியல் என்ற கட்டுரை கூறுகிறது.
  • இந்திய மக்களின் தினசரி ஆற்றல் தேவைகளில் 50 சதவீதத்தை பூா்த்தி செய்யும் அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் கடந்த 50 ஆண்டுகளில் அவற்றின் 45 சதவீத ஊட்டச்சத்தினை இழந்துள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. ஊட்டச்சத்து அளவு குறைவதோடு, நச்சு தனிமங்களின் செறிவு தானியங்களில் அதிகரித்து வருவது வேதனைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.
  • 1960-களில் விளைந்த ஒரு கிலோ நெல்லில் கால்சியம், துத்தநாகம், இரும்பு ஆகியவற்றின் செறிவு, முறையே 337 மில்லிகிராம், 19.9 மில்லிகிராம், 33.6 மில்லிகிராம் என இருந்தன. அதுவே 2000 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஒரு கிலோவிற்கு முறையே 186.3 மில்லிகிராம் (45 சதவிகிதம் வீழ்ச்சி), 13.4 மில்லிகிராம் (33 சதவிகிதம் வீழ்ச்சி), 23.5 மில்லிகிராம் (30 சதவிகிதம் வீழ்ச்சி) எனக் குறைந்தது.
  • 1960-களில் விளைந்த ஒரு கிலோ கோதுமையில் கால்சியம், துத்தநாகம், இரும்பு ஆகியவற்றின் செறிவு முறையே 492.3 மில்லிகிராம், 24.3 மில்லிகிராம், 57.6 மில்லிகிராம் என இருந்தன. அதுவே 2000 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஒரு கிலோவிற்கு முறையே 344.2 மில்லிகிராம் (30 சதவிகிதம் வீழ்ச்சி), 17.6 மில்லிகிராம் (27 சதவிகிதம் வீழ்ச்சி), 46.4 மில்லிகிராம் (19 சதவிகிதம் வீழ்ச்சி) எனக் குறைந்தது.
  • கடந்த 50 ஆண்டுகளில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான துத்தநாகம், இரும்பின் செறிவு அரிசியில் குறைந்துள்ளது. லித்தியம், வெனடியம் செறிவுகளைத் தவிர அரிசியில் உள்ள சிலிக்கான், நிக்கல் வெள்ளி, காலியம் உள்ளிட்ட அனைத்து நன்மை செய்யும் தனிமங்களின் செறிவும் குறைவாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன, ஆனால், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத் தனிமங்களின் செறிவு அதிகரித்துள்ளது. அரிசியில் ஆா்சனிக் என்ற நச்சுத் தனிமத்தின் செறிவு 1,493 சதவீதம் அதிகரித்துள்ளதே இதற்கு சான்று.
  • பாஸ்பரஸ், கால்சியம், சிலிக்கான், வெனடியம் போன்ற ஊட்டச்சத்துகள் எலும்பு உருவாக்கத்திற்கும் துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தி, இனப்பெருக்கம், நரம்பியல் மண்டல வளா்ச்சிக்கும், இரும்பு ஹீமோகுளோபின் உருவாவதற்கும் தேவைப்படும் தனிமங்கள். தானியங்களில் இருக்க வேண்டிய இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்து தனிமங்களின் செறிவுக் குறைவால் நரம்பியல், இனப்பெருக்கம், தசைக்கூட்டு மண்டலங்கள் தொடா்பான நோய்கள் அதிக அளவு ஏற்படக்கூடும் என்றுநேச்சா்இதழில் வெளியான கட்டுரை கூறுகிறது.
  • உணவு வழியாக ஆா்சனிக், குரோமியம், பேரியம், ஸ்ட்ரோண்டியம் போன்ற உலோக நச்சு பொருட்களை உட்கொள்வதால் நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட சுவாச நோய்கள், இருதய நோய்கள், தோல் முள் மிகைப்பு (ஹைபா்கெராடோசிஸ்), சிறுநீரக நச்சுத்தன்மை (ரீனல் டாக்ஸிட்டி), பலவீன எலும்பு கண்ணமேற்றம் (இம்பெயா்ட் போன் கால்சிஃபிகேஷன்) போன்ற நச்சு விளைவுகள் ஏற்படும் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
  • இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அறிக்கை 1990 முதல் 2016 வரையிலான காலத்தில் இந்திய மக்களிடையே தொற்றில்லா நோய்களின் எண்ணிக்கை 25% அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. உலகில் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 200 கோடி மக்களில் மூன்றில் ஒரு பங்கினா் இந்தியாவில் இருப்பதாக மதிப்பீடுகள் காட்டுகின்றன.
  • தானியங்களின் ஊட்டச்சத்து தன்மையை மேம்படுத்த மத்திய அரசால் தொடங்கப்பட்ட உயிரி வலுவூட்டல் (பயோ போர்டிபிகேஷன்) சிறப்புத் திட்டத்தின் கீழ் இந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் நாடு முழுவதும் கடந்த பத்து ஆண்டுகளில் அதிக ஊட்டச்சத்து கொண்ட தானியங்களை வழங்கிய ரகத்தை கண்டறிய மூலவுயிர் (ஜொ்ம்பிளாசம்) ஆய்வை மேற்கொண்டு வருகின்றனா்.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின்கீழ் செயல்படும் நிறுவனங்கள் உயிரி வலுவூட்டல் நுட்பத்தின் மூலம் துத்தநாகம், புரதம் நிறைந்த பத்து வகையான அரிசி ரகங்கள், புரதம், இரும்பு, துத்தநாகம் நிறைந்த நாற்பத்து மூன்று வகையான கோதுமை ரகங்கள் உட்பட வயல்காடுகளுக்கான நூற்று நாற்பத்திரண்டு பயிர்களையும், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவா், திராட்சை, வாழை, மாதுளை உட்பட பதினெட்டு தோட்டக்கலைப் பயிா்களையும் உருவாக்கியுள்ளனா்.
  • இந்த உயிரி வலுவூட்டப்பட்ட பயிர் பட்டியலில் சோளம், தினை, ஆளி விதை, கொண்டைக்கடலை, வெண்டைக்காய், பட்டாணி, உளுந்து, கடுகு, சோயா, நிலக்கடலை, கொய்யா போன்றவையும் அடங்கும்.

நன்றி: தினமணி (10 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்