ஊரக உயர் கல்வியும் ஊரக வளர்ச்சியும்
- உயர் கல்வி என்றாலே நகரங்களை மட்டுமே நாடிச் செல்கின்ற நிலை இன்று சற்று மாறியிருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் ஊரகப் பகுதியின் மக்கள்தொகைக்கு ஏற்ற எண்ணிக்கையில் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இல்லை.
- உயர் கல்வி குறித்த கணக்கெடுப்பின்படி (AISHE, 2021) இந்தியாவில் 1,113 பல்கலைக்கழகங்களும் 43,796 கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் 54.7% பல்கலைக்கழகங்களும் 55.2% கல்லூரிகளும் மட்டுமே ஊரகப் பகுதிகளில் நடத்தப்படுகின்றன. ஆனால் 2011 கணக்கெடுப்பின்படி மக்கள்தொகையில் 69% பேர் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள்.
- இந்திய அளவில் உயர் கல்வி பயின்றோரில் கிராமப்புற மாணவர்கள் 55.2%தான். தமிழ்நாட்டில் 59 பல்கலைக்கழகங்களும், 2,829 கல்லூரிகளும் இருக்கின்றன. இவற்றில் 53.1% பல்கலைக்கழகங்களும் 51.5% கல்லூரிகளும் மட்டுமே கிராமப்புறப் பகுதிகளில் உள்ளன.
- தமிழக அளவில் உயர் கல்வி பயின்றோரில் 51.5% மட்டுமே கிராமப்புற மாணவர்கள். தேசியத் தரமதிப்பீடு (NAAC), தேசியத் தரவரிசை (NIRF) இரண்டிலும் ஊரக உயர் கல்வி நிறுவனங்கள் மிகவும் பின்தங்கியிருக்கின்றன. உயர் கல்வியில் நிலவும் இந்தப் பாகுபாடு வருத்தமளிக்கிறது.
ஊரக மேம்பாடு அவசியம்:
- உயர் கல்வியின் மூன்று தூண்களாகக் கற்றல்-கற்பித்தல், ஆராய்ச்சி-பதிப்பித்தல், விரிவாக்கப் பணிகள் ஆகியவற்றைப் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கிறது. இவை மூன்றும் ஊரக உயர் கல்வி நிறுவனங்களில் நகரங்களைவிட மாறுபட்டதாக இருக்க வேண்டும். ஏனெனில், ஊரக உயர் கல்வியின் நோக்கம் ஊரக மேம்பாடாக இருக்க வேண்டும்.
- நகர்ப்புற மாணவர்களின் பாடத் திட்டமும், ஊரக உயர் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணத்துக்கு, நகரங்களில் கணினிப் பயன்பாட்டியல் பயிலும் மாணவர்கள், பெரும்பாலும் அவர்கள் வேலைவாய்ப்பை நாடிச் செல்கின்ற பன்னாட்டு - பெருவணிக நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்கிற வகையில், அந்நிறுவனங்களின் பங்கேற்போடு உருவாக்கப்பட்ட பாடத்திட்டங்களையே பயில்கின்றனர்.
- ஊரக உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் அதே துறையைச் சேர்ந்த மாணவர்கள், கணினிப் பயன்பாட்டியல் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு, அவற்றை ஊரக வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்னும் நோக்கில் பாடத்திட்டங்கள் அமைய வேண்டும். குறிப்பாக, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்குக் கணினியை எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து சிந்திக்க வேண்டும்.
புதிய பாடத்திட்டங்கள்:
- ஊரக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிற புதிய துறைகளையும் உருவாக்க வேண்டியது, பாட்டாளி அறிவுஜீவிகளின் கடமையாகும். உதாரணமாக, திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், மதுரை கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி போன்றவை 1970களின் தொடக்கத்திலேயே, ஊரகவியல் என்னும் துறையை உருவாக்கின. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சமூகவியல் போன்ற மூன்று துறைகளின் கூட்டுக்கலவையாக இத்துறை உருவாக்கப்பட்டது.
- இந்தத் துறையில் படித்த சில பட்டதாரிகள் அரசு வேலையில் (ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறை) உள்ளனர். பலர் ஊரகப் பகுதிகளில் தொழில்முனைவோராக உருவாகியிருந்தனர். கிராமப்புறங்களில் குடிசை, சிறு-குறு தொழில்கள் வளர்ச்சியடைந்தன. இந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில், மேலும் சில கிராமத்துக் கல்லூரிகள் ஊரகவியல் படிப்பைத் தொடங்கின.
- அதேபோன்று, பிற துறைக் கல்வியாளர்களும் முயற்சி எடுக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், வரலாறு, வணிகம் போன்றவற்றில் ஊரக இயற்பியல், இனவேதியியல், இனத்தாவரவியல், உள்ளூர் வரலாறு, கிராமப்புறச் சந்தையியல் போன்ற கிராமங்களை மேம்படுத்துகிற ஆராய்ச்சிகளில் முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.
விரிவாக்கப் பணிகள்:
- உயர் கல்வியின் மூன்றாவது தூணாகக் கருதப்படும் விரிவாக்கப் பணிகள், ஊரகக் கல்லூரி மாணாக்கர்களைக் கொண்டு சீரிய முறையில் செயல்படுத்தப்படும்போது, கிராமங்கள் மெய்யாகவே வளர்ச்சியடையும். வீதிகளைத் தூய்மைசெய்வது, மரம் நடுவது என்பதையும் தாண்டி, கல்லூரி அருகேயிருக்கிற ஒவ்வொரு கிராமத்தின் தனிப்பட்ட தேவைகளை ஆய்வுபூர்வமாகக் கண்டறிந்து, அவற்றை மேற்சொன்ன துறைசார்ந்த ஆராய்ச்சிகள் மூலம், புதிதாகத் தீர்வுகளைக் கண்டுபிடித்துச் செயல்படுத்தலாம். கிராமங்கள் தொழில்மயமாகி, மின்சாரமயமாகிவிட்டன. இணையமும் சாத்தியப்பட்டுவிட்டதால், கிராமங்கள் கணினிமயமாக வேண்டும்.
- இதைத்தான், அப்துல் கலாம் ‘பூரா’ (PURA) என்றார். அதாவது, நகரத்தில் உள்ள அனைத்து வசதிகளும், தொழில்நுட்பங்களும் ஊரகப் பகுதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் வி.கே.சி. (VKC) திட்டத்தைப் பரிந்துரைக்கிறார். ஊரக அறிவு நிலையங்களை உருவாக்க வேண்டும் என்பது இவரின் முன்னெடுப்பு. கணினி, இணையம் ஆகியவற்றின் உதவியால் உருவாக்கப்படும் இத்தகைய நிறுவனங்கள் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.
- கடற்புரத்தில் வாழ்கின்ற மீனவர்களுக்கும் கணினிப் பயன்பாட்டைக் கொண்டுசெல்வது ஊரக உயர் கல்வி நிறுவனங்களின் கடமையாகும். இதன் மூலம் ஊரக-நகர்ப்புற ‘டிஜிட்டல் பிளவு’ தவிர்க்கப்படும். விவசாயிகளும், சிறு/குறு தொழில் செய்வோரும் மீனவர்களும் கணினி நுகர்வோராக மட்டும் இருந்துவிடாமல், வலைதளங்களில் தங்கள் உள்ளூர் / மரபார்ந்த அறிவுநுட்பங்களைப் பகிர்ந்திடவும் வேண்டும்.
- மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் (2024-25) அறிவித்திருக்கிற அக்ரி ஸ்டேக் (Agri Stack) சாத்தியமாகும்போது, மேற்கண்டவை அனுகூலமாகலாம். அக்ரி ஸ்டேக் என்பது விவசாயிகளின் தரவுகள், நில ஆவணங்கள், காப்பீடு, கடன், பயிர் சாகுபடி மற்றும் அவர்களின் வருமானம் போன்ற அனைத்தையும் கொண்டிருக்கும் சேமிப்புப் பெட்டகமாக இருக்கும்.
- இது விவசாயிகள், அரசாங்கத் துறைகள், வேளாண் ஆராய்ச்சி-தொழில்நுட்ப நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு டிஜிட்டல் தளமாகவும் செயல்படும். பயிர் சாகுபடித் தொழில்நுட்பங்கள், உற்பத்தியை மேம்படுத்தும் வழிமுறைகள், வாழ்வாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த உதவும் தரவுகளை உள்ளடக்கிய தளமாக இது இருக்கும்.
ஊரகத் தொழில் வளர்ச்சி:
- நகரமயமாதல் இந்நூற்றாண்டின் பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மையே இதற்கு மூலகாரணம். எனவே, படித்த இளைஞர்களை ஊரகப் பகுதிகளிலேயே தொழில் தொடங்கவைப்பது, இப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். முதலாவதாக, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய விளைபொருள்களைச் சந்தைப்படுத்துதலில் (கணினி உதவியுடன்) வணிகவியல் பட்டதாரிகள் ஆர்வம் காட்ட வேண்டும். அடுத்ததாக, அவற்றை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்ற, சிறு தொழிற்கூடங்களை அமைக்க வேண்டும் அல்லது குடிசைத் தொழிலாகவும் செய்யலாம்.
- தனிநபர் தொழில்முனைவின் அடுத்த பரிமாணமாக மலர்ந்திருப்பது சமூகத் தொழில்முனைவு. தனிமனித லாபம் என்பதைத் தாண்டி, சமூக ஆதாயத்தில் கவனம் செலுத்துவோர் சமூகத் தொழில்முனைவோர். சமூகமாக முதலீடு செய்து, ஒட்டுமொத்தக் கிராமத்தின் வளர்ச்சிக்கு வித்திடலாம். கூட்டுப் பண்ணை விவசாயம், பெரிய தொழிற்சாலைகள் போன்ற சவாலான முன்னெடுப்புகளைச் சமூகத் தொழில்முனைவோர் சாத்தியப்படுத்தலாம். இவை நிகழும்போது, நகரமயமாதல் கண்டிப்பாகத் தவிர்க்கப்படும்.
ஊரக வளர்ச்சியும் சாதி ஒழிப்பும்:
- ஊரக வளர்ச்சி என்று சிந்திக்கிறபோது, கிராமங்களில் புரையோடிப்போன சாதி அமைப்பையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. நகரமயமாதல் மூலம் சாதியும், சாதிரீதியிலான சமூக உறவும் தளரும் என்பதில் ஓரளவு உண்மையிருக்கிறது. இருப்பினும், நகரங்களிலும் முழுமையாகச் சாதியை ஒழிக்க முடியவில்லை என்பதே யதார்த்தம்.
- எனவே, கிராமங்களைத்தான் சமத்துவபுரங்களாக உருவாக்க வேண்டியிருக்கிறது. கிராமசபை வலுவான அரசமைப்பு. அதில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் அனைவரும் சமமாகப் பங்கெடுப்பதன் வழியாக, ஒடுக்கப்பட்டோருக்கான அதிகாரப் பரவலைச் சாத்தியமாக்கலாம்.
- இந்த இலக்குகளை அடைய, ஊரகப் பகுதிகளில் அரசுப் பல்கலைக்கழகங்களும் அரசுக் கல்லூரிகளும் தொடங்கப்பட வேண்டும். விஜடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோ.விசுவநாதன், “உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை தனியார் கல்வி நிறுவனங்களில்தான் அதிகம். இந்த உண்மையை அரசு பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டு, அவர்களுக்கு வரிச் சலுகைகள், மானியங்கள் போன்றவற்றை வழங்க வேண்டும்.
- அதனால், தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் கட்டணம் குறைவதற்கான வாய்ப்பு உருவாகும்” என்று கூறுவது நாம் கவனத்தில்கொள்ள வேண்டியது. கிராமப் பகுதிகளில் நடத்தப்படுகின்ற தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்கு அரசின் ஊக்குவிப்பு மிக அவசியம். அரசு மனம் கொள்ளட்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 09 – 2024)