TNPSC Thervupettagam

ஊருக்குத்தான் உபதேசம்

September 7 , 2022 702 days 331 0
  • டிசம்பர் 31, 1600-இல் விக்டோரியா மகாராணி கையொப்பமிட்ட கிழக்கிந்திய கம்பெனியின் சார்டர், இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது என்று சொல்வதுதான் சரி. வியாபாரிகளாக வந்த வெள்ளைக்காரர்கள் நாடு பிடித்து, நாட்டையே ஒரு கம்பெனியின் கீழ் ஆண்டது பழைய கதை. 
  • சுரண்டல்களும், மனித உரிமை மீறல்களும் ஒரு பக்கம் நடந்து கொண்டேயிருந்தாலும், ஆங்கில ஆட்சி ஆப்கானிஸ்தானையும், பர்மாவையும், பாகிஸ்தானையும், இலங்கையையும், வேறு பல பகுதிகளையும் நம்மிடமிருந்து பிரித்தாலும், வேதம் சொல்லும் பரத கண்டத்தை "இந்தியா என்கிற பாரத'மாக மாற்றினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. 
  • அவர்களுடைய வசதிக்காக அவர்கள் ஏற்படுத்திய வருவாய்துறை, ராணுவம், காவல்துறை, உள்ளாட்சிதுறை, ரயில்வே, பதிவுத்துறை என பட்டியல் நீண்டு கொண்டே போனாலும், இவை எல்லாவற்றிலும் நடுநாயகமாகவும், இன்றும் வலிமையுடனும் இருப்பது "நீதித்துறை' தான் என்றால் மிகையல்ல.
  • சமகால இந்தியாவின் வரலாற்றை எழுதினால், அதை ஜூன் 27, 1975 முதல் மார்ச் 21, 1977 வரை இருந்த அவசரநிலை காலத்துக்கு முன், அவசரநிலை காலத்துக்கு பின் என இரண்டாகப் பிரிக்கலாம். அவசரநிலையை கொண்டு வந்ததற்காக இன்றும் இந்திரா காந்தியைப் பழிப்பவர்கள் அனைவரும், இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே யாருமே எதிர்பாராத பொழுது அவசரநிலையை இந்திராவே ரத்து செய்து, தேர்தலை சந்தித்து 1977 இல் பதவியையும், ஆட்சியையும் இழந்தது குறித்துப் பேசுவதில்லை. 
  • அவசர நிலை அறிவிக்கப்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சிக்ரி 25 ஏப்ரல் 1973-இல் ஓய்வு பெற்றபொழுது, குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அஹமது, நீதிபதி ஏ.என்.ரே-யை 26 ஏப்ரல் 1973 முதல் இந்தியாவின் தலைமை நீதிபதியாக நியமித்தார். 
  • இது நீதித்துறையில் அதிர்ச்சியையும், அரசியல் தளத்தில் கடுமையான எதிர்வினையையும் ஏற்படுத்தியது. காரணம், அதுவரை இருந்த நடைமுறைக்கு விரோதமாக வழக்கப்படி பதவி பெற வேண்டிய மூன்று மூத்த நீதிபதிகள் அப்போது ஓரங்கட்டப்பட்டனர். 
  • நீதிபதி ரே-யின் நியமனம் அதுவரை உச்சநீதிமன்றத்தில் இருந்த மூத்தவரே தலைமை நீதிபதி என்ற வழக்கத்துக்கு விரோதமாகவும், எதிராகவும் அமைந்தது. அது மட்டுமல்ல, பதவி மூப்பு அடிப்படை கடைப்பிடிக்கப்பட்டு இருந்தால் ஏ. என்.ரே ஜனவரி 29, 1977-இல் ஹெக்டே தலைமை நீதிபதியாக இருக்கும்பொழுதே தலைமை நீதிபதியாக ஆகாமல் ஓய்வு பெற்றிருப்பார். ரே-யின் தலைமை நீதிபதி எஸ்.எம்.சிக்ரியைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அரசால் செய்யப்பட்டது என கண்டனத்துக்கு உள்ளானது. 
  • நீதிபதி ரே தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதும், இந்திரா காந்தி அவசரநிலையைக் கொண்டு வந்ததும் இந்திய ஜனநாயகத்திற்கும், நீதித்துறைக்கும் சவாலாக கருதப்பட்டது. தலைமை நீதிபதி பதவி உயர்வு மறுக்கப்பட்ட மூன்று நீதிபதிகளும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர்.
  • தலைமை நீதிபதி நியமனம் தொடர்பாக, ஏப்ரல் 26-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய சட்ட அமைச்சர் ஹெச்.ஆர்.கோகுலே, அரசின் செயல்பாட்டை நியாயப்படுத்த 1960- இல் சட்ட ஆணைய குழுவின் (லா கமிஷன்) பரிந்துரைப்படி தலைமை நீதிபதி என்பவர் வயது மூப்பு அடிப்படையில் நியமிக்கப்படுவதை விட, தலைமை நீதிபதி பதவியில் ஒரு ஸ்திரத்தன்மையும், தொடர்ச்சியும் இருக்க வேண்டும் என்று கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். 
  • நாடாளுமன்றத்தில் மே 2 -ஆம் தேதி பேசிய அமைச்சர் மோகன் குமாரமங்கலமோ, மோதல் போக்கைத் தவிர்க்க விரும்பும் ஒரு தலைமை நீதிபதியை நியமிக்க வேண்டும் எனவும், அவரே மாறிவரும் இந்திய சமுதாய சூழலுக்கு ஏற்றவராகவும், நீதிமன்றத்திற்கும், அரசிற்கும் நிலையான தொடர்புடையவராகவும் இருக்க முடியும் என்று அரசு விரும்புகிறது என்றார்.
  • அடிபட்ட புலியாக உச்சநீதிமன்றம் சரியான தருணத்திற்காகக் காத்திருந்தது. தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றங்களால், அரசியல்வாதிகளும், அரசும் தங்களுடைய உரிமைகளை இழந்து விட்டதாக நம்பினார்கள் அல்லது நம்பத் தொடங்கிவிட்டார்கள். இந்த நேரத்தில் நீதிமன்றம் தன்னுடைய அதிகார வரம்புகளை விஸ்தரிக்க ஆரம்பித்தது.
  • நீதிபதிகளை அரசு மூலமாக குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று அரசியல் நிர்ணய சட்டம் சொல்வதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நீதிபதிகளை, உச்சநீதிமன்ற நீதிபதிகளே நியமிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பு நீதிபதிகளை, நீதிபதிகளே நியமிக்க அரசியல் சாசனத்தில் இல்லாத முதல் ஐந்து நீதிபதிகளை கொண்ட "கொலீஜியம்' என்கிற "மேலாண்மை குழுவை' ஏற்படுத்தியது.
  • காங்கிரஸ் அரசு செய்யத் தவறியதை அல்லது காங்கிரஸôல் செய்ய முடியாததை, இந்திய அரசியலில் இந்திரா காந்திக்குப் பிறகு சர்வ வல்லமை பொருந்திய பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி "நீதிபதிகள் நியமன சட்டம்' மூலம் செய்வதற்கு முடிவெடுத்தார். ஆனால், அதை உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று கூறி ரத்து செய்தது.
  • நிதி அமைச்சரும், புகழ் வாய்ந்த வழக்குரைஞருமான அருண் ஜேட்லி அந்தத் தீர்ப்பை "தேர்தலை சந்திக்காதவர்களின் அராஜகம்' (டைரனி ஆஃப் தி அன்எலக்டட்) என்று கடுமையாக விமர்சித்தபொழுது நீதிமன்ற ஆதரவாளர்கள் வாய்மூடி இருந்தார்கள்.
  • சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால நீதிமன்ற வரலாற்றில், 49-ஆவது தலைமை நீதிபதி யு. யு.லலித் 27.8.2022 -இல் பதவி ஏற்றுள்ளார். அதாவது, இந்த 75 ஆண்டுகளில் தலைமை நீதிபதிகள் சராசரியாக ஒன்றரை ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்கள். இதை இன்னமும் கூர்மையாகப் பார்த்தால் நிலைமை வேடிக்கையாக இருக்கும் (பட்டியலைக் காண்க).
  • உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த 21 பேர் ஓர் ஆண்டுக்கும் கீழாக பதவி வகித்தார்கள் என்றால், அதில் ஐவர் 99 நாட்களுக்கும் கீழாகவும், இருவர் 30 நாட்களுக்குக் குறைவாகவும் தலைமை நீதிபதி பதவியில் இருந்துள்ளார்கள். அதே சமயம், 16-ஆவது தலைமை நீதிபதியான ஒய்.வி. சந்தரசூட் 7 வருடம் 139 நாட்கள் தலைமை நீதிபதியாக பதவி வகித்து சாதனை படைத்துள்ளார். 
  • குடியரசுத் தலைவராக இரண்டாவது பெண்மணி பதவி வகிக்கும் நிலையில், ஒரு பெண்மணி கூட இன்றுவரை தலைமை நீதிபதியாகும் வாய்ப்பைப் பெறவில்லை. நீதிபதி பி.வி. நாகரத்னா நியமிக்கப்பட்ட பொழுது அவர் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருப்பார் எனப் பலரும் ஆனந்த கூத்தாடினார்கள். ஆனால், வெளியே வராத உண்மை அவர் தலைமை நீதிபதியாக பதவி வகிக்கப் போவது வெறும் 36 நாட்கள் மட்டுமே. 
  • உண்மையில், குடியரசுத் தலைவராக இருந்த பிரதிபா பாட்டீல் அதிருஷ்டக்காரர். அவர் முழுமையாக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தார். திரெüபதி முர்முவும் ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பார். 
  • நீதிபதி நாகரத்தினாவின் எதிர்வரும் தலைமை நீதிபதி பதவியில் இருக்கும் 36 நாளில் பதவியேற்க ஒரு நாள், பிரிவு உபசாரத்திற்கு ஒரு நாள் என இரண்டு நாள் போய்விடும்; குறைந்தபட்சம் எட்டு நாள் சனி, ஞாயிறு; வக்கீல்கள் போராடாமல் இருந்தால் அவர் சுமார் 24 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்! 
  • 17 நாள் முதல் 2 வருடத்திற்கு உட்பட்ட காலகட்டத்தில் மட்டுமே பதவியில் இருக்கும் நீதிபதிகளால் என்ன மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் நீதித்துறையில் கொண்டு வர முடியும்?
  • இந்திரா காந்தி தலைமை நீதிபதி நீண்ட நாள் பதவி வகிக்க வேண்டும் என்று வழங்கப்பட்ட கருத்துரையை, பொதுவில் விவாதிக்காமல் அமல்படுத்திய முறை தவறாக இருக்கலாம். 
  • ஆனால், அவர் வினையாற்றியது சட்ட ஆணையக் குழுவின் கருத்துரை மட்டுமல்ல; இந்த கருத்துரையை உச்சநீதிமன்றமே சில அரசுத் துறைகளில் கடைப்பிடிக்க வேண்டுமென சமீபகாலமாக தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
  • உச்சநீதிமன்றமே சில ராணுவ, காவல்துறை பதவிகள், சில இந்திய ஆட்சிப்பணி, ஒற்றர் பணி ஆகியவற்றில் தலைமை பதவியேற்பவர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என உத்தரவிட, அதை அரசு நடைமுறைப்படுத்தவும் செய்தது.
  • உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளும் மரணம் அல்லது ராஜிநாமா போன்ற தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர்த்து, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பதவி வகிக்க வேண்டும் என இனி ஒரு விதி செய்யப்பட வேண்டும். 
  • உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து, உச்சநீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இதுவே, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிகளுக்கும் பொருந்தும். இல்லாவிட்டால், "ஊருக்குத்தான் உபதேசம்' என்கிற பழமொழி உச்சநீதிமன்றத்துக்கும் பொருத்தமாகி விடும். 

நன்றி: தினமணி (07 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்