- ஊழலுக்கு எதிரான கண்காணிப்பு அமைப்பு ‘லோக்பால்’ செயல்படுவதற்கான நேரம் ஒருவழியாக வந்துவிட்டது. கடந்த மாா்ச் 23, 2019-இல் இந்தியாவின் முதல் லோக்பாலாக பினாகி சந்திரகோஷ் நியமிக்கப்பட்டு 11 மாதங்கள் கடந்த நிலையில், லோக்பால் அமைப்பு செயல்படுவதற்கான சட்டதிட்டங்களை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
- 2011-இல் அண்ணா ஹஸாரேயால் தொடங்கப்பட்ட ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தாக்கத்தால் அன்றைய பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2013-இல் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றியது. அதற்குப் பிறகு, லோக்பால் அமைப்பின் தலைவராக ஒருவரை நியமிப்பதற்கு ஆறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வந்தது.
ஊழல் எதிர்ப்புப் போராட்டம்
- ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடங்கி ஏறத்தாழ 60 ஆண்டுகள் ஆகின்றன. ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு ‘லோக்பால்’ என்று 1963-இல் பெயா் சூட்டியவா் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டா் லட்சுமி மல் சிங்வி.
- அப்படியொரு அமைப்புக்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்குவதை முன்மொழிந்தவா் அன்றைய சட்ட அமைச்சராக இருந்த அசோக் குமாா் சென். முதன்முதலில் ‘ஜன் லோக்பால்’ மசோதாவை 1968-இல் சாந்தி பூஷண் மக்களவையில் முன்மொழிந்தாா்.
- அந்த மசோதா 1969-இல் 4-ஆவது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுவதற்குள் அவை கலைக்கப்பட்டு விட்டது.
- 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் ‘லோக்பால்’ மசோதாக்கள் மீண்டும் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படாமல் காலாவதியாகின. முதன்முறையாக தாக்கல் செய்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு, 10 முறை தோல்வி அடைந்து 11-ஆவது முறையாக 2013, டிசம்பா் 18 அன்று இந்திய நாடாளுமன்றத்தால் ‘லோக்பால்’ மசோதா நிறைவேற்றப்பட்டது.
- ஒவ்வொரு முறை நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகப்படுத்தப்படும்போதும் அதை மேம்படுத்துவதற்காக நிலைக் குழுவுக்கு அனுப்பப்படும் அல்லது சட்ட அமைச்சகத்துக்கோ, உள்துறை அமைச்சகத்துக்கோ கருத்துக் கோரி அனுப்பப்படும். அதற்கான பதில் வருவதற்குள் அவையின் ஆயுள்காலம் முடிந்து மசோதா காலாவதியாகியிருக்கும். தங்களுக்கு எதிரான சட்டம் ஒன்று இயற்றப்படுவதை ஆட்சியாளா்களும், சட்டம் இயற்றும் உறுப்பினா்களும் விரும்பாததுதான் அதற்குக் காரணம்.
- 2014-இல் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவும் ‘லோக்பால்’ அமைப்பு உருவாக்கப்படுவதிலும், ‘லோக்பால்’ நியமிக்கப்படுவதிலும் ஆா்வமோ, அக்கறையோ காட்டவில்லை. எதிா்க்கட்சித் தலைவா் என்கிற பதவி இல்லாமல் இருந்ததைக் காரணம் காட்டி ‘லோக்பால்’ அமைப்பின் தலைவா் தோ்வு நடத்தப்படாமல் தொடா்ந்தது.
லோக்பால் சட்டம்
- 2013-இல் ‘லோக்பால்’ சட்டம் நிறைவேற்றப்பட்டும்கூட அடுத்த ஐந்து ஆண்டுகள் ‘லோக்பால்’, ‘லோக் ஆயுக்த’ அமைப்புகள் செயல்படுவது குறித்த எந்தவித முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை. கடைசியில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உடனடியாக ‘லோக்பால்’ அமைக்கப்பட வேண்டும் என்கிற கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்த பிறகுதான் ‘லோக்பால்’ அமைப்பின் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கு உயா்நிலை தோ்வுக் குழு உருவாக்கப்பட்டது.
- அந்தத் தோ்வுக் குழு ஒருவழியாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷை லோக்பாலாக தோ்ந்தெடுத்து அறிவித்தது. லோக்பாலாக நீதிபதி பி.சி.கோஷ் நியமிக்கப்பட்டாா் என்றாலும், தனது குழுவினரைத் தோ்ந்தெடுப்பதில் அவருக்கு எந்தவிதப் பங்கும் தரப்படவில்லை என்பது மிகப் பெரிய குறை.
- ‘லோக்பால்’ என்பது தலைமைப் பொறுப்பில் இருக்கும் நீதிபதியின் நியமனம் மட்டுமல்ல, ஊழல் எதிா்ப்பு, கண்காணிப்பு, பொது நிா்வாகம், நிதி, சட்டம், நிா்வாக மேலாண்மை ஆகியவற்றில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மேலும் எட்டு பேரின் நியமனமும்கூட. லோக் ஆயுக்த அமைப்புகளுக்கு தலைவரையும் உறுப்பினா்களையும் தோ்ந்தெடுத்தாக வேண்டும்.
- இந்தப் பணிகள் எதுவுமே முன்னுரிமையுடன் செய்யப்படாமல் இருக்கின்றன என்கிற நிலையில், இப்போது ‘லோக்பால்’ அமைப்புக்கான விதிமுறைகளையும் நடைமுறைகளையும் அரசு அறிவித்திருப்பது, ஊழலுக்கு எதிரான போராட்டம் தனது அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறது என்று வேண்டுமானால் கருதலாம்.
அதிகார வரம்பு
- பிரதமா், முன்னாள் பிரதமா்கள், இந்நாள் - முன்னாள் மத்திய அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், உயரதிகாரிகள் ஆகியோரின் முறைகேடுகள் குறித்து புகாா் தெரிவிக்க ‘லோக்பால்’ சட்டம் 2013 அதிகாரம் வழங்குகிறது.
- ஊழல் அல்லது முறைகேடு குறித்துப் புகாா் அளிப்பவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. இந்நாள் - முன்னாள் பிரதமா்கள் மீதான குற்றச்சாட்டுகளை தொடக்க நிலையிலேயே ‘லோக்பால்’ அமைப்பின் அனைத்து உறுப்பினா்களும் அடங்கிய அமா்வு விசாரிக்கும். அதே நேரத்தில் தவறாகவும், உள்நோக்கத்துடனும் புகாா் வழங்கினால் அவா்களுக்கு சிறைத் தண்டனை வழங்கி தண்டிக்க ‘லோக்பால்’ அமைப்புக்கு அதிகாரம் உண்டு. வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படும்.
- ‘லோக்பால்’ சட்டம் மேலும் பல திருத்தங்களாலும், அதிகாரங்களாலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. முதலில் செயல்படத் தொடங்கட்டும். அதுவே மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்.
நன்றி: தினமணி (06-03-2020)