TNPSC Thervupettagam

ஊழலே வாழ்க்கை நெறியானால்...

December 3 , 2020 1509 days 700 0
  • இந்தியாவில் பரவலாக ஊழல் காணப்படுகிறது என்பதையும், அரசு அலுவலகங்களில் எந்தவொரு வேலை நடப்பதற்கும் கையூட்டு அவசியம் என்பதையும் யாரும் சொல்லி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
  • வாக்களிப்பதற்குக்கூட கையூட்டு வழங்கப்படும் விசித்திரம் நமது ஜனநாயக முறையிலேயே புகுத்தப்பட்டிருக்கும் நிலையில், அரசு இயந்திரம் கையூட்டின் அடிப்படையில் இயங்குவதில் வியப்பொன்றும் இல்லை.
  • வெளிப்படைத் தன்மையை ஆய்வு செய்யும்"டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல்' என்கிற சர்வதேச தன்னார்வ அமைப்பு ஒன்றின் அறிக்கையின்படி, ஆசியாவிலேயே மிக அதிகமாக கையூட்டு காணப்படும் நாடாக இந்தியா அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
  • எந்தவோர் அரசு சேவைக்கும் கையூட்டோ, அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகளின் தொடர்போ இந்தியாவில் தேவைப்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • "டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல்' அமைப்பின் கருத்துப்படி, அடிப்படைத் தேவைகளுக்குக்கூட மக்கள் கையூட்டின் மூலமும், அதிகாரிகள் அளவிலான தொடர்பின் மூலமும் பெற வேண்டிய அவலம் காணப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் சிக்கலான நிர்வாக வழிமுறைகளும் தெளிவில்லாத விதிமுறைகளும்தான் அதற்கு காரணம்.
  • "மாமூல்', "பக்ஷீஸ்', "இனாம்' உள்ளிட்ட வார்த்தைகள் கிராம அலுவலகத்திலிருந்து அரசு செயலகங்கள் வரை சர்வ சாதாரணமாக எல்லா மட்டத்திலும் புழங்கும் நிலை புதிதொன்றுமல்ல. பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்தே தொடரும் அவலங்கள்தான் ஊழலும், கையூட்டும்.
  • கையூட்டுக்கு அடிப்படைக் காரணம், தேர்தல் மூலம் ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகளா, பணி நிரந்தரம் வழங்கப்பட்டிருக்கும் அரசு ஊழியர்களா என்பது "முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா' போன்ற தொடரும் விவாதம்.
  • அரசியல் தலைமையில் ஊழல் இல்லாமல் இருந்தால் அதிகார வர்க்கம் ஊழலில் ஈடுபடாமல் இருக்கும் என்கிற வாதம் ஓரளவுக்குத்தான் உண்மை. அடிமட்டத்தில் புரையோடிப்போயிருக்கும் கையூட்டு கலாசாரத்தை ஊழலே இல்லாத ஆட்சியே அமைந்தாலும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதைக் கடந்த 73 ஆண்டுகால சுதந்திர இந்தியா பலமுறை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறது.
  • ஊழல் இல்லாத அரசியல் தலைமையால் மேல்மட்ட அதிகார வர்க்கத்தைத் தனது கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் வைத்திருக்க முடியும்.
  • அதன்மூலம் ஊழலையும் முறைகேடுகளையும் தவிர்க்க நினைக்கும்போது, அதிகார வர்க்கம் விதிமுறைகளைக் காட்டி முற்றிலுமாக அரசின் இயக்கத்தை ஸ்தம்பிக்க வைத்து விடுகிறது.
  • போஃபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்னையைத் தொடர்ந்து, முறைகேடு குற்றச்சாட்டுக்கு இலக்காவதை தவிர்க்க நினைத்தது அரசியல் தலைமை. அதனால், கடந்த 30 ஆண்டுகளாக ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட சுணக்கத்தின் காரணமாக, இந்திய ராணுவம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
  •  நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்யும் விதிமுறைகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தி மீண்டும் கொள்முதல் செய்யப்படுகின்றன.
  • ஊழலுக்கு எதிராக பண்டித ஜவாஹர்லால் நேரு ஆட்சியில் தொடங்கி, பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்ட முடியாத அளவுக்கு நேர்மையானவராக இருந்தும்கூட, பண்டித ஜவாஹர்லால் நேருவின் ஆட்சியில்தான் முந்த்ரா ஊழல் அவரது மருமகன் பெரோஸ் காந்தியால் வெளிக்கொணரப்பட்டது. லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது, உள்துறை அமைச்சராக இருந்த குல்சாரிலால் நந்தா, ஊழலுக்கு எதிராகப் பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முயன்று தோல்வியைத் தழுவினார்.
  • ராஜீவ் காந்தி பிரதமரானபோது, மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், வளர்ச்சித் திட்டங்களின் மூலம் அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் 15 பைசா மட்டுமே மக்களை சென்றடைகிறது என்று வேதனையுடன் குறிப்பிட்டு ஊழலுக்கு எதிரான முயற்சிகளை முன்னெடுத்தார்.
  • ஆனால், போஃபர்ஸ் பீரங்கி ஊழலால் ஏற்பட்ட அவப்பெயரால் அவரது ஆட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்தது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும், டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியும் ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் அப்பாற்பட்டவையாக இருக்கவில்லை.
  • நரேந்திர மோடி தலைமையில் 2014-இல் ஆட்சி அமைந்தபோது, ஊழலைக் கட்டுக்குள் கொண்டுவர தொழில்நுட்பமும், நேரடியாக மானியங்களை வழங்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டன.
  • கடந்த ஏழு ஆண்டுகளில் குறிப்பிடும்படியான ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் எழாமல் ஆட்சி நடைபெற்றாலும்கூட, கீழ்மட்டத்தில் எந்த அளவிலும் ஊழல் குறைந்ததாகத் தெரியவில்லை.
  • அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கம் அடுத்த ஆண்டு 10-ஆவது ஆண்டு விழா கொண்டாட இருக்கிறது. இன்னும் லோக்பாலும், லோக் ஆயுக்தாவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
  • அந்த இயக்கத்தின் தளபதியாக இருந்த அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அமைச்சரவையே ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது.
  • அரசு ஊழியர்கள் திருந்தாதவரை, அரசியல்வாதிகள் மாறாதவரை, மக்கள் கையூட்டைப் புறக்கணிக்காதவரை இந்தப் பிரச்னைக்கு முடிவு காண்பது அசாத்தியம்.
  • இலவசமாகவும், அதிகப்படியாகவும் கிடைக்கும் வருமானத்தின் மீதான பேராசை உள்ள வரையில், ஊழலும் கையூட்டும் நம்முடன் கைகோத்து நடக்கும். ஆசை யாரை விட்டது?

நன்றி :தினமணி (03-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்