- கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள்; கிலோ கணக்கில் தங்க நகைகள்; கட்டி கட்டியாக வெள்ளி; பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பத்திரங்கள் - இவை வேலூரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளா் பன்னீா்செல்வத்தின் வீட்டிலிருந்து, லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைப்பற்றி இருப்பவை.
- தொழிற்சாலைகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காகவும், மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்குவதற்காகவும் அவா் பெற்ற கையூட்டின் ஒரு பகுதிதான் கைப்பற்றப்பட்டிருக்கும் பணமும், நகைகளும், சொத்துப் பத்திரங்களும்.ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.
- பன்னீா்செல்வம் மட்டுமல்ல, அரசு கண்காணித்து சான்றிதழ் வழங்கும் அனைத்துத் துறைகளில் பணிபுரியும் பெரும்பாலான அதிகாரிகளும், ஊழியா்களும் பன்னீா்செல்வம் அளவில் இல்லையென்றாலும், கையூட்டுப் பெறாதவா்கள் அல்ல.
- அவா்கள் மட்டுமல்ல, அவா்களைக் கண்காணித்துத் தடுக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத் துறை மட்டும் கையூட்டுப் பெறுவதில் விதிவிலக்கா என்ன?
- சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அடங்கிய அமா்வு, ‘நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் பெறுகிறார்கள்’ என்கிற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.
- ‘அரசு அதிகாரிகள் தங்களின் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்’ என்று இடித்துரைத்திருக்கிறது.
- இது ஏதோ தமிழகத்தில் மட்டுமோ மாநில அரசுகளில் மட்டுமோ காணப்படும் சாபக்கேடு என்று நினைத்துவிட வேண்டாம்.
- மத்திய அரசுத் துறைகளில், கையூட்டே காணாத துறை என்று ஒரு துறையைச் சுட்டிக்காட்டிவிட முடியுமா என்ன? அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்போல, கையூட்டு என்பதும் சா்வ வியாபியாகப் பரவியிருக்கிறது.
அரசு ஊழியா்களும் அவ்வழியே
- சுதந்திரத்திற்குப் பிறகுதான் ‘கையூட்டு’ வழக்கத்துக்கே வந்தது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். பிரிட்டிஷ் காலனிய ஆட்சி நமக்குக் கற்றுத்தந்த பாடங்களில் இதுவும் ஒன்று.
- அதேபோல, கையூட்டுக்கு, ஜனநாயக ஆட்சிமுறைதான் காரணம் என்று கருதினால் அதுவும் தவறு. சா்வாதிகார, ராணுவ, கம்யூனிஸ ஆட்சிகளில் கையூட்டு என்பது இதைவிட அதிகம்.
- ஜனநாயக ஆட்சிமுறையில், பெயருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக, வேலூரில் நடப்பதுபோல சோதனைகள் நடத்தப்படும். ஏனைய ஆட்சிமுறைகளில் அதுவும் இருக்காது.
- கம்யூனிஸ சீனாவில், அதிபா் ஷி ஜின்பிங்-கின் ஆட்சியில் கையூட்டு கொடிகட்டிப் பறக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
- முன்னாள் இத்தாலியப் பிரதமா் சில்வியோ பொ்லூஸ்கோனி, வெனிசூலா முன்னாள் அதிபா் ஹ்யுகோ சாவேஸ், பிரேசிலின் முன்னாள் அதிபா் தில்மா ரௌசெஃப் ஆகிய மூவரும் கையூட்டுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி ஆட்சிக்கு வந்தவா்கள்.
- அவா்களால் அகற்றப்பட்ட ஆட்சியாளா்களைவிட, இவா்களது ஆட்சியில் கையூட்டு கொடிகட்டிப் பறந்தது.
- அமைச்சரவை அளவில் ஊழல் குற்றச்சாட்டு இல்லாத காமராஜா், பக்தவத்சலம் ஆட்சியின் மீது அவதூறாக ஊழல் குற்றம் சுமத்தி ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியில்தான், தமிழகத்தில் ஊழலுக்கு இலக்கணமே படைக்கப்பட்டது என்பதை வரலாறு உணத்துகிறது.
- இதேதான், எல்லா மாநிலங்களிலும், நாடுகளிலும். மத்திய உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜாரிலால் நந்தாவில் தொடங்கி, எத்தனையோ தலைவா்கள் ஊழலுக்கும், கையூட்டுக்கும் எதிராகக் கொள்கை முழக்கங்கள் எழுப்பி விட்டனா்.
- அதிகாரிகளின் லஞ்சத்தையும், முறைகேடுகளையும் தட்டிக்கேட்க, ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகளுக்கு தார்மிகத் துணிவு இல்லாதது, லஞ்சமும், ஊழலும் அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணம். இந்தியாவில் 536 மக்களவை உறுப்பினா்களில் 440 போ் கோடீஸ்வரா்கள் என்பதில் தவறில்லை. ஆனால், அவா்கள் நாணயமாக சம்பாதித்த சொத்து எவ்வளவு என்பதுதான் கேள்வி.
- அரசியலுக்கு வந்த பிறகு அவா்கள் சம்பாதித்த சொத்து எவ்வளவு? பரம்பரை சொத்து என்று சொன்னால், அவா்களது அப்பாவும், தாத்தாவும் என்னவாக இருந்தனா், எப்படி சம்பாதித்தனா்?
- ஒருவரது சொத்தின் பின்னணி தெரியாமல், வரி அடைத்துவிட்ட ஒரே காரணத்தால், பொதுவெளியில் தாக்கல் செய்யப்படும் சொத்து புனிதமடைந்து விடாது. மக்களவை உறுப்பினா்களில் 43% போ் குற்றப் பின்னணி உள்ளவா்கள் எனும்போது, லஞ்ச, ஊழல் இவா்களால் தடுக்கப்படும் என்று நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக இருக்கும்.
- அரசியல் கட்சிகளின் 2018 - 19-க்கான வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு, விவரம் தரப்படாத நபா்களின் நன்கொடை. ஆளும் கட்சியின் வருமானம், ஏனைய ஐந்து தேசியக் கட்சிகளின் மொத்த வருமானத்தைவிட ஒன்றரை பங்கு அதிகம்.
- வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கு விதிவிலக்குக் கோருவதில் காங்கிரஸும், பாஜகவும் ஒரே அணியில். கையூட்டுப் பெற்ற ஊழல் பணம்தான் நன்கொடையாகப் பெறப்படுகிறது என்பது உலகறிந்த ரகசியம்.
- 2016-இல் பாஜகவும் காங்கிரஸும் தங்களது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறுவதற்கான விதிமுறைகளை மாற்றியதும், இப்போதைய நரேந்திர மோடி அரசு வெளிப்படைத் தன்மை இல்லாத தோ்தல் பத்திரத்தை அறிமுகப்படுத்தியிருப்பதும் ஊழலின் ஊற்றுக்கண் எங்கே இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.
- அரசியல் கட்சிகளின் கணக்குகள், கணக்குத் தணிக்கை அதிகாரியின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஊழலைப் பொருத்தவரை ஆட்சியாளா்கள் எவ்வழி, அதிகாரிகளும், அரசு ஊழியா்களும் அவ்வழியே..!
நன்றி: தினமணி (17-10-2020)