TNPSC Thervupettagam

எங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு உருவாகும்?

July 7 , 2020 1654 days 709 0
  • கரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து, 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அஞ்சல் முறையில் வாக்களிப்பதற்குத் தேர்தல் ஆணையம் வழிவகுத்துள்ளது.

  • இதுவரை அஞ்சல் முறையில் வாக்களிக்கும் வாய்ப்பானது மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்தது. இம்மாற்றம் கரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்களைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளது.

  • மூத்த குடிமக்களைத் தொற்றிலிருந்து காக்க அஞ்சல் முறையைவிட அவர்களுக்காகப் பிரத்தியேகமாக வாக்குச்சாவடிகள் அமைப்பது சிறந்ததா என்பது விவாதத்துக்குரியது.

  • ஆனால், வாக்களிப்பதைச் சுலபமாக்கி, வாக்களிப்பதற்கு உள்ள தடைகளைக் களைய முனையும் எந்தத் தீர ஆராய்ந்த முயற்சியும் வரவேற்புக்குரியது.

  • இதுபோல் வாக்களிக்க இயலாமல் சிரமப்படும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • மின்னல் வேகத்தில் பரவிய கரோனாவும், அதற்கடுத்து அரங்கேறிய பொதுமுடக்கமும் புலம்பெயர் தொழிலாளர்களை வெகுவாகப் பாதித்தன.

  • பெரும் எண்ணிக்கையில் அவர்கள் இடம்பெயர நேர்ந்தது.

  • தங்களுடைய வீடு திரும்பும் நீண்ட பயணத்தில், அவர்கள் சந்தித்த இடர்ப்பாடுகளும் அவமானங்களும் நமது மனதை உலுக்கின. அரசியல்ரீதியாக அவர்கள் அதிகாரமற்றவர்களாக இருப்பதை உணர்த்தியது.

புலம்பெயர்ந்தவர்களின் வாக்குகள்

  • நம் நாட்டுக்குள் இடம்பெயரும் தொழிலாளர்கள் வேலை தேடிச் செல்லும் இடத்தில், தங்களுடைய நிரந்தர வசிப்பிடத்தை உருவாக்கிக்கொள்வது குறைவு; பருவ காலங்களில் இடம்பெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையே அநேகம்.

  • இவர்கள் வாக்களிக்கும் நாளில் தங்களுடைய சொந்தக் கிராமத்துக்குத் திரும்பி வாக்களிப்பதையே விரும்பினாலும், செலவுசெய்து செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

  • அவர்கள் வசிக்கும் மாநிலத்திலும் அவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால், அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

  • இந்தத் தொழிலாளர்கள் வலிமை மிக்க வாக்குவங்கியாகத் திகழவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

  • வயது வந்த ஒவ்வொரு இந்தியரும் வாக்களிக்க உறுதிசெய்வதே தேர்தல் ஆணையத்தின் லட்சியமாக இருக்க வேண்டும்.

  • இந்தியாவில் தற்போது 91.05 கோடி பதிவுபெற்ற வாக்காளர்கள் உள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில், 67.4% வாக்காளர்கள் அதாவது, 61.36 கோடி மக்கள் வாக்களித்தார்கள்.

  • மீதமுள்ள 29.68 கோடி வாக்காளர்கள் மூன்றில் ஒரு பங்கு ஆவார்கள். இவர்களைப் பற்றித்தான் தேர்தல் ஆணையம் அக்கறை செலுத்த வேண்டும்.

  • அரசியலில் ஆர்வமில்லாமல் வாக்களிக்காமல் போனவர்களின் எண்ணிக்கை 10% என்று தேசிய தேர்தல் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதுபோக மீதமுள்ள 20.57 கோடி இந்தியர்கள் வாக்களிக்க முடியாத நிலை இருக்கிறது. இதில் மூன்று கோடி வெளிநாடுவாழ் இந்தியர்களும் அடக்கம்.

  • வெளிநாடுவாழ் இந்தியர் நேரடியாக வந்துதான் வாக்களிக்க வேண்டும் என்கிற விதி இருப்பதால், மூன்று கோடி பேரில் வெறும் 24,000 பேர் மட்டுமே வாக்களிப்பதற்குப் பதிவுசெய்துள்ளனர்.

எல்லோரும் குடிமக்கள்

  • வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாங்கள் நியமிக்கும் நபர்களைக் கொண்டு வாக்களிக்கும் வசதியை உறுதிசெய்யும் வகையில், கடந்த மக்களவையில் மசோதா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

  • மக்களவையில் நிறைவேறிய பிறகு அது காலாவதியாகிவிட்டாலும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மீதுள்ள அக்கறை, ஏழை புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் சற்றே பாராமுகமாக இருப்பது தெரிகிறது.

  • இத்தனைக்கும் இந்தியாவின் உழைக்கும் மக்களில், ஐந்தில் ஒருவர், அதாவது 13.9 கோடிப் பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று 2017-ன் பொருளாதாரக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

  • அவர்கள் பொருளாதாரரீதியாக வாழ்வாதாரத்தைத் தேடி கட்டிடத் துறை, செங்கல்சூளைகள், சுரங்கங்கள், சாலை அமைத்தல், வாட்ச்மேன் வேலை,

  • விவசாயம் என்று பல துறைகளில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் எங்கேயும் நிரந்தரமாகத் தங்கிவிட நினைப்பதில்லை. எப்படியாவது சொந்த ஊருக்குத் திரும்பிவிட வேண்டும் என்றே காத்துக் கிடக்கிறார்கள்.

  • எப்போது தங்கள் வேலைப்பருவம் முடியும் என்றே தவிக்கிறார்கள். குறைந்த கூலிக்கு சக்கையாகக் கசக்கிப் பிழியப்படுவதோடு, பரிதாபமான இடங்களில் தங்கவைக்கப்படுகிறார்கள்.

  • அவர்களுக்கு நலத்திட்டப் பலன்கள், வாக்குரிமை என்று எதுவும் கிடைப்பதில்லை.

  • இவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட, மறக்கப்பட்ட வாக்காளர்கள். தங்களுடைய சொந்தக் கிராமத்தில் தனக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

  • வாக்காளர்களின் வாக்குகளை இடம் மாற்றுவது என்பது இயலாத ஒன்றல்ல. சேவை வாக்காளர்கள் மின்னணு அஞ்சல் வாக்குச்சீட்டு முறை (ETPBS) வாயிலாகவும், வகைப்படுத்தப்பட்ட சேவை வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கும் ஒருவரைக் கொண்டு தங்களுடைய வாக்கைச் செலுத்தும் வசதியும் நடைமுறையில் உள்ளது.

  • இந்தியத் தேர்தல் ஆணையம் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைத்து, அதன் மூலம் இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் தங்கள் வாக்கை டிஜிட்டல் முறையில் செலுத்தும் முறையைப் பரிசோதித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது புழக்கத்துக்கு வர சில காலமாகும்.

வாக்களிக்கும் உரிமை

  • புலம்பெயர் தொழிலாளர்களின் உடனடித் தேவையைக் கணக்கில் கொண்டு, தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாவட்ட ஆட்சியரகங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

  • புலம்பெயர் தொழிலாளரின் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள முகவரியின் அடிப்படையிலும், அவர்கள் தற்காலிகமாகத் தங்கியுள்ள காலத்தையும் கணக்கில் கொண்டு, அவர்கள் வேலை செய்யும் இடத்துக்கு அருகிலேயே சென்று வாக்களிக்கத் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

  • இதனால் தேர்தல்களை நேர்மையாக நடத்தும் அதே வேளையில், இவர்களின் வாக்குகளை அவர்களுடைய தொகுதிகளுக்கு இடம்மாற்றுவதையும் சாதிக்க இயலும்.

  • வாக்களிப்பதைப் பொதுக் கடமையாக மக்களிடம் வலியுறுத்தாமல், அதை மக்களின் பொது உரிமையாக அரசு அணுக வேண்டும்.

  • ஏறத்தாழ வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டும், மறக்கப்பட்டும்விட்ட முகம் தெரியாத புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்கை இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் செலுத்த வழிவகுக்க வேண்டும்.

  • தாமஸ் ஜெஃபர்சன், “நமது அரசு பெரும்பான்மையினரால் அல்ல தேர்தலில் பங்கேற்கும் பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு” என்று கூறினார். ஒவ்வொரு இந்தியரும் தேர்தலில் பங்கேற்பதை உறுதிசெய்வதன் மூலமே, இந்தியா ஒரு உண்மையான பிரதிநிதித்துவ ஜனநாயகமாகத் திகழ இயலும்.

நன்றி: தி இந்து (07-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்