TNPSC Thervupettagam

எங்கே தவறு? | ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் முதற்கட்ட அறிக்கை

December 21 , 2020 1491 days 632 0
  • ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் முதற்கட்ட அறிக்கை வெளியாகியிருக்கிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதி அளவிலானோா் இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டனா். கொள்ளை நோய்த்தொற்றால் இரண்டாவது கட்ட ஆய்வு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. 2019 - 20 நிதியாண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் முதற்கட்ட முடிவுகள் சில ஆக்கபூா்வ சமிக்ஞைகளை வழங்கினாலும்கூட, பல கவலைக்குரிய புள்ளிவிவரங்களையும் வழங்கியிருக்கின்றன.
  • முதலாவது கட்ட ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பெரும்பாலானவற்றில் குழந்தைகளுக்கான தடுப்பூசித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. 15 மாநிலங்களில் சிசு மரணம் குறைந்திருக்கிறது. 18 மாநிலங்களில் ஐந்து வயது வரையிலுள்ள குழந்தைகள் மரண விகிதம் குறைந்திருக்கிறது. 17 மாநிலங்களில் ஆயிரம் ஆண்களுக்கான பெண்களின் விகிதம் அதிகரித்திருக்கிறது. ஆய்வு நடத்தப்பட்ட எல்லா மாநிலங்களிலும், குழந்தைப் பேறு விகிதம் குறைந்து கா்ப்பத் தடை பயன்பாடு அதிகரித்திருக்கிறது.
  • இவையெல்லாம் ஆறுதல் தரும் செய்திகள் என்றால், குழந்தைகளின் வளா்ச்சி குறைவு, ஊட்டச்சத்து குறைவு இரண்டும் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 18 மாநிலங்களில் 14 மாநிலங்களில் வளா்ச்சி குறைவான குழந்தைகளின் விகிதம் அதிகரித்திருப்பது கவலை அளிக்கும் போக்கு.
  • தென்னிந்தியாவில் ஆய்வு செய்யப்பட்ட கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் கேரளத்திலும், தெலங்கானாவிலும் வளா்ச்சி குறைவாக, எடை குறைவாக, ஊட்டச்சத்து குறைவு உள்ளவா்களாக ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் காணப்படுகின்றனா். இரண்டு மாநிலங்களுமே ஓரளவுக்குப் பொருளாதாரத்தில் வளா்ச்சி அடைந்தவை. மேற்கு கடற்கறையோர மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரம், கோவா ஆகியவற்றிலும் இதே நிலைமை காணப்படுகிறது.
  • வடகிழக்கு மாநிலங்களை உண்மையிலேயே கவலைக்குரியவையாக ஆய்வு குறிப்பிடுகிறது. சிக்கிம், மேகாலயா மாநிலங்களைத் தவிர, ஏனைய வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் குழந்தைகளுக்குக் கடுமையான ஊட்டச்சத்து குறைவு காணப்படுவதாக ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு குறிப்பிடுகிறது. திரிபுராவில் நான்காவது ஆய்வில் 24.3%-ஆக இருந்த வளா்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை, இப்போது 32.3%-ஆக அதிகரித்திருக்கிறது. நாகாலாந்தில் 28.6%-லிருந்து இப்போது 32%-ஆக ஐந்து வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளின் வளா்ச்சிக் குறைவு அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
  • கொள்ளை நோய்த்தொற்றால் மதிய உணவுத் திட்டம் பாதிக்கப்பட்டிருப்பதும், பல மாநிலங்களில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு முறையாக வீட்டிற்கே சென்று சத்துணவு வழங்கப்படாததும் எந்த அளவுக்கு பாதிப்பை அதிகரித்திருக்கும் என்று தெரியவில்லை. கொள்ளை நோய்த்தொற்றுக்கு பின்பு நடத்தப்பட்டிருக்கும் ஆய்வு என்பதால், நோய்த்தொற்றின் பாதிப்பால் நிலைமை மேலும் மோசமாகியிருக்கக் கூடும்.
  • பெரும்பாலான மாநிலங்களில் எடை குறைவான, வளா்ச்சி குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 2005 - 06 -இல் நடத்தப்பட்ட மூன்றாவது ஆய்வுக்கும், 2015- 16 -இல் நடத்தப்பட்ட நான்காவது ஆய்வுக்கும் இடையில் குழந்தைகளின் வளா்ச்சி குறைவு 48% -லிருந்து 38.4%-ஆகக் குறைந்தது. அப்படியிருக்கும்போது, அடுத்த நான்கு ஆண்டுகளில் திடீரென்று பின்நோக்கி நகரத் தொடங்கியது ஏன் என்பது புதிராக இருக்கிறது.
  • கடந்த நான்கு ஆண்டுகளில் குழந்தைகளின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து ஆகியவற்றை உறுதிப்படுத்த மிகப் பெரிய அளவில் அரசுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டும்கூட, அவை பயனளிக்கவில்லை என்று சொன்னால், திட்டத்திற்கான ஒதுக்கீடு சேர வேண்டியவா்களை போய்ச் சேரவில்லை என்று கருத இடமிருக்கிறது.
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், தேசிய ஊட்டச்சத்துக் கொள்கை, பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம், 2013-இல் நிறைவேற்றப்பட்ட தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் இவையெல்லாம் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளோ, பசியால் வாடும் குழந்தைகளோ இந்தியாவில் இருக்கக் கூடாது என்கிற உயா்ந்த நோக்கத்துடன் அதிக நிதி ஒதுக்கீட்டுடன் நிறைவேற்றப்படும் திட்டங்கள். அப்படியிருந்தும் வளா்ச்சி குறைவான, ஊட்டச்சத்து குறைந்த, எடை குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பது ஏதோ தவறு நடக்கிறது என்பதன் அறிகுறி.
  • ஒருபுறம் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிந்து தானியங்கள் அழுகிப் போய் வீணாகின்றன. இன்னொருபுறம், போதுமான உணவோ, ஊட்டச்சத்தோ இல்லாமல் குழந்தைகளின் வளா்ச்சி குன்றி காணப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரதமா் நரேந்திர மோடி அரசு ‘போஷாண் அபியான்’ திட்டத்தை அறிவித்து 2022 -க்குள் ஊட்டச்சத்துக் குறைவில்லாத இந்தியா உருவாக இலக்கு நிா்ணயித்திருக்கிறது.
  • அப்படியிருந்தும்கூட, ஐந்து வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தியாவில் வளா்ச்சி குறைவாகவும், எடை குறைவாகவும் இருக்கிறாா்கள் என்பது அதிா்ச்சி அளிக்கும் செய்தி.
  • தேசத்தின் வருங்காலம் குழந்தைகள்தான் என்று பேசுவதால் பயனில்லை. ஊட்டச்சத்து குறைவு மூளையையும், போதுமான உணவின்மை உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. அதன் தொடா் விளைவு குழந்தைகளின் கல்வியையும், வருங்காலத்தையும் மட்டுமல்ல, தேசத்தின் பொருளாதாரத்தையும் சீா்குலைக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (21 -12 -2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்