TNPSC Thervupettagam

எச்சரிக்கை, அழிவின் விளிம்பில்!

June 13 , 2024 18 days 57 0
  • நகர்மயமாதலின் நேரடி விளைவாக மரங்கள் பலியாகின்றன. மனித இனத்தின் வளர்ச்சிக்காகவும், தேவைக்காகவும் மரங்கள் அழிக்கப்படுவதன் உடனடி விளைவாக பாதிக்கப்படுபவை பூச்சி இனங்களும், பறவை இனங்களும் என்றால் அதன் தொடர் விளைவாக புவி வெப்பமயமாவது அதிகரிக்கிறது.
  • இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களும் மரங்கள் அழிக்கப்பட்டதால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்கின்றன. நகர்மயமாதலுக்காக குளங்களும் ஏரிகளும் ஆக்கிரமிக்கப்படுவதும், மரங்கள் வெட்டப்படுவதும் ஏற்படுத்தும் பாதிப்புகள் சாதாரணமானவை அல்ல. அதன் விளைவாக சுற்றுச்சூழல் பாதிப்பும், சூழலியல் பாதிப்பும் மீட்டெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
  • நகர்மயமாதல் என்பது மனித இன வளர்ச்சியின் நீட்சி. அதிகரித்த மக்கள்தொகையும், அறிவியல் வளர்ச்சியால் கிடைக்கும் வசதிகளும், பொருளாதார மேம்பாட்டால் உயர்ந்திருக்கும் வாழ்க்கைத் தரமும் தவிர்க்க இயலாதவை. அகலமான சாலைகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொழுதுபோக்குக்கான வணிக வளாகங்கள் உள்ளிட்டவை வளர்ச்சியின் அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றன.
  • இவற்றுக்காக மனித இனம், குறிப்பாக வருங்கால சந்ததியினர் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். புவி வெப்பமயமாதல் அதிகரிக்க அதிகரிக்க, சுவாசிப்பதற்கு நல்ல காற்றும், குடிப்பதற்கு சுத்தமான தண்ணீரும் கிடைக்காத நிலை ஏற்படும் என்பது குறித்த கவலை இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
  • கடந்த மாதம் தில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் சாலையை மேம்படுத்த ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டன. அதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார். ஆரவல்லி மலைத் தொடரின் நீட்சியாக இருக்கும் அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைக்கப்படுவதை தனது மனுவில் சுட்டிக்காட்டி இருக்கிறார் அவர்.
  • இது ஏதோ தில்லியில் மட்டும் நடக்கும் நிகழ்வாக நாம் கடந்துபோக முடியாது. இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் அரசுத் துறைகளே வளர்ச்சி என்கிற பெயரில் மரங்களை வெட்டுவது வழக்கமாக மாறியிருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை தாக்குவதும், பலர் உயிரிழப்பதும், மரங்கள் வெட்டப்பட்டு நகர்மயமாவதன் நேரடி விளைவு என்பதை இன்னும்கூட நாம் உணர்வதாகத் தெரியவில்லை.
  • தென்கிழக்கு ஆசியாவுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய இயக்குநர் சைமா வஜாத் இது குறித்து தெரிவித்திருக்கும் கருத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் ஏனைய பிராந்தியங்கள் எல்லாவற்றையும்விட தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஆண்டுதோறும் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று அவர் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல், பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படுவதால் சுகாதாரம், பொருளாதாரம், வாழ்வாதாரம் மூன்றுமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன என்றும் தெரிவிக்கிறது அவரது அறிக்கை.
  • விளை நிலங்களை மீட்பது, பாலைவனமாவதைத் தடுப்பது, வறட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவை உடனடி கவனம் பெற வேண்டும். கடந்த சில மாதங்களில் வெளியாகும் அறிக்கைகளின் அடிப்படையில் பார்க்கும்போது நமது கவலை அதிகரிக்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பான இதழ் ஒன்று இது குறித்து ஆய்வு நடத்தி இருக்கிறது. அதில் இந்தியா தொடர்பான குறிப்புகள் முதன்மை பெறுகின்றன.
  • 2018 முதல் 2022 வரையிலான ஐந்து ஆண்டுகளில் தோட்டங்களில் (எஸ்டேட்கள்) காணப்பட்ட 50 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் அழிந்திருக்கின்றன. அதற்கு பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. நாளுக்குநாள் விவசாயத்தில் நிகழும் மாற்றங்களும் காரணம். தோட்டங்கள் அழிக்கப்பட்டு நெல் பயிருக்கான விளைநிலங்களாக மாறியிருப்பது; தேக்கு உள்ளிட்ட மரங்களுக்கு பதிலாக பழத் தோட்டங்கள்; பணப் பயிர்கள் ஆகியவற்றுக்கு மாறியிருப்பது போன்றவை சுட்டிக் காட்டப்படுகின்றன.
  • நீண்ட காலமாக உயரமாக வளர்ந்த மரங்கள் அழிக்கப்பட்டு, குறைந்த சூழலியல் பலனை அழிக்கும் மரங்கள் நடப்படுவதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. வேப்ப மரம், புளிய மரம், ஆலமரம் உள்ளிட்ட நிழல் கொடுக்கும் பெரிய மரங்கள் பணப் பயிர்களைப் போல பயனளிப்பதில்லை என்பதால் அழிக்கப்படுகின்றன. அவை அழியும்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் சூழலியலும், பல்லுயிர் பெருக்கமும் பாதிக்கப்படுவதை நாம் கவனத்தில் கொள்வதில்லை.
  • இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் கால் பங்குக்கும் அதிகமான பூமி பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காப்புக் காடுகளை உருவாக்குவது என்பது அடர்ந்த காடுகளில் உள்ள மரங்களுக்கு மாற்றாக மாட்டா.
  • காடுகள் அழிக்கப்படுவதால் பூச்சி இனங்கள், பறவை இனங்கள், விலங்கினங்கள் உள்ளிட்டவற்றின் வாழ்வாதாரம் அழிந்து இன அழிப்புக்கு உள்ளாகின்றன. வேறு வழியில்லாமல் மனிதர்கள் வாழும் பகுதிகளில் விலங்கினங்கள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு வளர்ச்சிப் பணிகள் என்கிற பெயரில் காடுகள் அழிக்கப்படுவது உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்.
  • நீர் மேலாண்மை, வறட்சியை எதிர்கொள்ளும் பயிர்கள், பாலைவனமாவதை தடுக்கும் முயற்சிகள் ஆகியவற்றை முனைப்புடன் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் தலையீடுகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களையும், விதிமுறைகளையும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் இது.

நன்றி: தினமணி (13 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்