TNPSC Thervupettagam

எட்வர்ட் செய்த் பொதுமன்றச் சிந்தனையாளர்களின் ஆதர்சம்

September 25 , 2023 471 days 307 0
  • எட்வர்ட் செய்த் (Edward Said, 1935-2003) ஒரு புகழ்பெற்ற பாலஸ்தீனிய-அமெரிக்க பொதுமன்றச் சிந்தனையாளர்-பேராசிரியர். இந்த ஒரு வரி அறிமுகத்திலேயே இரண்டு இரட்டை அடையாளங்களை அவருக்கு வழங்க வேண்டியுள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
  • முதல் இரட்டை அடையாளம் பண்பாடு, மதம், தேசம் தொடர்பானது. செய்த் பாலஸ்தீனத்தில் பிறந்தவர்; அரபியர். பாலஸ்தீனிய வம்சாவழி என்றாலும், அவர் ஒரு கிறிஸ்துவர். அவர் தந்தை முதலாம் உலகப் போரில் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியதால், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். அதனால் செய்த்கெய்ரோவிலும் பின்னர் அமெரிக்காவிலும் வளர்ந்தவர். தனது பொதுக்கள வாழ்வு முழுவதிலும் நியூ யார்க்கில் வசித்தவர்.
  • அந்த நகரத்திலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நாற்பதாண்டுக் காலம் ஆங்கில இலக்கியம், ஒப்பியல் இலக்கியத் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர் (அதனால் எனக்கு அவரைக் காணும், அவர் உரைகளைக் கேட்கும் நல்வாய்ப்பும், அவர் இறந்த அன்று வளாகத்துப் புல்வெளி ஒன்றில் அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடியவர்களுடன் இணையும் சந்தர்ப்பமும் அமைந்தன).
  • இப்படி, பாலஸ்தீனியர்-அமெரிக்கர், அரபியர்-கிறிஸ்துவர் ஆகிய இரட்டை அடையாளங்களைக் கொண்டவர் செய்த். அவர் பெயரிலேயே முதற்பெயர் ஆங்கிலேயர்கள் அதிகம் வைத்துக்கொள்ளும் எட்வர்ட் என்ற பெயர்; அவரது இரண்டாவது மரபுப் பெயர் செய்த் என்ற அரபியப் பெயர்.
  • இந்த இரட்டை அடையாளத்தின் முழு வெளிப்பாடாக அமைவது அவரது பொதுமன்றச் சிந்தனையாளர், பேராசிரியர் என்ற இரட்டை அடையாளம். எட்வர்ட் செய்த் அவருடைய இரட்டைச் சுயத்தைத் தகவமைத்த அரசியல் பண்பாட்டு வரலாற்றை ஆய்வுசெய்தபோது, ஐரோப்பிய காலனி ஆதிக்கம் நவீன உலகைக் குறித்த புரிதலை எப்படிக் கட்டமைத்தது என்பது குறித்தும் பாலஸ்தீனியப் பிரச்சினை குறித்தும் பொதுக்களத்தில் தொடர்ந்து எழுதுபவரானார். அதனால்தான் அவர் மறைந்த இருபதாவது நினைவு நாளில் தமிழில் இந்தக் கட்டுரை வெளியாகிறது. ஏனெனில் அவர் சிந்தனை நம் பின்காலனியச் சமூக வரலாற்றுக்கும் வெளிச்சம் பாய்ச்சவல்லது.
  • உலகெனும் பிரதியும் பிரதியின் உலகத்தன்மையும்: உலக வாழ்வு, பிரதிகளை உருவாக்குவது, பயில்வது, அதன் மூலம் உலகப் பார்வை பெறுவது, அந்தப் பார்வையின் அடிப்படையில் செயல்படுவது, அந்தச் செயலின் விளைவுகள் உலக வாழ்வைத் தகவமைக்க, அது மீண்டும் பிரதியாக்கத்தில் வேறுபாடுகளை உருவாக்க, உலக வாழ்வும் பிரதியாக்கங்களுமான சுழற்சி குறித்து செய்த் தீவிரமாகச் சிந்தித்தார்.
  • அவரதுநூலான ‘உலகம், பிரதி, விமர்சகர்’ [The World, The Text, and the Critic (1983)] பிரதிகளின் இந்தக்கலாச்சார, அரசியல், வரலாற்று, பண்பாட்டுச் செயல்பாட்டுத் தன்மையை விரிவாக அலசும் கட்டுரைகளைக் கொண்டது. இதில் என்ன முக்கியத்துவம் என்றால், பிரதி தனது கட்டுமானம், உட்கூறுகள் மூலம் மட்டுமே ஒரு செய்தியைச் சொல்கிறது என்பதில்லாமல், அது உருவாகும் பின்னணியுடன் இணைத்துப் பார்க்கும்போது அதன் உலகத்தன்மை, அதாவது உலக வாழ்விலிருந்து உருவாகி அதனைத் தகவமைக்கும் தன்மையைக் குறிப்பதாகிறது.
  • செய்த்தின் இவ்வாறான பிரதியியல் நோக்கு, உலக வாழ்வையுமே ஒரு பிரதியாக்கமாகப் பார்க்கச்செய்கிறது. ஒவ்வொருக்குள்ளும் இயங்கும் பண்பாடுகள்,அதன் உள்முரண்கள் எல்லாமே ஒரு பிரதியாக்கம்தானே. உலகம் ஒரு நாடக மேடை என்று சொல்வதைப் போல, உலக வாழ்க்கை சொற்கள், செயல்களின் இணைவால் நிகழ்த்தப்படுகிறது, பிரதியாக்கம் செய்யப்படுகிறது என்பதுதானே முழுமையான பார்வையாக இருக்கும். இதனைச் சரியாகச் சிந்தித்தால் செய்த் தன் இரட்டைப் பண்பாட்டுச் சுயத்தை அவதானிப்பதிலிருந்து, பிரதியாக்கச் செயல்பாடுகளின் விமர்சனத்தை உருவாக்கிக்கொண்டதாகக் கூறலாம்.

கீழைத்தேயவியல்

  • செய்த்தின் புகழுக்கு முக்கிய அச்சாணியாக இருப்பது அவர் 1978இல் எழுதிய ‘கீழைத்தேயவியல்’ (Orientalism) என்ற நூலாகும். அது ஐரோப்பா எப்படி தன்னுடைய அறிதல் முறையின் மூலம் கீழை நாடுகள் பற்றிய ஒரு சொல்லாடலை, அவை குறித்த அறிவாகக் கட்டமைத்தது என்பதைக் குறித்தது. இந்தச் செயல்பாடுகள் ஒருபுறம் அறிவார்ந்த ஆய்வுகளாக அமைந்தாலும், காலனி ஆதிக்கம் என்கிற வரலாற்றுப் பின்புலத்தினால் அமைக்கப்பட்ட களத்திலேயே நடந்தது என்பது முக்கியம்.
  • அதன் காரணமாக ஐரோப்பா அல்லது ‘மேற்கு’, காலனி நாடுகள் அல்லது ‘கிழக்கு’ என்பதிலிருந்து தன்னை வேறுபட்டதாகவும், கிழக்கை அறிந்து அதனை ஆய்வுசெய்து எடுத்தியம்பும் ஆற்றல் கொண்டதாகவும் நிறுவிக்கொண்டதில், கிழக்கின் மீதான அதன் ஆதிக்கத்தை முழுமையாக்கிக் கொண்டது என்பதுதான் பிரச்சினை.
  • இந்த நடவடிக்கையை செய்த் விவரிப்பதில், இத்தாலிய மார்க்ஸியர் அந்தோனியோ கிராம்சி (1891-1937) விரிவாக்கம் செய்த கருத்தியல் மேலாதிக்கம்-ஹெஜிமனி (hegemony) என்ற கருத்தாக்கமும் பிரெஞ்சுதத்துவவாதி மிஷெல் ஃபூக்கோ (1924-1984) விரிவாக்கம் செய்த சொல்லாடல்-டிஸ்கோர்ஸ் (discourse) என்றகருத்தாக்கமும் இணைகின்றன எனலாம்.
  • அதாவது, மேற்கு தன்னுடைய சொல்லாடலின் மூலமாகக் கட்டமைத்துக்கொண்ட கிழக்கு என்னும் அடையாளமும், தனது மேற்கத்திய சுயம் என்கிற அடையாளமும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உலகச் சிந்தனையின் கருத்தியல் மேலாதிக்கமாவதைப் பார்க்கலாம்.
  • உதாரணமாக, இந்தியாவில் சம்ஸ்கிருதம்தான் இந்தியாவின் பண்பாட்டு மூலம் என்கிற கருத்தைக் கீழைத்தேயவியல் நோக்குதான் நிறுவியது. அதன் மூலம் அமைந்த கருத்தியல் மேலாதிக்கம் காலனிய ஆட்சியின் அடிப்படையாக அமைந்தது; உதாரணமாக, சம்ஸ்கிருத தர்ம சாஸ்திரங்கள், வர்ண தர்மம் அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் பொதுவான இந்துச் சட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டன. காலனியச் சொல்லாடல் உருவாக்கிய இதுபோன்ற நடைமுறைகள் இன்றும் நமது பின்காலனிய வாழ்க்கையைத் தகவமைப்பதைக் காணலாம்.
  • செய்த்தின் விரிவான ஆய்வு எப்படி அரபியர்களையும், இஸ்லாமியர்களையும் மேற்கத்தியச் சொல்லாடல் கட்டமைத்தது என்பதையும் அதனடிப்படையில் எப்படி பாலஸ்தீனியப் பகுதியில் வாழ்ந்த மக்களைப் பற்றிய கவலையே இல்லாமல் அங்கே யூதர்களுக்கான நாடாக இஸ்ரேலை உருவாக்குவது சாத்தியமானது என்பதையும் விளக்குவதாக அமைந்தது.
  • குறிப்பாகச் சொன்னால், 1967இல் நடந்த அரபிய-இஸ்ரேல் போரில் இஸ்ரேலின் வெற்றியை நாகரிகத்தின் வெற்றி என்று அமெரிக்க ஊடகங்கள் வர்ணித்த விதமே செய்த்தின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. ஆனால், அவர் ஒரு சாராம்ச அடையாளவாதியாக மாறவில்லை. எல்லா அதிகாரக் கட்டுமானங்களுக்கும் வெளியே நின்று அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசும் பொதுமன்றச் சிந்தனையாளராகவே தன்னை மாற்றிக்கொண்டார்.

கூழாங்கல் என்கிற குறியீடு

  • செய்த்தின் வாழ்க்கையில் நடந்த இந்தச் சுவாரசியமான சம்பவம் அவரை முழுமையாக அறிந்துகொள்ள முக்கியமானது. பாலஸ்தீனிய தேசியக் கவுன்சிலில் சுயேச்சை உறுப்பினராக 1977 முதல் 1991 வரை இருந்த அவர், ஒரு நாடு-இரு அரசுஎன்ற தீர்வையே இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்குப் பரிந்துரைத்தார்.
  • யாசர் அராஃபத்துடன் ஏற்பட்ட சிலகருத்து வேறுபாடுகளால் அதிலிருந்து விலகினார். பின்னர் 2000ஆம் ஆண்டு தனது மகனுடன் பாலஸ்தீனப்பகுதியில் பயணம் செய்த செய்த், லெபனான்-பாலஸ்தீனிய எல்லையில் எழுப்பப்பட்டிருந்த இஸ்ரேலின் முள்கம்பி வேலியை நோக்கி ஒரு கூழாங்கல்லை அவர் மகனுடன் போட்டி போட்டு வீசினார்.
  • அவர் அவ்வாறு வீசும் ஒளிப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் வீசிய சிறிய கல்கூட யாருமற்ற வெளியை நோக்கி முள்கம்பி வேலிக்கு தொலைவிலிருந்தே வீசப்பட்டது என்றாலும், அவர் ஒரு தீவிரவாதியாகச் சித்தரிக்கப்பட்டார். அன்றிருந்த கொலம்பியா பல்கலைக்கழக பிரவோஸ்ட் (கல்வியியல் அதிகாரி), அவர் செய்தது குறியீட்டுச் செயல்பாடே என்று கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தார்.
  • ஆனால், ஆஸ்திரியாவில் இருந்த பிராய்டு கழகம் அவருக்குச் சொற்பொழிவாற்ற கொடுத்திருந்த அழைப்பைத் திரும்பப் பெற்றது. அறுபதாண்டு கால இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தான் வீசிய சிறிய கூழாங்கல்லுக்குக் குறியீட்டு மதிப்பை அவரால் உருவாக்க முடிந்தது. உலகெனும் பிரதியில் எதிர்ப்பின் சிறு கவிதை அது.
  • செப். 25: எட்வர்ட் செய்த் 20ஆம் நினைவு நாள்

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்