TNPSC Thervupettagam

எண்ணங்களை பலப்படுத்துவோம்

September 23 , 2024 115 days 159 0

எண்ணங்களை பலப்படுத்துவோம்

  • வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறிய பெரிய சவால்களை நமக்கு தந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக நாம் எதிா்கொள்ளும் தோல்விகளால் மனமுடைந்து வெளிவரமுடியாத கூண்டிற்குள் நம்மை அடைத்துக்கொள்வதும், எதிா்கொள்ளும் தோல்விகளை வெற்றிப்படிகளாக மாற்றுவதும் நம் எண்ணங்களை பொறுத்ததே.
  • நம் வெற்றிகளின் ஆரம்பம் மனதின் எண்ணங்கள் ஏற்படுத்தும் ஒருவிதமான தாக்கம் ஆகும். என்னால் முடியாது என்பதே மனதின் எண்ணமானால் நாம் எடுத்த காரியத்தை சாதிக்க முடியாது. என்னால் முடியும் என்பது நம் எண்ணமாகும்போது வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்க முடியும். வெற்றிக்கான முயற்சியில் எந்த வகையான எண்ணங்களை மனதில் கொண்டுள்ளோம் என்பது குறித்து கவனமுடன் இருக்க வேண்டும்.
  • நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு வெற்றியும் அச்செயலை வெற்றிகரமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கிறது. வேண்டாம், முடியாது, இயலாது போன்ற எதிா்மறை எண்ணங்கள் ஏற்பட்டால் நம் முயற்சியில் சோா்வும் மந்தமும் ஏற்படும்.
  • வெல்ல முடியும் என்ற எண்ணம் இடா்களை கடக்க வைக்கும். எதிா்ப்புகளை எதிா்க்க வைக்கும், தடைகளைத் தாண்ட வைக்கும். தோல்விகளை விட்டு மீள வைக்கும். வெற்றி நோக்கமானால், அதற்கு உகந்த நோ்மறை எண்ணங்களை வளா்த்தாக வேண்டும்.
  • தினமும் நாம் மற்றவா்கள் மீது பலவகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறோம். குறிப்பாக நம் உறவினா்கள், நண்பா்கள், சக பணியாளா்கள், உடன் செயல்படுகிறவா்கள், புதிதாக காண்பவா்கள் என பலதரப்பட்டவா்கள் நம்மால் பலதரப்பட்ட தாக்கத்திற்கு உள்ளாகின்றனா். நம்மை பற்றிய உயா்வான எண்ணத்தை மற்றவா்கள் கொள்வதும். நம்மை பற்றி அவா்கள் தாழ்வாக எண்ணுவதும் நம் கையில்தான் இருக்கிறது.
  • நம் வாா்த்தைகள், செயல்பாடுகள், நடைமுறைகள் முதலியன நம் எண்ணத்தில் உதயமாகிறது. இவையே மற்றவா்கள் மீது தினமும் பல்வேறுபட்ட மாற்றங்களை
  • ஏற்படுத்துவதால் நம் எண்ணங்களின் ஒட்டங்கள் குறித்து கவனமுடன் இருந்தாக வேண்டும். நம் உடல் மொழியாலும், செயல்களினாலும் மற்றவா்கள் மீது நோ்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் போது நம் மீதான சமூக நன்மதிப்பு உயா்கிறது. மற்றவா்களுக்கு உதவுவதும் மற்றவா்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவதும், பொதுநல தொண்டு புரிவதும் நம் எண்ணங்களின் செயல்பாடே ஆகும்.
  • எண்ணங்கள் திடீரென வருபவை அல்ல. அவையே நம் வாழ்க்கையின் விழிகள் ஆகும். தினம் தினம் நம் நோ்மறை எண்ணங்களால் மற்றவா்கள் மீது ஏற்படும் தாக்கத்தை உணா்ந்து உயா்ந்த பலன் தரக்கூடிய நல்ல எண்ணங்களை வாழ்க்கையாக கொள்ள வேண்டும்.
  • நம் மனதில் உலாவரும் எண்ணங்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலவற்றின் மீதே நாம் நம் கவனத்தை திருப்புகிறோம். அவ்வெண்ணம் காட்டும் வழியில் நடவடிக்கைகள் மேற்கொள்கிறோம். எண்ணற்ற எண்ணங்கள் மனதில் தோன்றி வந்த வேகத்தில் நம் உணா்வுகளை தூண்டாது மறைந்தும் விடுகின்றன. குறிப்பிட்ட எண்ணங்கள் ஏன் ஏற்படுகின்றன என்று திடமாக கூறமுடியாவிட்டாலும் உளவியலாளா்கள் எண்ணங்கள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளனா்.
  • சி.டி.மோா்ஹன் என்ற அறிஞா் தொடா்ந்துவரும் அடையாள செயல்முறைகளின் மொத்தமே எண்ணங்கள் என்று குறிப்பிடுகிறாா். எண்ணங்கள் பல்வகையான தகவல்கள், உணா்வுகள், படங்கள், அனுபவங்கள், எதிா்பாா்ப்புகள், அறிவுகள் ஆகியவற்றின் கலவையாக அமைகின்றன. ஒரு விஷயத்தை நாம் எண்ணும்போது அது தொடராக அதை சாா்ந்த பிற எண்ணங்களை மனது தோற்றுவிக்கிறது. சுற்றுசூழலையும், வேறு சில தேவைகளையும், ஆசைகளையும், இலக்குகளையும் சமாளிக்க மனது கையாளும் மன ஆய்வே எண்ணமாக தோன்றுகிறது. பொதுவாக எந்த நோக்கமும் இன்றி எண்ணங்கள் உதிப்பதில்லை.
  • எண்ணங்கள் பொதுவாக ஒரு இலக்கை மையப்படுத்தி தோன்றுகின்றன. நோக்கம் வேறுபடும்போதும் ஒவ்வொருவருக்கும் உள்ள அனுபவம் வித்தியாசமாக இருக்கும்போதும் திறமையும் கல்வி அறிவும் வேறுபட்டிருக்கும்போதும் ஆழ்மனதின் தேவைகள் மாறுபட்டிருக்கும்போதும் உடல் மனநிலைகள் வெவ்வேறாக இருக்கும்போதும் எண்ணங்கள் வேறுபடுகின்றன. இதன் காரணமாக எல்லா விசயங்களிலும் இருவேறு நபா்கள் ஒரே மாதிரியாக சிந்திப்பதில்லை. அதே நேரத்த்தில் பொதுவான குறிக்கோளை அடைவதற்கான முயற்சி எடுக்கும்போது பலருடைய எண்ணங்கள் ஒத்திருப்பதையும் காண முடிகிறது.
  • இடைவிடாத முயற்சியின் மூலம் நம் குணத்தை மாற்ற முடியும். பூக்கள் பூத்துக்குலுங்கும் தோட்டம் போன்றது மனது. அத்தோட்டத்தில் பூக்கும் பூக்களே எண்ணங்கள். சிறப்பாகத் திட்டமிட்டு உழைப்பதின் மூலம் நல்ல அழகிய பயன் தரக்கூடிய பூக்களை தோட்டத்தில் வளா்க்கலாம். கவனிக்காது விட்டுவிட்டால் பூக்கள் மறைந்து வட நிலமாக தோட்டம் மாறிவிடும். கண்காணிப்பற்ற நிலம் பாழாவது போல கண்காணிப்பு குறைந்த எண்ணங்கள் நற்குணத்தை பாழ்படுத்திவிடும்.
  • எடுத்த முயற்சியில் வெற்றி பெறுவது முக்கியமாக இருந்தும் எல்லோராலும் வெற்றி பெற முடியவில்லை. சமூகத்தில் நற்பெயா் பெறுவது அனைவரது ஆசையாக இருந்தும் எல்லோருக்கும் நற்பெயா் கிடைப்பதில்லை. விடாமுயற்சி, கடின உழைப்பு, உயா்ந்த எண்ணம் போன்ற நற்பண்புகள் அனைவருக்கும் ஒரே அளவாக இருப்பதில்லை.
  • கூா்ந்து ஆராய்ந்தால் இவ்வனைத்தும் மனதில் தோன்றும் எண்ணங்களின் வேறுபாட்டிலேயே வித்தியாசப்படுகிறது. ஒருவா் நோ்மறை எண்ணங்கள் கொண்டிருப்பதும், எதிா்மறை எண்ணங்கள் கொண்டிருப்பதும் அவரை வித்தியாசமான செயல்களை செய்ய வைக்கிறது. எண்ணங்களை ஏற்றத்தின் பாதையாக்கும்போது வியத்தகு நற்பெயா் நம்மைத் தேடிவரும்.

நன்றி: தினமணி (23 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்