TNPSC Thervupettagam

எண்ணூர் அமோனியா கசிவு: பொதுமக்கள் பாதுகாப்பில் சமரசம் கூடாது

February 12 , 2024 342 days 190 0
  • சென்னை எண்ணூரில் தனியார் உர உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட அமோனியா கசிவு தொடர்பாக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகியிருக்கும் நிலையில், அப்பகுதி மக்கள் அந்த அறிக்கையை ஏற்க மறுத்ததுடன் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
  • 2023 டிசம்பர் 26ஆம் தேதி நள்ளிரவில், எண்ணூர் பெரிய குப்பத்தில் அமைந்துள்ள தனியார் உர உற்பத்தி ஆலைக்குச் செல்லும் அமோனியா வாயு கசிந்ததில், அந்தப் பகுதி மக்கள் பலருக்கும் மூச்சுத் திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டன. இந்தச் சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய தமிழ்நாடு அரசு அமைத்த 7 பேர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியாகியுள்ளது.
  • மிக்ஜாம் புயல் காரணமாகக் குழாயைச் சுற்றியுள்ள கிரானைட் பாறைகள் நகர்ந்து, குழாயில் சேதம் ஏற்பட்டு வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்பது நிபுணர் குழுவின் துணிபு. ‘இப்போது உள்ள குழாய்க்கு மாற்றாகப் புதிய குழாய் அமைக்க வேண்டும்; குழாயில் கசிவு ஏற்பட்டால், அதை அந்தப் பகுதி மக்கள் அறியும் வகையில் சென்சார்கள் அமைக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
  • அதுபோல் சுற்றுச்சூழல் இழப்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ரூ.5.92 கோடி அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை சுட்டுகிறது. நிறுவனத்துக்கு எதிராகச் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
  • ஆனால் இந்த அறிக்கையை அப்பகுதி மக்கள் ஏற்க மறுக்கின்றனர். 67 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம் கடல் பகுதியில் உற்பத்திசெய்துவருவதற்கான பாதுகாப்புச் செயல்பாடுகளைக் கடைப்பிடிப்பது குறித்துத் தெளிவான கருத்து அறிக்கையில் இல்லை என எதிர்ப்பாளர்கள் கருதுகிறார்கள்.
  • அமோனியா கசிவு சென்சார்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், எச்சரிக்கை சைரன்களை அமைத்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளில் இடம்பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும், இத்தனை ஆண்டுகளாக இத்தகைய அடிப்படை ஏற்பாடுகளைக்கூட அந்நிறுவனம் செய்ததா இல்லையா என்பதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிசெய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுகிறது.
  • தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தாமாக முன்வந்து இந்தச் சம்பவத்தில் நடத்திய விசாரணையில், இந்த விபத்துக்கு முழுக் காரணம் ஆலையின் கவனக்குறைவுதான் எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசு இந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. அதை நடைமுறைப்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.
  • தொழில் வளர்ச்சி என்ற பெயரில், மக்களின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்ற உண்மையை வலியுறுத்தும் அதேசமயம், சுயநல அடிப்படையில் மிரட்டிப் பேரம் பேசி, தொழிற்சாலை நிர்வாகங்களிடம் லாபம் பெறத் துடிக்கும் தீயசக்திகளின் தூண்டுதல் இந்த விவகாரத்தில் இருக்கிறதா என்பதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
  • அவ்வாறு சுயநலத்துக்காகத் தூண்டும் சக்திகளின் வலையில் விழுந்துவிடாமல், எது சரி, எது தவறு என்ற தெளிவான பார்வையுடன் பொதுமக்கள் தங்களது நடவடிக்கைகளைத் தொடர்வதே சரி. அதேபோல, தொழில் வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று முரணானதாக அமையாமல் உறுதிசெய்ய வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்