- காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி 18வது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். தங்கள் கட்சி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அவரை நியமிப்பதாக காங்கிரஸ் கட்சி சார்பில், இடைக்கால மக்களவைத் தலைவர் பத்ருஹரி மஹதாபுக்குக் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
- நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மிகவும் முக்கியமானது. நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர், மத்திய புலனாய்வு இயக்குநரகம் (சிபிஐ), லோக்பால், முதன்மை கண்காணிப்பு (ஊழல் தடுப்பு) ஆணையர், தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் உயர்நிலைக் குழுவில், உறுப்பினராகச் செயல்பட வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர்.
‘நிழல் பிரதமர்’
- இந்திய நாடாளுமன்ற மக்களவைச் செயலகம் தயாரித்துள்ள ‘நாடாளுமன்ற செயல்பாடுகள் – நடைமுறைகள்’ என்ற வழிகாட்டு நூலின்படி, அங்கீகாரம் பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் என்பவர், ‘நிழல் பிரதமர்’ ஆகச் செயல்படுவார். பதவியில் இருக்கும் அரசு பெரும்பான்மை வலிமையை இழந்து ஆட்சி கவிழும்போதோ, அல்லது ஏதாவது ஒரு காரணத்துக்காக தானாகவே பதவி விலகும்போதோ, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பிலோ அல்லது நிதிநிலை அறிக்கை முன்கூட்டியே கசிவதாலோ பதவி விலக நேரும்போதோ - மாற்று அரசை அமைக்கும் உரிமை பெற்றவர் எதிர்க்கட்சித் தலைவர்.
- தேசிய நலன் சார்ந்த விவகாரங்களில் எதிர்க்கட்சித் தலைவர் மிகவும் கவனமுடன் பேச வேண்டும், செயல்பட வேண்டும், அதாவது பிரதமராக இருப்பவர் எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படியே எதிர்க்கட்சித் தலைவரும் கவனமாகச் செயல்பட்டாக வேண்டும்.
புதிய உத்வேகம்
- இந்தியா கூட்டணியின் 234 உறுப்பினர்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி வகிப்பது நாடாளுமன்றச் செயல்பாடுகளுக்குப் புதிய வேகத்தை அளிக்கும். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அவையில் 293 உறுப்பினர்கள் உள்ளனர்.
- கடந்த பத்தாண்டுகளாக ‘அங்கீகரிக்கப்பட்ட’ எதிர்க்கட்சித் தலைவர் என்று யாருமில்லை. அதிக உறுப்பினர்களைக் கொண்ட தனிப்பெரும் எதிர்க்கட்சியில் அதற்கான உறுப்பினர் எண்ணிக்கை இல்லை. ஆனால், 2014இல் மல்லிகார்ஜுன் கார்கேவும் 2019இல் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும் மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் என்ற வகையில் எதிர்க்கட்சித் தலைவர்களாகச் செயல்பட்டனர்.
- காந்தி – நேரு குடும்பத்தில் எதிர்க் கட்சித் தலைவராகச் செயல்படும் மூன்றாவது தலைவர் ராகுல் காந்தி. இதற்கும் முன்னால் ராஜீவ் காந்தி 1989 முதல் 1990 வரையிலும் சோனியா காந்தி 1999 முதல் 2004 வரையிலும் எதிர்க்கட்சித் தலைவர்களாகப் பதவி வகித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவருக்கு சில கடமைகளும் பொறுப்புகளும் உரிமைகளும் உள்ளன.
- மக்களவையில் முதல் வரிசையில் மக்களவை துணைத் தலைவர் (துணை சபாநாயகர்) இருக்கைக்கு அருகில் எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்கை ஒதுக்கப்படும். நாடாளுமன்றத்தில் தனி அறையும் சிறிய செயலக வசதியும் செய்து தரப்படும். அரசு சார்பிலான சடங்குகளின்போது எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்கை வசதி உள்ளிட்ட உரிமைகள் உண்டு.
- மக்களவைத் தலைவர் (சபாநாயகர்) தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிரதமருடன் சேர்ந்து அவரை அவருடைய இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர்த்த வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இணைந்த கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தும்போது, எதிர்க்கட்சித் தலைவருக்கு முதல் வரிசையில் இருக்கை உண்டு.
யார் எதிர்க்கட்சித் தலைவர்?
- முதலாவது மக்களவையின் தலைவர் ஜி.வி.மவ்லாங்கர் ஏற்படுத்திய நடைமுறை விதிகளின்படி, மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 10%க்கும் மேல் பெற்ற, பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் (543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் குறைந்தபட்சம் 55) எதிர்க்கட்சித் தலைவராகும் தகுதி பெறுகிறார். அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சி, மக்களவைத் தலைவருக்கு இது தொடர்பாக எழுதும் கடிதத்தின் அடிப்படையில் மக்களவைச் செயலக உதவியுடன் சரிபார்த்த பிறகு, மக்களவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தீர்மானித்து அங்கீகரிக்கிறார்.
- நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிகள், 1977 நவம்பர் முதல் நாள் இயற்றப்பட்ட சட்டத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டன. அதற்கும் முன்னால் 1969 டிசம்பர் முதல் 1970 டிசம்பர் வரையில் மட்டும் ‘எதிர்க்கட்சித் தலைவர்’ என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டது.
- எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது 1970 முதல் 1977 வரையிலும் பிறகு 1980 முதல் 1989 வரையிலும் சமீபத்தில் 2014 முதல் 2024 வரையிலும் காலியாகவே இருந்தது.
- காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் 1969இல் பிளவுபட்டபோது ஆளும் தரப்பிலிருந்து விலகிய காங்கிரஸ் உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். அவர்களுடைய பிரிவு ‘நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி (எதிர்ப்பு)’ என்று அங்கீகரிக்கப்பட்டு அதன் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் அங்கீகாரம் பெற்றார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதும் அதுவே முதல் முறை. பக்ஸார் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராம் சுபாக் சிங் என்ற காங்கிரஸ்காரர்தான் அப்படி முதல் ‘எதிர்க்கட்சி’ தலைவரானார். 1970 டிசம்பரில் மக்களவை கலைக்கப்படும்வரையில் அப்பதவியில் இருந்தார் அவர்.
கடமைகளும் பொறுப்புகளும்
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர், மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), அமல் பிரிவு இயக்குநரகம் (இடி) போன்றவற்றின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில், அவரும் உறுப்பினராகச் செயல்படுவார். மக்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை வலு இல்லாததால், முக்கிய பதவிகளுக்கான தேர்வுகள் – நியமனங்களிலும் இதர நடைமுறைகளிலும் ராகுல் காந்திக்கு இனி அதிக செல்வாக்கு இருக்கும். அத்துடன், ஆளும் தரப்பு அத்துமீறிவிடாமல் கட்டுக்குள் வைக்கவும் அவரால் முடியும்.
- ‘எதிர்க்கட்சித் தலைவர் என்றால் - அடுத்து பதவி ஏற்கக் காத்திருக்கும் பிரதமர்’ என்று பொருள், ஆளுங்கூட்டணி ஆட்சியை இழந்தால், மாற்று அரசை அமைக்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரைத்தான் குடியரசுத் தலைவர் முதலில் அழைப்பார் என்கிறார் மக்களவை செயலகத்தில் தலைமைச் செயலராக முன்னர் பதவி வகித்த பி.டி.டி.ஆச்சாரி.
- “பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறையைத்தான் இந்தியாவிலும் பின்பற்றுகிறோம். எதிர்க்கட்சித் தலைவருக்கு இதில் முக்கியப்பங்கு இருக்கிறது. அவர் நிழல் பிரதமராக, அதாவது பிரதமராக இருப்பவரைப் போலவே முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். பிரதமர் அமைத்துள்ள அமைச்சரவையைப் போலவே நிழல் அமைச்சரவையை எதிக்கட்சித் தலைவரும் நியமிக்க வேண்டும். அதில் ஒவ்வொருவருக்கும் முக்கிய துறைகளை ஒதுக்கி அதில் என்ன நடக்கிறது என்று கவனிக்குமாறு ஒருங்கிணைக்க வேண்டும். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுடன் திட்டங்களுக்கு மாற்று திட்டங்களையும் முன்வைக்க வேண்டும், ஆட்சி கவிழும்போது, மாற்று அரசை அமைக்கத் தயாராக இருக்க வேண்டும்” என்கிறார் ஆச்சாரி.
- கடந்த முறை மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தைத் தரத் தவறிய மோடி அரசை கண்டித்து 2019இல் கட்டுரை எழுதினார் ஆச்சாரி. எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது, மக்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு அது தரப்பட்டிருக்க வேண்டும் என்பது அவருடைய வாதம். மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 10% அளவுக்காவது இருந்தால்தான் அதை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க முடியும் என்பது (மவ்லாங்கர் விதியின்படி) பாஜகவின் வாதம்.
நன்றி: அருஞ்சொல் (30 – 06 – 2024)