TNPSC Thervupettagam

எதிர்பார்த்ததுதான்!

May 29 , 2020 1693 days 785 0
  • எதிர்பார்த்தது போலவே எல்லையில் வெள்ளைக் கொடி காட்டி பிரச்னைக்கு தற்காலிகத் தீா்வை ஏற்படுத்தியிருக்கிறது சீனா. இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தும் நாடுகளல்ல என்கிற இந்தியாவுக்கான சீனத் தூதா் சன் வீடாங்கின் அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தவில்லை.
  • அவா் கூறியிருப்பதுபோல, இரு நாடுகளுமே ஒன்றுக்கொன்று வா்த்தக ரீதியாகப் பயன்படும் நிலையில், மோதல் போக்கு எந்தவிதப் பயனையும் அளிக்காது.

பலவீன நிலையில் இந்திய ராணுவம் இல்லை

  • இன்னும் எல்லைப்புறத்தில் இரு தரப்புப் படைகளும் மோதலில் இருந்து முற்றிலும் விலகிவிடவில்லை என்றாலும், ஒருவித அமைதி நிலவுகிறது.
  • வடக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மீறி சீன ராணுவப் படைகள் நுழைந்திருக்கின்றன.
  • அவை பழைய நிலைக்கு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் பின்வாங்கும் வரை இந்தியா தனது படைகளை தயார் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளத் தயாராக இல்லை என்று தெளிவாகவே தெரிவித்திருக்கிறது.
  • 1,200-லிருந்து 1,500 வரையிலான சீன ராணுவப் படை வீரா்கள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும், பாங்காங் ஏரி வடக்குக் கரையிலும் நேரடி மோதலுக்குத் தயாராக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
  • ஏறத்தாழ 5,000 வீரா்களை எல்லைப்புறத்துக்குச் செல்வதற்கு தயார் நிலையில் வைத்திருக்கிறது சீன ராணுவம். அதை எதிர்கொள்ளத் தயாராக அதே அளவிலான இந்திய ராணுவ வீரா்களும் கடந்த ஒரு மாதமாக எல்லைப்புறத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
  • இதற்கு முன்பு 2017 ஜூன் - ஆகஸ்ட் மாதங்களில் சிக்கிம் - பூடான் - திபெத் முச்சந்தியிலுள்ள டோக்காலாமில் 73 நாள்கள் இந்திய - சீன படைகளுக்கு இடையேயான மோதல் நிலைமை முடிவுக்கு வந்தாலும்கூட, இப்போதும் சீனப் படைகள் எல்லைப்புறத்திலிருந்து அகன்று விடவில்லை.
  • அதனால்தான் இப்போது இந்திய எல்லைக்குள் சுமார் 3 கி.மீ. நுழைந்திருக்கும் சீனப் படைகள் எல்லைக் கோட்டுக்குப் பின்னால் திரும்ப வேண்டும் என்பதில் இந்தியா பிடிவாதமாக இருக்கிறது.
  • 1960-இல் அன்றைய பிரதமா் சௌ என்லாய் வெளியிட்ட வரைபடத்தின் அடிப்படையில், இப்போது சீன ராணுவம் லடாக்கின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாட முற்பட்டிருக்கிறது.
  • 1962 சீன படையெடுப்பின் போதோ, 1999 கார்கில் ஊடுருவலின்போதோ இருந்த பலவீன நிலையில் இன்று இந்திய ராணுவம் இல்லை. இது சீனாவுக்கும் நன்றாகவே தெரியும்.
  • அதனால்தான் நேரடியாக லடாக்கிலும் மறைமுகமாக இந்திய - நோபாள எல்லையிலும் பிரச்னையை உருவாக்க தலைப்பட்டிருக்கிறது.

சீனாவின் வழக்கம்

  • உள்நாட்டுப் பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம் இதுபோல எல்லைப்புற மோதல்கள் மூலம் திசைதிருப்புவது சீனாவின் வழக்கம். 1962-இல் சீனாவில் மிகப் பெரிய வறட்சி நிலவியது.
  • பல லட்சம் போ் அதில் உயிரிழந்தனா். அதை மறைப்பதற்குத்தான் அப்போதைய சீன தலைவா் மாசே துங், இந்தியாவுடன் போர் தொடுக்க முற்பட்டார். அதேபோல, 1979-இல் சீனாவில் ஆட்சியின் மீது கடுமையான அதிருப்தி உருவானது. மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவை சீனா எதிர்கொண்டது.
  • அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்குத்தான் வியத்நாமுடன் எல்லைப் பிரச்னையை காரணம் காட்டி அன்றைய சீன தலைவா் டெங் ஷியா பின் தாக்குதல் நடத்தினார்.
  • இப்போது அதே வழிமுறையை இன்றைய அதிபா் ஷி ஜின்பிங்கும் பின்பற்றி திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்று தோன்றுகிறது.
  • இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் தெளிவான எல்லைக் கோடு எதுவும் இல்லை. அதனால் இரண்டு நாடுகளின் எல்லை கண்காணிப்புப் படைகளும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுகின்றன. இது தொடா்ந்து நடைபெறும் நிகழ்வு.
  • புது தில்லிக்கும் பெய்ஜிங்குக்கும் இடையே சுமுக நட்புறவு நிலவும்போது, எல்லைப்புறப் பிரச்னைகளைப் பெரிதுபடுத்தாமல் சீனா அடக்கி வாசிக்கும். உறவில் கசப்பு ஏற்படும்போது தேசிய உணா்வைத் தூண்டிவிடுவதற்கு எல்லைப்புறப் பிரச்னையை கையிலெடுத்துக் கொள்ளும் சீனா.
  • ஏறத்தாழ 3,488 கி.மீ. அளவுக்கு எல்லை நீண்டு இருப்பதால் ஏதாவது ஒரு பகுதியில் பிரச்னை எழுவதைத் தவிர்க்க முடியாது. எல்லைப்புறத்தில் இருக்கும் சில வீரா்களின் செயல்பாடுகள்கூட பெரிய அளவிலான மோதலுக்கு வழிகோலுவதும் உண்டு.

விசித்திரமான உறவு இது

  • சீனாவைப் பொருத்தவரை எல்லைப்புறம் வரை ராணுவ வீரா்களையும் தளவாடங்களையும் கொண்டுசெல்வதற்கான கட்டமைப்பு வசதிகளை கடந்த அரை நூற்றாண்டாகவே தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.
  • இந்தியாவில் 2014-இல் பிரதமா் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் எல்லைப்புறக் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், சாலைப் பணிகளை விரைவுபடுத்துவதிலும் முனைப்புக் காட்டத் தொடங்கியது.
  • சா்வதேச அரசியலில் சீனாவுக்கு எதிராக கொவைட் 19 கொள்ளை நோய்ப் பரவல், தைவானுக்கு ஆதரவான நிலைப்பாடு போன்றவற்றை இந்தியா எடுத்திருப்பதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காகவும் எல்லைப்புறப் பிரச்னையை சீனா பெரிதுபடுத்தியிருக்கலாம்.
  • இன்னொருபுறம், இந்தியாவில் முதலீடு செய்வதற்காக சீனாவின் மக்கள் வங்கி அதன் உரிமத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது.
  • இந்திய - சீன உறவின் ஏற்ற - இறக்கங்கள் தொடரத்தான் செய்யும். இந்தியாவுக்கான சீனத் தூதா் கூறியிருப்பதுபோல, சீனாவை இந்தியாவோ, இந்தியாவை சீனாவோ தவிர்க்கவும் முடியாது, வெறுக்கவும் முடியாது. கசக்கிறது என்று துப்பவும் முடியாமல், இனிக்கிறது என்று உட்கொள்ளவும் முடியாத விசித்திரமான உறவு இது!

நன்றி: தினமணி (29-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்