- பிப்ரவரி 15 அன்று வெளியான ‘வட இந்தியத் தொழிலாளர்களின் வருகை: வரமா, சாபமா?’ கட்டுரை பல முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. வாழ்வாதாரத்துக்காகத் தொழிலாளர்கள் புலம்பெயர்தல் இயல்பாகிவிட்ட சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைமறுக்க இயலாது. நேரம் காலம்பார்க்காமல் உழைக்கிறார்கள்; இருப்பிடம், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகக்கூடத் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களை, தனிநபர்களை இவர்கள் வற்புறுத்துவதில்லை என்பதெல்லாம் தமிழ்நாட்டில் இவர்களைப் பரவலாக வேலைக்கு அமர்த்துபவர்கள் கூறும் காரணங்களாகும்.
- அதே நேரம், வரையறையின்றித் தமிழ்நாட்டில் குடியேறிவரும் வட இந்தியத் தொழிலாளர்களால் வருங்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எந்தெந்தப் பகுதிகளில் எத்தனை வட இந்தியத் தொழிலாளர்கள் வசிக்கிறார்கள் என்பன போன்ற தகவல்கள் மாநில அரசிடம் முழுமையாக இல்லாத காரணத்தால், இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இயலவில்லை. இதனால், இவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் அவற்றின் சுற்றுப்புறங்களிலும் பொதுச் சுகாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
- தமிழகத்தில் உள்ள வட இந்தியத் தொழிலாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறித்த செய்திகள் ஊடகங்களில் நாள்தோறும் வெளிவர ஆரம்பித்துவிட்டன. வெளிச்சத்துக்கு வராமல் போன சம்பவங்கள் பல இருக்கலாம். இவர்களைப் பற்றிய முழுமையான ஆவணங்கள் அரசிடம் இல்லாததால், இவர்களில் சிலர் குற்றச்செயல் புரிந்துவிட்டு தப்பிச்சென்றால் தங்களை அடையாளம் காண முடியாது என்று நம்புகிறார்கள். அதனால், துணிந்து குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
- மேலும், வெளிமாநிலத் தொழிலாளர் எனும் போர்வையில் வெளிநாட்டு தீயசக்திகளும் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி, சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமல்ல, இங்கு வரும் பெரும்பாலான வட இந்தியத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சக் கல்வி அறிவு, பொது இடங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்கிற புரிதல், உள்ளூர் மொழியில் அடிப்படை அறிவு ஆகியவை இல்லை என்பதைச் சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது.
- இதன் காரணமாக, இவர்கள் உள்ளூர் தொழிலாளர்களுடன் மோதும் சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன. பொதுப் போக்குவரத்துப் பயணங்களில் இடநெருக்கடியை ஏற்படுத்தி, சக பயணிகளோடு இவர்கள் சச்சரவில் ஈடுபடுவதும் உண்டு. பான்பராக், குட்கா, போதைப் பொருள்கள் தமிழகத்தில் புழங்குவதும் இவர்களால் தற்போது அதிகரித்துள்ளது. வட இந்தியத் தொழிலாளர்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இவர்களுக்கு எதிராக ஆங்காங்கே உள்ளூர் தொழிலாளர்கள் போராடும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
- இந்தப் பிரச்சினைகளைக் களைய தமிழ்நாடு அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். வெளி மாநிலத் தொழிலாளர்களின் வருகையில் உரிய கட்டுப்பாடுகளையும் வரையறைகளையும் ஏற்படுத்த வேண்டும். ஆரம்பத்திலேயே சுதாரித்துக்கொண்டால் எதிர்காலத்தில் சிக்கல்கள் நேராதவண்ணம் தவிர்க்கலாம் என்பதை அரசு மனதில் கொள்ள வேண்டும்
நன்றி: தி இந்து (19 – 02 – 2023)