TNPSC Thervupettagam

எதிர்வினையாற்றும் ஆளுமை

April 11 , 2024 83 days 134 0
  • மனிதர்களின் ஆளுமையை உளவியலறிஞர்கள் பல வகைகளாகப் பகுத்துக் காட்டியுள்ளனர். ஜான்சன் டர்பி என்னும் உளவியலறிஞர், வெளிப்படைத் தன்மை மிக்கோர், மனச்சான்றினை மதிப்போர், நட்புறவு கொள்வோர், ஒத்திசைவு கொள்வோர், நரம்பியல் பாதிப்புள்ளோர் என்றவாறு பலவகையான ஆளுமைப் பண்புடைய மனிதர்களை இனங்காட்டுகின்றார்.
  • இங்குக் குறிப்பிடப்படாத வேறு சில வகை ஆளுமையாளர்களும் உளர். அத்தகையவர்களுள் குறிப்பிடத்தக்க ஒரு வகையினர் எதிர்வினையாற்றும் ஆளுமையாளர் ஆவர். எதிர்வினை என்றவுடன் எதிர்மறைச் செயல் (நெகட்டிவ் ஆக்ஷன்) என்ற பொருளை நினைவுகூர்ந்து, இணைத்து இடர்ப்படத் தேவையில்லை.
  • எதிர்வினை (ரீஆக்டிவ்) என்பது, ஒரு நிகழ்ச்சியைக் கண்ணெதிரே கண்டவுடன் "நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கிப் போகாமல், அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மேலதிகமாகச் செயல்படும் மனிதர்களைப் பற்றியதாகும்.
  • உளவியலறிஞர்கள் எதிர்வினையாற்றும் ஆளுமையினரின் பண்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டுகின்றனர்: மிக விரைவாகவும் மரபுகளைத் தேவையான அளவு வளைத்தும், செயல்படக் கூடியவர்கள். இவர்கள் ஒரு பணியைச் செய்வதில் பின்பற்றப்பட விதிமுறைகளை மட்டுமே பற்றிக் கொண்டிராமல் விட்டுக் கொடுத்தும் போவார்கள். இவர்களுக்கு ஒரு செயலின் இறுதி விளைவே முக்கியம். ஒரு சிக்கலை அதன் வேருடன் களைபவர்களாக இவர்கள் இருப்பார்கள்; சிக்கலின் அறிகுறிகளை மட்டும் களைபவரல்லர்.
  • துன்பங்கள் ஏற்படும் போது விரைந்து செயல்பட்டு உதவுவர். கடினமான அழுத்தங்களுக்கு இடையிலும் இவர்கள் திறம்படப் பணிபுரிவார்கள். குறிப்பிட்ட செயலின் மீதான தங்களது அறிவுபூர்வமான மதிப்பீட்டினையும் செயற்படுத்துவார்கள். வெறுமனே சிக்கல் - தீர்வு மட்டுமே இவர்களது இலக்கல்ல. ஒரு நிகழ்ச்சியில், தாங்கள் முதன்மை இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று போராடுவார்கள்.
  • இத்தகைய எதிர்வினையாற்றும் ஆளுமைப் பண்பினர் தங்கள் திறமை மற்றவர்களால் கவனிக்கப்ட வேண்டும் என்று விரும்புவர்களாக இருப்பார்கள்; மனித வள மேலாண்மைத் துறையில் இப்பண்பு மிக இன்றியமையாததாகும்.
  • எதிர்வினையாற்றும் ஆளுமையுடையவர்கள் பற்றி இற்றை நாள்களில் கூறப்பட்டுள்ள உளவியல் ஆய்வு முடிவுகள் பல தமிழின் செவ்வியல் இலக்கியங்களுடன் பொருந்துகின்றன என்பது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
  • சங்க இலக்கியங்களுள் ஒன்றான புறநானூற்றில் குறிப்பிடப்படும் பல மன்னர்கள் எதிர்வினையாற்றும் ஆளுமைப் பண்புடையவர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். மதுரைக் குமரனார் என்ற புலவர் சிற்றூர் ஒன்றின் தலைவனான தோயன் மாறன் என்பவனைக் குறித்துப் பாடியுள்ள பாடல் எதிர்வினையாற்றும் ஆளுமைத் திறனுக்குச் சான்றாக அமைகிறது.
  • வறுமையில் வாடிய இரவலர் ஒருவரை நோக்கி, "நாள்தோறும் கொடுக்குமளவுக்குச் செல்வமில்லாதவன். ஆயினும் துன்பப்படுபவர்களுக்கு இல்லை என்று பதில் கூறுகின்ற சிறுமையுமில்லாதவன். இவன் பல்வேறு போர்களில் ஈடுபட்டு உடலில் விழுப்புண்களைத் தாங்கியவன். பாணர்களை வருத்தும் பசிக்கு அவன் பகைவன். நீ என்னுடன் வந்தால் நமது ஒட்டிய வயிற்றைக் கொல்லனிடம் காட்டி, உடனே நல்ல வலிமையுடைய வேலினை வடித்துக் கொடு என்று அவனிடம் கேட்பான்' என்று மதுரைக் குமரனார் கூறுகிறார்.
  • இக் கருத்தமைந்த பாடல் அடிகள் (புறநானூறு: 180) பின்வருமாறு:

யாம் தன் இரக்கும் காலை, தான் எம்

உண்ணா மருங்குல் காட்டி, தன் ஊர்க்

கருங் கைக் கொல்லனை இரக்கும்,

திருந்து இலை நெடு வேல் வடித்திசின்

  • இப்பாடலில், பாணர் வறுமை தீர்க்கக் கொல்லனிடம் வேல் வடித்துக் கொடுக்குமாறு வேண்டும் செயல் உலக இலக்கியங்களில் எங்கும் காணவியலாத ஒன்றாகும்.
  • எதிர்வினையாற்றும் ஆளுமை மிக்க மனிதர்களின் பண்பான விரைந்து செயல்படுதல் (ஸ்விஃப்ட் ஆக்ஷன்), சிக்கலை வேருடன் களைதல், கடினமான சூழல்களுக்கு நடுவிலும் செயல்படுதல் போன்ற பண்புகள் தோயன் மாறனிடம் இருப்பதைப் புலவர் காட்டுகிறார்.
  • தன்னிடம் போதிய செல்வம் இல்லாத நிலையில் பிறருடன் போரிட்டுப் பொருள் சம்பாதித்து வந்து உதவ நினைப்பது கடினமான சூழலிலும் செயல்படும் பண்பைப் குறிக்கிறது. இது சிக்கலின் ஆணிவேரினைக் களைதல் எனும் பண்பாகும்.
  • பாணனின் தோற்றத்தினைக் கண்டவுடனே கொல்லனிடம் வேல் வடித்துத் தருமாறு கேட்டல் விரைவுப் பண்பைக் குறிக்கிறது. தோயன் மாறன் எதிர்வினையாற்றும் ஆளுமை உடையவன் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. உளவியலும் இலக்கியமும் சந்திக்கும் மையப்புள்ளி இது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் .
  • தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மிகவும் இளம் வயதிலேயே அரசப் பதவியை அடைந்தவன். அவன் மீது அழுக்காறு கொண்ட மன்னர் பலரும் ஒன்றாக இணைந்து போர் தொடுக்க , இதனை ஒற்றர் மூலம் அறிந்த பாண்டியன் நெடுஞ்செழியன் சினம் கொண்டு பகைவரின் திட்டத்திற்கு எதிர்வினையாற்றுகிறான்.
  • அவன், "என்னை இகழ்ந்து பேசிய பகைவர்களை வென்று அவர்களின் வெற்றி முரசத்தைக் கைப்பற்றுவேன்' என்று சூளுரை பகர்கிறான். பகையரசர் இன்னவாறு கூறினர் என்று, கேட்டவுடன் செயலில் இறங்கும் விரைவு, தீவிரத்தன்மை முதலிய தலைமைப் பண்புகள் உடையவனாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் பண்பு புலப்படுத்தப்படுகிறது.
  • அப்பாடல்,

நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்

இளையனிவ னெனஉளையக் கூறிப்

படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்

நெடுநல் யானையும் தேரும் மாவும்

படையமை மறவரும் உடையம்

யாம் என்று

உறுதுப்பு அஞ்சாது உடல்சினம்

செருக்கிச்

சிறுசொல் சொல்லிய சினங்கெழு

வேந்தரை

அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு

ஒருங்கு அகப்படேனாயின் பொருந்திய

என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது

கொடியன் எம்இறை எனக் கண்ணீர்

பரப்பி

குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவன் ஆக

உலகமொடு நிலைஇய பலர்புகழ்

சிறப்பின்

புலவர் பாடாது வரைக என் நிலவரை...

  • (புறநானூறு: 72)
  • விரைவும் தீவிரத் தன்மையும் உடைய ஆளுமைப் பண்பு இப்பாடலில் புலனாவதை உணரலாம்.
  • நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் தன்னை முதல் மனிதனாக நிலைநிறுத்திக் கொள்ள எதிர்வினையாற்றும் ஆளுமையாளன் முயற்சி செய்வான் என்பது முன்னர்க் குறிப்பிடப்பட்டது. அதியமான் இவ்வாறு மற்றவர்களை முந்திச் சென்று கருணை காட்டுபவன் என்பதை ஒளவையார் ஓர் இரங்கற்பாவில் கூறுகிறார்.
  • புறநானூற்றில்,

சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே!

பெரிய கட் பெறினே!

யாம் பாடத், தான் மகிழ்ந்து உண்ணும்

மன்னே!

சிறு சோற்றானும் நனிபல கலத்தன்

மன்னே!

பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்

மன்னே! என்பொடு தடிபடு வழி எல்லாம் எமக்கு

ஈயும் மன்னே!

அம்பொடு வேல் நுழை வழி எல்லாம்

தான்நிற்கும் மன்னே!

  • (புறநானூறு: 235)
  • என்று ஒளவையார் அதியமானைக் குறித்துப் பாடிய இரங்கற்பாவில் எல்லா நிலைகளிலும் தன் முயற்சிகளைக் குறைவின்றிச் செய்து பெயர் பெற்ற அதியமானின் பண்பு கூறப்பட்டது.
  • சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் சித்திரிக்கப்படும் சேரன் செங்குட்டுவன் மேற்கூறப்பட்ட எதிர்வினையாற்றும் பண்புடையவன், எதிர்வினையாற்றும் ஆளுமை மிக்கவர்களிடம் காணப்படும் "அங்கீகார எதிர்பார்ப்பு' (ரெகக்னேஷன்)செங்குட்டுவனிடம் காணப்படுகிறது.
  • வடதிசைப் படையெடுப்பில் வெற்றி பெற்றுக் கண்ணகியை வழிபடக் கல் கொண்டு திரும்பிய பின்னர் கனக விசயரை ஏனைய தமிழ் மன்னர்களான சோழனுக்கும் பாண்டியனுக்கும் காட்டி வெற்றியை அறிவித்து வருமாறு கூறி படைத் தலைவர்களை அனுப்புகிறான் செங்குட்டுவன்.
  • கனக விசயர்களைக் கைதிகளாகக் கண்ட சோழனும் பாண்டியனும் பாராட்டுவார்களென்றும் தமிழரின் வீரம் குறித்துப் பெருமிதம் கொள்வரென்றும் செங்குட்டுவன் கருதினான்; அதற்கு மாறாக, சோழனும் பாண்டியனும் கேலி செய்து பேசினர். இதனைக் கேட்டவுடன் செங்குட்டுவன், கோபமடைகிறான்.
  • இது அவனது எதிர்வினையாற்றும் ஆளுமையை எடுத்துக்காட்டுகிறது. மாடல மறையோன் செங்குட்டுவனின் வீரத்தையும் வெற்றிகளையும் பலவாறு பாராட்டிய பின்னரே செங்குட்டுவன் அமைதியடைகிறான் .
  • இலக்கியங்களை அவற்றுக்குள் மட்டுமே நின்று புரிந்து கொள்வதைவிட உளவியல் , சமூகவியல், மானுடவியல் போன்ற துறைகளின் கோட்பாடுகளைக் கொண்டு ஆய்வது பயன்மிகு செயலாகும். இம்முறையில் சிலப்பதிகாரத்தை நோக்கும் போது மூலப் பனுவலின் சிறப்பு பன்மடங்கு மிகுகிறது.

நன்றி: தினமணி (11 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்